பிராணனே பிரதானம்!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 8 Second

இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக்கொண்டே இருப்பதற்கு எது ஆதாரமோ, அதுவே நம் இருப்புக்கும் இயக்கத்திற்கும் ஆதாரம். அந்த இயக்க சக்திக்கு
‘பிராணன் ‘ உயிராற்றல் என்று பெயர். சீன மருத்துவம் இதை ‘சீ’ (CHI) என்றும் ஹோமியோபதியும் , நவீன மருத்துவமும் இதை வைடல் போர்ஸ் ( VITAL FORCE) என்றும் அழைக்கிறது. ஆயுர்வேதம் இதை பிராணா என்றே அழைக்கிறது.எப்படி புரிந்து கொள்வது?

பொதுப்புத்தியில் மரங்களை வெட்டுவது பற்றி, இயற்கையை சீரழிப்பது பற்றி, ஒரு ஆதங்கம் , போலியான ஒரு கோபம் இருக்கிறது. ஆனால் இயற்கை தன்னை எப்படியேனும் தகவமைத்துக் கொள்ளும் வல்லமை மிக்கது. ஒரு புதிய கட்டிடத்தை, உபயோகிக்காமல் வெறும் இரண்டு வருடங்கள் விட்டு வைத்தால், அவற்றில் ஐந்தே ஐந்து பெருமரங்களின் விதைகள் விழுந்தால், அடுத்த பத்து வருடங்களில் அந்த இடம், மனிதர்கள் உள்ளே நுழையமுடியாத் காடாக மாறிவிடும். இந்த செயலை செய்வது எது ?

அதற்கு பெயர்தான் மஹா பிராணன் என்கிறது நம் மரபு. அப்படியான பிராணன் தான் நம்மையும் ஆள்கிறது. நம் உடலை மட்டுமல்ல, ஆழம்வரை சென்று நம் உயிரையும் ஆள்வதால், ஒருவருக்கு உயிர் பிரிந்தவுடன் நாம் ‘பிராணன் போயிடுச்சு’ என்கிறோம் ஆகவே பஞ்சகோசத்தில் இரண்டாவது தளமாக முன்வைக்கப்டுவது பிராணமய கோசம் என்கிறது தைத்திரீய உபநிடதம். மூத்ததும் முதன்மையானதும் பிராணனே- என்கிறது சாந்தோக்யம்.

இது உடல், மனம் , புலன்கள் என அனைத்தையும் இணைக்கும் பாலமாக, இயக்கும் எரிபொருளாக அமைந்திருக்கிறது ஆகவே ஒருவரின் உடல், மன பதற்றங்களை, போதாமையை , நோய்மையை, சரிசெய்ய வேண்டுமெனில் நாம் முதலில் சரிசெய்ய வேண்டியது நமது பிராணனைத்தான். பெரும்பாலும் மூச்சை பிராணன் என்று பல இடங்களில் மேற்கோள்கள் காட்டப்பட்டு, பிராணாயாம பயிற்சிகள் செய்தால் பிராணன் சரியாகிவிடும் என்பது தவறான கருத்து.

உண்ணும் உணவில்,அருந்தும் நீரில், நுகரும் காற்றில், சுடும் வெயிலில் என எங்கும் நிறைந்து நிற்கும், பிராணனை ஒரு ஆரோக்கியமான உடல் மன அமைப்பு கொண்டவர் தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருக்கிறார். அல்லது ஒரு ஹடயோகிக்கு இது மிகச்சரியாக நிகழ்கிறது.ஒரு சரியான யோகப் பயிற்சித் திட்டமும், தேர்ந்தெடுக்கப்பட்ட மூச்சு பயிற்சியும் ஒருவருக்கு, முதலில் நிகழ்த்துவது, முழுமையான ஜீரண சக்தியைத் தான் . ஜீரணம் என்பது உடல்,மனம், உணர்வு என்கிற மூன்று நிலைகளிலும் நடைபெற வேண்டும் என்கிறது.

முக்கியமாக நமது மைய நரம்பு மண்டலத்தை சார்ந்த எண்ணற்ற ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு நவீன அறிவியலும் பிராணாயாம பயிற்சிகளின் சாத்தியங்களை ஒத்துக்கொள்கிறது. எனினும் அனைத்து பிராணாயாம பயிற்சிகளையும் ஒருவர் நேரடியாக செய்துபார்ப்பதும் பக்க விளைவுகளை உண்டாகலாம், ஏனெனில் ஒரே பயிற்சி ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதிரியான பலனையும் , பக்க விளைவுகளையும் உண்டாக்கலாம்.

உதாரணமாக தீயகனவுகளால் கஷ்டப்படும் ஒருவருக்கு பிராணாயாம பயிற்சியில் சரியான வழிகாட்டுதல் இருந்தால் வெறும் ஐந்து வாரங்களில் அவர் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து விடலாம். ஆனால் அதே பயிற்சி வேறு ஒரு நபருக்கு தூக்கமின்மை அல்லது நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகளை தர நேரிடும்.ஆக, ஒரு பயிற்சி உங்களுக்கு தேவையா ? இல்லையா என்பதை கண்டறிந்த பின்னர் அவற்றை தொடர்வது நலம்நுகரும் ஒவ்வொரு விஷயமும் சரியாக செரிக்கப்டுகிறதா ? என்பதை நீங்கள் பஞ்ச பிராணனின் தரத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் காலையில் உண்ட உணவு செரிமானம் ஆனதா?நேற்று நீங்கள் சேகரித்த தகவல்கள் முழுவதும் சரியாக செரிமானம் அடைந்ததா ?
மனதில் தோன்றிய குறிப்பட்ட எண்ணங்கள் அதனதன் இடத்தில சரியாக சென்று அமர்கிறதா ? இப்படி ஒவ்வொன்றயும் சரியாக அமைத்துக்கொள்ள பிராணன் ஆதாரமாக விளங்குகிறது.

ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் ஒன்றை கவனித்து இருப்பீர்கள், வெற்றி பெற்ற வீரர் கடைசிச் சுற்றில் மூன்று நான்கு மீட்டர் தூரத்தை, ஒருசிறு தளர்வுக்கு பின், தன்னிலிருந்து தோன்றிய உத்வேகத்துடன் மொத்த உயிரையும் திரட்டி பாய்ந்து சென்று வெற்றி பெறுவார். அது அவரை இயக்கிய அந்த ஆற்றலை பிராணன் எனலாம். அதே பிராணன்தான் நம் உடல் மனம் புத்தி உணர்வு என ஒவ்வொரு தளமாக இயங்கிக்கொண்டு இருக்கையில் ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் இணைப்பாக இயங்குகிறது. ஒரு காரில் நாம் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை கியரை மாற்றுவது போல. அப்படி மாற்றும் பொழுது நடுவே நியூட்ரல் நிலைக்கு வந்து பின் அடுத்த கியருக்கு மாற்றுவது போல நம்மில் பிராணன் இயங்குகிறது.

இந்த இயக்கத்தை பஞ்ச பிராணன் என்றும் நம்உடலின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் அந்த சக்திநிலைக்கு ஒவ்வொரு பெயரும் அதன் இயக்கமும் ,சாதக பாதக அம்சங்களும் யோகமரபில் விரிவாக பேசப்பட்டுள்ளது.இந்த ஐந்து ஆற்றல்கள் முறையே அபானன், சமானன், பிராணன், உதானன், வியானன் எனப்படுகிறது. இவற்றை தனித்தனியாக பின்னர் பார்க்கலாம்.இங்கே மூச்சு முக்கியமாக பேசப் படுவதற்கு காரணம் , இவ்வுடலில் பிராணனை உற்பத்தி செய்ய முக்கிய கருவியாக இருப்பது மூச்சு என்பதால் பிராணாயாம பயிற்சிகளை பிராணனுடன் இணைத்து பேசுவது வழக்கம்.

ஒரு நாளைக்கு 21600 வந்து செல்லும் இயல்பான மூச்சை, ஒரு சில குறிப்பிட்ட மூச்சுப் பயிற்சிகளின் மூலம் , ஒரு நிமிடத்தில் 15மூச்சு விடும் நாம் 10 அல்லது 8 என குறைப்பதன் மூலம் ஆயுட்காலத்தை நீட்டித்துக்கொள்ள முடியும் என யோக மரபும் , ஆயுர்வேத மரபும் நம்புகிறது.அது மட்டுமன்றி மூச்சே மனதையும் உடலையும் இணைப்பதால் மூச்சு மாறுபட மன இயல்புகளும் மாறுபடுகிறது, ஒரு பதற்றமான சூழ்நிலையில் நீங்கள் ஒரு நிமிடத்தில் 15 முதல் 21 தடவை விடும் மூச்சு, மனம் அமைதியானவுடன் 8 அல்லது 10 என்கிற அளவில் குறைந்து விடுகிறது. ஆக மனதை நிர்வகிக்க மூச்சும், மூச்சை நிர்வகிக்க மனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகிறது.

சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆசனப் பயிற்சிகளின் மூலம் ஒரு ஹடயோகி எப்படி தன்னை உயிராற்றலின் மையமாக மாற்றிக்கொள்கிறானோ, அப்படியே மிகச்சரியாக தேர்ந்தெடுக்கப்படும் உணவு , உறக்கம் ,பிராணாயாம பயிற்சிகளின் மூலம் மொத்த உயிராற்றலையும் தனக்கு தேவையான வேறு ஒரு ஆற்றலாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்,
கொந்தளிப்பான மனதை, செயலூக்கம் கொண்ட சுறுசுறுப்பான மனமாகவோ, சோர்வான உடலை ஓய்வான உடலாகவோ , ஒருமுகத்தன்மை இல்லாத புத்தியை ஒரு கலையாகவோ , படைப்பாகவோ , கூர்மையான பேச்சாற்றலாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

எனினும் இது மூச்சை சரியான நிகர்நிலையில் உள்ளிழுத்தல் ,வெளியிடுதல், குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளே மற்றும் வெளியே நிலை நிறுத்துதல் என்கிற பல்வேறு அங்கங்களை கொண்டது என்பதால் , சிறு மாறுதல் கூட ஒவ்வாமையை, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். ஆகவே ஆசனப்பயிற்சிகளுக்கு பின்னர் பிராணாயாமம் என்பது, பதஞ்சலி முனிவரின் பரிந்துரை. அதற்கு தக்க ஆசிரியர் கிடைப்பதும், அவரிடம் கற்பதும் மட்டுமே சரியான தீர்வாக அமையும். ஏனெனில் நூற்றுக்கணக்கான பிராணாயாம முறைகள் வழக்கத்தில் உள்ளது , இவற்றில் உங்களுக்கான ஒன்றை தேர்தெடுப்பது மிகவும் அவசியமானது.

இந்த பகுதியில் நாம் மற்றும் மொரு நின்ற நிலை ஆசனத்தை காணலாம்.ஆசனங்களின் பெயர்களும் ,நாம் இங்கே பகிரும் தரவுகளும் வடமொழி சொற்களாக இருக்கலாம் நீங்கள் அதன் சாரத்தை மட்டும் புரிந்துகொண்டால் போதும் , ஆசனங்களின் பெயர்களை நினைவில் வைக்கவேண்டிய அவசியமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நெத்திச்சுட்டி முதல் ஒட்டியாணம் வரை ஆரி ஒர்க் நகைகள்! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்!!(மருத்துவம்)