அடுத்தவர் செல்போனை பார்த்தால் பரபரக்கும் கைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 31 Second

கணவர், 3 பிள்ளைகள் என்று அழகான வாழ்க்கை. கணவர் மென்பொறியாளர். அதனால் வருவாய்க்கு குறைவில்லை. நானும் பொறியாளர்தான். ஆனால் குழந்தைகளை, குடும்பத்தை கவனித்துக்கொள்ள வெளியில் வேலைக்கு செல்லவில்லை. அவர் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பிறகு வீட்டில் இருக்கும் வேலைகளை பார்ப்பேன். எப்போதாவது டிவி. மற்ற நேரங்களில் செல்போன்தான் துணை.

பள்ளி, கல்லூரி தோழிகள் என எல்லோருக்கும் தனித்தனி குழு. அவற்றில் ‘மெசேஜ்’களை பதிவிடுவேன். கூடவே நெருங்கிய தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பேன்.அதிக நேரம் செல்போனுடன் செலவிடுவதால் எந்த வகை செல்போனையும் எளிதில் கையாளுவேன். கூடவே பொறியாளர் என்பதால் அவற்றின் தொழில்நுட்பங்களும் தெரியும். அதனால் செல்போனில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நானே சரி செய்து விடுவேன்.

தெரிந்தவர்கள் செல்போனில் பழுது ஏற்பட்டால் என்னிடம் தான் தருவார்கள். நானும் பழுது நீக்கித் தருவேன். அப்படித்தான் ஒருமுறை பக்கத்து வீட்டு தோழி… அவரது செல்போன் மழையில் நனைந்து விட்டது, செயல்படவில்லை என்று கொண்டு வந்து தந்தார். நானும் அதனை சரி செய்ய முயன்றேன். அது சரியானபோது யதேச்சையாக அவரது வாட்ஸ் ஆப் பதிவுகளை பார்த்தேன். அவர் ஒரு ஆணிடம் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அது தவறு என்று தெரிந்தாலும், ஏனோ அதை ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.

எப்போதும் அமைதியாக இருக்கும் பெண், கணவரிடம் அதிக நெருக்கமாக இருக்கும் ஒரு பெண்ணின் இன்னொரு முகம் தெரியவே ஆச்சர்யமாகிப் போனேன். அதன் பிறகு யாரையாவது போனுடன் பார்த்தால், அவர்கள் போனில் என்ன வைத்திருப்பார்கள் என்று ஆவல் ஏற்பட்டது. அதன்பிறகு எனது ஆர்வம் வேறு திசையில் சென்றது. என்னிடம், ‘பிளாக் ஆயிடுச்சி…. ஸ்கிரீன் தெரியல’ என்று வந்து நிற்பார்கள். அவர்கள் எதிரில் உடனடியாக சரி செய்து கொடுக்கும் பிரச்னையாக இருந்தாலும், ‘எனக்கு வேலை இருக்கு… செல்லை தந்துட்டு போங்க அப்புறம் பாத்து தறேன்னு’ சொல்லிடுவேன். அவர்கள் சென்றதும், நானும் கதவைச் சாத்திக் கொண்டு உடனடியாக பழுதை நீக்குவேன். அடுத்த விநாடியே அவர்களின் செல்போனை ஆராய ஆரம்பித்து விடுவேன். நாளாக நாளாக  பழது நீக்க வருபவர்களின் செல்போன்களை மட்டுமல்ல மற்றவர்களின் செல்போன்களையும் பார்க்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது.

வீட்டுக்காரர் குளிக்கும் போது, தூங்கும் போது அவரது செல்போனையும் எடுத்து ஆராய்வேன். ஆரம்பத்தில் ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. ஆனால் நாளாக, நாளாக அவரது பெண் அதிகாரி ஒருவர், அவரிடம் அடிக்கடி ஜாலியாக அரட்டையடிப்பதை கண்டுபிடித்தேன். ஆனால் அவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. அதற்கு பதில் அடுத்த நாள் என்ன பேசப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் ஏற்பட்டது. அதேபோல்  ஏதாவது நிகழ்ச்சிகளில் தோழிகள், உறவினர்கள் செல்போனை வச்சுக்கோ ‘ரெஸ்ட் ரூம்’ போய்ட்டு வர்றேன்னு சொன்னால், சட்டென்று குஷியாகி விடுவேன். அப்படி தராமல் போனால், ‘ செல்போனில் தண்ணி பட்டுச்சினா வீணா போய்டும்’ என்று எச்சரிப்பேன். அவர்களும் பயந்து போய் செல்போனை என்னிடம் தந்து ‘பத்திரமா வச்சுக்கோ’ என்று சொல்லிவிட்டு போவார்கள்.

அதேபோல் பெரியவர்கள் செல்போனை வைத்திருக்கும் சிறுவர்களிடம், ‘கேம்ஸ் டவுன்லோடு பண்ணித் தரேன்’ என்று சொல்லி அந்த செல்போன்களை வாங்கி  ஆராய்ந்து பார்ப்பேன். அந்த சுகம் ஒருநாள் வாய்க்காவிட்டால், எதையோ இழந்தது போல் தோன்றும். ‘சரி எல்லாம் ஸ்மார்ட் போனாச்சே… மற்றவர்கள் பாஸ்வேர்டு, பேட்டர்ன் தெரியாமல் எப்படி செல்போனை திறந்து பார்க்கிறேன்’ என்று உங்களுக்கு சந்தேகம் வரும். பெரும்பாலும் பலரும் தங்கள் பிறந்தநாள், பிள்ளைகளின் பிறந்தநாளைதான் ‘பாஸ்வேர்டாக’ போட்டிருப்பார்கள். அதேபோல் ‘பேட்டர்னும்’ அவர்களின் ‘இன்ஷியலாக’தான்இருக்கும். அதனால் 2, 3 முறை முயற்சித்தால் போதும்.

அதுமட்டுமல்ல யாருடைய செல்போனையாவது பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றினால்,  அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் ‘பேட்டர்ன் அல்லது பாஸ்வேர்டு’ போடும்போது வீடியோ எடுத்து வைத்துக் கொள்வேன். முதலில் எனக்கு மட்டும் தெரிந்த அடுத்தவர்களின் ரகசியங்களை  எனது சகோதரிகளிடம் பேசி மகிழ்ச்சி அடைவேன். அவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். எனக்கும் அவர்களிடம் சொல்ல தினம் ஒரு கதை இருக்கும். நான் சகோதரிகள் என்று சொல்வது என் உடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல, சித்தப்பா, பெரியப்பாக்களின் பெண்களையும்தான். சிறு வயது முதலே ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே எங்களுக்குள் நெருக்கம் அதிகம்.

அதனால் என் வீட்டுக்காரரின் அலுவலக அதிகாரி கதையையும் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன். அவர்களும் அவர்களது கணவர்கள், அவர்களின் மாமியார் வீட்டுக் கதைகளை சொல்வதுண்டு. இந்நிலையில் எனது அக்கா ஒருத்தி என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது எனது பெரியப்பா மகனான ‘அண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதாகவும், அண்ணி யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதுதான் பிரச்னைக்கு காரணம்’ என்று சொன்னார். அதனால் ‘‘அண்ணியின் போனை ‘செக்’ பண்ணி பாறேன்’’ என்றார்.  அந்த அண்ணி எப்போதும் என்னிடம் நன்றாக பேசுவார்.

செல்போன் பயன்படுத்துவதில் ஏதாவது சந்தேகம் வந்தால் கூட அதை என்னிடம்தான் கேட்பார். அதனால் அவர் போனை எடுத்து பார்ப்பதில் சிரமமில்லை. வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஊரில் விசேஷத்திற்காக சென்று இருந்தபோது அண்ணியின் செல்போனை எடுத்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் செல்போன் என்னிடத்தில் இருப்பது குறித்து கவலைப்படாமல் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார். நானும் என் வேலையை பார்த்தேன். ஒரு எண்ணில் இருந்து மட்டும் அடிக்கடி போன் செய்யப்பட்டிருப்பதை பார்த்தேன். அதனால் அந்த எண்ணின் வாட்ஸ் ஆப், டெலிகிராம் செயலிகளை பார்த்தபோது ஏதுமில்லை. எல்லாம் அழிக்கப்பட்டு இருந்தன.

ஆனால் வாட்ஸ் ஆப், டெலிகிராம் செயலிகளுக்கான வீடியோ அழைப்புகளை அழிக்கவில்லை. யார் பார்ப்பார்கள் என்று நினைத்திருப்பார் போலும். அந்த அழைப்பு பட்டியல் முழுவதும் அந்த ஒரு எண் மட்டுமே இருந்தது. ஆனால் அந்த எண் எந்த பெயரிலும் சேமிக்கப்படவில்லை. அதனால் யார் என்ன என்று உடனே தெரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் ‘ட்ரூ காலர்’ போட்டு பார்த்த போதுதான் அது ஆணின் எண் என்று தெரிந்தது. கூடவே ஒரு சகோதரி சொன்னபடி அண்ணிக்கு வரும் அழைப்புகள் அவரது செல்லில் ‘ரெக்கார்டு’ ஆகும்படி செய்தேன்.

அடுத்தமுறை அண்ணி செல்போன் கைக்கு வந்த போது, அதிலிருந்து அழைப்பு பதிவுகளை என்னுடைய செல்லுக்கு பகிர்ந்தேன். பின்னர் அனுப்பியதை அண்ணி செல்லில் இருந்து அவற்றை அழித்து விட்டேன். கூடவே அவரது செல்லில் ரெக்கார்டு ஆகும் வாய்ப்பையும் நிறுத்தி விட்டேன். அந்த பதிவுகளை கேட்கும் போது, ‘அண்ணன் முன்பு போல் அண்ணியிடம் அன்பாக இல்லை என்பதும், அடிக்கடி சண்டை போடுவதும், அடிப்பதுமாக இருப்பதால், ஆறுதலுக்காக தனது முன்னாள் காதலனிடம் அண்ணி அடிக்கடி பேச ஆரம்பித்துள்ளது’ தெரிந்தது. அதை சகோதரிகளிடம் சொன்னேன்.

அது எப்படியோ அண்ணனுக்கும் தெரிய வீட்டில் தினமும் சண்டையாகி இருக்கிறது. அவருக்கு தெரிந்து ஒரு வாரத்தில் அண்ணன் விபத்தில் இறந்து போனார். ‘அண்ணியின் விவரம் தெரிந்ததால்தான்,  மன உளைச்சலில் இருந்த அண்ணன் வண்டி ஓட்டும்போது விபத்தில் சிக்கியிருப்பார்’ என்று அண்ணியை திட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் எல்லோரும் என்னைத் திட்டுவது போல் உள்ளது. எனது தேவையில்லாத ஆர்வத்தால் அண்ணன் இறந்து போனதாகவும், அண்ணி சிக்கிக் கொண்டதாகவும் உணருகிறேன். கடந்த 6 மாதங்களாக இந்த உணர்வு என்னை படாத பாடு படுத்துகிறது. குற்ற உணர்ச்சியால் இயல்பாக இருக்க முடியாமல் தவிக்கிறேன்.

திட்டாதீர்கள்…. அடுத்தவர் செல்போனை தோண்டித் துருவி பார்க்கும் பழக்கம் மட்டும் குறையவில்லை. என்னுடைய அந்த பழக்கத்தால் பாதிக்கப்பட்ட அண்ணியின் செல்போனை நான் எடுத்தாலும் ஒன்றும் சொல்வதில்லை. அவரது இன்றைய நிலைமைக்கு நான்தான் காரணம் என்பது அவருக்கு தெரியாது. தெரிந்தால் என்ன நடக்குமோ என்று பயமாக வேறு இருக்கிறது. சரி நாமே அடுத்தவர் செல்போனை ஆராய்வதை நிறுத்திக் கொள்ளலாம் என்று பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. என்னுடைய இந்த தேவையில்லாத ஆர்வத்தால் என் கணவர் திசைமாறிப் போவது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை.

அடுத்தவர்களின் அந்தரங்கமாகவே பார்க்கிறேன். அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் குறையவில்லை. இன்னும் என்னால் யார்யார் பாதிக்கப்பட போகிறார்களோ தெரியவில்லை. பயமாக இருக்கிறது. என்னுடைய செயல் மனநோயா? இதை சரி செய்ய முடியுமா? என் கணவருக்கோ, மற்றவர்களுக்கோ என்னுடைய விவகாரம் தெரிந்தால் என்ன நினைப்பார்களோ என்று பதட்டமாக இருக்கிறது. ஒருமுறை என்னுடைய சகோதரி, ‘யாரிடமும் செல்போனை கொடுக்க பயமாக இருக்கிறது. ரிப்பேர் ஆச்சுனா கூட தூக்கிப் போட்டுடணும்… யார்கிட்டேயும் ரிப்பேர் பண்ணக் கொடுக்கக் கூடாது’ என்று என்னிடம் சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு அவமானமாகி விட்டது. ஆனாலும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. என்ன செய்வது தோழி….. எனக்கு நல்ல வழியை காட்டுங்கள்.

இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத  வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் கடிதம் படிக்கும் போது உங்களின் நிலைமை புரிகிறது. நீங்கள் சொல்லிய விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது, இது ஒரு சுய கட்டுப்பாட்டை மீறிய, உணர்ச்சிவசப்பட்டு செய்யக்கூடிய செயலால் ஏற்படும் பாதிப்பு என்பது தெரிகிறது. சிலருக்கு சில விஷயங்களை சட்டென செய்ய தோன்றும்…. அதனை Impulsivity (இம்பல்சிவிட்டி) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். நம் மனதில் தோன்றிய உடன் அந்த செயலை செய்யும் போது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சி காரணமாக மீண்டும் மீண்டும் அந்த செயலை செய்ய ஆசைப்படுவோம். அப்படி தொடர்ந்து செய்வதால் அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும். நாளடைவில் நாம் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவோம். கிட்டத்தட்ட மது போதைக்கு அடிமையாகி விடுவது போன்றுதான். நம்மால் அந்த செயலை செய்யாமல் இருக்க முடியாது. நீங்களும் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள்.

இப்படி ஒரு செயலுக்கு அடிமையாக, உயிரியல், சமூக உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. எல்லோரும் அப்படி அடிமையாக மாட்டார்கள். ஒரு சிலருக்கு மரபு ரீதியான தாக்கம், வளரும் விதம், அவர்களின் ஆளுமை மற்றும் சூழ்நிலை போன்றவை இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன. நீங்கள் ஒரு பொறியாளர். அந்த அறிவைப் பயன்படுத்தி செல்போன் பழுது பார்க்கும் அறிவை  வளர்த்துக் கொண்டு உள்ளீர்கள். அதற்குக் காரணமே நீங்கள் புதிதாக ஏதாவது  செய்ய விரும்புபவராக உள்ளீர்கள். ‘Novelty Seeking’ (நாவல்டி சீக்கிங்) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது எதிலும் புதுமையை விரும்புவீர்கள்.

அதற்காக சில செயலைச் செய்ய ஆசைப்படுவீர்கள். அவ்வாறு செய்யும்போது நமக்கு அந்த செயல் மகிழ்ச்சி தரும் பட்சத்தில் திரும்பத் திரும்ப அதை செய்யத் தோன்றும். அது நல்லதா… கெட்டதா… என்றெல்லாம் யோசிக்க தோன்றாது. ஆகவே அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதில் எந்தவித நெருடலும் இருக்காது. நீங்கள் கூறியது போல் இந்தப் பழக்கத்தினால் நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்படும் பொழுது தான், குற்றவுணர்ச்சி லேசாக எட்டிப் பார்க்கும்.

உங்கள் அண்ணன் மரணத்தால், இப்போது அது தவறு என்றும்… அதை மாற்றிக்கொள்ள வேண்டும்…  சரி செய்து கொள்ள என்ன வழி? என்றும் கேட்க தோன்றியுள்ளது. இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது இது முதலில் இயல்பான குணமாகவும் இருக்கும். பின்னர் நோயாகவும் மாறும். நீங்கள் செய்ய வேண்டியது அடுத்தவரின் செல்போனை நீங்கள் பார்க்கும் பொழுது, உங்களுக்கு அதில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அப்போது அதை செய்யாமல் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். அதில் கிடைக்கும் சிற்றின்பத்தையும், மகிழ்ச்சியையும் அலட்சியப்படுத்துங்கள். இதை படிப்படியாக செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் கடினமாக முயற்சிக்க வேண்டும். ஏனெனில் உங்களுக்கு தோன்றியதை உடனே செய்து விட்டால் கிடைக்கும் சிற்றின்பத்தை இழக்கத் தயாராக நீங்கள் இருக்க வேண்டும்.

இதில் உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேண்டாம். வேண்டுமென்றே நீங்கள் இதை செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். அப்படி மீண்டால்தான் உங்கள் கணவரையும், உறவுகளையும், நட்புகளையும் இழப்பதில் இருந்து தப்பிக்க முடியும். சரி, உங்களால் அந்த எண்ணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, அடுத்தவர் செல்போனை ஆராயும் பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை என்றால், நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது?(மருத்துவம்)
Next post மகளை மயக்கிய காதலன்!! (மகளிர் பக்கம்)