தினம் ஒரு ரெசிபி !!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 50 Second

கொரோனா தாக்கம் முடிந்தது என்று மூச்சு விடுவதற்குள் அடுத்த அலை ஆரம்பித்துவிட்டது. மறுபடியும் ஊரடங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது என்று ஒவ்வொரு திட்டங்கள் அமலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் இருக்கும் போது… ஏதாவது புதுமையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். குழந்தைகள் ஏதாவது செய்து தாருங்கள் என்று நச்சரிப்பார்கள். பக்கோடா, மேகி என்றில்லாமல்… வித்தியாசமாக சமைப்பதற்காகவே அம்மாக்களுக்காகவே பல சமையல் ஆப்கள் உள்ளன. அதைப் பார்த்து பலவித உணவுகளை சமைத்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள்.

டைனி செஃப் Tiny Chef

தங்கள் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் சமைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கான ஆப். இதில் பலவித அம்சங்கள் உள்ளன. உங்களின் இன்றைய சமையல் என்ன என்று திட்டமிட்டால் அதற்கு என்ன சமையல் பொருட்கள் தேவை மற்றும் அதை எவ்வாறு சமைக்கலாம் என அனைத்தும் இந்த ஆப் உங்களுக்கு வழிநடத்தும். ஒரு நாள் மட்டுமில்லாமல் ஒரு வாரம் வரை அதனை திட்டமிடலாம். டயட் உணவு தேவைப்பட்டால் அது குறித்த விவரங்களும் இதில் உண்டு. சமையல் என்ன என்று தேர்வு செய்துவிட்டால் அதற்கு என்ன வேண்டும் என்பதையும் இந்த ஆப் மூலம் குறித்துக் கொள்ளலாம்.

அதன் மூலம் கடைக்கு செல்லும் போது… இதை மறந்துவிட்டோமே என்று கவலைப்படத் தேவையில்லை. இதில் சைவம், அசைவம், அமெரிக்கன். மெக்சிகன், வட மாநில உணவுகள் என பல ரகம் உள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த உணவினை வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் அந்த குறிப்பிட்ட உணவினை சமைக்கும் குறிப்புகளை பற்றி தேட வேண்டிய அவசியம் இருக்காது. கடைசியாக உங்களுக்கான உணவினை நீங்கள் எப்படி சமைக்க வேண்டும் என்பதை குறிக்கும் விளக்கமும் இருப்பதால், எளிதில் சமைக்க உதவும்.

ஹேபர்ஸ் கிச்சன் Hebbars Kitchen

இந்திய சைவ சமையல் குறிப்புகள் கொண்ட ஆப். ஒரு சமையல் குறிப்பை படிப்படியாக புகைப்படம் மற்றும் வீடியோ மூலமாக எளிதில் புரியும் படி வடிவமைக்கப்பட்ட முதல் இந்திய ஆப். இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமில்லாமல் ெவளிநாட்டைச் சார்ந்த சைவ உணவுகள் பற்றிய சமையல் குறிப்புகள் உள்ளது. இருந்தாலும் தென்னிந்தியாவின் சிற்றுண்டி, ஸ்னாக்ஸ் மற்றும் குழம்பு மற்றும் கிரேவி வகைகள் இதில் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இந்த ஆப்பின் சிறப்பே, நம்முடைய சமையல் அறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதில் ஒரு சுவையான ரெசிப்பிகளை உருவாக்கலாம் என்பது குறித்த சமையல் குறிப்புகள் உள்ளன. அவ்வப்போது ஒரு புது ரெசிபிக்கள் இதில் பதிவு செய்யப்படும். அது குறித்த குறுஞ்செய்தியும் தெரிவிக்கப்படும். பிடித்த உணவினை பதிவு செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

சாஸ் ரெசிபீஸ் Sauce Recipes

சமோசா, ஃபிரைட் ரைஸ், கட்லெட், மேமோஸ்… எதுவாக இருந்தாலும் அதனை சாஸ் இல்லாமல் சாப்பிட முடியாது. அதேப்போல் சில உணவுகளை சாஸ் இல்லாமல் சமைக்கவும் முடியாது. இந்த சாஸ்கள்தான் அந்த உணவிற்கு சுவையினை மேம்படுத்திக் கொடுக்கும். சூப்பர்மார்க்கெட்டில் சாஸ் வகைகளுக்காகவே தனிப்பட்ட ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல வகையான சாஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் அவை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை. இந்த ஆப்பில் பலதரப்பட்ட சாஸ்களை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பது மட்டுமில்லாமல் அதனை எவ்வாறு உணவுடன் சேர்த்து சமைக்கலாம் என்ற குறிப்பும் உள்ளது. மேலும் ஒவ்வொரு சாஸ்களில் உள்ள ஊட்டச்சத்து குறித்த விவரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 13 முக்கிய மொழிகளிலும் ரெசிபிக்கள் இருப்பதால், பார்வையாளர்கள் அவர்கள் விரும்பும் மொழிகளில் ரெசிபிக்களை பார்த்து சமைத்து மகிழலாம்.

பார்பெக்யு கிரில் ரெசிபீஸ்  Barbeque Grill Recepies

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்போது விரும்பி சாப்பிடும் உணவுப் பட்டியலில் பார்பெக்யு மற்றும் கிரில் உணவுகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அசைவ கடைகளின் வாசலில் கண்ணாடி பேழைக்குள் முழு கோழி ஒன்று சுற்றிக் கொண்டு இருக்க, அதைச் சுற்றி நெருப்பு எரிந்துகொண்டு இருக்கும். மறுபக்கம் தகதகவென கரித்துண்டுகளுக்கு மத்தியில் இரும்பு கம்பியில் குத்தப்பட்ட கோழி வெந்து கொண்டு இருக்கும்.

ஆதி காலத்து மனிதன் நெருப்பில் சுட்டும் அனலில் வாட்டி எடுத்துதான் மாமிசங்களை உண்டு வந்தான். அதே கான்செப்ட் தான் இப்போது மாடர்ன் முறையில் பார்பெக்யு கிரில் என்று அழைக்கப்படுகிறது. இதனை நாம் வீட்டிலேயே எவ்வாறு சமைக்கலாம் என்ற குறிப்பு கொண்ட ஆப் தான் பார்பெக்யு கிரில் ரெசிபி ஆப். மேலும் சிக்கன் மட்டுமில்லாமல் இறால், மீன், காய்கறிகள் மற்றும் குறிப்பிட்ட பழ வகைகளையும் எவ்வாறு பார்பெக்யு முறையில் சமைப்பது மட்டுமில்லாமல் அதற்கு தேவையான சமையல் பொருட்கள் பற்றிய விவரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

சாலட் ரெசிபீஸ் Salad Recepies

பொதுவாக எல்லாரும் உணவு மேல் மிகுந்த கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். துரித உணவுகள் மேல் மோகம் இருந்தாலும், சாலட் வகை உணவுகள் மேலும் பலர் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள். சாலட்டில் பல வகை உள்ளது. சில சாலட்களை சமைத்து சாப்பிடலாம். சிலவற்றை பச்சையாக சாப்பிடலாம். எல்லாவற்றையும் விட இதில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பொதுவாக சாலட் என்றால் காய்கறிகளை நறுக்கி அதில் உப்பு மற்றும் மிளகுதூள் மட்டுமே சேர்த்து சாப்பிடுவது தான் சாலட் என்று நாம் நினைத்து வருகிறோம்.

ஆனால் இதில் ஆலிவ் ஆயில், ஃப்ரெஷ் கிரீம், மேயோனீஸ், சீஸ் போன்ற பலவற்றை சேர்த்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் போது வயிறும் நிரம்பும் அதே சமயம் ஆரோக்கியமான உணவு சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும். சாலட் உணவுகளில் பலவகை காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பதால், அதன் மூலம் நம் உடலுக்கு தேவையான மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் கிடைக்கிறது. இது நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியினை அளிப்பது மட்டுமில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்க உதவுகிறது.

குறிப்பாக இது போன்ற நோய் தொற்று காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமான உணவினை சாப்பிட பழகிக் கொள்வது அவசியம். இந்த ஆப்பில் ஒவ்வொரு சாலட்களையும் எவ்வாறு சமைக்கலாம் என்பது மட்டுமில்லாமல் அதில் நமக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து குறித்த விளக்கமும் உள்ளதால் அவரவர் தங்களின் தேவைக்கு ஏற்ப உணவினை தேர்வு செய்து சாப்பிடலாம்.

ஃபுட் புக் ரெசிபீஸ் Food Book Recepies

சமையல் குறித்த முழு கையேடுதான் இந்த ஆப். பொதுவாக சிற்றுண்டியில் ஆரம்பித்து… மதிய உணவு, மாலை ஸ்னாக்ஸ் மற்றும் இரவு உணவு என நம்முடைய உணவு முறையினை நாம் நான்கு வகையாக பிரித்து இருக்கிறோம். அவ்வாறு சாப்பிடப்படும் ஒரு நேர உணவில் அபிடைசர், ஸ்டார்டர், மெயின் ேகார்ஸ், டெசர்ட் என்று அதையே பல விதமாக ஓட்டல்களில் பிரித்து அளித்து வருகிறார்கள். ஓட்டல்களில் இவ்வாறு வழங்கப்படும் உணவினை நாம் வீட்டிலேயே சுலபமாக இந்த ஆப் மூலம் சமைக்கலாம். சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரெசிபிக்கள் இந்த ஆப்பில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் அன்று சமைக்கக் கூடிய சிறப்பு உணவுகள் பற்றிய குறிப்புகளும் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணவினையும் படிப்படியாக எவ்வாறு சமைக்கலாம் என்ற குறிப்பு மட்டுமில்லாமல் அதில் உள்ள ஊட்டச்சத்து குறித்த பட்டியலும் இடம் பெற்றுள்ளது. மேலும் உங்களுக்கு பிடித்த ரெசிபிக்களை சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)
Next post ஆன்லைன் போதையால் அவதி!! (மகளிர் பக்கம்)