எனக்கு 130 குழந்தைகள்!(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 59 Second

சென்னை தண்டையார்பேட்டையில் வாகனங்கள் தார்ரோட்டினை உரசிக் கொண்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க… மறுபக்கம் இந்த வேகமான வாழ்க்கைக்கு நடுவே இப்படி ஒரு இடமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. இரும்பு கேட்டினை திறக்கும் சத்தம் கேட்ட அடுத்த நிமிடம் நம்மை பல குரல்கள் வரவேற்றது. அங்கு ஒரு இரும்பு கட்டில் மேல் அமர்ந்திருந்தார் கலா என்ற பெண்மணி. அவரைச் சுற்றி நாம் எண்ணிப் பார்க்க முடியாத வகையில் நன்றியினை பொழியும் ஜீவன்கள் சூழ்ந்திருந்தன. ‘‘இவங்க எல்லாரும் என்னுடைய குழந்தைகள். இவங்கள நான் தான் பராமரித்து வருகிறேன்’’ என்ற கலா… கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்து அவர்களை பராமரித்து வருகிறார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான். என்னுடைய அப்பா செல்லப்பிராணி பிரியர். அவர் ேராட்டில் ஒரு நாய் அடிபட்டு இருந்தா உடனே வேப்பேரிக்கு எடுத்து சென்று அதற்கு சிகிச்சை அளிப்பார். நானும் அவருடன் சென்றிருக்கேன். இதை எல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கும் இவர்களின் மேல் ஒரு தனிப்பட்ட பாசம் ஏற்பட ஆரம்பிச்சது. அதனால் வீட்டில் ஒரு நாயினை வளர்த்து வந்தேன். அதன் பெயர் பிரவுனி. ஒரு மழை நாளில் கரன்ட் வயர் தண்ணீரில் அறுந்திருந்திருக்கிறது.

அதில் அடிபட்டு பிரவுனி இறந்துவிட்டது. அது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதை போக்க வீட்டின் அருகே இருந்த நாய்களுக்கு சாப்பாடு வைக்க ஆரம்பிச்சேன். இரண்டு நான்கானது, பத்தானது இப்போது 130 நாய்களை நான் பராமரித்து வருகிறேன். இதில் ஊனமுற்ற நாய்களும் இருக்கு’’ என்றவருக்கு அவரின் கணவர் தான் முழு சப்போர்ட்டாக இருந்து வருகிறார்.

‘‘எங்களுடையது காதல் திருமணம். வேலைக்கு சென்ற போது பஸ்சில் தான் அவரை சந்தித்து பழகினேன். அவர் வீட்டில் வந்து பெண் கேட்டு என்னை திருமணம் செய்து கொண்டார். நான் இவர்களை திருமணத்திற்கு முன்பிருந்தே பராமரித்து வந்ததால், திருமணத்திற்கு பிறகும் இவர்கள் என் பராமரிப்பில் தான் இருப்பாங்கன்னு என்னுடைய கண்டிஷனை ஏற்றுதான் என்னை திருமணம் செய்ய சம்மதித்தார். இப்ப எங்களுக்கு 130 குழந்தைங்க இருக்காங்க. இவங்களுக்கு தினமும் சிக்கன் சாதம் தான் கொடுக்கிறோம். அதில் குப்பைமேனி இலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து சமைத்து தருகிறோம். பெடிகிரி மற்றும் பிஸ்கெட்களும் தருவோம்.

இதில் யாருக்காவது உடல் நிலை கொஞ்சம் சரியில்லை என்றால் உடனே வேப்பேரிக்கு கொண்டு போயிடுவேன். வீடு முழுக்க இவங்க தான் நிறைஞ்சு இருக்காங்க என்பதால், நானும் என் கணவரும் குழந்தைகள் வேண்டாம்ன்னு முடிவு செய்திட்டேன். எனக்கு கிடைத்த பெரிய கிஃப்ட் என் கணவர் தான். என்னுடைய விருப்பத்திற்கு அவர் ஏற்றுக் கொண்டு என்னுடன் சேர்ந்து இவர்களையும் பராமரிக்கிறார். ஒரு முறை எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிடுச்சு. மருத்துவமனையில் இருந்தேன்.

பிழைப்பேனான்னு சந்தேகமே எனக்கு வந்திடுச்சு. இவருக்கு சமைக்க தெரியாது. அப்படியும் சமைச்சார். ஆனா குக்கர் ஆவி அவர் முகத்தில் அடிச்சிடுச்சு. அப்ப நான் ரொம்பவே பயந்துட்டேன். எனக்கு பிறகு இவரையும் என் குழந்தைகளையும் யார் பார்த்துப்பாங்கன்னு. என்னுடைய கணவரின் சம்பாத்தியம் முழுதுமே நான் இவங்களுக்காகத் தான் செலவு செய்றேன். ஒரு முறை கையில் சுத்தமா காசில்லை. இவங்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியல. எல்லாரும் என் முகத்தையே பார்த்த போது, இந்த நிலை மீண்டும் வரக்கூடாதுன்னு முடிவு செய்தேன். இன்றைய காலக்கட்டத்தில் மனுஷங்க நாம செய்த உதவியை மறந்திடுவாங்க. இவங்க அப்படி இல்லை. ரோட்டில் இருக்கும் நாய்க்கு ஒரு முறை பிஸ்கட் வாங்கி போடுங்க அடுத்த தடவை உங்க பின்னாடி வாலாட்டிகிட்டே வரும்’’ என்றவர் வீட்டில் பராமரிப்பது மட்டுமில்லாமல், வெளியே இருக்கும் தெரு நாய்களுக்கும் தினமும் சாப்பாடு வழங்கி வருகிறார்.

‘‘என் ஸ்கூட்டி சத்தம் கேட்டா போதும் எல்லாரும் குலைக்க ஆரம்பிச்சிடுவாங்க.நான் கொஞ்சம் லேட்டா வீட்டுக்குப் போனாலும் அம்மாவ பாக்காம ஏங்குற குழந்தைங்க மாதிரி ஏங்கிடுவாங்க, வீட்டுக்குள்ள போனதும் அவங்க காட்டுற அன்பு இருக்கே அது கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. இப்படியே ஒவ்வொரு நாளும் அழகா போகுது. இவங்க எல்லாருக்கும் பெயர் வச்சிருக்கேன். அவங்க பெயர் சொல்லிக் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஓடி வந்திடுவாங்க. இவங்கள பராமரிக்கவே தோட்ட வசதியுடைய ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கேன்’’ என்றார் தன் மடியில் படுத்திருந்த கருப்பனை வருடியபடி கலா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நல்லாசிரியர் விருதை முதல்வரின் கரங்களில் பெற்றேன்! (மகளிர் பக்கம்)
Next post மனம் எனும் மாயலோகம்!(மருத்துவம்)