உருவாகிறான் புதிய மனிதன்!(மருத்துவம்)

Read Time:7 Minute, 57 Second

தற்போது விஞ்ஞானிகள், மரபணு எடிட்டிங் கருவியை பயன்படுத்தி ஒரு மனித உயிரணுக்களில் உள்ள நோயை உருவாக்கும் மரபணுவை சரிசெய்து, அவனுடைய எதிர்கால தலைமுறையினருக்கு அந்த நோய் செல்லாமல் தடுக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க ஆய்வுக்குழு ஒன்று இந்த ஜீன் எடிட்டிங்கின் மூலம் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட மனித கருக்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

காஷ்மீரில் பிறந்த டாக்டர் சஞ்சீவ் கௌல் இந்தக்குழுவில் முன்னணி மருத்துவர் பதவியை வகித்து நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். CRISPR CAS9 என்ற புதிய நுட்பத்தை பயன்படுத்தி மரபணு திருத்தம் மூலம், மனித கருக்களை மாற்றி அமைக்கும் ஆய்வினை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு மனித உயிரிழப்புக்குக் காரணமான மாரடைப்புக்கு வழிவகுக்கும் மரபணுக்களை மாற்ற உதவுகிறது. ‘குடும்பத்தில் ஒருவருக்கு செய்யும் இந்த மரபணு திருத்தம் அந்த குடும்பத்தின் மரபு வழியே வரும் எதிர்கால சந்ததியரை காப்பாற்றும்’ என்கிறார் கௌல்.

தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் (National Brain Research Centre) விஞ்ஞானிகளான சுப்ரதா சின்ஹா மற்றும் நந்தினி சிங் இருவரும் மூளையில் இருக்கும் புரோட்டோகாடிரின் காமா(Protocadherin gamma) எனப்படும் மரபணு கொத்துக்களில் உள்ள முரண்பாட்டுக்கும், கற்றல் குறைபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த மரபணு முரண்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. உலகில் 10 பேரில் ஒருவரை தாக்கக்கூடிய கற்றல் குறைபாடு (Dyslexia) அந்த குடும்பத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இதுபோல் குடும்பத்தில் பரம்பரையாக வரக்கூடிய நோய்களை ஏற்படுத்தும் மரபணுக்களை திருத்தம் செய்வதன் மூலம் பின்வரும் சந்ததியரை காப்பாற்ற முடியும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மரபியல் மருத்துவர் ஜெகதீசனிடம் இது எப்போது சாத்தியம் என்று கேட்டோம்…‘‘மனித உடலில் 25 ஆயிரம் மரபணுக்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஒரு மரபணுவில் சுமார் 7 நூறு முதல் 20 லட்சம் வரை மரபணு துணுக்குகள்(Nucleotides) இருக்கும். A,T,G,C என்ற நான்கு வகையான மரபணு துணுக்குகள் மாறி மாறி இணைந்து மரபணுக்கள் உருவாகின்றன.

அனைத்து மனிதர்களுக்கும் 99% மரபணுக்கள் ஒன்று போலவே இருக்கும். 1% மரபணு வித்தியாசமாக இருக்கும். மனிதர்களிடையே உருவ மாறுபாட்டுக்கும், பலவித நோய்கள் தாக்குவதும் இந்த 1% மரபணுக்களில் ஏற்படும் மாற்றம்தான் காரணம். மரபணுத் துணுக்கு(Nucleotide) A இருக்குமிடத்தில் வேறொரு மரபணுத் துணுக்கு G, C அல்லது T வந்தால் அது மாற்றம்(Mutation) என்று சொல்லப்படும். இந்த மாற்றத்தால் மரபணு நோய் தோன்றும்.

தற்போது, மரபணுவில் திடீர்மாற்றம்(Mutation) ஏற்பட்டால் அதை ஜீன் எடிட்டிங் மூலம் சரி செய்து மரபணு நோய்களைக் குணப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். மியூட்டேஷன் ஏற்பட்டு மாறிப்போன மரபணுத் துணுக்குகளை வெட்டி எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஆரோக்கியமான மரபணுத் துணுக்கை ஒட்ட வைப்பதே ஜீன் எடிட்டிங். ஜெனட்டிக் இன்ஜினீயரிங் துறையில் ஏற்பட்டுள்ள மிகச் சமீப வளர்ச்சிதான் இந்த ஜீன் எடிட்டிங். இது இப்போது ஆராய்ச்சி நிலையில் இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ஜீன் தெரபி (Gene Therapy) நடைமுறைக்கு வந்துவிட்டது’’ என்றவரிடம், ஜீன் தெரபி என்பது என்ன என்று கேட்டோம்…

‘‘பெரும்பாலான நோய்கள் நமது மரபணுக்களின் உள்ள சீர்கேடு, செயலாக்கமின்மை இவற்றால் ஏற்படுகின்றன. ஒன்று, பரம்பரையின் தொடர்ச்சியாக, வாழையடி வாழையாக இந்த மரபணு சிக்கல் ஒருவருக்கு அவரது குடும்பத்தினரிடமிருந்து மரபணுவில் ஒட்டிக்கொண்டு வருகிறது அல்லது கருவிலிருந்து, குழந்தையாக வளரும் பருவத்தில் ஏற்படும் மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது.

புற்றுநோய், நீரிழிவு ஆகியவை இந்த மரபணு சிக்கலால் ஏற்படும் நோய்களுக்கு உதாரணங்களாக சொல்லலாம். மரபணு சிக்கல்களால் ஏற்படும் நோயை நல்ல மரபணுக்களை மாற்றி வைப்பதன் மூலம் சரிசெய்வதே மரபணு சிகிச்சையாகும்(Gene Therapy).

மரபணு சிகிச்சை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படத் துவங்கியது முதலே இந்த மரபணு சிகிச்சையை மருத்துவர்களும், அறிவியலாளர்களும் ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டனர். 2005-ம் ஆண்டின் இறுதியில் உலகளவில் ஏறக்குறைய 1100 வகை மரபணு சிகிச்சை ஆய்வுகள் மற்றும் சோதனை நிலை சிகிச்சை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றில் 60 சதவீத முயற்சிகள் புற்றுநோயை குணப்படுத்தும் அடிப்படையிலானவை.ஜீன் எடிட்டிங் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புற்றுநோய் சிகிச்சையில் பாதிக்கப்பட்ட மரபணுவை கண்டுபிடித்து, எந்தத் தீங்கும் அற்ற மரபணுவில் பி53-வினை இயக்கி, புற்றுநோய் கட்டியை செயலிழக்கச் செய்யும் அந்த மரபணுவை புற்றுச் செல்களுக்கு அனுப்புகின்றனர்.

அவை புற்றுச் செல்களின் மரபணுத் தொகுதியில் நுழைந்து அவற்றின் வேகமான சுய நகலாக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் மற்ற எந்த செல்களுக்கும் பாதிப்பில்லாமல், புற்றுச் செல்களை அழிக்க முடியும் என்பதுதான் மரபணுமாற்று சிகிச்சையின் சிறப்பு. பரம்பரை நோய்களை அழிக்கவும், நோயற்ற சந்ததியை உருவாக்கவும் பயன்படும் இந்த ஆய்வு பயன்படும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)
Next post கருச்சிதைவின் காரணம்!! (மருத்துவம்)