குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அவசியம்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 24 Second

கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே ஓரளவு விலகிவிட்டாலும் கொரோனா விலகிவிட்டது என்று சொல்வதற்கில்லை. சமீபத்தில்கூட பில்கேட்ஸ் கொரோனாவின் புதிய அலை குறித்த எச்சரிக்கை ஒன்று தெரிவித்திருந்தார். அதனை உலக சுகாதார நிறுவனமும் வாய்ப்பிருக்கலாம் என்பதைப் போல் உறுதி செய்திருக்கிறது. கொரோனா இயற்கையா செயற்கையா உயிரியல் போரா என்ற பட்டிமன்றங்கள் எல்லாம் அப்புறம்தான்.

முதலில் கொரோனா தடுப்பூசியை நாம் போட்டுக்கொள்ள வேண்டியதுதான் நம்மையும் நம் சமூகத்தையும் காப்பதற்கான ஒரே நல்ல வழி. இன்று, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி மிக வேகமாக போடப்பட்டு வருகிறது. பலரும் தாமாகவே முன்வந்து ஆர்வத்துடன் போட்டுக்கொண்டாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான இளையோரிடமும் பெற்றோரிடமும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து அச்சமும் குழப்பமான கேள்விகளும் நிறைய உள்ளன.

கோவிட் 19 காரணமாக ஏற்பட்ட ஒட்டுமொத்த நோய்த்தொற்று குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் போன்று புதிய உருமாற்றம் கொண்ட வைரஸ்கள் பரவலாம் என்ற அச்சமும் உள்ளது. இதுவே, இந்தியாவில் நான்காம் அலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், கோவிட் தடுப்பூசி திட்டத்தை குழந்தைகளிடமும் முழுமையாக எடுத்து செல்ல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகின்றன.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து சில அடிப்படைத் தகவல்களைச் சொல்கிறார் தொற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்.

குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும்?

பெரும்பாலான குழந்தைகளிடத்தில் கோவிட்19 நோய்த்தொற்று பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் பதின்ம வயதினர், இணை நோய்கள் உள்ள குழந்தைகளிடத்தில் இதன் தீவிரத்தன்மை அதிகமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் (MIS-C) எனப்படும் தொற்றுக்குப் பிந்தைய நோய்க்குறி இதயத்தைப் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சையில் சேர்க்கப்படுவதற்கும் வழிவகுக்கிறது. இதனால் நோயின் தன்மை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் குழந்தைக்கு கடுமையான நோய் வராமல் தடுக்கவும், MIS-C போன்ற சிக்கல்களைத் தவிர்க்கவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.

இத்துடன் கோவிட்19 தொற்றானது பள்ளிப்படிப்பு, சமூகத்தில் மற்றவர்களுடன் பங்கேற்பது, சக நண்பர்களுடன் தொடர்பாடல் மற்றும் விளையாட்டு செயல்பாடு ஆகியவற்றில் இணைவதற்குத் தடையாக உள்ளது. எனவே, உங்கள் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர, தடுப்பூசி அவசியமாகிறது. பொதுவாக மக்கள் தொகையில் 25% குழந்தைகள் என்பதால், தடுப்பூசி போடுவது சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத்திறனை அடையவும் உதவுகிறது. இது குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயத்தையும், மாறுபாடு கொண்ட புதிய வைரஸ்கள் பரிணமிப்பதையும் குறைக்கிறது.’

குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?

‘கோவிட் தடுப்பூசிகள் நம் நாட்டில் கிடைக்கப்பெற்று கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிறது. மேலும் இது பெரியவர்களிடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடுமையான பாதகமான விளைவுகள் கிட்டத்தட்ட எதுவும் இல்லை. மேலும் இந்த தடுப்பூசிகள் குழந்தைகளிடமும் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அச்சம் தேவையில்லை.

தற்போது, கோவாக்சின் 6-18 வயதுடையவர்களுக்கும், கோர்பிவாக்ஸ் 5-18 வயதுடையவர்களுக்கும், சைடஸ் கோவ் 12-17 வயதுடையவர்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன, மேலும் பிற தடுப்பூசிகளும் விரைவில் கிடைக்கவிருக்கின்றன. எனவே, உங்கள் குழந்தைக்கு தடுப்பூசிகளை போடுவது நிச்சயமாக பாதுகாப்பானதாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும்.’

தடுப்பூசியை எங்கே போய் போட வேண்டும்?

‘தற்போது குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் முக்கியமாக பள்ளிகளில் பெருமளவில் செய்யப்படும் ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகள் மூலம் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தடுப்பூசிகள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் போடப்படுகின்றன. எனவே, எந்த இடத்தில் தடுப்பூசி போடப்பட்டாலும், தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. ’

என் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பிறகு நான் என்ன பக்க விளைவுகளை எதிர்பார்க்கலாம்?

‘தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்றாலும், மற்ற தடுப்பூசிகளைப் போலவே, குழந்தைக்கு ஊசி போடும் இடத்தில் வலி, குறுகிய கால காய்ச்சல் ஏற்படலாம். மேலும் பதின்ம வயதினருக்கு தடுப்பூசி போட்ட உடனேயே மயக்கம் ஏற்படலாம். தடுப்பூசி போட்ட பிறகு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு தடுப்பூசி மையத்தில் தங்கியிருக்கவும், மேலும் வலி அல்லது காய்ச்சல் இருந்தால் பாராசிட்டமால் எடுத்துக் கொள்வதும் அவசியம்.’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தொண்டை கட்டுக்கு சுக்கு!! (மருத்துவம்)
Next post உங்க ஸ்கின் என்ன டைப்? 5 வகை சருமத்துக்கான டிப்ஸ்!(மருத்துவம்)