மனதைக் கொள்ளை கொள்ளும் துலிப் திருவிழா! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 36 Second

நாம் திருவாரூர் தேர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த தேரினை எவ்வளவு பேர் வடம் பிடித்து இழுக்க எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது. ஆனால் தேர் நகரும் போது… அதைச் சுற்றி இருக்கும் கூட்டத்தினை மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட பல தேர்க் கூட்டங்களை, உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் கொண்டு வந்து ஒரு இடத்தில் சேர்க்கும் திருவிழாதான் ‘துலிப்’ திருவிழா. வசந்த காலம் என்று சொன்னதுமே மனதிற்குள் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.

அத்தகைய காலத்தை வருடத்திற்கு ஒரு முறை இந்த துலிப் திருவிழா அள்ளித் தருகிறது. அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டாலும், அமெரிக்காவின் பல நகரங்களில் இந்த விழா உற்சாகமாகவே கொண்டாடப்படுகிறது. திருவிழாக்கள் என்றால் உறவுகள் ஒன்று கூடுவது, பல உணவுப் பண்டங்களை ருசிப்பது, தெருவோரம் இருக்கும் கடைகள் தான் நினைவிற்கு வரும். ஆனால் ‘துலிப் திருவிழா’ கண்களுக்கு விருந்தளிக்கும் விழா. இங்கு மலர்களுடன் பேசலாம், கொஞ்சலாம், சிரித்து மகிழலாம்…

‘என்னடா இது பொல்லாத வாழ்க்கை’ என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த திருவிழாவினை பார்த்தால் போதும்… ‘இதுதான் என் வாழ்க்கை’ என்று சொல்லுமளவுக்கு சுண்டி இழுக்கும் சொர்க்க லோக மலர்கள்! கடவுளின் படைப்பு எவ்வளவு அற்புதம் என்று இந்த மலர்களை காண்பவர்களுக்குத்தான் புரியும். என்னென்ன நிறங்கள், எத்தனையெத்தனை வடிவங்கள்! அத்தனை இயற்கை அழகும் ஒன்று சேர்த்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட இடம்! பல வண்ணப் பூக்கள் நடுவில் வேறு உலகில் வாழ்கிறோம் என்ற எண்ணத்தினை மனதில் ஏற்படுத்தும். திருமணமான புதிய தம்பதிகள் முதல், முதியவர்கள், சின்னஞ்சிறார்கள், காதலர்கள் என அனைவருக்கும் பிடித்த இடம்.

பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் தினமும் குறிப்பிட்ட நேரம் பயிற்சி எடுப்பார்கள். ஆனால் இந்த ‘துலிப் உற்சவ’ மைதானத்தை சுற்றிப் பார்த்த பிறகு தான் நமக்கே புரியும் – இவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோமா என்று. கால்வலியா, களைப்பா எதுவுமே ஏற்படுத்தாமல், இந்த பூக்களே தன் வசீகரத்தால் வழி நடத்திச் செல்லும். 1947-ல் வில்லியம் ரூசன் ஹாலந்து நாட்டிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்ததாகவும், அவரின் குடும்பத்தினர் சுமார் 75 ஆண்டுகளாக 750 ஏக்கரில் ‘துலிப்’ தோட்டத்தை செயல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

‘அபெல்டூ’, ‘பஞ்சாலுகா’, ‘டே ட்ரீம்’, ‘கோல்டன் அபெல்டூம்’, ‘வலிபேலா’, ‘பிங்க் இம்ப்ரஷன்’ என பல்வேறு பெயர்கள் கொண்ட பூக்களை இந்த தோட்டத்தில் பார்க்கலாம். வாஷிங்டன் நகரத்தின் ஸ்ககிட் (Skagit) பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த துலிப் மலர்கள் நினைத்துப் பார்க்க முடியாத வண்ணங்களில் பார்க்கும் போது அவை இயற்கை பூக்களா அல்லது செயற்கையா என்று யோசிக்க வைக்கும். நீல வண்ணத்தில், பல சாயல்கள், ஆரஞ்சு வண்ணத்தில் பல வண்ணக் கோலங்கள், பிங்க் வண்ணத்திலேயே சுமார் பத்து வித்தியாசமான நிறங்கள் என ஒவ்வொன்றிலும் அழகிய வடிவங்கள் நம் கண்களை பறிக்க செய்யும். 50க்கும் மேற்பட்ட வண்ணங்களில் பல்வேறு உருவ அமைப்புக் கொண்ட மலர்கள் பலவித வரிசைகளில் எண்ணிலடங்கா வண்ணங்களாக அமைந்திருக்கும்!

வருடாவருடம் நம் ஊட்டியில் நடைபெறும் மலர்க் கண்காட்சி எவ்வளவு பிரபலமோ, அந்த அளவுக்கு இந்த துலிப் திருவிழா உலகப் புகழ் பெற்றது. வெறும் பூக்களுக்கு மட்டும் இத்தனை மகிமை என்றால், இயற்கை அன்னையை நாம் எத்தனை துதித்தாலும் போதாது. இந்த ஆண்டும் அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் துலிப் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நம் வீட்டுத் ெதாட்டியில் ஒரு ரோஜா மொட்டு பார்த்ததுமே நம்முடைய மனது ஆனந்தத்தில் கூத்தாட்டம் போடும். பூமியே பூக்களால் நிறைந்தால் கேட்க வேண்டுமா? இந்த திருவிழாவில் பூக்களை பார்க்கவே பல நாடுகளில் இருந்து மக்கள் வருவது வழக்கம். உலக ஒற்றுமைக்கு இந்த திருவிழா மிக முக்கிய சான்று என்று சொல்லலாம். நேரடியாகவும் மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.

இங்கு உணவகங்கள் இருந்தாலும், வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து அங்கங்கே பாய் விரித்து அமர்ந்து குதூகலிக்கும் குடும்பங்களையும் நிறைய பார்க்க முடிகிறது. வாழ்க்கையில் தன் அனுபவங்களை மக்கள் படங்கள் மூலம்தான் நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என்பதற்காகவே வின்ட்மில், சக்கரங்கள், கோபுரங்கள் போன்ற அடையாளங்களை இந்த துலிப் தோட்டத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். பூக்கள் மலரும் நேரம் கூட சிலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு வயலிலும் பல மில்லியன் பூக்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்ெவாரு வருடமும் ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட வயலில் புதிய உருமாற்ற பூச்செடிகள் பயிர் செய்கிறார்கள்.

அப்படி உருவாக்கப்பட்ட பேரட்(Parrot) துலிப் என்ற பூவின் இதழ் ஓரங்கள் கிளியின் இறக்கையை போன்று காணப்படும். ஒவ்வொரு வகை பூக்களின் உயரம் மற்றும் அதன் இதழ் விரிதலையும் கூட அளவிடுகிறார்கள். ‘கருப்பு ஹீரோ’ என்று சொல்லக் கூடிய கருப்பு நிறம் கொண்ட பல அடுக்கு இதழ்களைக் கொண்ட மலர் அந்த காலத்தில் சிறப்பம்சம். ‘சாமிங் லேடி’ இரண்டு அடுக்குகள் கொண்டு அழகான பெண் வடிவத்தில் பூக்கும். ‘ட்ரீம் டச்’ பல அடுக்குகளைக் கொண்டு, கனவுக் கன்னி என்று சொல்லுமளவுக்கு அழகானது. ‘மிக்ஸ்டு டபுள்’ சிவப்பு, மஞ்சள், ரோஸ் போன்ற அனைத்து நிறங்களும் அடங்கியது. ‘ஆரஞ்சு பிரின்ஸஸ்’ என்ற பெயரைக் கேட்டாலே அதன் அழகு மனதைக் கொள்ளை கொள்ளும். ‘ஹார்ட்ஸ் டிலைட்’ பெயரிலேயே இதயத்தைத் தொட்டு விடும்.

கண்களுக்கு விருந்தளிக்கும் மலர்களை ரசிக்கவே இயற்கையானது அதற்கேற்ற வானிலை, தட்பவெப்பம், மண்வளம் அனைத்தும் செழுமையைத் தந்துள்ளது. இத்தகைய பூக்கள் நிறைந்த உலகிலிருந்து வெளியே வரும் போது அந்த பூவினை கண்டிப்பாக நம்முடைய வீட்டின் சிறிய தோட்டத்தை அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதை நிறைவேற்ற இந்த பூக்களை வளர்ப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்கள்.

காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை பூக்களை கண்டு ரசிக்கலாம். இந்த காலத்தில் சூரியன் 8-8½ மணிக்கு மேல் மறைவதால், மாலை 6 மணிக்குக் கூட கிளம்பிச் சென்று மலர்களின் அழகினை ரசிக்கலாம். பூக்களிடமிருந்து சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வண்டுகளிடமிருந்து பாடக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பாடல் ஒன்றுள்ளது. அதற்கு ஏற்ப இயற்கையை நேசிப்போம். அதன் அழகை என்றும் ஆராதிப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இவர்கள் சிரிப்பில் என் பெற்றோரை பார்க்கிறேன்!(மகளிர் பக்கம்)