ஸ்டூல் டேட்டா… கழிவறை சொல்லும் உடல் நலம்! (மருத்துவம்)

Read Time:5 Minute, 13 Second

உணவு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு உண்ட உணவு செரிமானமாகி உடலைவிட்டு கழிவாக வெளியேறுவதும் அவசியம். உணவில் உள்ள நல்ல சத்துக்கள் உடலோடு தங்கி, கசடுகள் மலமாக வெளியேறும்போது அது வெறுமனே கழிவாக மட்டும் வெளியேறுவதில்லை. நம் ஆரோக்கியத்தின் அளவைக் அறிவிக்கும் குறியீடாகவும் இருக்கிறது. நமது மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக இருக்கும் ஸ்டூல் டேட்டா இதோ…

டைப் 1: மலம் கழிக்க மிகவும் சிரமமாக இருக்கும். தனித்தனியாக சிறு சிறு உருண்டைகள் போல வெளிவரும். இந்த நிலை இருந்தால், மோசமான மலச்சிக்கல்.

தீர்வு:
உடனடியாக, மருத்துவரை அணுக வேண்டும். மோசமான மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, நாட்பட்ட நோய்கள், புற்றுநோய், செரிமான மண்டல நோய்கள், சர்க்கரை வியாதி, கடுமையான மனநல பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மலச்சிக்கலை சீராக்க தேவையான மலமிளக்கிகள் (Laxatives) எடுத்துக்கொண்டு, உணவுமுறை மாற்றம், வாழ்வியல் மாற்றம் போன்றவற்றுடன் மலச்சிக்கலுக்கு மூலக்காரணமான நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.   

டைப் 2: மலம் கழிப்பதில் சிரமம் இருக்கும். மலம் மிகவும் வறட்சியாக இருக்கும். மலம் கழிக்கும்போது எரிச்சலான உணர்வு இருக்கும். இது பொதுவான மலச்சிக்கல் நிலை.

தீர்வு:
இதற்கு, செரிமான மண்டலக் கோளாறுகள், மனஅழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கக்கூடும். மருத்துவரை அணுகி மலமிளக்கிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை மூலம் தீர்வு காணலாம்.

டைப் 3: மலம் கழிக்கும்போது லேசான எரிச்சல் இருக்கும். வறட்சியாக, விரிசல்களோடு மலம் வெளிவரும். மலச்சிக்கல் இவர்களுக்கு ஏற்படலாம்.

தீர்வு: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். எனவே, போதுமான அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டைப் 4: பாம்பு போல நீளமாக மலம் வெளியேறும். மலம் வெளிவரும்போது எந்த எரிச்சல் உணர்வும் இருக்காது. இதுதான் இயல்பான நிலை.

குறிப்பு: இது ஆரோக்கியமான நிலை. தினசரி சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சிகள் செய்வது, போதுமான ஓய்வு எடுப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை தக்கவைக்கலாம்.

டைப் 5: எளிதாக மலம் வெளியேறும். ஆனால், தனித்தனியாக சொத் சொத் என வெளியேறும்.

தீர்வு: இது ஆபத்து இல்லாத நிலை என்றாலும், உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதே மலம் இப்படி வெளியேற காரணம். எனவே, நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

டைப் 6: திரவ நிலை அதிகமாகவும், கொஞ்சம் திடமாகவும் மலம் வெளியேறும். இது வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலை.

தீர்வு:
ஆரோக்கியமற்ற உணவு, சுகாதாரமற்ற நீர் போன்றவையே வயிற்றுப்போக்குக்கு முக்கிய காரணம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொண்டு, உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற குளுக்கோஸ், சலைன் நீர் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

டைப் 7:
திரவ நிலையில் மலம் வெளியேறும். அடிக்கடி வயிறு வலித்து, இதே போல தொடர்ந்து போகும். இது தீவிர வயிற்றுப்போக்கு.

தீர்வு: சுகாதாரமற்ற உணவுகளையும் நீரையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும், தீவிரமான செரிமான மண்டலப் பிரச்னை இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். தாமதிக்காமல் வயிறு, இரைப்பை நிபுணர் ஒருவரை அணுக வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டெம்பிள்செட் ஜுவல்லரி தயாரிப்பதில் அவர் ரொம்ப டாப்!! (மகளிர் பக்கம்)
Next post இளநரையை போக்கும் மருதாணி!(மருத்துவம்)