பெங்களூரை கட்டிப்போட்டிருக்கும் பிரியாணி சகோதரிகள்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 32 Second

சாப்பாடு… அதிலும் குறிப்பா பிரியாணி என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒரு உணர்வு ஏற்படும். அந்த உணர்வை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் பெங்களூரைச் சேர்ந்த ரம்யா, ஸ்வேதா சகோதரிகள். இவர்கள் கொரோனா காலத்தில் ஆரம்பித்த கிளவுட் கிச்சன் இன்று ஆர்.என்.ஆர் தொன்னே பிரியாணி என்ற பெயரில் பெங்களூர் மக்களின் சூப்பர் ஹிட் பிரியாணியாக வலம் வருகிறது.

‘‘அப்பாவிற்கும் ஓட்டல் துறையில் தான் பிசினஸ். சின்ன வயசில் இருந்தே நான் அப்பாவைப் பார்த்து வளர்ந்திருக்கேன். அவர் தொழில் செய்யும் அந்த விதம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதனால் நானும் படிச்சிட்டு கண்டிப்பா சொந்தமா தொழில் செய்யணும்னு என் மனதில் பிக்ஸ் செய்திட்டேன்’’ என்று பேசத்துவங்கினார் ரம்யா.‘‘பள்ளி மற்றும் கல்லூரியில் வணிகவியல் தொடர்பாக படிச்சேன், அதன் பிறகு ஹார்வர்ட்டில் மேலாண்மை குறித்த பயிற்சி மூன்று மாதம் படிச்சேன். படிப்பு முடிச்சிட்டு பெங்களூர் வந்ததும் ஆறு மாதம் இங்குள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு அப்பாவின் தொழிலில் இணைந்தேன். அதில் நிதித் துறையை நிர்வகித்து வந்தேன்.

என் தங்கை ஸ்வேதாவும் என்னைப் ேபால் தான். அவளுக்கும் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவளும் படிப்பை முடிச்சிட்டு அப்பாவின் தொழிலில் இணைந்தாள். இந்த சமயத்தில் தான் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று எல்லாரையும் ஆட்டிப் படைக்க ஆரம்பிச்சது. எல்லா தொழிலும் முடங்கி போனது. ஓட்டல் துறை உட்பட. குறிப்பாக நட்சத்திர ஓட்டல் எல்லாம் மூடச் சொல்லிட்டாங்க. யாரும் வீட்டை விட்டே வெளியே வராத நிலை.

அப்படி இருக்கும் போது எப்படி வேறு ஊரில் இருந்து இங்க தங்க வருவாங்க. அந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஓட்டல் தானே திறக்கக்கூடாது. ஆனால் கிளவுட் கிச்சன் போல செயல்படுத்தலாமேன்னு அப்பாவிடம் சொன்னேன். அவருக்கும் அந்த ஐடியா பிடிக்க. அப்படித்தான் ஆர்.என்.ஆர் தொன்னே பிரியாணி ஆரம்பமாச்சு. என்னுடைய தாத்தா பெயர் ராமசாமி. அப்பாவின் பெயர் ரவிச்சந்திரன். இருவர் பெயரின் முதல் எழுத்தை தான் என்னுடைய கிளவுட் கிச்சனுக்கு பெயர் வைத்தேன்’’ என்றவர் குறிப்பாக தொன்னே பிரியாணி ஆரம்பிக்க காரணம் பற்றி விவரித்தார்.

‘‘பெருந்தொற்று நேரத்தில் மக்கள் தங்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அதிலும் உணவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சிலர் வீட்டிலேயே பல வித உணவுகளை தயாரிக்க ஆரம்பித்தனர். ஒரு சிலர் பல வகை உணவுகளை தேடித் தேடி ஆர்டர் செய்தனர். அந்த வகையில் கடையில் பலதரப்பட்ட பிரியாணி கிடைத்தது. தொன்னே பிரியாணி மட்டும் எந்த கடைகளிலும் கிடைக்கவில்லை. அதனால் அதையே செய்யலாம் என்று நானும் என் சகோதரியும் சேர்ந்து களமிறங்கினோம்.

தொன்னே பிரியாணி’ கர்நாடகா வகை பிரியாணி. இதில் கொத்தமல்லி அதிகம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும். பார்க்கும் போது மற்ற பிரியாணி போல் ஆரஞ்ச் நிறத்தில் இல்லாமல் பச்சை நிறத்தில் இருக்கும். பெங்களூரில் ஒரு சில இடங்களில் தான் இந்த வகை பிரியாணி கிடைக்கும். மேலும் என் பாட்டி தொன்னே பிரியாணி ஸ்பெஷலிஸ்ட். அவங்க செய்யும் பிரியாணிக்கு எங்க குடும்பத்தில் உள்ள எல்லாருமே அடிமை. அவ்வளவு சுவையா செய்வாங்க. அதனால் அவங்களின் முறையை பின்பற்ற முடிவு செய்தோம். இந்த பிரியாணி செய்யும் எக்ஸ்பர்ட் செஃப் மற்றும் இரண்டு பசங்க பேக்கிங் மற்றும் உதவிக்காக சேர்த்தோம். நகராபாவி என்னும் இடத்தில் எங்களின் முதல் கிளவுட் கிச்சன் செயல்பட ஆரம்பித்தது.

இங்கு இப்படி ஒரு கிச்சன் செயல்படுவதை மக்களுக்கு எப்படி தெரியபடுத்தலாம்னு யோசித்த போது சமூக வலைத்தளத்தில் இது குறித்து வெளிப்படுத்தலாம்னு ஸ்வேதா சொல்ல… இன்ஸ்டா மற்றும் முகநூலில் எங்களின் கிளவுட் கிச்சனில் தயாராகும் பிரியாணி குறித்த வீடியோ மற்றும் செய்தியினை பதிவு செய்தேன். அடுத்த கட்டமாக ஸ்விகியிலும் இணைந்தேன். எங்களின் முதல் ஆர்டர் ஸ்விகியில் வந்த போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு அன்றே பத்து ஆர்டர்கள் வந்தது. சொல்லப்போனால் தொழில் தொடங்கிய முதல் மாதத்திலேயே 10 ஆயிரம் ஆர்டர்கள் கிடைத்தது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஆர்டர்கள் அதிகரித்ததே தவிர குறையவில்லை’’ என்று கூறும் ரம்யாவின் சிறப்பே பிரியாணி பேக்கிங் செய்யும் விதம் தானாம். ‘‘ஒரு உணவை சாப்பிடக் கொடுக்கும் போது அதை அழகாக பேக்கிங்கும் செய்து தரணும். அதில் நாங்க இருவருமே ரொம்பவே கவனமா இருந்தோம்.

முதலில் பிரியாணியை வாழையிலையில் பேக் செய்து… அந்த பொட்டலத்தை ஒரு அழகிய டின் பாக்சில் வைத்து கொடுக்கிறோம். வாழையிலையில் பேக்கிங் செய்வதால், பிரியாணி மேலும் சுவையாக இருக்கும். அதே சமயம் டின் பாக்சில் கொடுப்பதால், சூடாகவும் சுவை மாறாமலும் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு கிளவுட் கிச்சனோடு ஆரம்பித்தோம். இந்த இரண்டு வருடத்தில் பெங்களூர் முழுக்க 14 கிளவுட் கிச்சன்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு பெங்களூர் ஜெய்நகரில் ஒரு உணவகமாகவே திறந்திருக்கிறோம். தற்போது பிரியாணி மட்டுமில்லாமல் மற்ற உணவுகளும் வழங்கி வருகிறோம். சைவம் அசைவம் இரண்டும் என்பதால், எங்களின் முருங்கை சில்லி ஸ்டார்டர் ரொம்ப ஃபேமஸ். அதேபோல் அசைவத்தில் வறுத்த நெய் சிக்கனும் மக்களின் ஃபேவரட்டாக உள்ளது. சூப் வகையில் மட்டன் எலும்பு சூப், இனிப்புகளில் இளநீர் பாயசம் எங்களின் சிக்னேச்சர் உணவு’’ என்று கூறும் ரம்யாவிற்கு தொன்னே பிரியாணியை பான் இந்தியா முழுக்க பிரபலமாக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!(அவ்வப்போது கிளாமர்)
Next post கேரளாவிலிருந்து நேபாள் வரை தனியாக லிஃப்ட் கேட்டு பயணம்! (மகளிர் பக்கம்)