என் நண்பர்கள் என்னுடைய மறுபிரதிபலிப்பு!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 48 Second

‘‘எனக்கு அதிக நட்பு வட்டாரங்கள் கிடையாது. காரணம் என்னுடைய மிரராகத்தான் என் நண்பர்களும் இருக்கணும்னு நான் நினைப்பேன். அப்பதான் என்னால் அவர்களுடன் நட்பு உறவாட முடியும்’’ என்கிறார் செவ்வந்தி சீரியல் நாயகி திவ்யா. இவர் தன்னுடைய நட்பு மற்றும் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். ‘‘என்னோட சொந்த ஊர் கர்நாடகா கூர்க். பள்ளி ஒன்பதாம் வகுப்பு வரை பெங்களூரில்தான் படிச்சேன். அதன் பிறகு நாங்க கூர்கில் செட்டிலாயிட்டோம். அப்பா எக்ஸ். சர்வீஸ் மேன். அம்மா இல்லத்தரசி. எனக்கு ஒரு அக்கா. அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு பி.காம் படிச்சிட்டு இருந்த நேரம் தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

பள்ளியில் படிக்கும் போது நான் டிராமா மற்றும் நடன நிகழ்ச்சியில் எல்லாம் கலந்து கொள்வேன். அதில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த தயாரிப்பாளர் அவர்கள் அப்பாவிடம் கேட்டாங்க. அப்பா என்னிடம் கேட்ட போது, நானும் சரின்னு சொல்ல… உடனே கல்லூரியை பேக்கப் செய்திட்டு நடிக்க வந்துட்டேன். அப்ப நான் கல்லூரியில் சேர்ந்து ஆறு மாசம் தான் ஆகியிருந்தது. முதல் செமஸ்டர் தேர்வு தான் எழுதி இருந்தேன். அதன் பிறகு என்னால் தொடர முடியவில்லை. நடித்துக் கொண்டே படிக்கலாம்ன்னு தான் நினைச்சேன்.

ஆனால் முடியவில்லை. அதனால் பாதியிலேயே படிப்பை டிஸ்கன்டின்யு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய முதல் படம் 12 ஏ.எம். இயக்குனர் காசிநாத் அவர்களின் மகனுடன் ஜோடியாக கன்னட படத்தில் நடிச்சேன். அதன் பிறகு இன்னொரு கன்னட படத்தில் நடிச்சேன். இந்த இரண்டு படங்களை பார்த்து எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதல்ல அம்மா வேண்டாம்ன்னு சொன்னாங்க.

இரண்டு படம் தான் செய்திருக்க. அதற்குள் சீரியல்னா உனக்கு பட வாய்ப்பு குறையும்ன்னு சொன்னாங்க. ஆனால் என்னைப் பொறுத்தவரை சினிமாவா, சீரியலா இரண்டில் எதுவாக இருந்தாலும், மக்கள் மனதில் நான் என்றுமே நிலைத்திருக்கணும்னு நினைச்சேன். அதனால் சீரியலுக்கு ஓ.கே சொல்லிட்டேன். முதல்ல கன்னடத்தில் ஒரு சீரியலில் நடிச்சேன். அதன் பிறகு தமிழில் கேளடி கண்மணி, மகராசி இப்ப செவ்வந்தி சீரியலில் நடிக்கிறேன். மகராசியில் நடிச்சிட்டு இருந்த போது, கோவிட் காரணமாக என்னால் ஊரில் இருந்து வரமுடியல. அம்மாவும் கொஞ்சம் பயந்தாங்க. அதனால் அந்த சீரியலில் தொடர்ந்து என்னால் நடிக்க முடியல. கொஞ்சம் பிரேக் எடுத்திட்டு இப்ப செவ்வந்தியில் கமிட்டாகி இருக்கேன்’’ என்றவர் நட்பு பற்றி விவரித்தார்.

‘‘நான் ரொம்ப அமைதி டைப். நிறைய பேச மாட்டேன். அதேப்போல் யாரிடமும் ரொம்ப சீக்கிரமா பழகிடவும் மாட்டேன். அதனால என்னைப் பார்த்து பலர் ரொம்ப ஆட்டியூட் உள்ள பொண்ணு தான் நினைப்பாங்க. ஆனா பழகின பிறகு தானு என்னைப் பற்றி புரிஞ்சிருப்பாங்க. அதனாலேயே எனக்கு நண்பர்கள் குறைவு தான். அதற்காக நான் வருத்தப்பட்டதும் கிடையாது. என்னைப் புரிந்து கொண்டு எனக்காக இருக்கும் நட்புகள் போதும்னு தான் நான் நினைப்பேன். அதேபோல் நானும் என்னுடைய நட்புக்கு ரொம்பவே மரியாதைக் கொடுப்பேன். ஒன்பதாம் வகுப்பு வரை நான் பெங்களூரில் படிச்சிருந்தாலும் எனக்கு அங்கு பெரிய அளவில் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடையாது.

பத்தாம் வகுப்பு கூர்கில் படிச்சேன். அங்கு தான் எனக்கு உஷா அறிமுகமானாள். அவளுக்கும் எங்க வீட்டிற்கும் ஒன்பது கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். அவ நல்லா படிப்பா. நான் அவ அளவிற்கு படிக்கவில்லை என்றாலும், ஓரளவிற்கு நன்றாக படிப்பேன். எங்க வீட்டில் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். நல்லா படிக்கணும்னு சொல்வாங்க. அதனால அப்பா என்னை உஷா வீட்டிற்கு அனுப்பி வச்சிட்டார். அவ வீட்டில் இருந்தா இருவரும் சேர்ந்து படிப்போம், நானும் ஓரளவுக்கு நல்லா படிப்பேன்னு அப்பா நினைச்சார். ஒரு மாசம் அவ வீட்டில் தான் தங்கி இருந்தேன். நாங்க வேற வேற வீட்டில் இருந்தாலும் எங்க இரண்டு குடும்பமும் ஒரே குடும்பமாகத்தான் இருந்தோம்.

வார இறுதி நாட்கள் மட்டும்தான் நான் எங்க வீட்டிற்கு வருவேன். இதில் உஷாவுடைய அம்மா அவளை விட என் மேல் தான் அதிக பாசம் வச்சிருந்தாங்க. எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து தருவாங்க. உஷாவின் அப்பா பற்றி சொல்லவே வேண்டாம். அவ்வளவு ஸ்வீட் அவர். கூர்கில் வீட்டில் கேஸ் அடுப்பு இருந்தாலும், வீட்டின் பின் வாசலில் மண் விறகடுப்பு இருக்கும். அசைவ உணவு எல்லாம் அங்க தான் சமைப்பாங்க. அவர் அசைவ உணவு ரொம்ப நல்லா சமைப்பார். அவர் செய்யும் பெப்பர் சிக்கன் எனக்கு ரொம்ப பிடிக்கும். சிக்கன் துண்டுகளில் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து செய்து சமைத்து தருவார்.

அப்பறம் கருவாடும் ரொம்ப நல்லா செய்வார். அவ்வளவு சுவையா இருக்கும். அதுவும் கூர்க் குளிருக்கு மிளகு காரம் மற்றும் சூடா சிக்கன் சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். உஷாக்கு கல்யாணமாயிடுச்சு. ஆனா நான் இப்பகூட ஊருக்கு போனா… அங்கிள், ஆன்ட்டிய பார்க்காம வரமாட்டேன். நான் ஊருக்கு வரேன்னு தெரிஞ்சா போதும்… உடனே அங்கிள் எனக்காக இந்த சிக்கனை செய்து வைச்சிடுவார். சில சமயம் சீரியலில் நான் அழுவது போல காட்சி வரும். அதைப் பார்த்து அங்கிளும் கண் கலங்கிடுவார். உடனே எனக்கு போன் போட்டு இந்த மாதிரி அழுகிற சீன் எல்லாம் நடிக்காதன்னு சொல்வார். நானும் அது வெறும் நடிப்புதான் சொன்னாலும், அவர் மனசு கேட்காது.

நீ எப்போதுமே சிரிச்சிட்டே இருக்கணும்னு சொல்வார். அவரோட அன்பிற்கு ஈடு இணை கிடையாது. கூர்க் ஒரு சின்ன ஊர் தான் என்றாலும், நானும் உஷாவும் பள்ளி, வீடு தவிர வேற எங்கேயும் போகமாட்டோம். அங்க முழுக்க முழுக்க காபி தோட்டம் அதிகம். அதனால எனக்கும் உஷாவிற்கும் காபி தோட்டத்திற்கு சென்று சுற்றிப்பார்க்க பிடிக்கும். அங்கு போய் நாங்களும் அங்குள்ள அக்காவுடன் சேர்ந்து காபி கொட்டைகளை எல்லாம் பறிப்போம். அதைத் தவிர அங்குள்ள பேக்கரி கடைகளுக்கு எல்லாம் போவோம். அது தான் நானும் உஷாவும் அதிக பட்சம் வெளியே போகுமிடம்.

காரணம் எங்க இரண்டு பேர் வீட்டிலேயும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். கல்லூரியில் படிக்கும் போது மோனிஷா மற்றும் ஸ்வேதான்னு இரண்டு தோழிகள். அவங்களுடன் நான் ஆறு மாசம் தான் பழகினேன். அதன் பிறகு நடிக்க வந்துவிட்டதால், ஒரு இரண்டு வருஷம் அவங்களுடன் தொடர்பில் இருந்தேன். இப்ப என்னுடைய செல் நம்பர் எல்லாம் மாறிவிட்டதால், என்னால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை’’ என்றவர் சின்னத்திரை நட்பு வட்டாரங்கள் பற்றி பகிர்ந்தார்.

‘‘சீரியலில் நடிக்க வந்த பிறகு எனக்கு இங்கு நட்பு என்று சொல்வதை விட ஒரு குடும்பமே எனக்கு கிடைச்சிருக்குன்னு தான் சொல்லணும். கேளடி கண்மனி சீரியலில் நானும் ஆர்னவும் சேர்ந்து நடிச்சோம். அப்படித்தான் எனக்கு ஆர்னவின் நட்பு கிடைச்சது. அப்போது நான் சீரியல் துறைக்கு புதுசு என்பது மட்டுமில்லாமல், நான் யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டேன். ஆர்னவ் மட்டும் தான் என்னை வம்பிழுத்துக் கொண்டு பேசுவான். அதனால் அவனிடம் நான் நானா இருப்பேன். அதன் பிறகு மகராசி சீரியலில் நடிச்ச போது அந்த செட்டில் நடிச்ச எல்லாருமே எனக்கு ரொம்ப நெருக்கமானாங்க. என்னுடைய இரண்டாவது குடும்பம்னுதான் சொல்லணும்.

இதில் ஆர்யன், மிதுன் இருவரும் எனக்கு ரொம்ப க்ளோஸ். அதன் பிறகு விஜய், ராம்ஜி சார், ரவி சார், ரியாஸ் சார் எல்லாருமே என்னை அவங்க வீட்டு பொண்ணு போல பார்த்துக்கிட்டாங்க. சில சமயம் ஷூட் சீக்கிரமா முடிஞ்சிடும். அப்ப எல்லாரும் சேர்ந்து ஒரு நல்ல ஓட்டலில் போய் டின்னர் சாப்பிடுவோம். நானும் மிதுனும் ஷூட்டிங்காக ஹரித்வார் போன போது தான் எங்களின் நட்பு அதிகமாச்சு. சந்தோஷம், சோகம் எதுவாக இருந்தாலும் நான் ஆர்யன் மற்றும் மிதுன் இருவரிடம் தான் ஷேர் செய்வேன்.

அதேபோல் டிசைனர் ரம்யா. ரம்யா நாங்க ஹரித்வார் ஷூட் போன போது தான் பழக்கமானாங்க. இப்ப என்னை எங்கயாவது வெளியே கூட்டிக் கொண்டு போகணும்ன்னா ரம்யாவும், மிதுனும் எங்க வீட்டில் வந்து சொன்னா தான் அனுப்புவாங்க. எங்க மூணு பேருக்குள்ளேயும் எந்த ரகசியமும் இருக்காது. மற்றபடி நாங்க எங்கேயும் ஊருக்கு எல்லாம் போனதில்லை.

காரணம் ஷூட்டிங் மாசத்தில் 20 நாட்கள் தொடர்ந்து இருக்கும். காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை தொடர்ந்து ஷூட் இருக்கும். அதில் எனக்கு மெயின் ரோல் என்பதால், கண்டிப்பா எல்லா நாட்களும் எனக்கு ஷூட் இருக்கும். வாரத்தில் ஒரு நாள் தான் லீவ். அப்ப வீட்டை சரி செய்வது, எனக்கான கடைக்கு போவதுன்னு போயிடும். மாசக்கடைசியில் பத்து நாள் ஷூட் இருக்காது.

அந்த சமயத்தில் நான் ஊருக்கு போயிடுவேன். செவ்வந்தி சீரியலில் என்னுடைய ஒரே தோழி பிரியங்கா. இதில் நெகட்டிவ் ரோல் செய்றாங்க. நானும் அவளும் ஒரே மாதிரி. அவளும் யாருடனும் ரொம்ப பேச மாட்டா. நானும் அப்படித்தான். நாங்க பழகின பிறகு தான் எங்க இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருப்பது புரிந்தது. அப்புறம் என்ன நாங்க ஃப்ரெண்ட்சாயிட்டோம்’’ என்றார் தன் தோழி பிரியங்காவை கட்டிப்பிடித்தபடி திவ்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குட்டிக் கடலையில் கொட்டிக் கிடக்கும் சத்துகள்!!(மருத்துவம்)
Next post வாழ்க்கை + வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)