ருசியான அசைவ விருந்து!! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 46 Second

ஆதி மனிதன் தனது உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்றைய நாள் வரை உலக மக்களில் பெரும்பான்மையோர் மாமிச உணவையே அதிகம் விரும்பி உண்கின்றார்கள். தமிழகத்தின் விருந்துகளில் மாமிச உணவு பங்கு பெறும் நிகழ்வுகள் விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் கௌரவமாகவே கருதப்படுகின்றது.மேலும் இறைச்சி உணவு உழைக்கும் மக்களுக்கு மிக எளிதாக புரதச்சத்துக்களை அளிக்கின்றது. அப்படிப்பட்ட உணவினை தோழி வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் இளவரசி.

சிக்கன் 65 நூடுல்ஸ்

தேவையானவை

எலும்பில்லாத சிக்கன் 65  – 100 கிராம்,
ரைஸ் நூடுல்ஸ்- 200 கிராம்,
வெங்காயம்- 100 கிராம்,
பச்சை மிளகாய் -2,
மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி,
சர்க்கரை – 1/4 தேக்கரண்டி,
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி,
உப்பு,
எண்ணெய் – போதுமான அளவு,
கேரட்,
பீன்ஸ்,
முட்டைகோஸ்  – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் நீர் ஊற்றி நூடுல்ஸை வேக வைத்து வடிதட்டில் ஊற்றி குளிர்ந்த நீரில் அலசி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் காய்கறி உப்பு சேர்த்து வதக்கி சிறியதாக நறுக்கிய சிக்கன் 65 துண்டுகள் சேர்த்து, வேகவைத்த நூடுல்ஸ் அதில் சேர்க்க வேண்டும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத்தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.

மீன் புட்டு

தேவையானவை:

மீன் – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
பச்சைமிளகாய் – 3-5,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,
சீரகம் – 1/4 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

மீனை கழுவி சுத்தம் செய்து நீராவியில் வேகவைத்துக் கொள்ளவும். நன்கு ஆறியபின் மீனின் தோல், முள் ஆகியவற்றை நீக்கி விட்டு உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் வேகவைத்து உதிர்த்த மீன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு வதக்கவும். மீன் நன்கு உதிரியாக வரும் வரை வைத்து சீரகம் சேர்த்து இறக்கவும்.

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை:

சீரக சம்பா அரிசி  -2 கப்,
வெங்காயம்- 1,
தக்காளி – 1,
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
சிக்கன் – 500 கிராம்,
ஏலக்காய் -2,
கிராம்பு -2,
பட்டை -2.
அன்னாசி பூ-2,
பிரிஞ்சி இலை – 2,
சோம்பு -1 டீஸ்பூன்,
தயிர்-1/2 கப்,
தேங்காய்ப் பால்- 2 கப் (கெட்டி),
கொத்தமல்லித்தழை-1 கப்,
புதினா- 1 கப்,
எலுமிச்சைச் சாறு-2 டீஸ்பூன்.

செய்முறை:

அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். சிக்கனை தயிரில் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். அடிகனமான அகலமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை மற்றும் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தயிரில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் பாதியளவு மல்லி, புதினா இலை போட்டு சிறிது நேரம் வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு 1 கப் தண்ணீர் மற்றும் 2 கப் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கொதிக்க ஆரம்பித்ததும் அரைமணி நேரம் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது எலுமிச்சைச் சாறு கலந்து மேலே மீதமுள்ள கொத்தமல்லி புதினா இலைகளை தூவி ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி தட்டை வைத்து மூடி குறைந்த தீயில் வேகவிடவும். பத்து நிமிடத்திற்கு பிறகு தோசை கல்லை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கி இந்த பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும்.
பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரத்திலே திறந்து மெதுவாக கலந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். வெங்காய பச்சடி முட்டை மற்றும் சிக்கன் கிரேவி உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். குக்கர் என்றால் அனைத்தையும் வதக்கி அரிசி சேர்த்து மூடி வைத்து 1 விசில் வைத்தால் போதும்.

சிக்கன் ரோஸ்ட்

தேவையானவை:

சிக்கன் – 1/2 கிலோ,
முட்டை – 1,
தயிர் – 1/2 கப்,
மைதாமாவு – 1 மேஜைக்கரண்டி,
கார்ன் மாவு – 1 மேஜைக்கரண்டி,
மிளகாய் தூள் – 1 1/2ஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மைதாமாவு, கார்ன்மாவு, முட்டை, மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கி, அதில் நன்கு கழுவிய சிக்கன் துண்டுகளைச் சேர்த்து இரண்டு மணிநேரம் ஊறவிடவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

சிக்கன் சூப்

தேவையானவை:

சிக்கன் – 200 கிராம்,
சின்ன வெங்காயம் – 6-8,
தக்காளி – 1 சிறியது,
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் –  1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
சீரகம் –  1/4 டீஸ்பூன்,
மிளகு –  1/4 டீஸ்பூன்,
மிளகு-சீரகத்தூள் – 1½ டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
புதினா,
மல்லி – சிறிதளவு.

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி சிறிது மஞ்சள்தூள், உப்பு 3/4 வேக்காடாக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி- பூண்டு விழுது முதலியவற்றை போட்டு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புதினா, மல்லி சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்துக் கொள்ளவும். பின்னர் நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்தவிழுது, சிக்கனை வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதனுடன் வேகவைத்த சிக்கன் துண்டுகள் சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில்வைத்து இறக்கவும். மிளகு, சீரகத் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

ஒரியா சிக்கன் கறி

தேவையானவை:

சிக்கன்  – 1/2 கிலோ,
உருளைக் கிழங்கு – 1,
வெங்காயம் –  1,
தக்காளி – 1,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
கடுகுஎண்ணெய் – 1 டீஸ்பூன்,
மல்லி தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்,
சீரகத் தூள் -1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் -2,
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,
பட்டை- சிறிய துண்டு,
ஏலக்காய் – 2,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் மஞ்சள், உப்பு மற்றும் கடுகு எண்ணெயுடன் சிக்கன் துண்டுகளை  1 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம் , தக்காளி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பொரித்துக் கொள்ளவும். வாணலியில்  எண்ணெய் சேர்த்து நன்கு  சூடானதும் 1/2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும். பின்னர் சீரகம், பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து, பின்னர் தக்காளி, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி சிக்கன் துண்டுகள் சேர்த்து, வெந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிக்கன் பாதி வெந்த பின் உருளைக்கிழங்கு சேர்க்கவும். சிக்கன் நன்கு வெந்தபின் கரம்மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கவும்.

பாலக் சிக்கன்

தேவையானவை:

பாலக்கீரை – 1 கட்டு,
சிக்கன் – 1/2 கிலோ,
வெங்காயம் – 300 கிராம்,
தக்காளி – 200 கிராம்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
பட்டை,
லவங்கம்,
ஏலக்காய் – தலா 2,
இஞ்சி,
பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
பச்சைமிளகாய் – 3.

செய்முறை:

பாலக் கீரையை சுத்தம் செய்து வெந்நீரில் 1 நிமிடம் சேர்த்து எடுத்து ஆறவைத்து பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து அரைவேக்காடாக வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலம், கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து  மசியும் வரை வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் அதில் பாலக் விழுது, உப்பு சேர்க்கவும். இத்துடன் சுத்தம் செய்து அரைவேக்காடாக வேகவைத்த சிக்கனையும் சேர்த்து வதக்கவும். சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

சிக்கன் கறி தோசை

தேவையானவை:

சிக்கன் – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
தக்காளி – 1,
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன்,
சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை சிறிதளவு,
எண்ணெய் தேவையான அளவு,
சோம்பு,
பட்டை – தாளிக்க,
உப்பு – தேவையான அளவு,
முட்டை – 2,
தோசைமாவு – 1 கப்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஆறியபின் எலும்பு நீக்கி சிறியதாக கைகளால் பிய்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவேண்டும். சிக்கன் சேர்த்து நன்கு கிளறி  கொத்தமல்லி தூவி இறக்கவும்.

ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி முதலில் அதன்மேல் முட்டையை உப்பு சேர்த்து அடித்து ஊற்றவும். சிறுதீயில் வைத்து அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவலாக போட்டு மாவை சுற்றி எண்ணெய் ஊற்றவும். பின்னர் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சூடான கறி தோசை ரெடி. இதனை சிக்கன் சால்னாவுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

பறவை கூடு

தேவையானவை:

எலும்பில்லாத சிக்கன்  – 1/4 கிலோ,
உருளைக்கிழங்கு – 1,
சேமியா – 100 கிராம்,
பச்சைமிளகாய் – 2,
வெங்காயம் – 1,
மல்லித்தழை – சிறிதளவு,
வற்றல்தூள் – 1/2 ஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/4 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கார்ன் மாவு – 3 ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
பனீர் – 50 கிராம்.

செய்முறை:

சிக்கனை உப்பு சேர்த்து வேகவைத்து ஆறியபின் மிக்ஸியில் லேசாக அடித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின்னர் சிக்கன், உருளைக்கிழங்கு, சிறியதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, கரம்மசாலா, இஞ்சி, பூண்டு விழுது உப்பு, வற்றல்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் எலுசிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.உருண்டைகளை கிண்ணம் போல் செய்து கொள்ளவும். கார்ன் மாவை தோசை மாவு பதத்தில் தண்ணீரில் கலந்து கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையை கார்ன் மாவு கலவையில் நன்கு முக்கி சேமியாவில் நன்கு பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பனீரை துருவி சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் 2 விநாடி சேர்த்து எடுக்கவும். சிவக்காமல் பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது பனீர்உருண்டைகளை உருளைக்கிழங்கு கிண்ணங்களின் மேலே வைத்து சூடாக பரிமாறவும். மிக அருமையாக இருக்கும்.  

கோலா உருண்டை குழம்பு

தேவையானவை:

கொத்துக்கறி -3/4 கிலோ,
தேங்காய்த்துருவல் – 3/4 கப்,
பச்சை மிளகாய் – 7,
கசகசா – 2 ஸ்பூன்,
பட்டை – 1,
வறுகடலை-4 டீஸ்பூன்,
இஞ்சி – சிறு துண்டு,
முட்டை – 1,
பூண்டு -10 பல்,
சின்ன வெங்காயம் – 150 கிராம்,
உப்பு  – தேவையான அளவு,
சோம்பு – 1 ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

கொத்துக்கறியினை குக்கரில் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்து எடுத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த்துருவல், வறுகடலை, கசகசா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்தூள், மல்லிதூள், சிறிதளவு தேங்காய் விழுது சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை நீங்கும் வரை வைத்திருந்து இறக்கவும். கொத்துக்கறியுடன் முட்டையும் உடைத்து ஊற்றி, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து பிசைந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். வாணலியில்  பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உருண்டைகளை பொரித்து எடுக்கவும். உருண்டைகள் ஆறியதும், குழம்பில் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டெய்லி சமையல்!!(மகளிர் பக்கம்)
Next post அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!! (மருத்துவம்)