கல்லூரி மாணவிகள் முதல் மணப்பெண்கள் வரை விரும்பும் டெரக்கோட்டா நகைகள்!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 25 Second

பத்மாவதியின் சொந்த ஊர் பரமக்குடி. திருமணமாகி இப்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். பி.எஸ்சி வேதியல் படித்துள்ள இவர், நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்போதுமே வீட்டில் தன் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து நெசவு வேலையில் உதவி வருவார். ‘‘ஆனால் இங்கு சென்னை வந்ததும் வீட்டு வேலையை தாண்டி, பொழுதுபோக்கு என எதுவும் இல்லாததால் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். யுடியூப்பில் சாதாரணமாக ஒரு வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் வந்த டெரக்கோட்டா ஜுவல்லரி மேக்கிங்கை பார்த்து அதை வீட்டில் முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன். என் கணவர் தான், இதற்கு தேவையான க்ளேவை எனக்கு முதலில் வாங்கி கொடுத்தார்.

இந்த டெரக்கோட்டா ஜுவல்லரியை செய்ய தேவையான முதலீடு மிகவும் குறைவுதான். சாதாரணமாக டெரக்கோட்டா ஜுவல்லரி என்றால் அதில் வெறும் கம்மலும் நெக்லஸ் செட்டுகள் தான் செய்வார்கள். ஆனால் நான் டெரக்கோட்டா வளையல்கள், டெரக்கோட்டா கொலுசுகளும் செய்வேன். இதில் முதலீடு குறைவு என்றாலும், டெரக்கோட்டா ஜுவல்லரி தயாரிக்க நிறைய உழைப்பு தேவை. நல்ல க்ரியேட்டிவிட்டியும் வேண்டும். இதை தொழிலாக எடுத்து வருமானம் ஈட்ட நினைப்பவர்கள், ஆரம்பத்தில் நல்ல பயிற்சி செய்து விதவிதமான நகைகளை தயாரிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு வித்தியாசமாக அழகாக செய்கிறோமோ அவ்வளவு வரவேற்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நமக்கு கிடைக்கும்.

இதை ஆண்களும் சரி, பெண்களும் சரி வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் கடின உழைப்பு செலுத்தி இதை செய்ய ஆரம்பித்துவிட்டால், தொடர்ந்து பயிற்சியின் மூலம் வேகமாக உங்களால் பல டிசைன்களை செய்ய முடியும். இந்த டெரக்கோட்டா நகைகளைப் பொறுத்த வரை, நாம் எவ்வளவு வேகமாக டிசைன்களை செய்து முடித்தாலும், அது நன்றாக காய நமக்கு குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். மண் சட்டியில் தேங்காய் நார் எல்லாம் சேர்த்து குறைந்த சூட்டில் அதிக நேரம் இதை வாட்டி எடுக்க வேண்டும்.

அப்போது தான் நகைகள் அதிக காலம் நீடித்து இருக்கும். வேகவேகமாக செய்தால் இது சீக்கிரமே உடைந்து போய்விடும். டெரக்கோட்டா டிசைன் நன்கு காய்ந்ததும், இப்போது அதன் மீது நாம் தேவையான வண்ணங்கள் சேர்த்து வார்னிஷ் செய்துவிடலாம். இந்த டெரக்கோட்டா நகைகள் செய்முறையும் மிகவும் சுலபம் தான். யார் வேண்டுமானாலும் ஒரே நாளில் கூட கற்றுக்கொள்ளலாம். ஆனால் நன்றாக பயிற்சி செய்து, புதிய வித்தியாசமான டிசைன்களை செய்யும் போது தான் வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள். க்ளே, பெயிண்ட் தவிர இதில் பெரிய முதலீடு என்று எதுவும் இல்லை.

எனக்கு ஒரு ஆர்டரை முடிக்க நிச்சயம் ஒரு வாரம் தேவை. அப்போது தான் தரமான நகைகளை என்னால் கொடுக்க முடியும். ஆரம், சோக்கர் நெக்லஸ், வளையல், ப்ரேஸ்லெட், கொலுசு போன்ற பல வித்தியாசமான பொருட்களையும் செய்து வருகிறேன். டெரக்கோட்டா நகைகளைப் பொறுத்த வரை, இது முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படும் நகைகள். வாடிக்கையாளர்கள் கேட்கும் நிறத்தில், கேட்கும் டிசைனில் இதை செய்து கொடுக்க முடியும். அதனால் இதை லெஹங்கா, சுடிதார், சேலை என எந்த உடைக்கும் தேவையான விதத்தில் அணிந்து கொள்ள முடியும். நமக்கு பிடித்த வண்ணத்தில் பிடித்த அளவில் கிடைக்கிறது என்பதால் மட்டுமே பல பெண்கள் இப்போது டெரக்கோட்டா ஜூவல்லரியை விரும்பி வாங்குகிறார்கள். கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் பல வண்ணங்களில் தங்கள் உடைக்கு ஏற்ற ஜிமிக்கிகளை வாங்குகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பெரிய ஆரங்கள், சோக்கர் செட்களும் நல்லா விற்பனையாகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதுமே பெண்கள் டெரக்கோட்டா நகைகளை விரும்பி வாங்குகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவுக்கு கூட என்னுடைய நகைகளை நான் அனுப்பினேன். டெரக்கோட்டாவில் மணப்பெண்களுக்கான ப்ரைடல் செட்களும் கூட நான் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆரம், வளையல், நெக்லஸ், ஒட்டியாணம், ஜிமிக்கி, நெத்திச்சுட்டி என எல்லாமே டெரக்கோட்டாவில் செய்ய முடியும்.

ஆனால் இப்போது மணப்பெண்கள் மத்தியில் திருமணத்திற்கு டெரக்கோட்டா நகைகள் அணிவது இன்னும் புதிதாகவே இருக்கிறது. அதனால் யாரும் முன் வந்து இதை கேட்பதில்லை. திருமணத்திற்கு முன்பு நடைபெறும் ஹல்தி, மெஹந்தி, நலங்கு போன்ற சின்ன சடங்குகளுக்கு எல்லாம் டெரக்கோட்டா நகைகளை விரும்பி அணிகிறார்கள். இந்த டெரக்கோட்டா நகைகளிலேயே க்ரிஸ்டல் ஸ்டோன்களை சேர்த்தால், அதற்கு இன்னும் அழகான லுக் கிடைக்கும். அப்போது மணப்பெண்கள் அணியக் கூடிய அளவிற்கு இதை அழகாக செய்து கொடுக்கலாம். திருமணத்திற்கு செல்லும் விருந்தினர்களே பலர் என்னிடம் செட் ஜுவல்லரி கேட்டு வாங்கி அணிந்து செல்கிறார்கள்.

மற்ற டெரக்கோட்டா கலைஞர்களை விட என்னுடைய நகைகள் குறைந்த விலையிலேயே கிடைக்கும். காதணிகள் எல்லாம் 60-80 ரூபாயில் இருந்தே கிடைக்கும். வெறும் பெண்டண்ட் செயின்கள் 150 ரூபாயில் இருந்தே கிடைக்கும்” என்கிறார் பத்மாவதி. இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் (Gachitra) நேரடியாக வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கிக்கொள்ளலாம். காலத்திற்கேற்ப புதிய ட்ரெண்ட்களை இந்த டெரக்கோட்டா நகைகளில் சேர்க்கும் போது இது காலத்திற்கும் அழியாத நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாகவும் கலையாகவும் நீடித்து நிற்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!!(அவ்வப்போது கிளாமர்)
Next post டெம்பிள்செட் ஜுவல்லரி தயாரிப்பதில் அவர் ரொம்ப டாப்!! (மகளிர் பக்கம்)