கொஞ்சம் தண்ணீர் நிறைய அன்பு! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 21 Second

தன்யா ரவீந்திரன், புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளர். பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பொறியியல் வேலை தான் இவரின் முதன்மை வருமானமாக இருந்தாலும், மனசுக்கு பிடிச்ச வேலையை செய்யும் போது அதனால் ஏற்படும் மனநிறைவு அதிகம். அந்த மனநிறைவுக்காக தனக்கு பிடித்த மினியேச்சர் தோட்டத்தினை மற்றவர்களுக்கு அமைத்து தருகிறார்.

இப்போது பொதுவாகவே மெட்ரோ நகரங்களில் மக்கள் சிறிய அப்பார்ட்மெண்ட்களில் தங்கள் வாழ்க்கையை சுருக்கி வாழ்ந்து வருகின்றனர். தனியாக நிலமோ, மரங்கள், தோட்டங்களை வைக்க இடமோ இங்கே யாருக்கும் இல்லை. இவர்களுக்கும் சிறிய அளவில் தங்கள் வீட்டு பால்கனியில் தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையினை பூர்த்தி செய்து குறிப்பாக அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் வாழும் மக்களுக்கானது தான் டெராரியமும், மினியேச்சர் கார்டன்களும்.

இது கூறித்து தன்யா விரிவாக பேசுகிறார், “இந்த டெராரியம் அல்லது மினியேச்சர் கார்டன்களை உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கலாம். இதற்கு நிறைய தண்ணீரோ, சூரிய வெளிச்சமோ தேவையில்லை. இந்த டெராரியம் செடிகள் இருக்கும் இடத்தில், கிடைக்கும் தண்ணீரில், கிடைக்கும் வெளிச்சத்தில் வாழ்ந்துவிடும். இயற்கையுடன் ஒன்றி இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, தங்களுடைய வீட்டிற்குள்ளேயே இப்படி ஒரு அழகான மினியேச்சர் கார்டனை உருவாக்கி கொடுப்பதே என்னுடைய நோக்கம்.

பொதுவாக ஒரு செடி வளர்க்க வேண்டும் என்றால், அதை நேரடியான சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்றி, முறையான பராமரிப்பு தேவைப்படும். ஆனால் இந்த டெராரியத்திற்கு வாரம் இரண்டு எல்லது மூன்று முறை இரண்டு மணி நேரம் சூரிய வெளிச்சம் வரும் இடத்தில் வைத்தால் போதும். அதே போல, எப்போது மண் காய்ந்து போகிறதோ அப்போது சுமார் 20 மிலி அளவு தண்ணீரை மட்டும் லேசாக தெளித்தால் போது. அந்த தண்ணீர் நான்கு நாட்கள் வரை அந்த டெராரியம் செடியை காக்கும்.

வீட்டிற்குள் வளரக் கூடிய உள் அலங்கார செடிகளை வளர்க்க விரும்புபவர்கள், பொதுவாக பாலைவனத்தில் வளரக் கூடிய சக்யுலண்ட்ஸ் (Succulents), கேக்டஸ் (Cactus), ஜாமியா (Zamia) போன்ற செடிகளைத்தான் வளர்ப்பார்கள். இதற்கு அதிக அளவு தண்ணீரும், பராமரிப்பும் அவசியம் இல்லை. இந்த செடிகள் மனதிற்கு இதம் அளிப்பதைத் தாண்டி, நல்ல அலங்காரப் பொருளாகவும் இருக்கும். இந்த கொரோனா லாக்டவுனில், அப்பார்மெண்ட்களில் தனித்து வசித்த பலருக்கும் இந்த டெராரியம் செடிகள்தான் துணையாக இருந்தது. பலரும் இவற்றை தங்களுடைய நெருங்கிய நட்பாகவும், செல்லப்பிராணியாகவும் பார்க்கின்றனர். இதை பெட் ப்ளாண்ட்ஸ் என்று கூட அழைக்கின்றனர்.

இந்த செடிகளை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் தொட்டியில் அழகான கற்கள், பொம்மைகள் நிரப்பி வளர்க்கலாம். பலரும் இதில் தங்களுடைய நெருங்கிய நினைவுகளான, திருமண நாள், முதல் முறை சந்தித்த தினம், தங்கள் வாழ்க்கையையே மாற்றிய விமானப் பயணம் போன்றவற்றை அப்படியே அந்த டெராரியம் தொட்டியில் மறு ஆக்கம் செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அவர்களுக்காக அப்படியே தத்ரூபமான பரிசுகளை நான் உருவாக்கி கொடுத்து வருகிறேன்.

அதே போல டெராரியமில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று திறந்தவெளி ஓபன் டெராரியம். மற்றொன்று மூடியே இருக்கும் க்ளோஸ்ட் டெராரியம். ஓபன் டெராரியம் நமக்கு தெரிந்தது தான், உள்ளே காற்றும் வெளிச்சமும் நேரடியாக செல்லும் படி செடிகள் வளரும். ஆனால் க்ளோஸ்ட் டெராரியமில் ஒரு கண்ணாடி தொட்டிக்குள் செடிகளை வைத்து, அதை அப்படியே மூடிவிடுவோம். இது முழுவதுமாக சீல் செய்யப்பட்டு இருக்கும். அந்த மூடிய தொட்டிக்குள்ளேயே இந்த செடிகள் அந்த சூழ்நிலைக்கு ஏற்பவளர்ந்துவிடும்.

அந்த தொட்டிக்குள்ளேயே தண்ணீர் ஆவியாகி செடி வளரும். அதுவே ஒரு சூழலை உருவாக்கி, இருக்கும் வளங்களை வைத்து வாழ்ந்துக்கொள்ளும். இதெல்லாம் இயற்கையின் அதிசயம்தான். மாதம் ஒரு முறை திறந்து அந்த செடிகளை சரியாக வெட்டி விடலாம், கண்ணாடியையும் கற்களையும் சரி செய்யலாம். இந்த செடிகள் வீட்டிற்குள் வைத்து வளர்க்க மட்டுமே உகந்தது. டெராரியம் செடிகளுக்கு நாம் மற்ற செடிகளுக்கு பயன்படுத்தும் மண்ணினை உபயோகிக்க முடியாது. அதற்கென சிறப்பு மண்ணை தயாரிக்கிறோம். கோகோபிட் எனப்படும் தேங்காய் நார், மண்புழு உரம், சிகப்பு மணல், ஆற்று மணல், நிலக்கரி போன்ற பொருட்களை வைத்து மண்ணை தயார் செய்வோம்.

அதாவது அந்த மண் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அந்த நிலையில் இருக்கக்கூடிய மண்ணை நாங்க தயார் செய்து அதில் செடியினை வைத்து தருகிறோம். இப்போதெல்லாம் வீட்டு நிகழ்ச்சிகளில் என்னுடைய மினியேச்சர் கார்டனை ரிடர்ன் கிஃப்ட்டாக கொடுப்பதற்கும் வாங்குகிறார்கள். அப்போது ஐம்பதுக்கும் அதிகமான ஆர்டர்கள் வரும். காரில் கூட இதை அலங்காரத்திற்கு வைக்கலாம். நான் தீம் மினியேச்சர் கார்டன்களையும் விற்பனை செய்கிறேன். அதன்படி சிலர் தங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு, திருமண நாளுக்கு எல்லாம் பரிசு கேட்பார்கள். அது தவிர, உங்கள் நல்ல நினைவுகளை மறு ஆக்கம் செய்யும் விதமாக பழைய பள்ளி ஆண்டு விழா போன்ற நினைவுகளை அப்படியே தத்ரூபமாகவும் செய்து கொடுக்கிறேன்.

என் கணவருக்கு லைட்டுகள் ரொம்ப பிடிக்கும். அதனால் அவருக்காக என்னுடைய டெராரியத்தை எப்படி லைட்களுடன் இணைக்கலாம் என்று பார்த்த போது உருவானதுதான் இந்த லாம்பேரியம். இதை உங்கள் படுக்கையறையில் இரவு விளக்காகவும், அதில் செடிகள் இருப்பது தெரியும். இந்த செடிகளுக்கு அந்த விளக்கின் ஒளியே போதுமானது. வாரம் ஒரு முறை மட்டும் சூரிய வெளிச்சத்தில் வைக்கலாம்.

இந்த லாம்பேரியமும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்ய முடியும். பெங்களூரில் கொஞ்சம் பிஸியான ஸ்ட்ரெசான வேலை. அதனால் கொஞ்சம் கைவினை பொருட்கள், இயற்கை சார்ந்த பொருட்களை செய்து வந்தேன். இந்த மினியேச்சர் கார்டன் செய்வதையும் யுடியூப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன். அப்போது நண்பர்கள் குடும்பத்தினரின் ஊக்குவிப்புடன் மேஜிக்ரூட்ஸ் – Magicrootz எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்தேன். இப்போது நான்கு வருடங்களாக என்னுடைய இந்த சிறுதொழில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதே சமயம் என்னுடைய ஐ.டி வேலையையும் நான் விடவில்லை. என் ஆபீஸ் நண்பர்கள், அதிகாரிகள் எல்லோருமே எனக்கு ஆதரவாய் இருக்கிறார்கள். வீட்டிலும் என் கணவர் எனக்கு முழு சப்போர்ட் கொடுக்கிறார்.

என்னிடம் தொங்கும் டெராரியம், டேபிளில் வைக்கும் டெராரியம், கார்னர் டெராரியம் என பல வகைகளில் உள்ளது. மணி ப்ளாண்ட்ஸ், ஸ்னேக் ப்ளாண்ட்ஸ், ஸ்பைடர் ப்ளாண்ட்ஸ், கேக்டஸ், ஜாமியா, சக்யுலண்ட்ஸ் என என் வீட்டில் மட்டும் சுமார் 250 செடிகளை வளர்க்கிறேன். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப செடிகளை வாங்கியும் என்னால் கொடுக்க முடியும்” என்கிறார்இப்போதைக்கு சென்னை, புதுச்சேரி மற்றும் பெங்களூருக்கு மட்டும் மேஜிக்ரூட்ஸ் டெராரியங்களையும் மினியேச்சர் கார்டன்களையும் விற்பனை செய்கிறார்கள்.

பேக்கேஜிங் தான் இவர்களுடைய மிகப்பெரிய சவால். செடிகளும் கண்ணாடி தொட்டிகளும் உடையாமல் இருக்க வேண்டும். இப்போது இந்தியா முழுவதும் விற்பனை செய்ய, அதற்கான சரியான பேக்கேஜிங் முறை குறித்து தன்யா ஆராய்ந்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் தொழிலுக்கு பாட்டியும் தாத்தாவும் சப்போர்ட்!(மகளிர் பக்கம்)
Next post மணப்பெண்களின் மனங்கவர்ந்த பட்டு நூல் வளையல்கள்!(மகளிர் பக்கம்)