கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 29 Second

* புளித்த மாவாக இருந்தால் கடுகு, பெருங்காயத்தைப் பொரித்து கொட்டி மல்லி, கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் உப்புச் சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் ரவா, மைதா, வெங்காயம், மிளகாய், சேர்த்து தோசை வார்த்தால் புளிப்பு தெரியாது.தோசையும் சுவையாக இருக்கும்.

* முதல் நாள் சாதம் மீதியிருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்துத் தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

* புளித்த தயிரை வீணாக்காமல் ஒரு குவளை தயிருக்கு ஒரு குவளை ரவை, தேவைக்கேற்ப இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைத்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

–  எஸ்.செசிலியா, கிருஷ்ணகிரி.

* இட்லிக்கு மாவு அரைக்கும் போது தேவைப்படும் தண்ணீரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி அரைத்தால் இட்லி பொங்கி பூ போல் இருக்கும்.

* ரசம் தயாரிக்கும் போது அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்தால் மிக மிக ருசியாக இருக்கும்.

– டி.சாந்தி நடராஜன், கன்னியாகுமரி.

* மசாலா குருமாக்களில், காரம் கூடுதலாகி விட்டால், சிறிது தயிரை கடைந்து சேர்க்கவும். அல்லது தேங்காய்ப்பாலை விடவும்.

* வெங்காயத்தை வதக்கும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால், சட்டென்று சிவந்து விடும்.

* பீன்ஸ் காய்ந்து விட்டால் அதை வேகவைத்த பிறகு தான் உப்பு ேசர்க்க வேண்டும். முன்பே சேர்ப்பதால் சீக்கிரம் வேகாது.

–  பி.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

* இட்லிக்காக ஊறப் போடும் உளுந்தை 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துப் பிறகு அரைத்தால் இட்டிலி மிருதுவாக இருப்பதுடன், ஊளுந்து மாவும் அதிகமாகக் கிடைக்கும்.

* மோர் குழம்பு தயாரித்த உடன் உப்பு சேர்த்தால் நீர்த்து விடும். சிறிது ஆறிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும்.

– ஜி.இந்திரா, திருச்சி.

* தக்காளிச் சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.

* பொரித்த அப்பளம் மீதமாகி விட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.

– ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.

* முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிதளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

* உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

* சர்க்கரை டப்பாவில் இரண்டு லவங்க துண்டுகளைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

* கேரட், பீட்ரூட், முள்ளங்கி இவைகளை ஃபிரிட்ஜில் வைக்கும்போது இரண்டு பக்க முனைகளையும் வெட்டி விட்டு வையுங்கள். அழுகாமல் இருக்கும்.

– டி.லதா, நீலகிரி.

* இட்லிக்கு மாவாட்டும்போது ஒரே ஒரு ஆமணக்கு விதையைத் தோல் நீக்கிப் போட்டு ஆட்டிப்பாருங்கள். இட்லி விண்டு போகாமல், விரியாமல் வரும்.

* கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி, பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

– மாலா பழனிராஜ், சென்னை.

சேனைக்கிழங்கு கட்லெட்

தேவையானவை:

சேனைக்கிழங்கு – 100 கிராம் (3 துண்டுகள்),
நறுக்கிய வெங்காயம் – 1 கப்,
கடலைமாவு – 200 கிராம்,
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப,
பச்சைமிளகாய் – 2,
தனியா – 1 ஸ்பூன்,
இஞ்சி,
பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – சிறிய அளவு,
முந்திரிப்பருப்பு – 6,
எண்ணெய் – பொரிக்க.

செய்முறை:

சேனைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடலைமாவில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். அதில் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு கூடவே மசித்து வைத்த சேனைக்கிழங்கையும் போட்டு மசியலாக எடுத்துக் கொள்ளவும். அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போடவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை போட்டு முந்திரிப் பருப்பு போட்டு வதக்கவும். அதில் மசித்து வைத்திருக்கும் மசியலை போட்டு பின் அதில் கடலை மாவு கரைசலை சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கடாயில் கலவை ஒட்டாத அளவிற்கு நன்றாக கிளறவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். பின் அந்தக் கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆறியதும், சின்னச் சின்ன துண்டுகளாக போடவும். துண்டுகள் நன்கு ஆறியதும், எண்ணையில் பொரிக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! (அவ்வப்போது கிளாமர்)
Next post நெத்திச்சுட்டி முதல் ஒட்டியாணம் வரை ஆரி ஒர்க் நகைகள்! (மகளிர் பக்கம்)