முதுவேனிலுக்கு ஏற்ற 3 சூப்கள்!(மருத்துவம்)

Read Time:6 Minute, 46 Second

மூக்கிரட்டை கீரை சூப்

தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை    –    2 கைப்பிடி அளவு
மிளகுத் தூள்    –    1 தேக்கரண்டி
சீரகப் பொடி    –    1 தேக்கரண்டி
உப்பு    –    தேவைக்கேற்ப.

செய்முறை:  மூக்கிரட்டை கீரையை ஆய்ந்து சுத்தமாக  அலசிக்கொள்ள வேண்டும். பின்னர் 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும். கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர்,  அதனை இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். மூக்கிரட்டை சூப் தயார்.

பலன்கள்: மூக்கிரட்டை இலைகளை சுத்தம்செய்து சமைத்துச் சாப்பிட்டுவர, சுவாசப் பாதிப்புகள் சரியாகும். மூக்கிரட்டை வேர்கள் ரத்தசோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு சிறந்த மருந்தாகிறது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனைக் குடிப்பது மிகவும் நல்லது. எனவே, இந்த கீரை கிடைத்தால், தவறாமல் சூப் செய்து பருகுங்கள்.

வாழைத்தண்டு சூப்

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு    –    ஒரு துண்டு
கொத்துமல்லி    –    அரை கட்டு
மிளகுத்தூள்    –    ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள்    –    ஒரு தேக்கரண்டி
உப்பு    –    தேவைக்கேற்ப.

செய்முறை: வாழைத்தண்டு மற்றும் கொத்துமல்லியை ஆய்ந்து  சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வாழைத்தண்டு மற்றும் கொத்துமல்லியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த வாழைத்தண்டு மற்றும் கொத்துமல்லியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை வடிகட்டவும். வடிகட்டியதை 10 நிமிடம் மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் உப்பு, மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கலந்து  பரிமாறலாம்.  

பலன்கள்: வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்  சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த நீவாரணியாக  பயன்படுகிறது. உடல் எடையை குறைப்பதிலும் வாழைத்தண்டு சிறந்த பங்கு வகிக்கின்றது. இந்த சூப்பை வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் உடல் எடை குறைத்தலில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

பூண்டு சூப்

தேவையான பொருட்கள் :

பூண்டுப் பற்கள்    –    10
அரிசி மாவு      –    1 மேசைக்கரண்டி
வெங்காயம்      –    1
இஞ்சி           –     ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய்    –    1
கொத்துமல்லி இலை-     சிறிது
புதினா        –    சிறிது
எலுமிச்சை சாறு    –    அரை  தேக்கரண்டி
எண்ணெய்    –    1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள்    –    தேவைக்கேற்ப.

செய்முறை :  ஒரு கம்பியில் (வடை கம்பி அல்லது கூரான ஏதாவது கம்பி) பூண்டு பற்களை வரிசையாகக் குத்தி (தோல் நீக்கத் தேவையில்லை), அடுப்பு தீயில் காட்டி நன்றாக சுட்டெடுக்கவும். சற்று ஆறியவுடன், தோலை நீக்கி விட்டு தனியாக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். பின்னர்,  வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் சுட்ட பூண்டு, 2 கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர்  நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, புதினா , உப்பு சேர்த்து  மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். அத்துடன் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கொதிக்க விடவும்.

தேவையான அளவிற்கு சூப் திக்கானதும், இறக்கி, எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். பின்னர் தேவைக்கேற்ப மிளகுத்தூள், சிறிது புதினா இலை ஆகியவற்றைத் தூவி பரிமாறவும்.
பலன்கள்: பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, வயிற்று உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு சூப்பை வாரம் இருமுறை குடித்து வர வயிற்று உபாதைகள்  நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆரோக்கியமான குடும்பம்=ஆரோக்கிய சமூகம்! (மகளிர் பக்கம்)
Next post புளியாரைக் கீரை புவியாரைக் காக்கும்!! (மருத்துவம்)