விதவிதமான கொழுக்கட்டைகள்! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 20 Second

விநாயகர் சதுர்த்தி என்றாலே ‘கொழுக்கட்டை’தான் மூலப் பொருளாகக் கருதப்படுகிறது. அத்தகைய கொழுக்கட்டைகளை தேங்காய், எள், வேர்க்கடலை போன்ற பூர்ணங்களைக் கொண்டு செய்யலாம். விதவிதமான சத்தான பூர்ணம் கொண்டு கொழுக்கட்டை செய்து விநாயகர் பண்டிகையை கொண்டாட தோழியருக்கு பல வித்தியாசமான கொழுக்கட்டை ரெசிபிகளை வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் குப்பம்மாள்.

புரோட்டீன் கொழுக்கட்டை
தேவையானவை:

பச்சரிசி மாவு – 2 கப், சோயா பீன்ஸ் – ½ கப்,
கடுகு – ½ டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுந்தம் பருப்பு தலா – 1 டீஸ்பூன்,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
பச்சைமிளகாய் – 4,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை,
தண்ணீர் 1½ கப்,
எண்ணெய்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

சோயா பீன்ஸை ஊறவைத்து பின் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு இவற்றை நைஸாக அரைத்து சோயாவுடன் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிப் பின் சோயா பீன்ஸ் விழுதுச் சேர்த்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு சிறிதளவு உப்புச் சேர்த்துக் கிளறவும். வெந்து உதிர் உதிராக வரும் வரைக் கிளறவும். இதுதான் ‘பூரணம்’. அடுப்பில் வாணலி வைத்து தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். இதில் பச்சரிசி மாவைத் தூவிக் கட்டியில்லாமல் கிளறி எடுக்கவும். ஆறியதும் அரிசி மாவில் எலுமிச்ச அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் 1 டீஸ்பூன் அளவு எடுத்து மூடிக் கொழுக்கட்டை வடிவம் கொடுத்து, இட்லிப்பானையில் வைத்து அடுப்பில் ஆவியில் வேகவைத்து எடுத்தால் ‘புரோட்டீன்’ கொழுக்கட்டை தயார்.

உண்டலிக் கொழுக்கட்டை

தேவையானவை:

கொழுக்கட்டை மாவு – 3 கப்,
தேங்காய்துருவல் – 1 கப்,
கடுகு – ¼ டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 6,
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,
உப்பு,
நல்லெண்ணெய் தேவையான அளவு.
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:

கொழுக்கட்டை மாவைச் சீடைகள் போல சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஒரு வாணலியில் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்(கிள்ளி), கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, தேங்காத் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, இதில் வெந்தக் கொழுக்கட்டைகள், உப்புச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி இறக்கவும். ‘உண்டலிக் கொழுக்கட்டை’ ரெடி!

அரிசி ரவைக் கார கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி ரவை – 2 கப்,
தேங்காய் துருவல் – ¼ கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சி – 1 ஸ்பூன்,
வரமிளகாய் – 2,
கடுகு,
உளுந்தம் பருப்பு,
கடலைப்பருப்பு தலா – 1 டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி – 1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிச் சேர்த்து தாளிக்கவும். அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் 1 கப்புக்கு 1½ கப் தண்ணி என்ற விகிதத்தில் 3 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்போது அத்துடன் தேங்காய் துருவல், பெருங்காயம், அரிசி ரவைச் சேர்த்துக் கிளறவும். கூடவே நெய்ச் சேர்த்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் கிழே இறக்கி, ஆறவிடவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் செய்து இட்லி பானையில் வைத்து அடுப்பில் 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து இறக்கவும். சுவையான, ஆரோக்கியமான ‘அரிசி ரவை கொழுக்கட்டை’ தயார்.

இனிப்புக் கொழுக்கட்டை

தேவையானவை:

இட்லி அரிசி – 1 டம்ளர்,
தேங்காய் – ½ மூடி,
வெல்லம் – 2 கைப்பிடி,
நெய் – 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்,
பொடித்த முந்திரி – 1 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, பின் தண்ணீரை வடிகட்டி, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். பின் வெல்லம் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு, முந்திரி வறுத்து உடன் அரைத்த மாவைச் சேர்க்கவும். கொழுக்கட்டை மாவு ஒட்டாமல் வந்தவுடன் இறக்கி ஆறியவுடன் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கவும்.

உளுந்து கொழுக்கட்டை

தேவையானவை:

கொழுக்கட்டை மாவு – 4 கப்,
வெள்ளை உளுந்து – 1 கப்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 6,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு – ¼ டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

பருப்புகளை 1 மணி நேரம் ஊறவைத்து வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை இட்லி பானையில் இட்லி போல வைத்து ஆவியில் வேகவைத்து, வெந்ததும் பொடியாக உதிர்த்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து அத்துடன் உதிர்த்த உளுந்து கலவையைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். கொழுக்கட்டை மாவை உள்ளங்கை அகலத்துக்கு தட்டிக் கொண்டு அதனுள் பருப்புக் கலவையை வைத்து சோமாசி போல மூடி ஓரம் பிரியாமல் ஒட்டி, இட்லி பானையில் வைத்து, ஆவியில் வேகவைத்து இறக்கவும்.

தானிய இனிப்பு பிடிக் கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி மாவு – 1 கப்,
வறுத்து அரைத்த சிறுதானிய மாவு (கம்பு, தினை) – தலா ½ கப்,
நாட்டுச் சக்கரை(அ)வெல்லம் – ½ கப்,
வறுத்த பாசிப் பருப்பு – 2 ஸ்பூன்,
தேங்காய்ப்பல் – 5 ஸ்பூன்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்,
உப்பு சிறிதளவு.

செய்முறை:

முதலில் வெல்லத்தை 1 கப் கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டிக் கொள்வும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் வெல்லக் கரைசலில் போட்டு பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் பிடிக் கொழுக்கட்டைகளாக வைத்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான ‘மல்ட்டி கிரெய்ன்ஸ் இனிப்புக் கொழுக்கட்டை’ தயார்.

டிரைஃப்ரூட் கொழுக்கட்டை

தேவையானவை:

கொழுக்கட்டை மாவு பிசைந்தது – 4 கப்,
தேங்காய்துருவல் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை சேர்த்த பால் கோவா – 1 கப்,
டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன்,
கிஸ்மிஸ் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

தேங்காய் துருவல், பால்கோவா, ஒன்றிரண்டாக நறுக்கிய டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் ஆகியவற்றைக் கலந்து நன்கு பிசையவும். சிறு சிறு உருண்டை உருட்டி, கொழுக்கட்டை மாவுக்கு நடுவே வைத்து கொழுக்கட்டை போல் செய்து இட்லி பானையில் 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் ‘டிரை ஃப்ரூட் கொழுக்கட்டை’ ரெடி.

வெஜிடபுள் கொழுக்கட்டை

தேவையானவை:

இட்லி அரிசி – 1 கப்,
கேரட் பெரியது – 1, பீன்ஸ்,
பச்சைபட்டாணி – 1 கப்,
தேங்காய் துருவல் – 1½ கப்,
உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க:

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு,
கடலைப்பருப்பு தலா – 1 டேபிள் ஸ்பூன்.
வரமிளகாய் – 8(கிள்ளியது),
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிது,
அரிசி மாவு வதக்க – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்.

செய்முறை:

இட்லி அரிசியை 6 மணி நேரம் ஊறவைத்து பின் கிரைண்டரில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். தேங்காய், உப்பு சேர்த்து நைஸாக அரைத்து மாவுடன் கலந்து விடவும். கேரட் தோல் நீக்கி துருவவும். பீன்ஸை பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கிய பின் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி விடவும். உப்பு சிறிதுச் சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். பின் வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த மாவைச் சேர்த்து வதக்கவும். ஒட்டாமல் வரும்போது வதக்கி வைத்த காய்கறிக் கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கியபின் இறக்கி, ஆறியதும் சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கவும்.

கொழுக்கட்டை டிப்ஸ்

*கொழுக்கட்டைக்கு மாவு கிளறும் போது, நீருடன் 2 ஸ்பூன் பால் சேர்த்தால், கொழுக்கட்டைகள் விரிந்து போகாது.
*கொழுக்கட்டை சொப்பு வெடிக்காமலும், விரியாமலும் இருக்க அரிசியுடன் சிறிது உளுந்து சேர்த்து அரைக்க வேண்டும்.
*கொழுக்கட்டை மாவு கொதிக்கும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் மாவு கெட்டியாகாது. நெய் சேர்த்தால் மாவு ஆறியதும் நெய் உறைந்து விடலாம்.
*மாவு ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு சொப்பு பிடித்தால் அழகாக வரும்.
*பூரணம் செய்ய தேங்காய்த் துருவல் சிறிது நெய்யில் வதக்கி விட்டு கிளறினால் சீராக வரும். சுவையும், மணமும் கூடும்.

கொழுக்கட்டை மாவு தயாரிக்க:

பச்சரிசியை தண்ணீரில் களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து விட்டு நிழலில் சுத்தமான துணியில் பரப்பி உலர்த்தவும். உலர்ந்ததும்
மிக்ஸியில் மாவாக அரைக்கவும்.  கொழுக்கட்டைக்கான மாவு ஒரு பங்கு அளவிற்கு தண்ணீர் 1½ பங்கு தேவை. முதலில் தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். பிறகு அதில் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக தூவிக் கிளறி இறக்கி வைக்க வேண்டும். வெந்த மாவை உருண்டைகளாக உருட்டி சொப்புகள் செய்ய வேண்டும். அதில்  பூரணத்தை வைத்து மூடி, நீராவியில் வேகவைக்க வேண்டும். தேங்காய்ப் பூரணத்திற்கு தேங்காய்த் துருவலை வாணலியில் நெய்விட்டு வதக்கவும். ஈரப்பசை போனதும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்த்துக் கிளறவும். இரண்டும் இணைந்ததும் ஏலப்பொடி சேர்க்கவும்.

– எஸ்.ராஜம், திருச்சி.

மக்காச்சோள ரவை கொழுக்கட்டை

தேவையானவை:

மக்காச்சோள ரவை – 1 கப்,
கடலைபருப்பு,
உளுந்தம் பருப்பு தலா – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2(கிள்ளியது),
கறிவேப்பிலை,
பெருங்காயம் – சிறிதளவு,
தேங்காய்த் துருவல் – ½ கப், உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

அடுப்பில் வாணலி வைத்து காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகா, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் விடவும். (இந்த ரவை வேக அதிக தண்ணீர்  தேவை) இதில் பெருங்காயத் தூள், உப்பு, தேங்காய் துருவல் போட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும். மாவு கொழுக்கட்டைப் பிடிக்க வரும் போது இறக்கி ஆறவைத்து, ஆறியதும் இட்லி பானையில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு இறக்கவும்.

ராகி கொழுக்கட்டை

தேவையானவை:

ராகி மாவு – 1 கப்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
பதப்படுத்திய அரிசி மாவு – 1½ கப்,
வெல்லம் – 1 கப்,
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – ½ கப்.

செய்முறை:

சுடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ராகிமாவு, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் போட்டு நன்றாகக் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கவும். பின் மாவில் சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொழுக்கட்டை அச்சின் உள்ளே சிறிது எண்ணெய் தடவி மாவை வைத்து நடுவில் ராகி பூரண உருண்டைகளை வைத்து மூடி எடுத்து ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புளியாரைக் கீரை புவியாரைக் காக்கும்!! (மருத்துவம்)
Next post விமானப் பயணம்… என்ன சாப்பிடலாம்! (மகளிர் பக்கம்)