கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 19 Second

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனக்கு வயது 35. நெஞ்சில் அடிக்கடி சுரீர் சுரீர் என்று வலி தோன்றுகிறது. இது மாரடைப்பின் அறிகுறியா என டாக்டரிடம் கன்சல்ட் செய்தால் ‘ஒன்றும் இல்லை’ என்கிறார். ஆனால், வலி இருந்துகொண்டேயிருக்கிறது. அது எதனால்?

– செந்தில் வேலன், நாமக்கல்.

மாரடைப்பு என்பது அழுத்தம் கொடுத்து அமுக்கும் மாதிரியான உணர்வுடன் கூடிய வலி. இடதுபுறம் மட்டும் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பு. ஆனால் நெஞ்சில் எந்த இடத்தில் வலி ஏற்படுகிறது என்பதை குறிப்பிடமுடியாது. இவ்வாறு இருக்கும் வலி உணர்விற்கு ‘‘புளுராய்டிக் பெயின்” என்று பெயர். நுரையீரலுக்கு மேல் புளுரா என்ற உறை உள்ளது. நாம் சுவாசம் பெறும் வேளையில் நுரையீரல் இயங்கும் போது அந்த உறையும் உறையும் உரசும்போதுதான் இந்த புளூராய்டிக் வலி ஏற்படும். பொதுவாக மூச்சு இழுத்துவிடும்போது தோல்களில் உராய்வு ஏற்படும். உராய்வு ஏற்படுவதின் பிரதிபலனாய் நெஞ்சில் அங்கே இங்கே சுருக் சுருக்  என்று குத்துகிற மாதிரியான உணர்வு  இருக்கும். விரலால் பாய்ண்ட் பண்ணக்கூடிய அளவில் வலி ஏற்பட்டால் அது நெஞ்சுவலி கிடையாது. புளூராய்ட்டிக் பெயினில் வலிக்கும் இடம் மாறிக் கொண்டேயிருக்கும். அதற்கு காரணம் மூச்சு இழுத்துவிடும் போது ஏற்படும் நுரையீரலின் உராய்வு ஆகும்.

காரணிகள்

*வாயுத் தொல்லைகள் இருக்கும்போது வலி ஏற்படும்.
*அசிடிட்டி எனப்படும் வயிறு எரிச்சல் ஏற்படும்போது நெஞ்சில் வலி ஏற்படும்.
*புகை பிடிப்பவர்களுக்கு இவ்வித வலிகள் அடிக்கடி ஏற்படும்.
*தூசு மற்றும் புகைகளுக்கு இடையில் வேலை செய்பவர்களுக்கு இவ்வலி பொதுவாகவே ஏற்படும்.

மேலும் வலி ஏற்படுவதற்கான விளக்கமாக, உணவுக்குழாயின் வழியாக உணவானது வயிற்றை சென்றடையும் அவ்வாறு செல்லும்போது வயிற்றில் உள்ள ஒருவித அமிலம் வயிற்றிலிருந்து உணவுக் குழாய்க்கு வந்துவிடும். அப்போது வயிற்றிற்கும் நெஞ்சுப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும். புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை, தூசுக்களில் வேலை செய்பவர்கள், காட்டன் மில்களில் வேலை செய்பவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுவது சாதாரண ஒன்று. இவை அனைத்தும் புளூராய்டிக் பெயினின் பொதுவான அறிகுறிகள். மேலும் வலி அதிகமாகும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையை அணுகுவது நன்று.

தடுக்கும் வழிமுறை

*புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்தல்.
*தூசு, புகை  உள்ள இடங்களை தவிர்த்தல்.
*சாதாரண பெயின்கில்லர் பயன்படுத்தினாலே வலியை கட்டுப்படுத்தலாம்.

என் தந்தைக்கு 70 வயது. கடந்த வருடம் ஒரு விபத்துக்குப் பின் கால் மூட்டில் அடிபட்டு படுத்தபடுக்கையாய் இருக்கிறார். இவருக்கு முதுகெங்கும் படுக்கைப்புண் உருவாகி உள்ளது. இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு?
– அ.காமிரா பானு, மதுரை.

படுக்கைப்புண் என்பது படுக்கையில் புரண்டு படுக்க முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, குறிப்பாக மிகவும் மெலிந்து தளர்ந்த நிலையில் இருக்கும் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படுகின்றன. இவை நாட்பட்ட திறந்த புண்கள். உடலில் எலும்புப் பகுதிகளில் தோல் அழுந்தும் இடங்களில் ஏற்படுகின்றன. பெரும்பாலும், புட்டம், முதுகு, தோள்பட்டை, முழங்கை, கால்களில் ஏற்படுகின்றன. படுக்கைப்புண்கள் ஏற்பட்டவர்களை உப்பு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்த வெந்நீரில் கழுவ வேண்டும்.

பிறகு, போவிடோன் அயோடின் போன்ற ஆன்டிபயாடிக் களிம்புகளை போட வேண்டும். பிறகு சுத்தமான காட்டன் வலைத்துணியால் கட்டுப்போட்டு பாதுகாக்க வேண்டும். தினமும் கட்டை நீக்கி சுத்தம் செய்து, புதிய கட்டு இட்டு வந்தால், புண்கள் குணமாகும். படுக்கைப் புண் வராமல் இருக்க இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நோயாளியைப் புரண்டு படுக்க வையுங்கள். நோயாளியை தினமும் குளிப்பாட்டவும், எண்ணெய் தேய்த்துவிடவும் வேண்டும். மென்மையான படுக்கை விரிப்புகளை, தலையணைகளை பயன்படுத்தலாம். சிறுநீர், மலம், வாந்தி போன்றவற்றால் படுக்கை அசுத்தமானால் உடனடியாக மாற்ற வேண்டும். எலும்பு உள்ள பகுதிகள் அதிகம் அழுந்ததாதபடி தலையணை அல்லது மென்மையான துணியை அடியில் வைக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!(அவ்வப்போது கிளாமர்)
Next post எப்போதும் கேட்கும் ஒலிகள்! (மருத்துவம்)