பெண்களை தொழிலதிபராக மாற்றும் எம்பிராய்டரி!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 32 Second

எம்பிராய்டரி… சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கைவினை. ஊசி மற்றும் நூல் கொண்டே அழகான சித்திரம் வரையலாம். தற்போது நூல் மட்டுமில்லாமல் மெட்டல் இழைகள், முத்துக்கள், மணிகள், சீக்வென்ஸ் போன்ற பொருட்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செய்யப்படும் கலை மிளிரும் கைப்பணியாகும்.

இந்தியாவில் எம்பிராய்டரி என்ற சித்திரத் தையற்கலையானது, வரலாற்று முற்காலத்திலிருந்தே பயிலப்பட்டு வந்துள்ளது. சிந்துவெளி நாகரிக மக்கள், இக்கலையைப் பயின்று வந்ததாகவும், மேலும், சித்திரத் தையலுக்குப் பயன்படும் ஊசிகள் அங்கு கிடைத்துள்ளதாகவும், எம்பிராய்டரி கலை நிறைந்த சிந்துவெளிப் பதுமைகளின் ஆடைகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் பெண்களை வெகுவாக கவர்ந்து இருக்கும் எம்பிராய்டரி அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரிய பங்கினை வகித்து வருகிறது. பல பெண்களுக்கு ஒரு வாழ்வாதாரம் மட்டும் இல்லாமல் அவர்களை சிறு தொழிலதிபராகவும் மாற்றி வருகிறார் கொளத்தூரை சேர்ந்த கீதாஞ்சலி. இவர் கடந்த எட்டு வருடமாக இந்த துறையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

‘‘நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது தான் இதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வீட்டில் இருந்துதான் செய்து வந்தேன். நண்பர்கள், உறவினர்களுக்கு பிளவுஸ் டிசைன் வடிவமைத்துக் கொடுத்த வந்தேன். அவர்கள் மூலமாக எனக்கு ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. அதன் பிறகு ஏன் இதை ஒரு கடையாக மாற்றி அமைக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜி2 மிஸ் பொட்டிக் மற்றும் ஃபேஷன் அகாடமி. இதனை கடையாக 2018ம் ஆண்டு ஆரம்பித்தாலும், அதற்கு முன்பாக கடந்த ஆறு வருடமாக இந்த பொட்டிக்கை நான் வீட்டில் இருந்தபடியே நடத்தி வந்தேன். கடையாக ஆரம்பித்த பிறகு தான் பயிற்சி மையம் ஒன்றையும் நிறுவினேன்.

தையலில் ஆரம்பித்து எம்பிராய்டரி என அனைத்து ஃபேஷன் சம்பந்தமான பயிற்சிகளும் இங்குண்டு. அனைத்தும் ஒரு மாதம் மற்றும் இரண்டு மாத டிப்ளமா பயிற்சிகள்தான். வருஷத்துக்கு 100 முதல் 150 பேர் வரை இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். இதில் அனைவரும் பெண்கள். இது பெண்களுக்கான பயிற்சி மையம் என்பதால் பயிற்சியாளரையும் பெண்களாக நியமித்து இருக்கிறேன்.

இது வரை 1200 பேர் எங்களிடம் பயிற்சி எடுத்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் அவர்களுக்கு இந்த கைத்தொழில் பெரும் வாழ்வாதாரமாக இருந்துள்ளது. பெரும்பாலான ஆண்கள் வேலை இல்லாமல் இருந்த நிலையில் வீட்டில் இருந்தபடியே பெண்கள் தங்கள் குடும்பத்திற்கான வருமானத்தை இதன் மூலம் ஈட்டி வந்தனர்.

கொளத்தூரில்தான் என்னுடைய முதல் கடை மற்றும் பயிற்சி மையத்தை துவங்கினேன். தற்போது நுங்கம்பாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூரிலும் எங்களின் கிளை இயங்கி வருகிறது. ஓரிரு மாத பயிற்சி எடுத்துக் கொண்டால் போதும், கண்டிப்பாக அவர்களுக்கென சொந்தமாக ஒரு தொழில் துவங்கலாம்’’ என்றார் கீதாஞ்சலி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாதத்தைப் பாதுகாப்போம்! (மருத்துவம்)
Next post நீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…!! (அவ்வப்போது கிளாமர்)