கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 58 Second

ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி. இந்த விழாவை முன்னிட்டு கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது என்பது ஐதீகம். அன்று அவரின் கால் தடங்களை வீட்டில் பதித்து, அவருக்கு பிடித்த உணவினை படைத்து கொண்டாடுவது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டிலேயே சுவையான பலகாரங்கள் செய்வது குறித்து விளக்குகின்றனர் சமையல் கலைஞர்களான ஜெயலட்சுமி மற்றும் ராஜம்.

அவல் கேசரி

தேவையானவை:  

கெட்டியான அவல் – 200 கிராம்,
உருண்டை வெல்லம் – 100 கிராம்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
நெய் – 4 டீஸ்பூன்,
முந்திரி,
கிஸ்மிஸ் – 10.

செய்முறை:

கெட்டியான அவலை லேசான சுடுநீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் அவல் நன்றாக ஊறி விடும். வெல்லத்தை தட்டி ஒரு வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அதில் போட்டு இளம் பாகாக காய்ச்சி அதில் ஊறிய அவலைப் போட்டு நன்றாகக் கிளறி ஏலப்பொடி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், நெய் சேர்த்து நன்றாகக் கிளறி கேசரி பதம் வந்ததும் கீழே இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி தேவையானால் துண்டுகள் போடலாம். இல்லையென்றால் அப்படியே பரிமாறலாம்.

பொரிகடலை மாவு உருண்டை

தேவையானவை :

பொரிகடலை மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 1 கரண்டி,
பொடி செய்த வெல்லம் – 50 கிராம்,
ஏலக்காய் – 2,
முந்திரிப்பருப்பு – 5,
தேங்காய்த்துருவல் – 1 கரண்டி,
நெய் – 25 கிராம்.

செய்முறை :

வாணலியில் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கம்பிப்பாகாக்க வேண்டும். தேங்காய்த் துருவலை வறுத்தெடுக்கவும். வெல்லப்பாகில் மாவுகளைப் போட்டு, தேங்காய், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி துண்டு போட்டு கீழே இறக்கி சிறிது ஆறியதும் உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.

ரவாலாடு

தேவையானவை

ரவை – 2கப்,
சர்க்கரை – 2 கப்,
முந்திரிப் பருப்பு -12,
நெய் – ஒரு கப்,
ஏலப்பொடி – 1 ஸ்பூன்,
கொப்பரைத்துருவல்
அல்லது வறுத்த தேங்காய்த் துருவல் – 1 கப்.

செய்முறை

வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பை ஒடித்து துண்டுகளாக்கி வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு அதில் கரகரப்பாகப் பொடித்த ரவையைப் போட்டுக் கிளறவும். நன்கு வாசனை வந்ததும் கொப்பரைத் துருவல் அல்லது வறுத்த தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கி கைகளில் நெய் தடவி லட்டுகளாகப் பிடிக்கவும்.

பொரிகடலை தட்டை

தேவையானவை:  

பச்சரிசி மாவு – 200 கிராம்,
பொரிகடலை மாவு – 50 கிராம்,
கெட்டி நெய் – 1 டீஸ்பூன்,
பாசிப்பருப்பு – 3 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்,
மிளகாய்ப்பொடி – 5 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி மாவுக்கு அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும்பொழுது உப்பு போட்டு மாவைப்போட்டு நன்றாகக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் நீரில் ஊற வைத்து நன்றாக ஊறியதும் மாவில் போட வேண்டும். பொரிகடலை மாவையும், மிளகாயப்பொடியையும் போட்டு கெட்டி நெய்யையும் போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை சிறு உருண்டைகள் செய்து வெண்ணெய் பேப்பர் அல்லது வாழை இலையில் தட்டையாகத் தட்டி கனம் இல்லாமல் அமுக்கி விட்டு எண்ணெயில் போட்டு வெந்து எடுக்க வேண்டும்.

ரவைத்தட்டை

தேவையானவை:

ரவை – 2 கப்,
புளித்த தயிர் – 2 கப்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
வரமிளகாய்ப் பொடி – ½ ஸ்பூன்,
பெருங்காயப் பொடி – சிறிது,
எலுமிச்சை சாறு – சிறிது,
மல்லித்தழை – பொடிப் பொடியாக நறுக்கியது – 2 ஸ்பூன்.

செய்முறை:  

ரவையை வாணலியில் வறுத்து, உப்பு கலந்து தயிரில் போட்டுக் கலக்கவும். மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசையவும். பிறகு அப்பளம் போல் இட்டுக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

அவல் வடை

தேவையானவை :

அவல் – 200 கிராம்,
கடலைப்பருப்பு – 100 கிராம்,
சிறிய வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 5,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

அவலை ஊற வைத்து எடுத்து அதனுடன் ஊறிய கடலைப்பருப்பையும் போட்டு அரைத்து பாதி அரைத்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் அவல் மாவை வடையாகத் தட்டிப்போட்டு வேக வைத்து எடுத்தால் அவல் வடை ரெடி.

வேர்க்கடலை ரசகுல்லா

தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்,
மைதா மாவு – 50 கிராம்,
கேசரி பவுடர் – 1 சிட்டிகை,
சர்க்கரை – 100 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 1 துளி,
எண்ணெய் – 100 கிராம்.

செய்முறை:

வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொஞ்சம் நீர் விட்டு மாவாக்க வேண்டும். வாணலியில் மாவை விட்டு கிளறி கீழே இறக்க வேண்டும். அதனுடன் மைதா மாவை போட்டு நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் போட்டு சிவக்க பொரித்து எடுக்க வேண்டும். சர்க்கரையைத் தண்ணீர் விட்டு இளம் பாகாக்கி எசென்ஸ் விட்டு அதில் பொரித்த உருண்டைகளைப் போட வேண்டும்.

வெண் முறுக்கு

தேவையானவை:

பச்சரிசி மாவு – 300 கிராம்,
பொரி கடலை மாவு – 100 கிராம்,
நெய் – 50 கிராம்,
மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு-தேவைக்கு.

செய்முறை:

அரிசி மாவுடன் பொரி கடலை மாவு, உப்பு, மிளகாய்ப்பொடி, காய்ந்த நெய் விட்டு நன்றாகப் பிசைய வேண்டும். தண்ணீரை விட்டுப் பிசைந்து மாவை பதமாக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ந்தவுடன் மாவை உருண்டையாக்கி ஒரு கண் அச்சை குழல் பிழியும் உழக்கில் போட்டு எண்ணெயில் பிழிந்து சிவந்ததும் எடுக்க வேண்டும்.

எள் லட்டு

தேவையானவை

வெள்ளை எள் – 100 கிராம்,
வேர்க்கடலை – 50 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
முந்திரிப்பருப்பு – 10.

செய்முறை

வெள்ளை எள்ளையும், வேர்க்கடலையையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு பொடி செய்துகொள்ள வேண்டும். வேர்க்கடலையில் தோலை நீக்கித்தான் வறுக்க வேண்டும். முந்திரியை சிறு துண்டுளாக்க வேண்டும். சர்க்கரையை தேவையான தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியான பாகாக காய்ச்சி பொடி செய்தவைகளையும் முந்திரியையும் போட்டுக்கிளறி கீழே இறக்கி சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.

ரவை சீடை

தேவையானவை:

ரவை – 2 கப்,
புளித்த தயிர் – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகு,
சீரகப் பொடி – 2 ஸ்பூன்,
எண்ணெய் தேவைக்கு,
பெருங்காயப் பொடி – தேவைக்கு ஏற்ப

செய்முறை :

ரவையை வாணலியில் வறுத்து, உப்பு கலந்த புளித்த தயிரில் கொட்டவும். மிளகு, சீரகப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துப் பிசைந்து, சீடைகளாக உருட்டி ஒரு துணியில் பரவலாகப் போடவும். நல்ல உலர்ந்ததும் காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மகிமை தரும் மஞ்சள் பிள்ளையார்!(மகளிர் பக்கம்)
Next post டெஸ்ட்டிங்… ஒன் டூ த்ரீ!! (மருத்துவம்)