நவராத்திரி நைவேத்தியங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 43 Second

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவருக்கும் மூன்று நாட்கள் பூஜை செய்து கொலு வைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் நைவேத்தியம் செய்து அதனை விநியோகிப்பது வழக்கம். சுண்டல், பாயசம், புட்டு, சாதங்கள் செய்து ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றவாறு செய்து படைப்பர். நாமும் பழமை மாறாமல் சில புதுமைகளைப் புகுத்தியும் காலத்திற்கு ஏற்றவாறு செய்து அசத்த சில நவராத்திரி நைவேத்தியங்களை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் ராஜகுமாரி…

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
தேங்காய்த்துருவல் – 5 டேபிள் ஸ்பூன்,
மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
தனியா – 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
வரமிளகாய் – 1,
கறிவேப்பிலை – 6 இதழ்கள்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக விடவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து வெந்த கொண்டைக்கடலையைச் சேர்த்து கலந்து பொடித்த பொடி மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

பயத்தம்பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
தேங்காய்த்துருவல் – 4 டேபிள் ஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 8 இதழ்கள்,
வரமிளகாய் – 2.

செய்முறை

பாசிப்பயிரினை நீர் ஊற்றி உப்பு சேர்த்து குழையாமல் உதிராக வேக விடவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வேக வைத்துள்ள பயத்தம்பருப்பினைச் சேர்த்துக் கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி சூட்டுடனே கேரட் துருவலைத் தூவி கலந்து விடவும்.

வெள்ளை மொச்சை சுண்டல்

தேவையான பொருட்கள்

உலர்ந்த வெள்ளை மொச்சை – 1 கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு, தக்காளி – 1,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை

வெள்ளை மொச்சைக் கொட்டையை 8 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக  விடவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து அதனுடன் தக்காளி தேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்து வந்ததும் வெந்த மொச்சையையும்சேர்த்து எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தழையை மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விட்டு இறக்கவும். மற்ற சுண்டல்களைப் போல் உதிராக இல்லாமல் இந்த மொச்சை சுண்டல் சற்றுக்கெட்டியாக  இருக்கும். அப்போதுதான் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

கடலைப்பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 1 கப்,
துருவிய வெல்லம் – 1½ கப்,
பல்லு பல்லாகக் கீறிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரித்துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

வெறும் வாணலியில் கடலைப்பருப்பை லேசாக வறுக்கவும். குக்கரில் நீர் ஊற்றி ரொம்பவும் குழையாமலும் உதிர் உதிராக இல்லாமலும் வேக விட்டு எடுக்கவும். வெந்த பருப்பில் வெல்லத்தினைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லமும், பருப்பும் ஒன்றாகச் சேர்ந்ததும் வாணலியில் நெய் ஊற்றி தேங்காய், முந்திரியை வறுத்துக் கொதிக்கும் பாயசத்தில் சேர்த்து ஏலப்பொடி தூவி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும்.

வேர்க்கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்

பச்சை வேர்க்கடலை – 1½ கப்,
உப்பு – தேவைக்கு,
அரிசிப்பொரி – 4 டேபிள் ஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 8 இதழ்கள்.

செய்முறை

வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தோலை நீக்கவும். (காய்ந்த வேர்க்கடலை எனில் 3 மணி நேரம் ஊற வைத்து, பிறகு உப்பு சேர்த்து வேக விடவும்). வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து கேரட், தக்காளி வதக்கி வெந்த வேர்க்கடலை சேர்த்து வதக்கி இறக்கி பொரி மற்றும் மல்லித்தழை தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் 1/2 மூடி எலுமிச்சை சாறு பிழியலாம்.

கதம்ப சாதம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
திக்கான புளிக்கரைசல் – 1/2 கப், பூசணித்துண்டுகள் – 1/4 கப்,
மஞ்சள் பூசணித் துண்டுகள் – 1/4 கப்,
கத்தரிக்காய் துண்டுகள் – 1/4 கப்,
வாழைக்காய் துண்டுகள் – 1/4 கப்,
ஊற வைத்து வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலை,
வேர்க்கடலை இரண்டும் சேர்ந்தது – 1/4 கப்,
வெல்லம் துருவியது – 1 டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
தனியா – 2 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் – 6,
தேங்காய்த்துருவல் – 8 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 3 கப் நீர் விட்டு குழைய வேக விட்டு வைக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஒரு கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வேக விடவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும்  ஊற வைத்து வேக வைத்த கடலைகளைச் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியினையும் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து எல்லாமாகச் சேர்ந்து காய்கள் வெந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும். அதில் குழைய வெந்த அரிசி, பருப்பினைச் சேர்த்துக் கலக்கவும். கதம்ப சாதம் தயார்.

புட்டு

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1/2 கிலோ,
வெல்லம் – 3/4  கிலோ,
உடைத்த முந்திரித்துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,  
தேங்காய்த்துருவல் –  1/2 கப்,
உப்பு – 1 டீஸ்பூன்,
நெய் – 6 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

பச்சரிசியை 10 நிமிடம் நீர் ஊற்றி (மூழ்கும் அளவு) ஊற வைத்து, வடிகட்டி ஒரு மெல்லிய பருத்தி துணியில் பரப்பிவிட்டு நிழலில் உலர்த்தி காய விடவும். பிறகு அதனை மிக்ஸியில் மாவாக அரைக்கவும். அரைத்த மாவினை வெறும் வாணலியில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து கொதிக்கும்போதே உப்பும் சேர்த்து இறக்கவும். வறுத்த மாவில் கொதித்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். மாவினைப் பிடித்தால் பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். அதுதான் புட்டு மாவு பதம். ஒரு வெள்ளைத்துணியை நனைத்துப் பிழிந்து அதில் உப்புத்தண்ணீர் தெளித்துப் பிசறிய  மாவினை வைத்து மூட்டையாகக் கட்டி இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வெந்த மாவினை ஒரு தட்டில் கொட்டி கட்டியில்லாமல் தேய்த்து விடவும். வெல்லத்தில் 1/4 கப் நீர் ஊற்றி தேங்காய்த்துருவல் சேர்த்து கெட்டியாகப் பாகு வைத்து ஏலப்பொடி தூவி இறக்கவும். தட்டில் கட்டியில்லாமல் உதிர்த்து வைத்துள்ள மாவில் வெல்லப்பாகினைச் சேர்த்துக் கலந்து விடவும். வாணலியில் நெய்யினை ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து கலந்த புட்டில் சேர்த்துக் கலந்து விடவும். நவராத்திரியில் வெள்ளிக்கிழமைஅன்று புட்டினை செய்து அம்மனுக்குப் படைப்பது வழக்கம்.

தத்தோஜனம் (தயிர் சாதம்)

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்,
நறுக்கிய மல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன்,
கெட்டித்தயிர் – 2 கப்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
உப்பு – தேவைக்கு,
இஞ்சித்துருவல் – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுந்தம்பருப்பு – தலா 1 டேபிள் ஸ்பூன்,
மிளகு,
சீரகம் – தலா 1/2 டீஸ்பூன்.

செய்முறை

அரிசியை 3 கப் நீர் விட்டு குழைய வேக விடவும். வெந்த சாதத்தைத் தட்டில் கொட்டி ஆறவிட்டுப் பிறகு தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், இஞ்சித்துருவல், மிளகு, கடலை, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து தயிர் சாதத்தில் சேர்த்து கலந்து விடவும். மல்லித்தழை தூவவும். தத்தோஜனம் தயார். 9 நாட்கள் நவராத்திரி முடிந்து 10 ஆம் நாள் விஜயதசமியன்று இதனைச்செய்து இத்துடன் பானகம், வடை, இனிப்புகளும் செய்து படைத்து நவராத்திரி பூஜையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

அக்கார வடிசல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்,
பால் – 4 கப்,  
வெல்லம் – 3 கப்,
பயத்தம்பருப்பு – 1/4 கப்,
நெய் – 6 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
முந்திரித்துண்டுகள் – 3 டேபிள் ஸ்பூன்,
பச்சைக்கற்பூரம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி குக்கரில் குழைய பால் மட்டும் சேர்த்து வேக விடவும். (நீர் சேர்க்கத் தேவை இல்லை) குழைய வெந்த கலவையில் வெல்லத்தினைச் சேர்த்து கொதி விட்டு ஏலப்பொடி சேர்த்து பச்சைக்கற்பூரத்தைப் பொடித்துச் சேர்த்து இடையிடையே 4 டீஸ்பூன் நெய்யினைச் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக கலந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து இறக்கவும்.

எள்ளுப்பொடி

தேவையான பொருட்கள்

கருப்பு எள் – 100 கிராம்,
வெல்லம் – 150 கிராம்,
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

வெறும் வாணலியில் கருப்பு எள்ளினை படபடவென பொரியும்படி வறுத்து இறக்கவும். எள்ளு நன்கு ஆறியதும் அதை மிக்சியில் கொஞ்சம் கொரகொரப்பாக பொடிக்கவும். பிறகு அதிலேயே வெல்லத்தையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். பிறகு கையில் நல்லெண்ணெயை தடவி பிடிக் கொழுக்கட்டைப் போல் பிடிக்கலாம். இல்லை என்றால் அப்படியே பொடியாகவும் படைக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சங்க கால உணவுகள்!! (மகளிர் பக்கம்)
Next post டச் பண்ணாமலே மூட் வரவைக்கணுமா!! (அவ்வப்போது கிளாமர்)