வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!(மருத்துவம்)

Read Time:5 Minute, 23 Second

‘‘கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்திடும் உன்னதமான மூலிகைப் பொருளாக வெட்டிவேர் திகழ்கிறது’’ என்று வெட்டி வேரின் வாசம் குறித்துப் பேசுகிறார் சித்த மருத்துவர் ரமேஷ்குமார். ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இம்மூலிகை பற்றி விரிவாகவும் பேசுகிறார்.

வெட்டி வேரானது கரிசல், வண்டல், செம்மண் மற்றும் ஆற்று மண் என அனைத்து வகை மண்ணிலும் குளிர், மழை. வெயில் உட்பட பனிக்காலத்திலும் வளரக்கூடியதாகும். தமிழ்நாடு உட்பட, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த தாவரம் குறிப்பிட்ட அளவில் பயிரிடப்படுகிறது. போயேசியே(Poaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த, இதனுடைய அறிவியல் பெயர் Chrysopogon zizanioides என்பதாகும்.

பெயர் காரணம்

வெட்டிவேரை நிலத்தில் இருந்து எடுத்த பின்னர், மேற்பகுதியான புல்லையும், அடிப்பகுதியான வேரையும் தனியாக வெட்டி எடுத்துவிட்டு, நடுவில் உள்ள சிறு துண்டை மீண்டும் புதிதாக நட்டுப் பயிரிடும் காரணத்தால்தான் இம்மூலிகை வெட்டிவேர் என்று அழைக்கப்படுகிறது. எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ள இம்மூலிகையில் வெட்டிவேரல்(Vetiverol), வேலன்சின்(Valencene), குஷிமோன்(Khusimone) போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

மருத்துவப் பயன்கள்

தலைமுடி தொடங்கி, அடிப்பாதம் வரை பாதுகாத்திடும் தன்மை கொண்ட இவ்வேரை தண்ணீரில் ஊறவைத்து, 30 மி.லி – 60 மி.லி வரை உணவுக்குப்பின் அருந்தி வர காய்ச்சல், செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளும் சிறுநீரக எரிச்சலும் குணமாகும். குழந்தைகளுக்கு 10 மி.லி. முதல் 20 மி.லி. தரலாம். வெயில் காலத்தில் நம்மைப் பயமுறுத்துகிற வியர்குரு, முகப்பரு ஆகியவை குணமாக, வெட்டி வேர், விலாமிச்சை, பாசிப்பயிறு, சந்தனம் ஆகியவற்றை தூளாக அரைத்து, அதனுடன் பன்னீர் கலந்து தடவி வர, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுத்தமான தேங்காய் எண்ணெயில் வெட்டிவேரை ஊற வைத்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். வெட்டிவேரினால் செய்யப்படும் நாற்காலிகள், மூலநோயின் தீவிரத்தைக் குறைத்து அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கிறது. வெட்டிவேரைக் கொண்டு செய்யப்படும் விசிறிகள் உடல் எரிச்சல், தேக சூட்டினை நீக்கி, மனம் புத்துணர்வு அடைய செய்கின்றன. கோடைக்காலத்தில் வெட்டிவேரைக்கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டிவர, அறையின் வெப்பத்தைக்குறைத்து நறுமணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.

வெட்டிவேர் எண்ணெய் மற்றும் தைலம்

இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் தைலம் நறுமணம்கொண்டது. இத்தைலத்தைத் தேய்த்துவர, பிரசவ தழும்புகள் குறையும்; தசைவலி மற்றும் மூட்டுவலி நீங்கும். இவ்வேரை, மணமூட்டியாக தைலங்களிலும். குளியல்சோப்புகளிலும், பயன்படுத்துவதுண்டு.

குளிர்பானம்

மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாக மட்டும் இல்லாமல், இந்த வேர், தாகம் தணிக்கும் சர்பத் தயாரிக்கவும் உதவுகின்றது. வெட்டிவேரினை மண்பானை நீரில் ஊறவைத்து, பனைவெல்லத்தினைக் கலந்து சர்பத் செய்து அருந்தி மகிழலாம். இதனால், உடல் சோர்வு நீங்கி, தெம்பு உண்டாகும்.  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!(மருத்துவம்)
Next post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)