அந்த ஒரு கேட்ச் என் எதிர்காலத்தை மாற்றியது!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 29 Second

“விளையாட்டில் வெற்றி, தோல்வி இரண்டுமே சகஜம். வெற்றியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை! காரணம் நாம் ஒரு முறை வெற்றியினை சுவைத்துவிட்டால் அது தலைக்கு ஏறிவிடும் என்பார்கள். ஆனால் தோல்வியிலிருந்து நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் நாம் என்ன தவறு செய்தோம். அதை எப்படி திருத்திக் கொள்ளலாம் என்கிற மன நிலை இருக்க வேண்டும்” என்கிறார், சென்னையை சேர்ந்த இந்தியன் ரயில்வே பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் காமாட்சி.

‘‘1995ஆம் ஆண்டு கிரிக்கெட்டுடன் என் பயணம் துவங்கியது. கிரிக்கெட் எனக்கு ரொம்பவே பிடித்த விளையாட்டாக மாறக் காரணம் எங்க ஏரியா பசங்க. சென்னை மேற்கு மாம்பலம் தெருக்களில் பசங்களோடு கிரிக்கெட் விளையாடுவது தான் என் பொழுது போக்கு. அந்த நேரத்தில் என் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் முரளி கிருஷ்ணன் சார் அவர்கள் எங்க தெருவிற்கு குடி வந்தார். அவர் தினமும் பள்ளிக்கு போய் வரும் போது நான் விளையாடுவதை பார்ப்பார். நானும் அவர் வேலை செய்யும் பள்ளியில் தான் படிக்கிறேன் என்று தெரிந்து கொண்டவர், என்னிடம், ‘பெண்களுக்கான கிரிக்கெட் அணி என தனியா இருக்கு. முறையாக கத்துக்க.

நான் சொல்லித் தரேன். கண்டிப்பா செலக்ட் ஆவ’ன்னு எனக்குள் கிரிக்கெட் விதையை ஆழமாக ஊன்றினார். அதுவரை நான் கேள்விப்பட்டது, டிவியில் பார்த்தது ஆண்கள் விளையாடுவதை மட்டுமே! இவர் சொன்ன பிறகு நான் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். ஒரு பயிற்சி ஆட்டத்திற்காக சென்றிருந்தோம். அந்த ஆட்டத்தில் ஒரு கேட்ச் எடுத்தேன். அதை பார்த்த மற்றொரு பயிற்சியாளரான ராஜகோபாலன் சார், என் கோச் முரளி சாரிடம் ‘இந்த பொண்ணுக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருக்கு’ என்று கூறியுள்ளார்.

அதன் பின் அவருடைய பயிற்சியின் கீழ், கிரிக்கெட்டில் உள்ள அடிப்படைகள் எல்லாம் சொல்லிக் கொடுத்தார். இவர்களை தொடர்ந்து தர்மலிங்கம் சாரிடமும் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு அமைந்தது. தர்மலிங்கம் சார் தமிழ்நாட்டில் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை உருவாக்கியவர். அவருடைய கேம்பில் இலவசமாக கோச் கொடுத்தார். கல்லூரி சேர்ந்த பிறகு அங்கு ரமேஷ் சாரின் பயிற்சியும் கிடைச்சது. இப்படி தர்மலிங்கம் சார், ரமேஷ் சார் கைட்னசில் ஒவ்வொரு மேட்சிலும் நல்ல பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பித்தேன். இதனையடுத்து இந்தியா A, WUC 11,
இந்தியா B அணிகளில் விளையாடினேன்” என்கிற காமாட்சி, பெண்கள் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மித்தாலி ராஜின் பேட்ச் மேட்டாம்.

‘‘2010ஆம் ஆண்டு வரை என்னுடைய பெர்ஃபார்ம்ன்ஸ் ரேட் குறையவே இல்லை. அதனால் வெஸ்ட் இண்டீசில் முதன் முதலாக நடைபெற்ற பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் என்னுடைய பெயர் இருப்பதாகவும், தயாராக இருக்க சொன்னாங்க. ஆனால் அணியில் உள்ளவர்களை குறிப்பிட்ட போது அதில் என்னுடைய பெயர் இல்லை. ரொம்பவே கஷ்டமாக உணர்ந்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டும் அங்கீகாரம் கிடைக்கலைன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. கிரிக்கெட்டுக்கும் நமக்குமான உறவு அவ்வளவு தான் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டேன். விளையாடுவதையும் நிறுத்தினேன்.

அந்த நேரத்தில் தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இருந்த பழனி சார் அவர்கள் என்னை பயிற்சியாளராக மாற சொன்னார். முதலில் தயங்கினாலும்… எனக்கு ஊக்கம் அளித்து லெவல் A கோர்ஸுக்கு அனுப்பினார். 2010ம் ஆண்டு அதில் தேர்ச்சி பெற்றேன். அதே சமயம் திருமணம், குடும்பம், குழந்தை என்று என் வாழ்க்கையின் தடம் மாறியதால்… என்னால் பயிற்சியாளராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஐந்தாறு ஆண்டு காலம் கிரிக்கெட்டில் இருந்து பிரேக். மீண்டும் பழனி சார்தான் என்னில் மறைந்திருந்த கிரிக்கெட் தாகத்தினை தட்டி எழுப்பியவர், அண்டர் 23 தமிழ்நாடு டீமிற்கு என்னை பயிற்சியாளராக நியமித்தார். மீண்டும் 2018ல் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக என்னுடைய கெரியரை ஆரம்பித்தேன். இப்போது இந்தியாவில் நம்பர் ஒன் டீமான இந்தியன் ரயில்வே டீமிற்கு உதவி பயிற்சியாளராக இருக்கிறேன்” என்கிற காமாட்சி, தனக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த ஆசான்களின் பெயரில், கொரோனா காலத்தில் ஒரு கிளப் ஆரம்பித்து வெற்றிகரமாக செயலாற்றி வருகிறார்.

‘‘தமிழ்நாட்டில் டோர்னமென்ட் நடக்கும் அளவுக்கு பதினைந்துக்கும் மேற்பட்ட டீம் வந்துவிட்டது. இன்று எல்லா ஊர்களிலும் பெண்களுக்கான கிரிக்கெட் டீம் அருமையாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் எனக்கென்று தனியாக ஒரு இடம் இல்லை என்றாலும், எனக்கு பயிற்சி அளித்தவர்களிப் நினைவாக DRC என்ற பெயரில் கிரிக்கெட் கிளப் அமைத்திருக்கேன். ரயில்வே டீமில் கொஞ்சம் பிசியாக இருந்தாலும், என்னுடைய கிளப்பில் உள்ள பதினைந்து பேருக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறேன். இவர்களோடு, மேலும் பலருக்கு பயிற்சி அளித்து அவர்களை இந்திய டீமிற்கு அனுப்ப வேண்டும்.

என்னால்தான் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. என்னிடம் பயிற்சி எடுக்கும் பசங்களையாவது இந்திய அணியில் ஆடக்கூடிய அளவிற்கு திறமையாக உருவாக்க வேண்டும். அந்த முனைப்பில் தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் மேலே சொன்னது போல் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். வெற்றி பெற்றால், அந்த வெற்றி நிலைக்க பாடுபடுவோம். தோல்வி என்றால் எங்களின் விளையாட்டில் சில மாற்றங்கள் செய்து தவற்றை தவிர்ப்போம். தோற்றுவிட்டோம் என்றுப் உடைந்து போவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏன் தோற்றோம்… எப்படி தோற்றோம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். அதே போல் வெற்றி பெற்றதைக் கூட எப்படி பெற்றோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். இது தான் என்னுடைய பசங்களுக்கு நான் அளிக்கும் ஆலோசனை.

இன்று விளையாடும் முறைகளே மாறிவிட்டது. நாளை களத்தில் விளையாட போறோம் என்றால் இன்று பசங்க தெளிவா யோசனை செய்கிறார்கள். ஒரு பிளேயர் சதம் அடிக்கும் போது, அவரின் ஸ்கோர் மட்டுமில்லாமல், அந்த வீரரின் wagon wheel-ம் பார்த்து அதற்கேற்ற வியூகம் வகிக்கிறார்கள். அதே போல் பந்து வீச்சாளரின் நிலையும் கவனிக்கப்படுகிறது. கடினமாக உழைப்பது மட்டுமில்லாமல் அதை புத்திசாலித்தனமாகவும் செயல்பட தெரிந்து கொள்ளணும்.

இன்றைக்கு அணியில் இருக்கும் பசங்க ரொம்ப புரொபசனலா இருக்காங்க. அவங்க ரோல் என்ன என்பது மட்டுமில்லாமல், பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், மேனஜர், ட்ரைனர்ஸ் இவர்களின் பங்கு என்ன என்பதை தெளிவாக தெரிந்திருக்கிறார்கள். பெரிய பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், கருத்துக்கள் சொல்லும் போது அதை முதலில் கேட்டுக் கொண்டு, அதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். உதாரணமாக இன்றைக்கு மித்தாலியிடம் போய், ‘மித்தாலி இது தவறா இருக்கு…’னு சொல்லும் போது அதை 100% எடுத்துக்கக்கூடிய மனப்பாங்கில் தான் இருக்காங்க.

எனக்கு ரொம்ப பிடித்த கிரிக்கெட்டரும் மித்தாலி தான். ஃப்ரண்டாகவும், கேப்டனாகவும், பிளேயராகவும் என எல்லா விதத்திலும் அவர் சிறப்பானவர். எப்படி வினோத் காம்ளி,
ச்சினோ… அதேபோல் தான் நாங்களும். அவளை வருஷக் கணக்கா பார்த்திட்டு இருக்கேன். அவளோட ரெக்கார்ட்ஸ் மட்டும் தான் வெளியே பார்ப்பவர்களுக்கு தெரியும், அதற்கு பின் இருக்கும் போராட்டம் மற்றும் உழைப்பை நான் தினமும் பார்க்கிறேன். திறமையுடன் பர்ஃபார்ம் செய்யும் போது தான், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இவை அனைத்தும் மித்தாலியிடம் இருப்பதால்தான் இத்தனை ஆண்டு காலம் இந்திய அணிக்காக விளையாட முடிகிறது” என்கிற காமாட்சி, தான் கிரிக்கெட்டில் இன்று ஒரு நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் தன் குடும்பம்தான் என அழுத்தமாக சொல்கிறார்.

‘‘அப்பா, சித்தப்பா இருவருமே கல்லூரி படிக்கும் போது கிரிக்கெட்டராக இருந்துள்ளனர். சிறு வயதில் ரோட்டில் விளையாடிய என்னை அப்போதே கட்டுப்படுத்தி இருந்தால் இன்று இந்த அளவு வளர்ந்திருக்க மாட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ‘எப்ப பார்த்தாலும் உங்க பொண்ணு ரோட்டில் விளையாடிட்டு இருக்கா… உங்க பொண்ணோடு சேர்ந்து எல்லா பசங்களும் கெட்டுப் போறாங்க, படிக்க மாட்டேங்கிறாங்க… உங்க பொண்ண கூட்டிட்டு போங்க’னு சொன்னாங்க.

அவங்ககிட்ட ‘என் பொண்ணு விளையாடுறத நிப்பாட்ட மாட்டா… நீங்க வேணா உங்க பசங்களை அனுப்பாதீங்க…’னு சொல்லி என் ஆசைக்கு என்றைக்கும் பக்கபலமா நின்றார்கள். திருமணத்திற்கு பின், குழந்தை ஆனதும் அப்பா-அம்மா கூட யோசித்தாங்க, இனி விளையாட போகணுமானு. ஆனால் என் கணவர், ‘அந்தக் கவலையை விடுங்க… குழந்தையை பார்த்துக்குறோம்…’ என்று எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். இது போல் ஒரு குடும்பம் அமைந்ததற்கு இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்கிறார் காமாட்சி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 5 கோடியினரை ஈர்த்த அக்கா, தங்கையின் நடனம்!(மகளிர் பக்கம்)
Next post சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்?(மருத்துவம்)