சொத்துகளை சித்தி பெயரில் எழுதலாமா?(மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 46 Second

அன்புடன் தோழிக்கு,எனது அப்பா ஒரு மாநில அரசு ஊழியர். அவருக்கு நாங்கள் மொத்தம் 5 பிள்ளைகள். அதில் நான் உட்பட 3 பேர் முதல் மனைவியின் பிள்ளைகள். எங்கள் சித்திக்கு 2 பிள்ளைகள். இரண்டு அம்மாக்களுக்கும் தலா ஒரு ஆண் பிள்ளை. நான் குழந்தையாக இருக்கும் போது எனது அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதனால் எனது அம்மாவின் தங்கையை, இரண்டாவதாக அப்பா திருமணம் செய்து கொண்டார். அம்மா வீட்டில் வசதியில்லாததாலும், 2ம் தாரமாக வாழ்க்கைப்படுவதாலும் கல்யாணச் செலவுகளை எங்கள் தாத்தாதான் செய்துள்ளார். கூடவே சித்தியோட அப்பாவுக்கும் கல்யாண செலவுகளுக்கான மொத்த காசையும் தாத்தாதான் தந்துள்ளார்.

சொந்த சித்தி என்றாலும், நாங்க பெரும்பாலும் தாத்தா, பாட்டி வீட்டில்தான் வளர்ந்தோம். அப்பா அடிக்கடி வேலைக் காரணமாக கேம்பிற்கு போயிடுவார். சித்தி வீட்டில் தனியாக இருப்பதால், அண்ணனும், அக்காவும் மட்டும் அவருக்கு துணையாக வீட்டிற்கு போய்விட்டார்கள். நான் மட்டும் பாட்டியுடனே இருந்து விட்டேன். நான் கல்லூரிக்கு சேர்ந்த புதிதில் எனது தாத்தா, பாட்டி அடுத்தடுத்து இறந்து போகவே நானும் சித்தியுடன் போய் தங்க வேண்டியதாகி விட்டது. மாற்றாந்தாய் கொடுமை எல்லாம் கிடையாது. அன்பாக இருப்பதாகத்தான் தெரியும். ஆனால் அவருக்கு பிறந்த பிள்ளைகளுக்குதான் முக்கியத்துவம் இருக்கும். அவர்களை தான் நன்றாக படிக்க வைத்தார்கள். அக்கா +2வும், நான் கல்லூரி முடித்ததும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

பாட்டி வீட்டில் இருக்கும் வரை அண்ணன் நன்றாக படித்துக் கொண்டிருந்தார். அப்பாவுடனும், சித்தியுடனும் தங்க ஆரம்பித்த பிறகு சரியாக படிப்பதில்லை. ஊர் சுற்றுவது அதிகமாகி விட்டது. கல்லூரியில் சேர்ந்தாலும், படிப்பை முடிக்கவில்லை. அதனால் அவர் கிடைத்த வேலை செய்து கொண்டு இருக்கிறார். பெரிய வருமானமில்லை. அதையே காரணம் காட்டி ஏனோதானோ என்று ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்தனர். சித்திக்கு பிறந்த பிள்ளைகளில் மகள் டாக்டர், மகன் இன்ஜினியர். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். நாங்கள் அதிகம் படிக்கவில்லை என்பது அப்பாவுக்கு வருத்தமாக இருந்தாலும் அவர் வெளியில் காட்டிக் கொண்டதில்லை.

எங்கள் திருமணம் உட்பட எல்லா முடிவுகளையும் சித்திதான் எடுப்பார். எங்களுக்கு இன்னும் நல்ல இடத்தில் வரன் பார்த்திருக்கலாம் என்ற ஆதங்கம் அப்பாவிற்குண்டு. அது கூட எங்கள் திருமணத்திற்கு பிறகு, சித்தி இல்லாத நேரத்தில் சொன்னார். தாத்தா, பாட்டி வீட்டில் செல்லமாக வளர்ந்த நாங்கள், அவர்களின் மறைவிற்கு பிறகு எங்களின்  எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டோம்.அதற்கு எங்கள் பாட்டிதான் காரணம், ‘உங்கள வளர்க்கதான் சித்தி, உங்கள் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறாள். அவள் மனம் நோகாமல் நடக்க வேண்டும்’ என்று அடிக்கடி சொல்வார்கள். கூடவே, ‘நம்மிடம் சொத்து இருக்கு…. பெரியவர்கள் ஆன பிறகு உங்களுக்கு வரும்… அதனால் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏங்க கூடாது. ஏதாவது வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்’ என்பார். அதனால நாங்கள் எந்த எதிர்பார்ப்பு இல்லாமலே வளர்ந்தோம்.

எனக்கு திருமணமான சில மாதங்களில், அப்பா இறந்து விட்டார். அவர் மறைந்து ஐந்து வருடமாகிறது. அவர் வேலையில் இருந்து ஓய்வு பெறும் முன்பே இறந்திட்டார். அப்பாவின் மறைவிற்கு பிறகு வந்த தொகை அனைத்தும், சித்தியின் பெயரிலேயே தரலாம் என்று நாங்க எழுதி கொடுத்திட்டோம். அப்பாவின் வேலையை அண்ணனுக்கு வாங்கலாம் என்று பெரியப்பா, சித்தப்பா சொன்ன போது, சித்தி, ‘அண்ணன் சரியாக படிக்காததால் நல்ல வேலை கிடைக்காது. இன்ஜினியரிங் படித்த தம்பிக்கு வேலை வாங்கலாம்’ என்று சொல்லிட்டார்.

பெரியப்பாவும், சித்தப்பாவும் தயக்கம் காட்ட, சித்தி, ‘நான் எப்படி இவ்வளவு பெரிய குடும்பத்தை பார்க்கிறேனோ… அதே மாதிரிதான் சின்னவனும் அண்ணன், அக்கா குடும்பங்களையும் தாங்குவான்’ என்றார். தம்பிதானே என்பதால் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அண்ணனும், ‘தம்பிக்கே வேலை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார். கை நிறைய சம்பாதித்துக் கொண்டு இருந்த சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு, தம்பி இப்போது அரசு ஊழியராக கிளர்க்காக வேலை செய்கிறான்.

அப்பாவின் ஓய்வூதியம் சித்தி தான் வாங்கிக் கொள்கிறார். இந்நிலையில் தம்பிக்கு கல்யாணம் செய்வதற்கு முன்பு புதிதாக வீடு கட்ட வேண்டும், அதனால் அப்பா பெயரில் இருக்கும் மனையை தம்பி பெயரில் மாற்றி விடலாம். ‘அவனுக்குதான் லோன் கிடைக்கும்’ என்று சித்தி சொன்னார். நாங்களும் தம்பி பெயருக்கு மனையை மாற்றி தந்தோம். இந்த முறையும் அண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. அண்ணி மட்டும், ‘உங்க தம்பி பெயரில் இருக்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டாம்’ என்று சொல்லி அண்ணனுடன் வாடகை வீட்டுக்கு போய் விட்டார். அதிலிருந்து அண்ணி, சித்தியிடம் பேசுவதில்லை. டாக்டருக்கு படித்த தங்கையின் நிச்சயதார்த்தம் என எந்த விசேஷங்களுக்கும் வருவதில்லை. எங்களிடமும் சரியாக பேசுவதில்லை. அண்ணன் வழக்கம் போல் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தார். இத்தனைக்கும் அந்த மனை எங்கள் தாத்தா வாங்கியதுதான். எங்கள் அப்பா தனிக்குடித்தனம் போகவே, அவர் பெயரில் எழுதிக் கொடுத்திட்டார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் பெரியப்பா, எல்லா சொத்துகளையும் பிரித்து விடலாம் என்றார். சித்தப்பாவும் ஆமோதிக்க சொத்துகளை பிரிக்க ஏற்பாடு ஆனது. எல்லா சொத்துகளையும் பெரியப்பா, சித்தப்பா ஆகியோர் பெயர்களில் எழுத முடிவானது. கூடவே எங்கள் அப்பாவின் சொத்துகளை எங்கள் பெயரில் பிரித்து எழுதி விடலாம் என்று பெரியப்பா ஆலோசனை சொன்னார். அதனை சித்தியும், தம்பியும் ஒப்புக் கொள்ளவில்லை. ‘உங்கள் பங்குகளை எப்படி பிள்ளைகளுக்கு எழுதாமல் உங்கள் பெயரில் எழுதிக் கொள்கிறீர்களோ, அதே போல் அப்பா பங்கை அம்மா(சித்தி) பெயரில்தான் எழுத வேண்டும்’ என்றான் தம்பி.

வழக்கம் போல் எங்கள் எல்லோரையும் சித்தி கூப்பிட்டு பேசினார். ‘பெரியப்பா நமக்குள் பிரிவினை ஏற்படுத்த பார்க்கிறார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அம்மா காலமெல்லாம் நமக்காகவே வாழுகிறார்கள். அதனால் அவங்க பெயரில் சொத்துகளை எழுதி வாங்கிடலாம். அது அவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை தரும். சிறிது நாட்கள் போன பிறகு அம்மா, நமக்கு பிரித்து தருவார்கள்’ என்று தம்பி சொன்னான். நாங்களும் வழக்கம் போல் தலையை ஆட்டினோம்.

ஆனால் பெரியப்பா, சித்தப்பா இருவரும், ‘உங்க நல்லதுக்கு சொல்றது கூட உங்களுக்கு புரியவில்லையே’ என்று திட்டுகின்றனர். அவர்கள் இருவருக்கும் எங்கள் மேல் பாசம் அதிகம். எங்களை சரியாக படிக்க விடாமல், வேலைக்கு போக விடாமல், கிடைத்த வரன்களுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற போது பெரியப்பாவும், சித்தப்பாவும் அப்பாவிடம் சண்டை போட்டனர். அவர்கள் எங்கள் நல்லதுக்கு சொல்வார்கள் என்று புரிந்தது. ஆனால் எங்கள் தம்பி சொல்வதையும் தட்ட முடியவில்லை. சொத்துகளை பத்திரம் செய்ய முயன்ற போது எங்கள் பெயருக்கு என்றால் குறைந்த கட்டணமும், சித்தி, தங்கை, தம்பி பெயருக்கு சொத்தை மாற்றுவது என்றால் அதிக கட்டணமும் செலுத்த வேண்டும் என்கிறார்கள்.

அதனால் மீண்டும் எங்கள் பெயருக்கு சொத்துகளை மாற்றி விடலாம் என்று பெரியப்பா பேச ஆரம்பித்து விட்டார். அதற்கு தம்பியும், சித்தியும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நாங்கள் தருகிறோம் என்கிறார்கள். அண்ணன் மகனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த போது, ‘காசு இல்லை’ என்று அவர்கள் சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. பூர்வீக சொத்துகளில் இருந்து வரும் வருவாயை சித்திதான் கையாளுவார். பங்கை அவரவர் பெயரில் எழுத வேண்டும் என்ற எனது மனநிலையில்தான் அக்காவும் இருக்கிறார். ஆனால் அண்ணன் எதிலும் ஆர்வம் காட்டவில்லை. அண்ணியோ, ‘நியாயம்… தர்மம் எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் சரி’ என்று சொல்வதுடன் நிறுத்திக் கொண்டார். அதனால் என்ன செய்வதென்று புரியவில்லை.  

எங்கள் சித்தி, தம்பியின் முடிவுகள் ‘சட்டப்படி, தர்மப்படி நியாயமா’ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. எங்கள் தாத்தா, பாட்டி பெயரில் பரம்பரையாக வந்த குடும்பச் சொத்துகளும், தாத்தா சம்பாதித்த சொத்துகளும் இருக்கின்றன. அவை விவசாய நிலங்களாகவும், வீட்டு மனைகளாகவும், வீடுகளாகவும் சொந்த ஊரிலும், வெளியூரிலும் இருக்கின்றன. எங்கள் அப்பா எந்த சொத்தும் வாங்கவில்லை. ஆனால் சித்தி தனது பெயரில் நிலங்கள், மனைகள் வாங்கியிருப்பது தெரியும். ஆனால் எங்களிடம் சொன்னதில்லை. இப்போது எனது சந்தேகங்கள் எங்கள் பரம்பரை சொத்துகளை அப்பாவின் இரண்டாவது மனைவியான சித்தியின் பெயரில் எழுதலாமா? அப்படி சித்தியின் பெயரில் அந்த சொத்துகளை எழுதினால், அவற்றில் நாங்கள் பங்கு கேட்க முடியுமா?

பிள்ளைகளான எங்கள் 5 பேர் பெயரில் எழுதுவது சரியாக இருக்குமா? அப்பாவின் பங்காக வரும் பரம்பரை சொத்தில், சித்திக்கு உரிமை இருக்கிறதா? சித்தி பெயரில் எழுதித்தரும் பரம்பரை சொத்தை, வருங்காலத்தில் பிரித்துத்தர சித்தி மறுத்தால், நாங்கள் என்ன செய்வது? சித்தி பெயரில் சொத்தை எழுதும்போதே, கணவரின் வாரிசுகள் அனைவருக்கும் பிரித்து தருவேன் என்ற உறுதி மொழியை பத்திரத்தில் சேர்க்க முடியுமா? பத்திர பதிவின் போது முதல் தாரத்தின் வாரிசுகளுக்கு ஒருமாதிரியாகவும், 2வது மனைவியின் வாரிசுகளுக்கு ஒரு மாதிரியாகவும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது உண்மையா? ஏன்?

ஒருவேளை சித்திக்கு பிறகு சொத்தில் அவரது நேரடி வாரிசுகளான தம்பி, தங்கையுடன் நாங்கள் 3 பேரும் உரிமை கொண்டாட முடியுமா? பங்கு கிடைக்குமா? சித்தி தனது பெயரில் வாங்கியிருக்கும் சொத்துகளில் நாங்கள் பங்கு கேட்க முடியுமா? (அவர் எந்த வேலைக்கும் போகவில்லை. அப்பாவின் வருமானத்தில் வாங்கிய சொத்துகள்தான் அவை). சித்தி பெயருக்கு மாற்றப்படும் பரம்பரை சொத்தை அவர் விற்க முடியுமா? எங்களிடம் கேட்காமல் தன் விருப்பப்படி பயன்படுத்த முடியுமா? தயவு செய்து எனது சந்தேகங்களை தீர்த்து, பிரச்னையின்றி, அமைதியாக சொத்துகளை பிரித்துக் கொள்ள உதவி செய்யுங்கள்.

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்கள் கடிதத்தை படிக்கும் போது நீங்கள் யாரும் மாற்றாந்தாய் கொடுமைகளை அனுபவிக்கவில்லை என்று தெரிகிறது. அந்த வகையில் உங்கள் சித்தியை பாராட்டலாம். அதற்கு இளைய பருவத்தை நீங்கள், பாட்டி வீட்டிலேயே கழித்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனாலும் தனக்கு பிறந்த பிள்ளைகளுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் தருகிறார் என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறது என்பது கடிதத்தை படிக்கும் போது தெளிவாகிறது. உரிமைகளுக்காக உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. அதேபோல் உறவைச் சொல்லி உரிமை தராமல் ஏமாற்றவும் கூடாது. அதே நோக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் உங்கள் கேள்விகளுக்கான பதில்களை நானும் வரிசைப்படுத்தி உள்ளேன்.

எல்லா சொத்துகளையும் உங்கள் சித்தி பெயரில் மாற்ற வேண்டாம். அவற்றை திரும்ப பெறுவது கடினம். அவர் விரும்பினால் மட்டுமே உங்களுக்கு பங்கு கிடைக்கும். அதனால் அவரவர் பெயர்களில் பிரித்து எழுதுவது நல்லது. உங்கள் சித்தியின் பெயரில் எழுதினால் அவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் மட்டுமல்ல, நீங்களும் உரிமை கொண்டாட முடியும். அதற்கு முக்கியமாக உங்கள் சித்தி சம்மதிக்க வேண்டும். முதலிலேயே சொன்னது போல் தேவையற்ற நேரம், பொருள் விரயம் ஏற்படலாம்.

அதனால், சொத்தை அனைவரின் பெயரிலும் மாற்றுவது சரியானது. உங்கள் அம்மா இறந்த பிறகுதான் அவரை உங்கள் அப்பா திருமணம் செய்திருக்கிறார். அது சட்டப்பூர்வமான திருமணம். அதனால் உங்கள் அப்பாவின் பங்காக வரும் பரம்பரை சொத்தில், 2வது மனைவியான உங்கள் சித்திக்கு பங்குண்டு. முதல் மனைவியின் பிள்ளைகளான உங்களுக்கு பங்கைப் பிரித்து தர உங்கள் சித்தி ஒப்புக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். ‘பங்கு பிரித்துத் தருகிறேன்’ என்று உங்கள் சித்தி சொன்னதற்கு சட்டப்பூர்வமான ஆவணங்கள் அவசியம். அவரின் உறுதி மொழிகளை உயிலாக எழுத வேண்டும், ஆனால் விற்பனை பத்திரத்தில் சேர்க்க முடியாது. அதே நேரத்தில் செட்டில்மென்ட் செய்யப்படும் போது உறுதிமொழிகளை சேர்க்கலாம்.

தானம் பத்திர பதிவின் போது முதல் மனைவியின் வாரிசுகளுக்கும், 2வது மனைவியின் வாரிசுகளுக்கும் பத்திர பதிவுக்கான முத்திரைக் கட்டணம் வேறுபடுவதில்லை. ஒரு மாதிரியாக ஒரு சதவீதம் கட்டணம்தான் வசூலிக்கப்படும். முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2வது மனைவிக்கு சொத்தை தானம் செய்தாலும் அதற்கு விற்பனைக்கு வசூலிப்பது போன்று 11% கட்டணமாக வசூலிக்கப்படும். சித்தி காலத்திற்கு பிறகும் 5 பிள்ளைகளுக்கும் பங்குகளைப் பெறுவதற்கான உரிமை உண்டு, ஏனென்றால் அது பரம்பரைச் சொத்து. ஆனால் அவரது நேரடி வாரிசுகளுக்கு மட்டும்தான் பங்கு என்று சித்தி உயில் எழுதி வைத்திருந்தால் நீங்கள் மூவரும் உரிமை கொண்டாட முடியாது.

சித்தியோ, அவரது பிள்ளைகளோ பங்கு தர மறுத்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் விரும்பினால் மட்டுமே பங்கு தரலாம். ஏனெனில் அது உங்கள் சித்தி வாங்கியது. அவரது நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் அந்தச் சொத்துகள் உங்கள் சித்தி திருமணத்திற்கு பிறகுதான் வாங்கினார், உங்கள் அப்பாவின் வருவாயில் இருந்துதான் வாங்கினார், சித்தி சொத்து வாங்கிய காலத்தில் அவருக்கு வேறு வருவாய் இல்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். மேலும் உங்கள் சித்தி பெயருக்கு மாற்றப்படும் பரம்பரை சொத்து அவரது சொத்தாகிவிடும் என்பதால், அவர் விருப்பப்படி பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சளியில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க!!(மருத்துவம்)
Next post அவர் போன பிறகும் பிரச்னை!(மகளிர் பக்கம்)