வீடு தேடி வரும் வீட்டுச் சாப்பாடு!(மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 36 Second

சென்னையில் பல வீடுகளில் தினமும் தயாராகும் ஆரோக்கியமான சுவையான உணவுகள் அப்படியே பேக் செய்யப்பட்டு அருகில் இருக்கும் ஐடி நிறுவனங்கள், வயதானவர்கள் வசிக்கும் இல்லங்கள், பேச்சுலர்கள் என பலதரப்பட்டவர்களிடம் சுடச்சுட சென்றடைகிறது. இங்கு பலரும் வீட்டு உணவுக்காக ஏங்கி இருப்பதையும், பல ஹோம்மேக்கர்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதையும் பூர்த்தி செய்யும் விதமாக பொறியாளர் செந்தில்குமார் ஆரம்பித்த இந்த புதிய முயற்சிதான் பெண்கள் சமையல் (Pengal Samayal) நிறுவனம். வீட்டில் சமைத்த சைவம், அசைவம் என இரண்டு உணவுமே இங்கு கிடைக்கிறது.

பொறியியல் முடித்து இந்தியா முழுவதும் பல பந்நாட்டு நிறுவனங்களில் வேலை செய்துள்ளார் செந்தில். நல்ல சம்பளம் கிடைத்தாலும், சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் அவரிடம் இருந்துள்ளது. செந்தில் பயங்கரமான உணவுப் பிரியர். அதற்காக எல்லா உணவினையும் அவர் சாப்பிட மாட்டார். வீட்டில் தயாரித்த உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவார். கிராமத்தில் இருந்து வேலைக்காக நகரங்களை நோக்கி நகரும் நண்பர்கள் சுவையான ஆரோக்கியமான உணவுக்காக கஷ்டப்படுவதைப் பார்த்து, அவர்களுக்காக தனக்கு மிகவும் தெரிந்த உணவுத் துறையில் பிஸினஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளார். மனைவி ஜமுனா, வீட்டு சாப்பாட்டை வீட்டிலேயே சமைக்கலாமே என ஐடியா கொடுக்க…

தன் வீட்டிலேயே மனைவியின் உதவியுடன் முதற்கட்டமாக சமையல் செய்து அதை தானே தன் நண்பர்களுக்கு முதலில் டெலிவரி செய்து வந்துள்ளார். தினமும் காலை, மதியம் மற்றும் இரவு உணவுடன், மாலை வேலையில் தமிழர்களின் பாரம்பரிய ஸ்னாக்ஸ் வகைகளான மூக்கடலை, பச்சை பயறு, வாழைப்பூ வடையுடன் இஞ்சி டீயும் வழங்கினார். இந்த பிஸினஸ் ஆரம்பித்த சில நாட்களிலேயே கொரோனா தாக்கியது. அப்போதும் அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற உணவுகளை டெலிவரி செய்து வந்துள்ளார் செந்தில். அதாவது அந்த சமயத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு ஆரோக்கியமான வீட்டு சாப்பாடு கொடுத்து உதவ நினைத்தவர், மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமையில் இருந்தவர்களுக்கு தினமும் மூன்று வேளை, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுகளை கோவிட் கிட் என்ற பெயரில் கபசுர குடிநீருடன் டெலிவரி செய்து வந்துள்ளார் செந்தில். அந்த சமயத்தில், செந்தில்குமாரின் சகோதரி லலிதா, சென்னையில் சமையலில் ஆர்வத்துடன் இருக்கும் பெண்களை இணைத்து அவர்கள் சமையலறையில் இருந்தே நேரடியாக அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு டெலிவரி செய்யலாமே என்று கூற, அதற்கான ஏற்பாடுகளை செந்தில் குமார் தொடங்கினார். அப்படி உருவானது தான் இந்த பெண்கள் சமையல் அமைப்பு. இதில் இணைந்து பயணிக்கும் சமையல் கலைஞர்களை கிச்சன் குயின்ஸ் என்றுதான் இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

‘‘எங்கள் சமூக வலைத்தளம் மூலமாகவும் தெரிந்தவர்கள் மூலமாகவும், எங்களுடைய திட்டத்தை மக்களுக்கு தெரிவித்தோம். நினைத்தே பார்க்காத வகையில், பலரிடம் இருந்தும் ஆதரவு கிடைத்தது. வீட்டில் பெண்கள் அவர்களின் குடும்பத்திற்காக சமைக்கும் அதே உணவை கொஞ்சம் அதிகமாக சமைத்தால் போதும். நாளை என்ன சமைக்கப் போகிறார்கள் என்ற மெனுவை மட்டும் எங்களுக்கு ஒரு நாள் முன்பே பகிர்ந்துவிடுவார்கள். அந்த மெனுவை நாங்கள் எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றுவோம். தனியாக வசிக்கும் பேச்சுலர்கள், வயதானவர்கள், குழந்தைகளை வைத்திருக்கும் இளம் பெற்றோர்கள் என பலதரப்பட்டவர்கள் எங்களுடைய உணவை விரும்பி வாங்குகிறார்கள்” என்கிறார் செந்தில்.

இன்று என்ன தான் பெண்கள் படிப்பிலும் வேலையில் வளர்ந்து நின்றாலும், சில சூழ்நிலை காரணமாக சமூக கட்டமைப்புகளால் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் முதற்கட்ட பராமரிப்பாளராக இருக்கிறார்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பெண்களால் வீட்டை விட்டு வெளியே சென்று வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலை. பெண்களை ஒரு காலத்தில் முடக்கிப்போடும் இடமாக இருந்த சமையலறையை கொண்டே அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பெண்கள் சமையல் செயல்படுகிறது.

“நாங்கள் தயாரிக்கும் உணவில் அஜினமோட்டோ, செயற்கை நிறமூட்டிகள் என எதுவுமே இருக்காது. எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை எங்களுடைய கிச்சன் குயின்களும் வாடிக்கையாளரும் தான் எங்களுக்கு முக்கியம். அதனால், கிச்சன் குயின்கள் தங்களுடைய வசதிக்கேற்றபடி சமைக்கலாம். சில நாட்கள் ப்ரேக் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொண்டு மீண்டும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். இந்த வசதி பல ஹோம்மேக்கர்களை ஈர்த்துள்ளது. ஒருவர் எங்களுடைய கிச்சன் குயினாக பெண்கள் சமையலுடன் இணைய வேண்டும் என்று விரும்பினால், முதலில் அவரைப்பற்றி அனைத்து விவரங்களையும் நாங்க சேகரிப்போம். அதன் பிறகு அவர்கள் நன்கு சமைக்கும் உணவை எங்க ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் சுவைத்து பார்ப்பார்கள்.

சுவையும் தரமும் பிடித்தால், உடனே எங்களுடைய நிறுவனத்தில் நாங்க பின்பற்றும் கொள்கைகளை அவர்களுக்கு தெரிவிப்போம். அதில் மிகவும் முக்கியமானது அந்த வித சுவையூட்டிகள் அல்லது நிறமூட்டிகள் சேர்க்காமல் சுத்தமான உணவை சமைக்க வேண்டும் என்பதுதான். ஒரு நாள் அவர்களுடைய வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து அவர்களுடைய சமையலறை சுத்தமாக இருக்கிறதா, அவர்கள் உபயோகிக்கும் பாத்திரங்கள், சமையல் உபகரணங்கள் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்றும் சரிபார்ப்போம்.

எல்லா காரணிகளும் சரியாக அமைந்ததும், உடனே அவர்களுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்து எங்கள் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்வோம். இந்த கிச்சன் குயின்கள் எல்லோருமே எங்களுடைய பிஸினஸ் பார்ட்னர்கள் தான். யாரும் எங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் கிடையாது. அவர்கள் சுத்தமான, சுவையான, ஆரோக்கியமான வீட்டு உணவை தங்கள் குடும்பத்திற்கு செய்யும் போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தாலே போதும்.

ஹோட்டல்களில் பல நாட்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் சமைத்து தருகிறார்கள். இங்கு அப்படியில்லை. ஒரு நாள் முன்பு தான் என்ன மெனு என்றே திட்டமிடுவதால், அன்றே பொருட்களை வாங்கி சுடச்சுட சமைத்து கொடுக்கிறார்கள். அதனால் இங்கு கெட்டுப்போன உணவுக்கான வாய்ப்பே இல்லை” என்கிறார் செந்தில். எழுபது வயதாகும் கீதா தான் பெண்கள் சமையல் நிறுவனத்தின் வயதான கிச்சன் குயின். காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டு குடும்பத்திற்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றி வருகிறார். அடை அவியல், வெஜிடபிள் தோசை, காரக்குழம்பு என வீட்டுச் சுவையில் சுவையான உணவுகளை செய்து அசத்தி வருகிறார்.

‘‘செந்திலின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதால், எனக்கான தனிப்பட்ட நேரம் கிடைக்கிறது. எப்போதும் போல என் குடும்பத்திற்கு சமைக்கும் நேரம் தான் இவர்களுக்கும் செலவிடுவதால், அதற்கான தனிப்பட்ட நேரம் செலவு செய்ய வேண்டும் என்றில்லை. நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்ததால் எனக்கு நிறைய பேருக்கு சமைத்து பழக்கமுண்டு” என்கிறார் கீதா.

கவிதா, ஒரு வயது குழந்தையின் தாய். “திருமணமாகி உடனே குழந்தை பிறந்ததால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் சும்மா இருப்பதும் பிடிக்கவில்லை. அப்போது தான் ஃபேஸ்புக்கில் பெண்கள் சமையல் பற்றி கேள்விப்பட்டேன். வீட்டில் உங்கள் குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் என்ன சமைக்கிறீர்களோ அதையே சமைத்தால் போதும் என்றார்கள். வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் அதே உணவை தான் என் குழந்தைக்கும் கொடுக்கிறேன். ஆரோக்கியமான வீட்டு சமையல் என்பதால் பலரும் விரும்பி வாங்குகிறார்கள். நிலையான வருமானத்துடன் சுயமாக சம்பாதிக்கிறோம் என்பதே மன நிறைவாக இருக்கிறது” என்கிறார்.

‘‘பெண்கள் சமையல் அமைப்பில் மாதாந்திர சந்தா மூலம் பலரும் தினமும் ஒரே வீட்டில் இருந்து உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், குறிப்பிட்ட டயட்டில் இருப்பவர்களுக்கு கூட அவர்களுக்கு தேவையான உணவை எங்களால் கொடுக்க முடியும். கிச்சன் குயின்கள் சூடாக சுவையாக உணவை தயாரித்து பேக் செய்து வைத்திருப்பார்கள். எங்களுடைய டெலிவரி பார்ட்னர்கள் நேராக வீட்டிற்கே சென்று உணவை வாங்கி கொண்டு டெலிவரி செய்துவிடுவார்கள்.

எங்களிடம் பெண் டெலிவரி பார்ட்னர்களும் இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். சென்னையில் சுமார் 15-20 ஆக்டிவ் கிச்சன்கள் இயங்கி வருகிறது. கோவையிலும் இயங்கி வருகிறோம். இது தவிர சுமார் முப்பது கிச்சன்கள் பெண்கள் சமையல் அமைப்புடன் இணைந்திருக்கிறார்கள்’’ என்றார் செந்தில்.

அன்றாட சமையல் பொருட்களின் அசத்தலான மருத்துவக் குறிப்புகள்

*கர்ப்பிணிகளுக்கு காலை நேர மசக்கை இருந்தால் கொஞ்சம் ஓமத்தை சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டால் வாந்தி, வயிற்றுப் பிரட்டல் குறையும்.

*பாலுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் வறட்டு இருமல் நீங்கும்.

*சீரகத்தை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை நீங்கும்.

*இஞ்சியை மை போல அரைத்து சிறிது நேரம் மார்பில் பற்று போட்டால் நெஞ்சு சளி குறையும்.

*சுக்குப்பொடியை ஒரு ஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் நீங்கிவிடும்.

*இரண்டு கிராம்பை பல் அடுக்கில் வைத்துக் கொண்டால் பல்வலி நீங்குவதுடன் சாப்பிட்ட உணவும் எளிதில் ஜீரணமாகும். உமிழ் நீரை கண்டிப்பாக துப்பிவிட வேண்டும்.

*புளியை கெட்டியாக கரைத்து சூடுபடுத்தி தடவினால் சுளுக்கு டக்கென்று சரியாகும்.

*எள்ளைக் கழுவி (எண்ணெய் சேர்க்காமல்) வறுத்துப் பொடி செய்து, சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் எலும்புகள் பலப்படும். சாதத்தில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

*பசும் பாலை கறந்த சூட்டோடு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நாட்களுக்கு அதிகாலையில் குடித்து வர வறட்டு இருமல் நீங்கும்.

*ஒரு ஸ்பூன் கடுகை அரைத்து ஒரு ஸ்பூன் தேனில் கலந்து தினம் மூன்று வேளை உண்டுவர தீராத இருமல் நீங்கும்.

*சிறு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்க்கடுப்பு வராது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நலம் தரும் ரெசிப்பிகள் 2!! (மருத்துவம்)
Next post சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)