என் தொழிலுக்கு பாட்டியும் தாத்தாவும் சப்போர்ட்!(மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 57 Second

அட! உச்சி வெயில் மண்டைய உடைக்குதா? கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தா நல்லா இருக்குமேன்னு மனசு நினைக்குதுல. அப்படினா செடி வளருங்க. உங்க சுற்றுப்புறத்தை எப்பவும் பார்க்க பசுமையா வச்சுக்கோங்க. உங்க மனசு மட்டுமில்ல மைன்டும் அமைதியா இருக்கும். டென்ஷனும் விடைபெறும். நல்ல காற்றை தொடர்ச்சியா சுவாசிக்கலாம் எனப் பேசத் தொடங்கினார் சென்னை நொளம்பூரில் DSB கார்டன்ஸ் என்கிற பெயரில் ப்ளான்ட்ஸ்களை உருவாக்கி நர்சரி ஒன்றை இயக்கி வரும் திவ்யா ராஜ்குமார்.

நான் படிச்சது என்னவோ பி.டெக் பயோடெக்னாலஜி. படிப்பை முடிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், வேலைக்கு போவது எனக்கு போரடிக்க ஆரம்பித்தது. சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவெடுத்தேன். நான் செய்யப் போகும் தொழில் எதுவாக இருந்தாலும் அது ஈக்கோ ஃப்ரெண்ட்லியாக இருக்கணும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன். அந்த நேரத்தில்தான் அரசு கோ-க்ரீன் செய்திகளை ஊடகத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு, மரக்கன்றுகள் நட வேண்டியதன் அவசியத்தை மக்களிடம்  சேர்த்துக் கொண்டிருந்தனர்.

பயோ டெக்னாலஜி படித்திருந்ததால் ஆர்கானிக் ஃபார்மிங் மீது என் கவனத்தை திருப்பினேன். 2017ல் இந்த நர்சரி கார்டனை, பெற்றோர் ஒத்துழைப்பில் அப்பாவும் நானுமாகத் தொடங்கினோம். இதோ முழுமையாக 5 ஆண்டுகள் கடந்தாச்சு என்றவர்,  நான் செய்வது முழுக்க முழுக்க இயற்கை முறையிலே (organic fertilizer) செடிகளை வளர்க்கும் நர்சரி. கெமிக்கல் உரங்களை நான் என் கிட்டவே சேர்ப்பதில்லை. செடி விற்பனையை ஆரம்பித்த புதிதில் எல்லோரும் யூரியா, பாஸ்பரஸ் போன்ற கெமிக்கல் உரங்களைக் கேட்டே அதிகம் வருவார்கள். யூரியாவைப் போட்டால்தான் செடிகள் வளரும் என்கிற தப்பான கண்ணோட்டம் மக்கள் மனதில் இருப்பதை அப்போது என்னால் உணர முடிந்தது.

செடி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்கானிக் ஃபார்மிங் மேல் ஆர்வத்தை ஏற்படுத்த நினைத்து, என்னுடைய செடிகள் விற்பனை நிலையத்திற்குள்ளே சின்னதாக ஒரு தோட்டத்தை உருவாக்கினேன். இயற்கை உரங்கள் மூலமாகவே செடிகளை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்பதை  அவர்களுக்கு நேரடியாகவே காட்டியதுடன், அதில் வாழை, முருங்கை, சப்போட்டா, கொய்யா மரங்களையும்.. கத்தரி, வெண்டை, பீர்க்கை, சுரக்காய் போன்ற காய்கறிகளையும், சில கீரை வகைகள், வெற்றிலைக் கொடி, பாவைக் கொடி போன்றவற்றை உருவாக்கி வைத்தேன்.

துவக்கத்தில் தென்னை, மா என பெரிய அளவில் வளரும் மரங்களுக்கு கெமிக்கல் உரங்களைக் கேட்டு பலர் என்னிடத்தில் வந்தார்கள். அவர்களையும் நான் ஆர்கானிக் உரத்திற்கு முழுமையாக மாற்றிவிட்டேன் என்றவர், ஆர்கானிக் உரங்களைப் பொறுத்தவரை வெளியில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கிறோம். மேலும 5 வகையான பாக்டீரியாக்களை பவுடர் முறையில் வாங்கி எருவோடு மிக்ஸ் செய்து சில மாற்றங்களுக்குப்பின்னர் அது பயோ பெர்டிலைசராக மாறியதும், அதையும் செடிகளுக்கான ஊட்டச்சத்தாகக் கொடுத்து வருகிறேன் இந்த ஃபீல்டுக்குள் நுழைவதற்கு முன்பே நானும் பல  நர்சரி கார்டன்களுக்கு நேரடியாக விசிட் செய்து ப்ராக்டிக்கலாக சில விசயங்களை உணர்ந்தும், பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்டேன்.

செடிகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு செடிகள் குறித்த விளக்கங்களையும், சரியான வழிகாட்டுதல்களையும் என்னாலும் வழங்க முடியும் என்றவர், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கைபேசியில் என்னை அழைத்து, நான் இருப்பதை உறுதி செய்த பிறகே எனது நர்சரிக்கு வருகிறார்கள் என்கிறார். செடி வாங்க வருபவர்களுக்கு என்ன தெரியும் என்ன
தெரியாது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு தேவையான செடிகளை தகுந்த ஆலோசனைகளோடு கொடுத்தால் அவர்கள் நம்மிடத்திற்கு மீண்டும் செடிகளை வாங்க
வருவார்கள் என்கிறார் நம்பிக்கையோடு.

என்னிடத்தில் இன்டோர் மற்றும் அவுட்டோர் ப்ளான்ட்ஸ். ஏசி மற்றும் நான் ஏசி ரூம் ப்ளான்ட்ஸ் என எல்லா வெரைட்டி ப்ளான்டுகளும் கிடைக்கும். இதில் ஜாமியா, மணி ப்ளான்ட், சினேக் ப்ளான்ட், பேம்பு போன்ற இன்டோர் வெரைட்டிகளும் உண்டு. இவற்றை நம் பணியிடத்திலும் வீட்டின் உட்புறங்களிலும் வளர்க்கலாம். இவை தவிர்த்து சீசனுக்கு ஏற்ற செடிகளும் என்னிடம் கிடைக்கும். பெங்களூரு, ஓசூர், புனே போன்ற ஊர்களில் இருந்து செடிகளை வரவழைத்து விற்பனை செய்கிறோம்.

பயோ பெர்டிலைசரை தொடர்ந்து பயன்படுத்தும்போது சில வகை ரோஸ் செடிகள் நன்றாக வளர்ந்து பெரிய சைஸ் ரோஸ்களை கொடுக்கும். புனேவில் இருந்து வரவழைக்கப்படும் ரோஸ் வெரைட்டிகளும் நம் மண்ணில் நன்றாகவே வளர்கிறது. ஆனால் நம் ஊர் தட்பவெப்ப நிலைக்கு, பெங்களூர் ரோஸைவிட நாட்டு ரோஜா எனப்படும் பன்னீர் ரோஸ், கொடி ரோஸ் போன்றவை மிகச் சிறப்பாக வளர்ந்து பூக்களை கொடுக்கும் என்கிறார் இவர்.

மெடிசனல் ப்ளான்ட்களில் சித்தரத்தை, இன்சுலின், ரனகல்லி, கேசவர்த்தினி, வெட்டிவேர், லெமன் கிராஸ், பிரம்மி, வல்லாரை, புதினா, துளசி, திருநீற்று பச்சிலை, வெற்றிலை, கற்பூரவள்ளி, ஆலுவேரா, மூக்கிரட்டை, தூதுவளை, முடக்கத்தான் போன்றவை கிடைக்கும். கீரை வகைகளில் அரைக்கீரை,முளைக்கீரை, பாலக், பசலை, புளிச்ச கீரை இவற்றை விதைகளாக கொடுக்கின்றோம். செடியாக வேண்டுமெனில் கத்தரி, தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய் போன்றவை மட்டுமே கிடைக்கும். தவிர்த்து கத்திரி, வெண்டை, தக்காளி, சுரக்காய், பாவக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய் போன்றவை விதைகளாகக் கிடைக்கும்.

மாடியில் வைத்து சிறிய அளவில் வளரும் போன்சாய் மரங்களாக லெமன், சப்போட்டா, மாதுளை, கொய்யா, அத்திப் பழம், ஸ்டார் புரூட், சீத்தா பழம் போன்றவற்றுடன், தோட்டங்களில் வளரும் வேப்பமரம், மா மரம், அரச மரம், புங்கை, வாழை, கொன்றை போன்ற மரக்கன்றுகளும் எங்களிடத்தில் கிடைக்கிறது.வார இறுதி நாட்களில் பெண்கள், முதியவர்கள் என் நர்சரிக்கு வந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா என் தோட்டத்தில் அமர்ந்து.. செடிகள் குறித்து தகவல்களை கேட்டு வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் என்றவர், தங்கள் தோட்டங்களில் செடிகளை வளர்ப்பதைத் தாண்டி முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகள், விழாக்களில் மரக் கன்றுகளை அன்பளிப்பாகக் கொடுக்க ஆர்வம் காட்டியும் சிலர் வருகிறார்கள் என்கிறார்.

என்னிடம் செடிகளைப் பராமரிக்கத் தேவைப்படும் தோட்ட உபகரணங்கள், இயற்கை முறையில் தயாரான உரங்கள் இவற்றுடன், உங்கள் வீட்டிற்கே வந்து நீங்கள் விரும்பும் விதத்தில் கார்டன்களை உங்கள் பட்ஜெட்டிற்குள் அமைத்தும் தருகிறோம். மாடித்தோட்டம் அல்லது உங்கள் வீட்டு பால்கனிகளிலும் அழகிய தோற்றத்தில், உங்கள் விருப்பத்திற்கு கஷ்டமைஸ்ட் தோட்டத்தை உருவாக்கிக் கொடுத்து, கார்டன் மெயின்டெனன்ஸ் உதவிகளையும் தொடர்ச்சியாக செய்து கொடுக்க முடியும். ஆயிரம் சதுர அடி இடம் உங்களிடத்தில் இருக்கிறது என்றால் மூன்றாயிரத்தில் தொடங்கி, உங்கள் விருப்பத்திற்கு மாடனாக செய்வதற்கு 10 ல்  இருந்து 12 ஆயிரம் வரை செலவு எடுக்கும் என்கிறார் திவ்யா.

திருமணத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் கார்டன் நர்சரி தொழிலில் இறங்கிவிட்டதால், திருமணத்திற்கு பிறகும் இதைத்தான் தொடர்வேன் என்பதை தெளிவாக என் கணவரிடத்தில் சொல்லிவிட்டேன். இப்போது அவரிடமிருந்தும் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கிறது என்றவர், எனது நர்சரி குறித்த புகைப்படங்களை இன்ஸ்டா பேஜில் போட வைத்து விற்பனையை டெக்னாலஜியாக்கி அலர்ட் செய்தவரும் அவர்தான் என்கிறார் புன்னகைத்து.

செடிகளை மட்டும் விற்பது அல்ல என் நோக்கம். அதை வாங்கிச் சென்றவர்களும் ஆர்வத்துடன் வளர்க்க வேண்டும். செடிகளின் வளர்ச்சியை உணர வேண்டும். அதுவே என் இலக்கு என்றவர், இப்போது என்னிடம் யாரும் யூரியா, பாஸ்பரஸ் போன்ற கெமிக்கல் உரங்களைக் கேட்டு வருவதில்லை. என் வாடிக்கையாளர்கள் அனைவருமே ஆர்கானிக் தோட்டத்திற்கு மாறிவிட்டார்கள் என்றவர், தொழிலில் என் இலக்கை நான் அடைந்த முழு திருப்தி இப்போது என்னிடம் இருக்கிறது என்கிறார்.செடி வளர்ப்பது ஒரு வென்டிலேஷன். மன அமைதி.  அந்த உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று விடைகொடுத்தார்.

டிப்ஸ் – 1

முதன் முதலில் நீங்க கார்டன் அமைக்க முயல்பவரா? சின்னதாக 3 அல்லது 4 செடிகளை வைத்து ஆரம்பித்து செடிகளுடன் பழக ஆரம்பியுங்கள். ஆர்வம் வந்தபின் செடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்.  எடுத்தவுடன் பெரிய அளவில், செடிகள் குறித்த புரிதல் இன்றி நீங்கள் தோட்ட வேலைகளில் இறங்கினால் யு ஆர் லூஸ் த இன்ட்ரெஸ்ட்.

டிப்ஸ் – 2

எந்த நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாய் வேலை செய்பவரா நீங்கள்? உங்கள் கம்ப்யூட்டர் டேபிள் அருகே ஒரு ஜாமியா ப்ளான்டை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் மனசுக்கும் மூளைக்கும் அமைதியை கட்டாயமாகக் கொடுக்கும். மேலும் செடிகள் கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கி ஆக்ஸிஜனை வெளியேற்றுவதால், நாம் சுவாசிக்க சுத்தமான காற்று நமக்கு அருகாமையில் இருக்கும் செடிகளிடத்தில் கிடைப்பது நூறு சதவிகிதம் உறுதி.

டிப்ஸ் – 3

விதை போட்டதும் முளைத்து வெளி வரும் செடிகளும் உயிரோட்டமானவையே. நம் வளர்ச்சிக்கு எப்படி விட்டமின், மினரல் போன்றவை முக்கியமோ அதுபோல் செடிகளின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி, சரியான அளவில் தண்ணீர், உரம் இவைகள் மிகமிக முக்கியம்.

எனக்கு சப்போர்ட் …

என் நர்சரி கார்டனில் எனக்கு மிகப் பெரிய சப்போர்ட் என் பாட்டியும் தாத்தாவும். இருவருமே பாரம்பரிய விவசாயிகள். தங்களின் சொந்த ஊரான வந்தவாசியில் விவசாயம் செய்தவர்கள். விவசாயம் தாண்டி, செடி கொடி, மரங்களை வளர்ப்பதிலும் அனுபவம் நிறைந்தவர்கள். அவர்களின் அனுபவத்தை நான் என் தொழில் வளர்ச்சிக்கு முழுதாய் பயன்படுத்திக் கொண்டேன். செடிகளின் பொட்டானிக்கல் பெயர்களை ஆங்கில வழியில் படித்த நான்,  தமிழ் பெயர்களை பாட்டி தாத்தாவிடமே கேட்டு தெரிந்து கொண்டேன். எப்படி விதை போடுவது, தண்ணீர் விடுவது, பராமரிப்பது, உரமிடுவது போன்ற விசயங்களை ஒவ்வொன்றாய் அருகில் இருந்து கேட்டு கற்றுக் கொண்டேன்.

நம் மூதாதையர்கள் விஷய ஞானம் உள்ளவர்கள். அவர்களின் அனுபவங்களை நாம் சரியான கண்ணோட்டத்தில் உள்வாங்கி பயன்படுத்தினால் நம் வளர்ச்சி பல மடங்கு கண்டிப்பாக உயரும். தாத்தாவும் பாட்டியும் இப்போது என்னுடன் எனது நர்சரியிலேயே தங்கிவிட்டார்கள். வயோதிகத்தில் அவர்களுக்கு நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்பதைத் தாண்டி, அவர்களின் அனுபவம் என் தோட்ட பராமரிப்புக்கும்… வளர்ச்சிக்கும்… விற்பனைக்கும் பேருதவியாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிப்பி சுகந்தி! (மகளிர் பக்கம்)
Next post கொஞ்சம் தண்ணீர் நிறைய அன்பு! (மகளிர் பக்கம்)