நண்பரின் திடீர் காதல்… நல்லதா? (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 24 Second

அன்புள்ள தோழிக்கு, படித்து முடித்ததும் வேலை கிடைத்து விட்டது. நான் புது ஆள் என்றாலும் வேலை செய்யும் இடத்தில் எல்லோரும் நன்றாக பழகினார்கள். எல்லோரிடமும் சிரித்து பேசுவதுதான் என் இயல்பும் கூட. எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள். ஆனால் பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என உறவுகள் அதிகம். எல்லோரும் தனிக்குடித்தனம் என்றாலும் சொல்லும் போது கூட்டுக் குடும்பம் என்றுதான் சொல்வோம். அந்த அளவுக்கு எல்லோரும் இணக்கமாக இருப்போம்.

ஏதாவது விசேஷம் என்றால் அந்த இடமே பேச்சொலியால் அதிரும். சொந்த ஊர், சுற்றுலா என்றால் சேர்ந்து தான் போவோம். அதனால் நான் ஒரே மகள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. என்னிடம் நன்றாக பேசுபவர்களிடம் நானும் நன்றாக பேசுவேன். ஏதாவது ஏடாகூடமாக நடந்து கொண்டால் சட்டென்று விலகி விடுவேன். அதை விட என் பதிலே, அவர்களின் பேச்சை குறைத்து விடும்.

அப்படித்தான் அலுவலகத்திலும் எல்லோரும் என்னிடம் நன்றாக பேசுவார்கள். அதில் ஒரு நண்பர். திருமணமானவர் என்னை விட ஆறேழு வயது பெரியவர். அலுவலகத்தில் சக நண்பர்கள் பேசிக் கொள்வது போன்று அவரிடம் எல்லா விஷயங்களையும் பேசுவேன். வேலைக்கு சேர்ந்து 2 ஆண்டுகளில் திருமணமானது. அவருக்கு  அரசு துறையில் வேலை. எங்களுக்கு மகன் பிறந்ததும் வேலையை விட்டு நின்று விட்டேன். அப்போது அந்த நண்பர், ‘வேலையை விட வேண்டாம்… விடுமுறை எடுத்துக் கொள்… ஒரு வருஷம்  கழித்து வந்து வேலையில் சேர்ந்து கொள். அலுவலகத்தில் விடுமுறை கேட்டுப்பார்’ என்று சொன்னார்.

ஆனால் எங்கள் வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள வேலையை விட்டு விட சொன்னார்கள். என் கணவரும் அதையே சொல்ல, வேலையை விட்டுவிட்டேன். அது நண்பருக்கு வருத்தம். ஆனாலும் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வோம். இடையில் நண்பர் வேறு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். என்னையும் அங்கு வேலைக்கு சேரும்படி அழைப்பு விடுத்தார். குழந்தையும் பெரியவனாகிவிட்டதால், மீண்டும் வேலைக்கு போக ஆசைப்பட்டேன். வீட்டில் முதலில் யோசித்தார்கள்.

பிறகு சரி என்று ஒத்துக் கொண்டார்கள். நானும் வேலைக்கு சேர்ந்தேன். அலுவலக பணி தொடர்பாக இருவரும் ஒரே வண்டியில் செல்வது, நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்வது வாடிக்கை. எப்போதும் பேசுவது போல் இயல்பாக பேசுவது மட்டுமில்லாமல், பர்சனலாகவும் பேசுவோம். நீண்ட நேரம் பேசிக் கொண்ட நாட்களும் இருக்கின்றன. சுருக்கமாக சொன்னால் இருவரும் தவறான நோக்கத்தில் பழகவில்லை.

ஒருமுறை அவருக்கும், அவர் மனைவிக்கும் பிரச்னை வந்து மனைவி அம்மா வீட்டுக்கு போய் விட்டார். அவர் ஓட்டலில் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டது. நான் வீட்டில் இருந்து அவருக்கு மதிய சாப்பாடு கொண்டு செல்வேன். முதலில் மறுத்தவர்… ‘இன்னைக்கு என்ன கொண்டு வருவாய்’ என்று கேட்கும் அளவுக்கு ஆனது.சில மாதங்கள் கழித்து சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கேட்டதற்கு அம்மா வீட்டில் இருந்து வருவதால் அம்மாவே சாப்பாடு கொடுத்து விடுவதாக சொன்னார்.

அவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள், மனைவியுடன் பிரச்னைக்கான காரணம் உட்பட எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவரது நண்பர்களை கூட எனக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். முன்னாள் காதலியை கூட என்னிடம் பேச வைத்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்கள். பார்த்துக் கொள்வதில்லை. போனில் மட்டும் தான் எப்போதாவது பேசிக் கொள்வார்கள்.

எல்லா ஆம்பளைகளும் தன் பொண்டாட்டி சரியில்லை என்று சொல்லிதான் மற்ற பெண்களை இம்பிரஸ் செய்ய பார்ப்பார்கள். ஆனால் அவன் பொண்டாட்டியிடம் கேட்டால்தான் அவன் எப்படிப்பட்டவன் என்று தெரியும். என்னைப் பற்றிக் கூட என் மனைவியிடம் கேட்டாதான் என் யோக்கியதைதெரியும் என்று சொல்வார். அவரின் வெளிப்படையான பேச்சுதான் எங்கள் நட்பு தொடர காரணம். அதுமட்டுமல்ல அவருக்கு உதவும் குணம். அலுவலகத்தில் அவருக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கூட அவசரம் என்றால் தேடிச் சென்று உதவும் இயல்பு உள்ளவர். அதனால் ஏற்பட்ட மரியாதை கூட எங்கள் நட்பு உறுதியாக காரணம்.

இப்போதும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறோம். வேறு வேறு பிரிவு என்றாலும் பிரேக் நேரத்தில் இருவரும் சந்தித்து பேசிக் கொள்வோம். சில நாட்களில் போனில் பேசுவோம். சில மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றாக மதிய உணவுக்கு ஓட்டலுக்கு செல்வது வாடிக்கை. இரண்டு மூன்று சினிமாவுக்கு கூட தனியாக சென்று இருக்கிறோம்.இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவருக்கு உடல்நலம் குன்றி அறுவை சிகிச்சை வரை சென்றது. அதன் பிறகு அவரை எடை தூக்கக் கூடாது, உடலை வருத்திக் கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு கணவரது உடல் நிலைதான் முக்கியம் என்பதால், எனக்கும் என் கணவருக்கும் இடையே தாம்பத்திய வாழ்க்கை தடைப்பட்டது.

இது குறித்து என் நண்பரிடமும் பேசியுள்ளேன். அவரும் என் கணவரை எப்படி பார்த்துக் கொள்வது என்று யோசனை எல்லாம் சொல்வார். ‘தாம்பத்திய வாழ்க்கை இல்லை என்பதற்காக விலகி இருக்காதே…. அன்பாக பேசு’ என்று சொல்வார். கூடவே ‘டாக்டர்களை மறுபடியும் அணுகி உடல் நிலை தேறியிருக்கிறதா என்று கேள்’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல ‘உன்னைப் போல் மனைவி கிடைக்க உன் கணவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீ உண்மையில் கிரேட்’ என பாராட்டுவார். அப்போதும் என்னிடம் தவறாக பேசியதோ, அணுகியதோ இல்லை. எனக்கும் அப்படி தோன்றியதில்லை.

சிலரிடம் ஃபிரீயாக பேச முயன்ற கொஞ்ச நாட்களிலேயே ‘என்னை விரும்புவதாக’ சொல்லி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல…. திருமணத்திற்கு பிறகும்கூட இந்த ‘விரும்புகிறேன்’ என்ற வார்த்தைக்கு குறைச்சலில்லை. ஆனால் அந்த நண்பர் மட்டும் அப்படி பேசியதில்லை.அவர் மனைவியிடமும் போனில் பேசுவேன். நிகழ்ச்சிகளிலும் பார்த்திருக்கிறேன்.  அவரும் நன்றாக பேசுவார். அதே போல்தான் என் கணவரிடமும் நண்பர் நன்றாக பேசுவார். இருவரும் ஜாலியாக பேசி அரட்டை அடிப்பார்கள்.

ஆனால் நாங்கள் இருவரும் பர்சனலாக பேசிக் கொள்வோம் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. நாங்களும் யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ‘உன்னை மிஸ் பண்றேன்…. உன்னை லவ் பண்ணணும் போல தோணுது’ என்று பேச ஆரம்பித்தார். நான் ‘இது சரியில்லை… நம்ம நட்பை கொச்சைப் படுத்தாதீங்க.. ’ என்றேன். அதற்கு அவர், ‘அது எனக்கும் புரியுது… சாரி… ஆனால் கொஞ்ச நாட்களாக எனக்கு அப்படித்தான் தோணுது’ என்றார்.

அதன் பிறகும் நாங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இடைஇடையே அவர் விருப்பத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார். நானும் மறுத்துக் கொண்டு இருந்தாலும், மற்றவர்கள் மாதிரி அவரை சராசரியாக நினைக்க தோன்றவில்லை. என்னை அணுக நிறைய வாய்ப்புகள் இருந்தும் அவர் அவற்றை பயன்படுத்திக் கொண்டதில்லை. இந்த 18 ஆண்டுகளில் அவர் என்னிடம் உயிர் தோழனாகத்தான் நடந்து கொண்டார். ஒரு பெண் தோழியுடன் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை கூட அவரிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

ஆனால் அப்போதெல்லாம் கேட்காதவர் இப்போது மட்டும் ஏன் எப்படி… என்ற சிந்தனைதான் எனக்கு தோன்றுகிறது. பல நேரங்களில் ஏன் இப்படி மாறி விட்டார் என்றும் நினைக்கிறேன். சில நேரங்களில் அவருக்கு சரியென்று சொல்லிவிடுவேனோ என்றும் பயமாக இருக்கிறது.காரணம் அவர் இவ்வளவு நாட்கள் என்னுடன் பழகிய விதம்தான். அதே நேரத்தில் எனது கணவரையும், என் 2 குழந்தைகளையும் அதிகமாக நேசிக்கிறேன். என் நண்பரை விட அவர்கள்தான் எனக்கு முக்கியம். என் செயல்களால் அவர்கள் பெயர் கெட்டு விடுமோ என்று தயங்குகிறேன். எங்கள் நட்பையும் கொச்சைப்படுத்தி விடுவோமோ என்றும் அச்சப்படுகிறேன்.

அவரிடம் பழகுவதை நிறுத்தி விடலாமோ என்று கூட சில நேரங்களில் தோன்றுகிறது. அது அத்தனை எளிதாக இருக்கும் என்றும் தோன்றவில்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதுவே எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. நல்ல நண்பரை இழந்து விடுவோமோ என்றும் தோன்றுகிறது. அவரை சரி செய்ய முடியுமா? அவரது திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? மனநல மருத்துவரிடம் போக வேண்டியது நானா? அவரா? இல்லை 2 பேரும் போய் பார்க்கலாமா? எனக்கு ஒன்றும் புரியவில்லை? அவர் முன்பு போல் கெட்ட எண்ணம் ஏதுமில்லாத நல்ல நண்பராக பழக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கு எனக்கு நல்ல வழிகாட்டுங்கள் தோழி? உங்கள் நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,

நட்பு என்பது இருவருக்கும் இடையிலான அழகான உறவு. அது ஆண், பெண், வயது என வித்தியாசங்களை கடந்தது. நாம் பல நண்பர்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஆணோ, பெண்ணோ வாழ்க்கைத் துணை ஒன்று மட்டும்தான். அந்த நண்பரின் உதவும் இயல்பு, ஈரகுணம் உங்களை ஈர்த்து இருக்கிறது. அதுதான் உங்கள் நட்புக்கு காரணம். அது உண்மையான நட்பின் தரம். அதில் தவறில்லை.

எப்படி இருந்தாலும் இயல்பை மீறிய உறவுக்காக பேசும் போது அந்த நல்ல நட்பு துரதிர்ஷ்டவசமாக கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. எப்போதும் படுக்கையறை விஷயங்கள் தம்பதிகளுக்குள் விவாதிக்கும் விஷயமாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு மருத்துவ ஆலோசனையின் போது பேசும் விஷயமாக இருக்கலாம். மற்றவர்களிடம் பேசுவதை எல்லோருமே தவிர்ப்பது நல்லது.உங்கள் நண்பர் உங்கள் மீதான, உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்தி இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதேநேரத்தில் உடல் ரீதியாக அவர் எல்லையை மீறவில்லை. பரவாயில்லை.

எனினும் அவருக்கு உங்கள் மீதான காதல்  திடீரென உருவாகி  இருக்கும் என்று தோன்றவில்லை. இருவரும் நீண்ட நேரம் பேசுவதாலும், ஒன்றாக இருக்க நேரம் செலவழிப்பதாலும், அவருக்கு உங்களை நெருங்குவது எளிதாக இருக்கும்.நீங்கள் இருவருமே, வாழ்க்கையின் மிகவும் கடினமான சூழ்நிலைகளை, பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்துள்ளீர்கள். எனவே, அவருக்கு உங்கள் மீது காதல் ஏற்படுவது, அவர் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருப்பது இயற்கையானதுதான். அதனால் நட்பின் பெயரால் அவர் மட்டுமல்ல நீங்களும் எல்லை மீற  முடியும்.

அவர் திருமண வாழ்க்கையில் பிரச்னை இருப்பது கூட அவர் உங்கள் மீது கவனம் செலுத்த காரணமாக இருக்கலாம். மீண்டும் சொல்கிறேன் நட்புக்கு ஆண், பெண், வயது, சாதி, மதம் எதுவும் தடையாக இருக்க முடியாது. ஆனால் நட்புக்கும் எல்லை இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.கணவர், மனைவி என வாழ்க்கை துணைகளுடன் விவாதிக்க முடியாத சில விஷயங்களை 3வது நபரிடம் பகிரும் போது அவர்கள் அதை புரிந்து கொள்வதும், ஆதரவாக இருப்பதும் நமக்கு வசதியானதாக, சந்தோஷமாக  இருக்கும். ஆனால் அது பாதுகாப்பானதல்ல.அதுமட்டுமல்ல, உங்கள் நண்பரின் விருப்பம் தெரிந்த பிறகு நீங்கள் இருவரும் முன்பு போல் நட்புடன் பழக முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. நட்பு தொடர்ந்தால், அவர் பல விதத்திலும் தன் அன்பை வெளிப்படுத்த முயலுவார். அதை கையாளுவது உங்களுக்கு சிரமமாக இருக்கும்.

ஒரு மனநல மருத்துவராக எனது ஆலோசனை என்னவென்றால், இந்த நட்பிலிருந்து விலகி உங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள், கணவர் மற்றும் குழந்தைகளை நேசிக்கிறீர்கள் என்பதையும், நண்பர் மீது செக்ஸ் உணர்வுகள் ஏதும் இல்லை என்பதையும் உங்கள் கடிதத்தில் இருந்து தெளிவாக உணர்கிறேன்.எனவே உங்கள் நண்பருடன், ஒருவருக்கொருவர் சாதகமாகவோ, ஆதரவாகவோ  தொடர வாய்ப்பு இல்லாத வகையில் நீங்கள் விலகியிருப்பது தான் நல்லது. அதன்மூலம் நீங்களோ, நண்பரோ தவறு செய்வதில் இருந்தும் விலகி இருக்க முடியும். நல்ல நண்பரை விலகுவது முதலில் கடினமாக இருக்கும். நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். உங்களால் மாற முடியும். மெதுவாக நடந்தாலும், காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

உணர்ச்சிவசப்படுவதற்கு பதில், பாதுகாப்பான மாற்று வழிகளைத் தேடுங்கள். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவற்றில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். நண்பரிடம் ‘அப்படி’ எந்த உணர்வும் இல்லை என்பதை அமைதியாக சொல்லி புரிய வையுங்கள். நீங்கள் இருவரும் விலகியிருப்பது இருவருக்கும் நல்லது.எனவே அந்த நட்பை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருங்கள். எல்லாம் சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிறப்புச் சான்றிதழில் 2வது கணவர் பெயர் பிரச்னையா?(மகளிர் பக்கம்)
Next post பேபி பெயின் கில்லர்? (மருத்துவம்)