சாக்லெட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில்!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 21 Second

சென்னையில் வசித்து வரும் சுபத்ரா ப்ரியதர்ஷினி பிரபல சாக்லெட் கலைஞர். சுவையான சாக்லெட் வகைகள் செய்வது மட்டுமில்லாமல் அதில் பல கலை வடிவங்களை உருவாக்குவதிலும் வல்லவர். சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட்டிற்காக 32 காய்களுடன் 64 கருப்பு வெள்ளை சதுரங்களுடன் ஒரு முழு செஸ் போர்டையே சாக்லெட்டில் உருவாக்கி மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து திருமணமாகி தில்லி சென்று அங்கே ஒரு வருடம் ஐ.டி துறையில் வேலை செய்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் சுயமாக ஏதாவது ஒரு பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது. இதனால் 2010ல் சுபத்ரா தன் வேலையை துறந்தார்.

“ஒரு சின்ன ப்ரேக் எடுக்க வேண்டும் என்றுதான் முதலில் என்னுடைய ஐ.டி வேலையை துறந்தேன். ஆனால் அந்த சமயத்தில் நான் சென்ற ஒரு பயிற்சி என் வாழ்க்கையையே வேறு திசையில் திருப்பும் என்று எனக்கு அப்போது தெரியல. பெண் தொழில்முனைவோர் மேலாண்மை எனும் இரண்டு மாத பயிற்சியில் இணைந்து அங்கு என்னைப் போலவே சிந்திக்கும் பெண்களை, தங்கள் கனவை நோக்கி விடாமுயற்சியுடன் பயணிக்கும் பெண்களை சந்தித்தேன். அது என்னுடைய கனவுக்கு தூண்டுகோலாக இருந்தது. அந்த பயிற்சிக்கு நடுவில் சென்னை வந்தேன். இங்கு ஒரு கடையில் ஹோம்மேட் சாக்லெட்ஸ் அழகாக வைத்திருப்பதை பார்த்து எனக்கு அதில் ஆர்வம் அதிகரித்தது.

வீட்டில் பொதுவாக நான் கேக், சாக்லெட் செய்வது வழக்கம் தான். ஆனால் அதை இவ்வளவு பெரிய தொழிலாக மாற்ற முடியும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. முறையான பயிற்சி பெற்று நானே சாக்லெட் தயாரிக்க ஆரம்பித்தேன். ‘சாக் ஆஃப் தி டவுன்’ என்ற பெயரில் சென்னையில் என்னுடைய சாக்லெட் பயணம் ஆரம்பமானது. ஆரம்பத்தில் சுவையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் என்னைப் போல் பலர் இந்த சாக்லெட் பிசினஸ் செய்து வருவதால், அவர்களில் இருந்து நான் தனித்து தெரிய வேண்டும் என்று விரும்பினேன். என் சாக்லெட்டை பார்த்ததுமே மற்றவரை கவர வேண்டும் என யோசித்தேன். அதனால் அந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு அகல் விளக்கு வடிவத்தில் சாக்லெட் செய்தேன்.

அதனைத் தொடர்ந்து கைகள் கொண்டும், மோல்ட் வைத்தும் அப்படியே படிப்படியாக பல வடிவங்களில் சாக்லெட் செய்ய ஆரம்பித்தேன். சாக்லெட்டை களிமண் பதத்திற்கு கொண்டு வந்து அதில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் என பல பண்டிகைகளுக்கும் தீம் சாக்லெட் செய்தேன். இப்படியாக நான் ஒவ்ெவாரு டிசைன்களை உருவாக்க ஆரம்பிச்சேன். அடுத்த வருட தீபாவளி பண்டிகைக்கு அகல் விளக்கு மட்டுமில்லாமல், சாக்லெட்டிலேயே சங்கு சக்கரம், ராக்கெட் போன்ற பட்டாசு வடிவங்களை உருவாக்கினேன்.

லேட்டஸ்டாக தஞ்சாவூரில் நடந்த ஒரு திருமணத்திற்கு மணமக்களுக்கு மறக்கமுடியாத பரிசை கொடுக்க வேண்டும் என எனது வாடிக்கையாளர் விரும்பினார். அப்போது பல ஐடியாக்களை ஆலோசித்து கடைசியாக தஞ்சாவூர் பெரிய கோவிலையே சாக்லெட்டில் செய்து கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு முன் வரை இந்த வடிவத்தை நான் செய்தது கிடையாது. ஆனால் என்னுடைய வாடிக்கையாளர் என் மீது நம்பிக்கை வைத்து அந்த பரிசை செய்ய சொன்னார்.

நானும் கோயிலின் புகைப்படத்தைப் பார்த்து அதை வடிவமைச்சு கொடுத்தேன். இப்படி ஒவ்வொரு முறை யாரும் செய்யாத புதுமையான சாக்லெட் வடிவங்களை செய்யும் போது அதில் இருக்கும் சவாலும், எனக்குள் இருக்கும் க்ரியேட்டிவிட்டியும் தான் என்னை பத்தாண்டுகள் கடந்தும் இந்த துறையில் மதிப்பான ஒரு இடத்தைக் கொடுத்துள்ளது’’ என்றவர் தன் பிரியாணி பிரியர் நண்பருக்காக, சிக்கன் லெக் பீஸ் முதல் பாஸ்மதி அரிசி வரை ஒவ்வொன்றையும் கையிலேயே சாக்லெட்டில் செய்திருக்கிறார்.

‘‘நான் என் நண்பருக்கு சிக்கன் லெக்பீஸ் வடிவமைச்சதைப் பார்த்த ஒருவர் இத்தாலியன் உணவான வைட் சாஸ் பாஸ்தாவை சாக்லெட்டில் செய்து கொடுக்க சொன்னார். அதுவும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து வெள்ளை சாக்லெட்டில் தாஜ்மகாலும் உருவாக்கி இருக்கிறேன். பொதுவாக திருமணத்திற்கு நகையை பரிசாக கொடுப்பார்கள். ஒரு வாடிக்கையாளர் சாக்லெட்டில் செய்த நகை வேண்டும் என்று கேட்டு அதை பரிசாக மணமக்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இப்படி யாருக்கெல்லாம் வித்தியாசமான மறக்க முடியாத பரிசை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் என்னைத்தான் நாடி வருகிறார்கள். காரணம் சாக்லெட் என்பது எல்லாரும் விரும்பும் உணவு என்பதால், அதில் வித்தியாசமான வடிவங்களை செய்யும் போது அதை பரிசாக பெறுபவர்களின் கண்களில் தெரியும் சந்தோஷத்தை பார்க்கும் போது நமக்கு மேலும் அதில் பல கலை நயங்களை கொண்டு வரவேண்டும் என்று எண்ணத்தை தூண்டும்’’ என்றவர் கேக்குகளிலும் பல தீம்களைக் கொண்டு உருவாக்கி வருகிறார்.

‘‘பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றாலே கேக் சாக்லெட் தான் நம் நினைவில் வரும். இப்போது அதையே வித்தியாசமாக தங்களின் மனதுக்கு பிடிச்சவங்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க. அவர்களுக்கு பரிசு பொருட்கள் முதல் அனைத்தும் என் கேக்குகளும் சாக்லெட்டுகளுமாக தான் இருக்கும். இதற்கிடையில் என் கணவரும் நானும் சேர்ந்து சென்னையில் முதல் முறையாக புதிர் விளையாட்டு கஃபேவை உருவாக்கினோம். இதில் எண்ணற்ற புதிர் விளையாட்டுகளும் போர்டு கேம்ஸும் இருக்கும். அனைத்து வயதுக்குரியவர்களும் இங்கே வந்து விளையாடலாம்.

தேனாம்பேட்டையில் அன்டாங்கிள் – ஹவுஸ் ஆப் பியூல்ஸ் (Untangle – House of Puzzles) எனும் பெயரில் எங்களுடைய கஃபே இயங்கி வருகிறது. அங்கு இருக்கும் கிச்சனிலும் என்னுடைய சாக்லெட், கேக் வகைகள் கிடைக்கும். சாக்லெட் செய்யும் போதே எனக்கு பலரும் தீம் கேக் செய்து கொடுக்க சொல்லி கேட்டார்கள். அதனால் கொண்டாட்டங்களுக்கு கேக் வகைகளும் செய்து கொடுக்கிறேன். சாக்லெட் ட்ரஃபில், பட்டர் ஸ்காட்ச் கேரமெல் போன்ற சுவைகள் என்னுடைய கேக்குகளில் ஹாட் செல்லிங். அதே போல சாக்லெட்டில் ரோஸ்ட் ஆல்மெண்ட் அனைவருமே விரும்பி சாப்பிடும் ஃப்ளேவர். சாக்லெட் ட்ரிஃபில் கப்ஸ் எனும் வொயிட் சாக்லெட், ப்ளூபெர்ரி ஃப்ளேவரும் என் வாடிக்கையாளர்கள் விரும்பி ஆர்டர் செய்வார்கள்’’ என்றார்.

சுபத்ராவிடம் எந்த மாதிரியான வித்தியாசமான ஐடியாவை சொன்னாலும், அவர் அதை சவாலாக எடுத்து செய்வார் என்பதால் கஸ்டமைஸ்ட் சாக்லெட் ஆர்டர்கள் அவருக்கு வந்த வண்ணம் இருக்கிறது. அடுத்து சாக்லெட் கொண்டு கையிலேயே சிலைகள் செய்ய வேண்டும் என்பது தான் இவருடைய ஆசை. அதற்கான தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வரும் சுபத்ரா, சென்னையின் சிறந்த சாக்லெட் ஆர்டிஸ்ட் என்ற கனவை நோக்கி பயணித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post X க்ளினிக்…சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! (அவ்வப்போது கிளாமர்)
Next post 10 நிமிடத்தில் சிறுதானிய உணவுகளை சமைக்கலாம்!(மகளிர் பக்கம்)