மசக்கை… மகிழ்ச்சியும் அவதியும்!(மருத்துவம்)

Read Time:13 Minute, 6 Second

சுகப்பிரசவம் இனி ஈஸி

தாயின் கருப்பையில் கரு தங்கி விட்டாலே, தாய்க்கு மாதவிடாய் நின்றுவிடும். ‘கரு உருவாகிவிட்டது’ என்று தாய்க்குத் தெரிவிக்கும் முதல் அறிகுறி இதுதான்.ஒவ்வொரு மாதமும் சரியாகவும் சீராகவும் மாதவிடாய் வந்து, அது தள்ளிப்போனால், ‘அது கர்ப்பமாக இருக்குமோ?’ என்ற சந்தேகம் தாய்க்கு வரும். பூப்பெய்தியது முதல் ஒழுங்கில்லாமல் மாதவிடாய் வந்தவர்களுக்கு ‘கரு உருவாகி இருக்கிறதா?’ என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்கள் வழக்கம்போல் ‘நாள் தள்ளிப்போகிறது’ என்று சாதாரணமாக விட்டுவிடுவார்கள்.மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போவதுடன் குமட்டல், வாந்தி, சோர்வு, அதிக உறக்கம், களைப்பு போன்ற அறிகுறிகளும் ஆரம்பித்துவிட்டால், அந்தத் தாய்க்குக் கரு உருவாகிவிட்டதற்கான வாய்ப்புகள் அதிகம். என்றாலும் சில பரிசோதனைகள் செய்து கர்ப்பத்தை உறுதிசெய்வதுதான் நடைமுறை.சிறுநீர் பரிசோதனைசிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்வது எளிது.

பொதுவாக, கர்ப்பம் தரித்து 4-5 வாரங்களில் தாயின் சிறுநீரில் Human chorionic gonadotropin(hCG) ஹார்மோன் அதிகரிக்கும். இதை அளவிடுவதுதான் பரிசோதனையின் அடிப்படை நோக்கம். காலையில் எழுந்ததும் முதலில் வெளிவரும் சிறுநீரில் இதைப் பரிசோதித்தால், முடிவு சரியாக இருக்கும். அதேவேளை, முதல் சிறுநீர்தான் தேவை என்ற கட்டாயமில்லை; மற்ற நேரங்களிலும் பரிசோதிக்கலாம்.

hCG ஹார்மோன் சிறுநீரில் காணப்பட்டால், ‘பாசிட்டிவ்’ என்று வரும். அப்படி யென்றால் கர்ப்பம் என்று அர்த்தம். ‘நெகட்டிவ்’ என்றால் கர்ப்பம் இல்லை! இந்த ஹார்மோனை ’எலிசா பரிசோதனை’ மூலம் ரத்தத்தில் பரிசோதிப்பதும் உண்டு. இது மிகவும் சரியான முடிவைத் தரும். என்றாலும், சில நேரங்களில் கர்ப்பம் தரிக்காத போதும் சிறுநீர் பரிசோதனை முடிவுகள் ‘பாசிட்டிவ்’ என்று வந்துவிடலாம். எனவேதான், இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையையும் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.கருப்பையில் கரு உருவாகி இருக்கிறதா? அந்த வாரத்துக்கு ஏற்ற அளவில் கரு வளர்ச்சி அடைந்து இருக்கிறதா? கருப்பையில் இல்லாமல் கருக்குழாய் போன்ற வேறு இடத்தில் கரு உருவாகி இருக்கிறதா போன்ற முக்கிய விவரங்களைக் கண்டறிய ஸ்கேன் பரிசோதனை உதவும்.

 ’ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கிறாள்’ என்று உறுதி செய்வது ஸ்கேன் பரிசோதனை மட்டுமே !கர்ப்பம் உறுதியானதும் கர்ப்பிணியின் ரத்த வகை, ஆர்ஹெச் வகை, ஹீமோகுளோபின், ஹிமெட்டோகிரிட், ரத்த சர்க்கரை மற்றும் தைராய்டு அளவுகள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் குறைபாடு இருந்தால் சரி செய்யும் சிகிச்சைகளை ஆரம்பித்துவிட வேண்டும்.

மசக்கை… மகிழ்ச்சியும், அவதியும்?

‘மசக்கை’ என்ற வார்த்தையே பெண்களை மயக்க வைக்கும் வார்த்தைதான்.ஒரு பெண் கர்ப்பம் அடைந்துவிட்டாள் என்று 99 சதவீதம் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான அறிகுறி இது. நம் ஊரில் பல அம்மாக்களையும், மாமியார்களையும் குளிர்விக்கும் வார்த்தை! கணவர்களை மகிழ்ச்சிப் பூரிப்பில் மிதக்கச் செய்யும் வார்த்தை… ஆனால், பெண்ணுக்கு?மசக்கை வாந்தி(Morning sickness) பொதுவாக கர்ப்பம் தரித்த 4  6 வாரங்களில் ஆரம்பிக்கும். என்றாலும், எந்த நேரத்திலும் இது ஆரம்பிக்கலாம். சிலருக்கு வாந்தி வராமலும் இருக்கலாம். மசக்கை ஆரம்பித்த கர்ப்பிணிக்கு எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வரும்.குறிப்பாக, தாளிக்கும்போது வருகிற எண்ணெய் வாசனை, மசாலா வாசனை. வழக்கமாக காலையில் எழுந்ததும் ஃபில்டர் காபியை ரசித்து உறிஞ்சிக்குடிக்கும் பெண்கள்கூட, மசக்கை மாட்சிமை செய்யும்போது, ‘உவ்வே’ என்று குமட்டுவார்கள். இன்னும் சிலர் பல் துலக்கும் பிரஷ்ஷை வாயில் வைத்தாலே ‘குபுக்’கென்று வாந்தி எடுப்பார்கள்.

மசக்கையின்போது பல கர்ப்பிணிகளுக்கு ஏதாவது ருசியாகச் சாப்பிடத் தோன்றும். ஆனால், புளிப்புச்சுவை உணவுகளை மட்டுமே அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால்தான் கர்ப்பிணிகள் மசக்கை மாதங்களில்  மாங்காயையும் நெல்லிக்காயையும் ஒரு வெட்டுவெட்டுகிறார்கள். பிறந்த வீட்டிலிருந்து புளியோதரையும் எலுமிச்சை சாதமும்  ஆக்கிப்போடுவது இந்த காரணத்தினால்தான். சிலர் வித்தியாசமாக சாப்பிட விரும்புவார்கள். சாம்பல், விபூதி போன்றவற்றைச் சாப்பிடுவது இதனால்தான்.

மசக்கை ஏற்படுவது ஏன்?

மசக்கை என்பது ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரோன், ஹெச்சிஜி(hCG) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகமாவதால் உண்டாகிற எதிர்வினை. கர்ப்பம் தொடங்கியதும் வாயில் அதிக எச்சில் ஊறுவது, குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு, பசி குறைவது என்று பல அறிகுறிகளைக் கொண்டது, மசக்கை! இது பொதுவாக காலையில் எழுந்ததும் அதிகமாக இருக்கும்.பகலில் குறைந்துவிடும். ஆனால், சிலருக்குப் பகல் முழுவதும் வாந்தி படுத்தி எடுப்பதும் உண்டு. இது 14 வாரங்கள்வரை தொடரலாம். மிக அரிதாக சிலருக்கு பிரசவத்துக்கு முந்தைய வாரம்வரை குமட்டல் இருந்து கொண்டே இருப்பதும் உண்டு. எதுவானாலும் கர்ப்பிணிகள் மசக்கை வாந்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.

‘அம்மா அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தைக்குத் தலை நிறைய முடி இருக்கும்’ என்று வீட்டில் ‘பெருசுகள்’ சொல்வார்கள். அம்மாவின் வாந்திக்கும் குழந்தையின் முடிக்கும் சம்பந்தமே இல்லை. உண்மையில், குமட்டலையும் வாந்தியையும் கர்ப்பிணிகள் மனதளவில் தாங்கிக்கொள்ள தைரியப்படுத்துகிற வார்த்தைகள் இவை. இம்மாதிரியான ‘ஊட்டச்சத்து வார்த்தை’களும் மசக்கை மாதங்களில் கர்ப்பிணிகளுக்குத் தேவைதான்.

என்ன சிகிச்சை?

எதையும் சாப்பிட முடியாத அளவுக்கு மசக்கை தொந்தரவு தருகிறது என்றால், டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் சாப்பிடலாம். வைட்டமின் பி1 மாத்திரையை தினமும் சாப்பிடுவது நல்லது. எண்ணெய், நெய் சேர்க்காத உணவு கள் மற்றும் காரம், மசாலா குறைந்த உணவுகளைச் சாப்பிடலாம்.பழங்கள், காய்கறிகள், சாலட்கள், கீரைகள், நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிடலாம். பழச்சாறுகள், கொழுப்பும் அதிக இனிப்பும் உள்ள உணவுகள், எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம். கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வருவது அதிகரிப்பதால் இந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டியது கட்டாயம்.

ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிட வேண்டாம். வாய்க்கு எந்த உணவு பிடிக்கிறதோ அதை அளவோடு சிறுசிறு இடைவெளிகளில் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாதாரண ரொட்டி, பிஸ்கட், ஓட்ஸ், சத்து மாவுக்கஞ்சி, மாதுளை, பேரீச்சை, உலர் திராட்சை, கொண்டைக்கடலை, கேரட், பாதாம்பருப்பு, வேர்க்கடலை, நூக்கோல், இளநீர் ஆகியவை மசக்கையின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய உணவுகள். ‘வாந்தி வந்துவிடும்’ என்ற பயத்தில் சிலர் எதுவுமே சாப்பிடாமல் இருப்பார்கள். இது மிகவும் தவறு. வயிற்றில் வளரும்  சிசுவை நினைத்து  உணவில் அக்கறை செலுத்தவேண்டியது முக்கியம்.

கடுமையான மசக்கை ஏன்?

மாத்திரைகளுக்குக் கட்டுப்படாமல், வயிற்றில் துளி உணவுகூட தங்காமல், சிலருக்கு கடுமையாக வாந்தி வந்துகொண்டிருக்கும்(Hyperemesis gravidarum). அம்மா/சகோதரிகளில் இந்த மாதிரி கடுமையான வாந்தி இருந்திருக்குமானால், அந்தக் குடும்பத்தில் பிறந்த மற்ற பெண்களுக்கும், அடுத்து வரும் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கும் மசக்கை வாந்தி கடுமையாகும்:

1. முதல்முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள். 2. மிகவும் இளம்வயதிலேயே கர்ப்பம் தரிப்பவர்கள். 3. ஒல்லியாக இருப்பவர்கள். 4. இரட்டைக் குழந்தைகள் உருவாகி இருப்பவர்கள். 5. வயிற்றில் அமிலச்சுரப்பு அதிகமாக இருப்பவர்கள். 6. ரத்தக்கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள்.  7. ஏற்கனவே ஒற்றைத் தலைவலி, பயண வாந்தி மற்றும் காது பிரச்னை உள்ளவர்கள். இந்தப் பிரச்னைகள் எல்லாமே அடிப்படையில் வாந்தி நரம்பைத் தூண்டு கின்றன. இதனால் இவர்களுக்கு வாந்தி கடுமையாகிறது. அப்படிப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து குளுக்கோஸ், சலைன் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப ஏற்றிக்கொள்ள வேண்டும்.

முத்துப்பிள்ளை கர்ப்பம்

மிக அதிகமாக வாந்தி வருவதற்கு ‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ (Molar pregnancy) ஒரு காரணமாக இருக்கலாம். கருப்பையில் கருவானது ஒரே ஒரு பந்துபோல் உருண்டு திரண்டு இருக்காமல், குட்டிக்குட்டிப் பந்துகளாக மாறி, ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு, திராட்சைக் கொத்து போல், கருப்பை முழுவதும் நிறைந்திருக்கிற கருவுக்குப் பெயர்தான் ‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’. கர்ப்பம் தரித்துள்ளதா என்று முதல்முறையாக ஸ்கேன் பரிசோதனை செய்யும் போதே இது தெரிந்துவிடும். அப்போது இதை ‘சுத்தம்’ செய்து விடுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹார்மோன்கள்… கோளாறுகள்….!! (மருத்துவம்)
Next post ஆண் குழந்தை ரகசியம்!!(மருத்துவம்)