பஃபூன் கலைஞர் செல்வராணி!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 1 Second

நகைச்சுவை இல்லா வாழ்வு சுவைக்குமா..? சமூக ஊடகங்களைத் திறந்தால் செய்திகள் அத்தனையும் காமெடி நடிகர்களை வைத்து நகைச்சுவை பொங்க மீம்ஸ்களாக புது வடிவம் பெற்று புறப்படுகின்றன. நம்மை சிரிக்கவும்.. சிந்திக்கவும் தூண்டும் நகைச்சுவை உணர்வை மனிதன் பொதுவெளிக்கு கொண்டுவந்து உரையாடியது எப்போது? எப்படியாக அதனை வெளிப்
படுத்தி இருப்பான்?

தன் மதிநுட்பத்தால் ஒரு சம்பவத்தை சொந்த நடையிலே மாற்றி அதில் நகைச்சுவை கலந்து சிந்திக்கத் தருபவனே கோமாளி அல்லது பஃபூன் கலைஞன். அந்தவகையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் ஞானகுரு. அதனால்தான் அவர் ‘‘நாட்டுக்கு சேவை செய்ய நாகரீகக் கோமாளி வந்தேனய்யா” என்றும், சிரி..சிரி.. பாடலில் “வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலே இந்த சிரிப்பு” என, பல்வேறுவிதமான சிரிப்பை சிரித்தே..!! சிரிக்க சிரிக்க தனது மனைவி மதுரத்துடன் நகைச்சுவை பொங்கப் பாடியவர்.

ஊடகங்கள் இல்லாத காலத்தை பின்னோக்கி நகர்த்தினால்.. மக்களுக்குத் தெரிந்த கதைகள், தெரியாத வரலாறுகள், நீதி போதனைகள் என பல்வேறு விஷயங்கள் நகைச்சுவை கலந்தே பரிமாற்றம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 450, 500 ஆண்டு சிறப்பு வாய்ந்த கூத்துக் கலையை, விடியவிடிய இழுத்துச் செல்ல, உச்ச ஜதியில் பாடியும்.. ஆடியும்.. கொடுக்கும் தண்ணீரைக் குடித்தும்.. கிடைத்த உணவை உண்டும்.. கலைநிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாகச் செய்ததற்கு, கலைஞர்களுக்குத் தேவை பொருளாதாரம் மட்டுமா? அதையும் தாண்டி கலைமீது இருந்த தாகமும், மக்கள் கொடுக்கும் அங்கீகாரமுமே காரணம் என்கிறார் கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும் நூலின் ஆசிரியர் இரா. தங்கபாண்டியன்.

கோமாளிகள் கலகக்காரர்கள். நடைமுறையில் இருக்கின்ற விசயங்களை உள்வாங்கி அதையே காமெடியாக்குவார்கள். அவர்கள் சுரண்டல்வாதிகளை விமர்சித்தார்கள். சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை விமர்சித்தார்கள். பெண்ணடிமைத்தனத்தையும் விமர்சித்தார்கள் என்கிறார் இவர். கலைமாமணி விருதுபெற்ற ஓம்.முத்துமாரி போன்ற கலைஞர்கள் உலகமயமாதல் குறித்துப் பேசி கேள்விகளை எழுப்பினர். குறவன்-குறத்தி ஆட்டத்தில் கோமாளி பண்ணையாராக வந்து எப்படி அடித்தட்டு மக்களை சுரண்டுகிறார் என்பதை ‘‘ஏய் குறவா நீ தள்ளு.. குறத்தி நீ என் பக்கத்தில் வந்து நில்லு”, “குறவன் நாற்றம் சகிக்கலை.. குறத்தி நாற்றம் மணக்குது என” பேசி நடிப்பர்.

கூத்தைக் காண வருபவர்களில் பலர் பஃபூன் கலைஞர்களின் ரசிகர்கள். இவர்கள் அதிகாலை மூன்று மணி ஆனாலும் தூக்கத்தில் இருப்பவர்களை கலகலவென சிரிக்க வைத்து எழுந்து உட்கார வைப்பார்கள். கோமாளிகளின் காட்சி முடிந்ததுமே எழுந்து செல்பவர்களும் உண்டு. எப்போதெல்லாம் கூட்டம் கலைகிறதோ அப்போதெல்லாம் கோமாளியே கதை நடத்துவார். பார்வையாளர்களை உட்காரவைக்கவும், கதைக்கான ஏற்ற இறக்கங்களைத் தரவும் கோமாளிகள் தேவை.

முருகன் வந்தாலும் வள்ளி வந்தாலும், நாரதர் வந்தாலும் நாடகம் போரடிக்காமல் போவதற்கு தர்க்கம் செய்பவராக நகைச்சுவை உணர்வோடு கேரக்டர்களை மாற்றி செய்ய பஃபூன் தொடர்ச்சியாக நாடகத்தில் இருந்துகொண்டே இருப்பார். பஃபூன் கலைஞர்கள் மக்களை கவர, கண்ணைக் கவரும் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தங்களை வெளிப்படுத்துவர்.

பெண்கள் நடிக்கத் துணியாத காலகட்டத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு ஸ்திரிபாட்டாக வருவர். ஒரு ஆண் பெண்ணாய் வேடமிட்டு நடிப்பது ஸ்திரிபாட். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் துவக்கத்தில் ஸ்திரிபாட் வேடமிட்டும் நடித்தவரே. சுதந்திரப்போராட்ட காலமான 19ம் நூற்றாண்டின் இறுதியும் 20ம் நூற்றாண்டின் துவக்கமும், பெண் கலைஞர்கள் கலைகளுக்குள் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. இதில் பல பெண் கலைஞர்கள் பாடகர்களாகவும், நடிகர்களாகவும் வரும்போது, நாடக மேடைகள் அலங்காரமாகி நவீனத்துவம் பெறத் தொடங்கியது என்கிறார் ஆசிரியர் தங்கபாண்டியன்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே மேடைகளில் பஃபூன் கலைஞராக தோன்றுவதுடன், மாற்று ஊடக மையத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும், மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் செல்வராணியை சந்தித்து இன்றைய கூத்து மற்றும் நாடகக் கலைகளின் நிலை குறித்து பேசியபோது..இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை விடிய விடிய நடைபெறும் குறவன் குறத்தி ஆட்டம், ராசா ராணி ஆட்டம், கரகாட்டம், வள்ளி திருமண நாடகம், அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, கூத்து போன்றவற்றுக்கு பஃபூன் கலைஞராய் செல்கிறேன் என்றவர், சமீபத்தில் 600 கலைஞர்களை ஒன்றுதிரட்டி கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக மதுரையில் மிகப் பெரிய அளவில் நடத்திய போராட்டம் மற்றும் பஃபூன் கலைஞராய் தன்னை மாற்றிய சூழலையும் நம்மிடையே பகிர்ந்தார்.

‘எனக்கு ஊர் இராமநாதபுரம். 10வது வரை படிச்சுருக்கேன். என் அப்பாவும் சிலம்பக் கலைஞர்தான். அவர் மூலமாகவே எனக்குள் கலை ஆர்வம் வந்தது. வீட்டில் நாங்கள் 5 பெண்கள். நான் இரண்டாவது. எனக்குப் பிறகு மூன்று தங்கை மற்றும் ஒரு தம்பி என குடும்பம் வருமானமின்றி வறுமையில் தத்தளித்தது. எனக்கிருந்த கலை ஆர்வத்தில் 8வது படிக்கும்போது மேடை நிகழ்ச்சி, பாட்டு, செய்தித்தாள் வாசிப்பு என எல்லாவற்றிலும் முன் நிற்பேன்.

இந்த நிலையில் நான் பூப்படைந்ததுமே, சிறுவயதில் என்னை மணம் முடித்துக் கொடுத்துவிட்டனர். பிறகு எனக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள். திருமணமாகி இந்த 30 ஆண்டுகளில் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு என் கணவரால் பயனில்லை என்றானது. வருமானமின்றி ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது கிராமங்களில் அறிவொளி இயக்கம், நமது கிராமம் போன்ற நிகழ்ச்சிகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த நேரம்.

எனது கலை ஆர்வம் விழித்துக்கொள்ள, கல்வி விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளில் நுழைந்து என்னை மெறுகேற்றினேன். அறிவொளி இயக்கம் மூலம் பாட்டு, நடனம் என பங்கேற்று, அப்படியே வீதி நாடகம், மேடை நிகழ்ச்சியென என் கலை பயணம் ஆரம்பமானது. தொடக்கத்தில் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை குச்சி ஆட்டம் என இறங்கி நிகழ்ச்சிகளைச் செய்துவந்த நிலையில், அப்படியே பஃபூன் கலைஞராகவும் மேடைகளில் தோன்ற ஆரம்பித்தேன் என்றவர், இயல்பிலே எனக்கு நகைச்சுவை உணர்வு இருந்தது. அந்த உணர்வே நான் பஃபூன் கலைஞராக மேடைகளில் தோன்றவும் கை கொடுத்தது என்கிறார்.

தென் மாவட்டங்கள் திருவிழாக்களுக்கு பெயர் பெற்றவை. திருவிழா முடிந்து நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் ஒரு நாளைக்கு 2500 வரை வருமானம் கிடைக்கும். மக்களை நிகழ்ச்சிக்குள் ஈர்க்க இடையிடையில் நாங்கள் காமெடி டிராக்கில் இறங்குவோம். கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இரவு நேரங்களிலே இருக்கும். நிகழ்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதுடன், சில நேரங்களில் ஒரு வாரம், பத்துநாள் என குழுவாக பயணிக்க வேண்டிய நிலையும் இருக்கும். இரவு 10 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணிவரை பஃபூனாக வேஷம் போடுவது பெண்களுக்கு மிகவும் கஷ்டமான வேலைதான்.

விடியவிடியத் தூங்காமல் கண் விழிக்க வேண்டும். பல இடங்களில் மேடை மட்டுமே இருக்கும். நாங்கள் பாதுகாப்பாய் ஒதுங்க கழிப்பிடம் இருக்காது. நிகழ்ச்சிக்குத் தயாராக வேண்டி நிலையில், அடுத்தடுத்து உடைகளை மாற்ற சரியான இடமிருக்காது. நாம் செய்வது எந்த வேலையாக இருந்தாலும் எல்லா சூழலையும், அதிலிருக்கும் கஷ்ட நஷ்டங்களையும் சமாளிக்கத்தானே வேண்டும் என்றவர், சூழ்நிலை பெண் கலைஞர்களை சில விசயங்களில் நிர்பந்திக்கும். உறுதியாக நின்றால் நம் திறமை மட்டுமே அங்கு பேசும். ஒரு பஃபூன் கலைஞராய் மேடைகளில் என்னை மிகவும் கண்ணியமாகவே வெளிப்படுத்தி வருகிறேன்’’ என்கிறார் மிகவும் அழுத்தமாய்.

‘‘நாம் தேர்ந்தெடுக்கும் வழிதானே நமக்கான எதிர்காலம் என்றவர், என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டேன். கூத்து, நாடகம் என நான் இறங்கியபோது என் மகனுக்கு 3 வயது. என் மகளுக்கு 6 வயது. இந்த முப்பது ஆண்டுகளில், என் பிள்ளைகள் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமுமாக பிரிந்தே பெரும்பாலான நாட்கள் வாழ்ந்திருக்கிறோம். அம்மா இந்த வேலைதான் செய்கிறேன் என்பதை என் பிள்ளைகளுக்கு நான் இதுவரை வெளிப்படையாகக் காட்டியதில்லை. ஒரு பஃபூன் கலைஞராக ஆடியும் பாடியும்தான் என் மகளை பொறியியல் படிக்க வைத்தேன். இப்போது மகனும் கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடும் முயற்சிகளில் இருக்கிறார்’’ என்கிறார் பஃபூன் கலைஞராய் வலம் வரும் செல்வராணி.

நகைச்சுவைக் கலைஞர்களான கோமாளிகள் அல்லது பஃபூன் கலைஞர்கள் சொந்த வாழ்வில் சிரிப்பது மிகமிக அரிது. பெண் பஃபூன் கலைஞர்கள் இன்றி, ஆண் பஃபூன் கலைஞர்கள் சோபிக்க மாட்டார்கள். பெண் பஃபூன் கலைஞர் யாரென கேட்டு சிலர் நாடகத்தை முடிவு செய்வார்கள் என்கிறார் சென்னை லயோலா கல்லூரியின் கலை பண்பாட்டுத்துறை பேராசிரியர் காளீஸ்வரன். பெண் கலைஞர்கள் நன்றாகப் பேசி பக்காவாக நடித்தால் ஒரு ஊதியம். அழகாக இருந்து நன்றாகப் பேசி நடித்தால் அதற்கொரு சம்பளம்.

அழகும், நகைச்சுவையும், நடிப்புத் திறமையும் இருந்தால் ஊதியம் கூடுதலாகக் கிடைக்கும் என்றவர், பெண் கலைஞர்கள் இளம் வயதினராக இருந்தால் படும் கஷ்டங்கள் அதிகம். இந்த உடைதான் நீ உடுத்த வேண்டும். இப்படித்தான் நீ ஆட வேண்டும். உன் அங்க அசைவுகள் இப்படியாக இருக்க வேண்டும். என்னுடன் மட்டுமே நீ நடிக்க வேண்டும் போன்ற நிர்பந்தங்களும் உரிமை கொண்டாடலும் இவர்களுக்கு இருக்கும்.

மேடைக்குப் பின்னால் இருக்கும் உடைமாற்று இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்களுக்கு ஒத்துப்போகும் பெண்கள் மேடையில் தப்பித்தார்கள். இல்லையெனில் பொதுவில் அவமானப்படுத்தப்படுவார்கள். ஆடை குறைத்து மேடை ஏறினால் போதும் எனும்போது, கலையை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. அவர்கள் கலைத் துறையை விட்டே விலகிவிடுகிறார்கள்.

டேய் மண்ணாங்கட்டி மண்டையா, அடேய் வயிறு முட்டி தலையா, மாங்காத் தலையா என்கிற கவுண்டமணி-செந்தில் திரைப்படக் காமெடி தோள்பாவைக் கூத்தை தழுவியதே. நடிகர் வடிவேலுவின் பல காமெடிகள் மேடை நாடகத்தை தழுவியவை. சிறந்த காமெடி நடிகையான கோவை சரளா பஃபூன் கலைஞராக நாடகத்தில் இருந்து திரைத்துறைக்குள் வந்தவர்தான். அதேபோல் சின்னத்திரையில் தோன்றி புகழடைந்த தாமரை செல்வியும் பஃபூன் கலைஞராக நாடகத்தில் இருந்தவரே.

பேசியும்.. கதை சொல்லியும்.. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பஃபூன் கலைஞர்கள், இன்று நவீன சினிமாக்களின் வருகையால் இரட்டை அர்த்த வசனங்களை பேசி சிரிக்க வைக்கும் நிலைக்கும், கட்டாய ஆடைக் குறைப்புக்குமாக தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று அழிவின் விளிம்பில் நமது நாட்டுப்புறக் கலைகளும், கலைஞர்களும், அவர்களின் குழந்தைகளும் இருக்கிறார்கள். எந்த பெண் கலைஞர்களும் ஆபாசத்தை விரும்பி அணிவதில்லை. சூழ்நிலை அவர்களை நிர்பந்திக்கிறது. இது கலைக்கு மிகப்பெரும் அழிவு என்றவர், அறிவியலுக்கே ஆதாரமாய் இருக்கும் நமது நாட்டுப்புறக் கலை மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்ககளின் திறமைகளை நாம் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்கிறார் வருத்தம் தோய்ந்து.

தங்கள் துயரத்தை வண்ணங்களால் நிறம்மாற்றும் கோமாளிகளின் அழுகை எந்த ரகம்? கூத்து பொழுதுபோக்குக்கானது என்பதையும் தாண்டி, கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாப்பதன் மூலமே நமது பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்க முடியும். பாட்டும் பாவமும் தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)
Next post மாற்றுத்திறனாளிகளுக்காகவே இந்த டூர் அண்ட் டிராவல்!! (மகளிர் பக்கம்)