குழந்தைகள் தலையில் பூக்கும் மலர்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 55 Second

திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது யதேச்சையாக ஆரம்பித்த ஒரு ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் இன்று நிலையான மாத வருமானத்தை ரம்யாவுக்கு கொடுக்கிறது. தான் சுயமாக சம்பாதிப்பது மட்டுமில்லாமல், தன்னுடன் சேர்ந்து மேலும் சில பெண்களும் சுயதொழில் செய்து முன்னேற ரம்யா பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘எங்களுக்கு காதல் திருமணம் என்பதால் பெற்றோர்களின் ஆதரவு எதுவும் இல்லாமல் வாழ்க்கையை மீண்டும் தொடக்க புள்ளியில் இருந்து நானும் என் கணவரும் ஆரம்பித்தோம். திருமணமாகி எனக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தான். அப்போது கடைக்கு சென்று என் மகனுக்கு துணி எடுக்கும் போதெல்லாம் அங்கு பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை பார்க்க ஆசையாக இருக்கும். சில வருடங்களில் நான் மீண்டும் கர்ப்பமான போது, இந்த குழந்தை எப்படியாவது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அது போலவே எனக்கு பெண் குழந்தை பிறந்தாள்.

பொதுவாக பல அம்மாக்கள் தங்களுடைய மகளுடன் மாம்-டாட்டர் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார்கள். ஒரே மாதிரியான உடைகள் அணிவார்கள். எனக்கும் என் மகளுடன் அப்படி ஒரு போட்டோ ஷூட் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் பிறந்த குழந்தைகளின் உடல் அப்போது தான் வளர்ச்சியடையும் என்பதால் அவள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத உடைகளையும் அலங்காரத்தையும் தேடினேன். என் குழந்தையின் தலையில் நான் வைக்கப்போகும் ஹெட்பேண்ட் மிருதுவாகவும் குழந்தைக்கு சவுகரியமாகவும் இருக்க வேண்டும். அதில் எந்த நச்சுப் பொருளும் கலந்திருக்கக் கூடாது என்று தேடினேன்.

அப்படி யூடியூப் முழுக்க தேடியபோது ஃபோமிரான் என்ற பொருளைப் பற்றி தெரிய வந்தது. அதில் பச்சிளம் குழந்தைகளுக்கு அழகான ஹெட்பேண்ட்கள் செய்யலாம்ன்னு போட்டிருந்தாங்க. நம்ம ஊரில் அந்த ஹெட்பேண்ட் இருக்கான்னு தேடினேன். அப்படிப்பட்ட ஒன்று இங்கு இல்லவே இல்லைன்னு புரிந்தது. ஆனால் ஃபோமிரான் மூலப்பொருளாக ரஷ்யாவில் கிடைக்கிறது என்று கண்டறிந்தேன்.

மேலும் அங்கேயே இதில் ஹெட்பேண்ட் கிடைக்கிறதா பார்த்த போது தான் ஏன் அதை வாங்கி நாம இங்கு குழந்தைகளுக்கான அழகான தலை அலங்காரங்களை தயாரிக்கலாமேன்னு தோணுச்சு. நேரடியாகவே ரஷ்யாவில் இருந்து இந்த பொருளை வாங்கினேன். பின் என்னுடைய க்ரியேட்டிவிட்டியில் இருந்து எனக்கு விருப்பமான டிசைனில் பூக்களை செய்து அதை குழந்தைக்கான ஹெட்பேண்டாக மாற்றினேன். என் மகளுக்கு அதை அணிந்து படம் பிடித்தேன். அதைப் பார்த்த பலர் இதே போல் ஹெட்பேண்ட் தங்கள் குழந்தைக்கும் செய்து கொடுக்க சொல்லி கேட்டார்கள்.

இயற்கை பூக்களைப் போலவே தோற்றமளிக்கும் ஃபோமிரான் பூக்கள் பேபி ஃப்ரெண்ட்லி மெட்டீரியல்தான். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் சங்கடமும் ஏற்படாது. முதலில் இதை நான் என்னுடைய குழந்தைக்குதான் பயன்படுத்தினேன் என்பதால், பலரும் என்னை நம்பி இந்த பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். குழந்தைகளுக்கான பேபி போட்டோ ஷூட், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், காதணி விழாக்கள் என பல வடிவில் என் வாடிக்கையாளர்களே கஸ்டமைஸ்டு பொருளை கேட்க நான் அவர்கள் கேட்கும் வண்ணத்தில், செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். ஒரு சில பெற்றோர்கள் தங்களின் ஆண் குழந்தைகளுக்கும் இந்த ஹெட்பேண்டுகளை விரும்பியதால், அவர்களுக்கு கிருஷ்ணன் அலங்காரமாக மயில் இறகுகளைப் போன்ற ஹெட்பேண்டுகளை செய்து கொடுத்தேன். இதில் இருக்கும் இன்னொரு சிறப்பம்சம், இந்த ஹெட்பேண்டுகள் ஒரே அளவில் செய்தால் போதும். அனைவருக்கும் பொருந்தும்.

அதாவது பிறந்த குழந்தை முதல் அம்மாக்கள் வரை யார் வேண்டுமானாலும் இதை பயன்படுத்த முடியும். ஒருவரின் தலை அளவிற்கு ஏற்ப இந்த மெட்டீரியல் வளைந்து கொள்ளும் தன்மைக் கொண்டது. அதே சமயம் எந்த சுருக்கமோ, சேதமோ ஏற்படாது. மேலும் இந்த பொருளில் பூக்களை செய்யும் போது, அவை உயிருள்ள இயற்கையான பூக்களைப் போலவே தோற்றமளிக்கும்.
இந்த ஃபோமிரானில் குழந்தையின் உடையின் நிறத்திற்கு ஏற்ப பூக்களின் நிறங்களை தேர்வு செய்து அதில் நச்சுத்தன்மை இல்லாத பெயிண்ட் கொண்டு அலங்காரம் செய்யலாம்.
நான் தயாரிக்கும் தலை முடி அலங்காரங்கள் எல்லாமே நியூபார்ன் ஃப்ரெண்ட்லி என்பதால், குழந்தை பிறந்த இரண்டே நாட்களில் இந்த ஹெட்பேண்டை அவர்கள் தலையில் மாட்டலாம்’’ என்றவர் 2019ல் பன்ச் ஆஃப் பெடல்ஸ் (Bunch of petals) என்ற ெபயரில் முறையாக தன் தொழிலை ஆரம்பித்துள்ளார்.

‘‘ஆரம்பத்தில் யாராவது கேட்கும் போது தான் செய்து தந்து வந்தேன். தொழிலாக செய்ய ஆரம்பித்த பிறகு தான் எனக்கு புரிந்தது, இந்தியாவில் நான் மட்டுமே பிறந்த குழந்தைகளுக்கான ஹெட்பேண்ட்ஸ் செய்து வருகிறேன் என்று. பின் ஃபோமிரான் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிலும் கிடைக்க ஆரம்பித்தது. அப்போது பலரும் இதை விரும்பி வாங்கி அதில் பல கலைப் பொருட்களை, அலங்கார நகைகளை செய்ய தொடங்கியுள்ளனர். இப்போது நான் இது குறித்து மற்ற பெண்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல், ஃபோமிரானை விற்பனையும் செய்து வருகிறேன். இந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1200 ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளேன். இந்த தொழிலை பெண்கள் சுயமாக ஆரம்பிக்க ஐயாயிரம் ரூபாய் போதும்.

இந்த தலைமுடி அலங்காரங்கள் எல்லாமே ஐம்பது ரூபாயில் தொடங்கி 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை எல்லாம் கைகளிலேயே 30-40 நிமிடத்தில் செய்ய முடியும். குழந்தைகளுக்கான ஹெட்பேண்ட் மட்டுமில்லாமல், மணப்பெண்களுக்கான வேணி, நலங்கு, மெஹந்தி விழாக்களுக்கு அணிந்து கொள்ளக் கூடிய கஸ்டமைஸ்டு நகைகள், கேட்ச் க்ளிப், ஹேர் க்ளிப் என பல விதமான தலை அலங்காரங்களை வடிவமைக்கலாம்’’ என்கிறார் ரம்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிங்க் நிற வானத்தை படம் பிடிக்க விடியற்காலை காத்திருந்தோம்!(மகளிர் பக்கம்)
Next post Water Cress!! (மருத்துவம்)