ஒரு தயாரிப்பாளரா ரஜினி சாரை வைத்து படம் செய்யணும்! (மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 12 Second

ஒரு சினிமா உருவாக இயக்குனர், நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர் என பலர் இருந்தாலும், அந்த சினிமா திரையில் தோன்ற முக்கிய பங்கு தயாரிப்பாளர்களுக்கு உண்டு. இவர்கள் அனைவருக்கும் சம்பளம் முதல் சினிமா எடுக்க தேவைப்படும் செலவு முழுதும் இவர்களின் பொறுப்பு. அப்படிப்பட்ட சினிமாவில் கடந்த 80 வருடமாக கோலூன்றி தாத்தா, அப்பா, பேரன், பேத்தி என நான்கு தலைமுறையாக தயாரிப்பு துறையில் சாம்ராஜ்ஜியம் அமைத்தவர்கள் தான் ஏ.வி.எம் நிறுவனம். தாத்தா மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஆரம்பித்த இந்த நிறுவனத்திற்கு நான்காம் தலைமுறையை சேர்ந்த பேத்தி அருணா, சி.இ.ஓவாக பதவி ஏற்றுள்ளார். இவர் பார்வையில் ஏ.வி.எம்…

அருணா குகன்..?

‘‘ஏ.வி.எம்மின் வரலாறு எல்லாருக்கும் தெரியும். பெரிய தாத்தா ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் நான் சி.இ.ஓவாக பதவி ஏற்றிருக்கேன். நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு நல்ல அத்லீட் என்பதுதான் என் அடையாளமாக இருந்தது. அடுத்து எனக்கு கலை சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வமுண்டு. அதனால் கல்லூரி படிப்பை முடிச்சிட்டு காஸ்ட்யூம் டிசைனிங் படிச்சேன். சைக்காலஜிஸ்ட்டிலும் ஆர்வம் அதிகம். ஒருவேளை நான் தயாரிப்பாளரா ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பா சைக்காலஜிஸ்டாகி இருப்பேன். ஆனா சின்ன வயசில் இருந்தே பெரிய தாத்தா, தாத்தா, அப்பா என பரம்பரையாக செய்து வந்த தொழில் என்பதால் கண்டிப்பாக இதில் தான் என்னை இணைத்துக் கொள்வேன்னு தெரியும்.

அதற்கான சரியான நேரம் வரும் வரை சில காலம் ஃபேஷன் துறையில் ஈடுபட்டு வந்தேன். அதே சமயம் தயாரிப்பு குறித்தும் கொஞ்சம் கொஞ்சமாக கத்துக் கொள்ள ஆரம்பிச்சேன். கல்லூரியில் படிக்கும் போதே அப்பா எனக்கும் என் அக்கா அபர்ணாவிற்கும் இந்த துறையை அறிமுகம் செய்துட்டார். காலேஜ் முடிச்சிட்டு நானும் அபர்ணாவும் இங்க வந்திடுவோம். இங்க ஒவ்வொரு துறையிலும் வேலை பார்ப்போம். எங்களால் இதில் செயல்பட முடியும்ன்னு ஒரு தன்னம்பிக்கை வந்த பிறகு நான் முழுமையாக தயாரிப்பு பக்கம் இறங்கிட்டேன். எனக்கு முழுக்க முழுக்க கிரியேடிவ் பக்கம் தான் ஆர்வம் அதிகம்.

அதனால் தாத்தா சினிமா அல்லது சீரியலுக்கான கதை கேட்கும் போது நானும் அவருடன் சேர்ந்து கேட்பேன். இப்ப ஓ.டி.டி.யிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறோம். காலத்திற்கு ஏற்ப நம்முடைய தொழிலிலும் மாற்றம் இருக்க வேண்டும் என்று பெரிய தாத்தா சொல்வார். நாங்களும் அதற்கு ஏற்ப எங்க நிறுவனத்தினை வழி நடத்தி வருகிறோம்.

சினிமா மற்றும் ஓ.டி.டி யின் இன்றைய கதை களம்..?

ஏ.வி.எம் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கைட்லைன் இருக்கு. பெரிய தாத்தா காலம் முதல் இப்ப நான் இதில் இணைந்த பிறகு வரை அதை உடைத்ததில்லை. என்னைப் பொறுத்தவரை சீரியலோ, சினிமாவோ, வெப் சீரிஸ் எதுவாக இருந்தாலும், அதன் கதை களம் நல்லா இருக்கணும். எப்போதும் பார்க்கும் அதே கதையாக இல்லாமல் கொஞ்சம் வேறுப்பட்டு இருக்கணும். இன்னும் சொல்லப்போனால், அவுட் ஆஃப் த பாக்ஸ் யோசிக்கணும்.

தாத்தாக்கள் மற்றும் அப்பாவிடம் கற்றுக் கொண்டது..?

பெரிய தாத்தாவை நான் பார்த்ததில்லை. அவர் இருந்த காலத்தில் வேலைப் பார்த்தவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரைப் பற்றி சொல்வாங்க. தாத்தா, அப்பா இருவருமே ஒரு உறவினை எப்படி மதிக்கணும்ன்னு சொல்லித் தந்திருக்காங்க. அது இங்க வேலைப் பார்க்கிறவங்க மட்டும் இல்லை, பிரபலங்களைக் கூட அவங்க ரொம்ப மரியாதையா தான் நடத்துவாங்க. இப்பக்கூட எஸ்.பி.எம் சார், நடிகர் சிவக்குமார் சார் எல்லாரும் தாத்தாவையும் அப்பாவையும் பார்க்க வருவாங்க. ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் நம்பிக்கை அவர்களுடன் வேலைப் பார்க்கும் இயக்குனர் முதல் அனைவருக்குமான சம்பளம். அதை நாங்க எப்போதுமே தாமதிச்சதில்லை.

அதனால தான் இன்றும் பலர் திரும்ப திரும்ப வராங்க. வேலை இருக்கோ இல்லையோ அலுவலகத்தில் முழு நேரம் இருக்கணும். எனக்கு தொழில் சார்ந்து சின்னச் சின்ன சந்தேகம் வரும். அதை தாத்தா, அப்பாவிடம் கேட்டு தெரிஞ்சிப்பேன். இந்த துறையைப் பொறுத்தவரை எல்லாமே ஸ்மூத்தா போகும்ன்னு சொல்ல முடியாது. சில இக்கட்டான சூழல் ஏற்படும். அதை சமாளிக்க இவங்க இரண்டு பேரிடம் ஆலோசனை கேட்பேன். மேலும் ஓ.டி.டி வந்த பிறகு நிறைய திறமையான இளைய தலைமுறையினர் இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்.

தயாரிப்பு துறையில் பெண்ணாக நீங்கள்..?

பெண்கள் சொல்வதை கேட்க யாருக்கும் பிடிக்காது. காரணம் இந்த துறை ஆண்கள் சார்ந்தது. நான் ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வெர்ட். எதையுமே முகத்திற்கு நேரா சொல்லிடுவேன். நிறைய பேர் சொல்வாங்க. சில சமயம் ரொம்ப ஃப்ரண்ட்லியா இருக்கீங்க. பல சமயம் அப்படியே மாறிடுறீங்கன்னு. எனக்கு வேலை ஒழுங்கா நடக்கணும். அவ்வளவு தான். என்னை அப்பா ஒரு பெண்ணா இப்படித்தான் இருக்கணும்ன்னு சொல்லி வளர்க்கல.

என்னுடைய எண்ணத்திற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கார்.  இந்த துறைக்கு எங்க குடும்பத்தில் இருந்து பெண்கள் யாருமே வரல. அப்பா என்னையும் அக்காவையும் இந்த நிறுவனத்திற்கு ஒரு பார்ட்னரா நியமிச்சிருக்கார். அதே சமயம் ஒரு பெண்ணா நீ இதை செய்யக்கூடாதுன்னு சொன்னா எனக்கு பிடிக்காது. அப்பதான் அதை செய்யணும்னு எண்ணம் ஏற்படும்.

சீரியல் vs வெப் சீரிஸ்..?

சீரியல் என்பது ஒரு தொடர் கதை. 100, 500 எபிசோட் வரை போகும். அதில் அப்ப கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப எழுதுவோம். வெப் சீரிஸ் குறிப்பிட்ட சில எபிசோட்கள் தான் இருக்கும். மேலும் இது சர்வதேச அளவில் இருப்பதால் கதைக்கான இடம் நிறைய இருக்கும். காமெடி, ரொமான்ஸ், த்ரில்லர்ன்னு எல்லா விதமான கதைகளை கொண்டு வரலாம். மேலும் இது ஒரு கார்ப்பரேட் உலகம். அதில் வேலை பார்க்கும் விதமே வேறு.

தமிழ் ராக்கெர்ஸ்..?

ஓ.டி.டியில் கதை செய்யலாம்ன்னு திட்டமிட்ட போது நிறைய கதை வந்தது. சினிமா பைரசி நான் சின்ன வயசில் இருந்தே கேள்விப்பட்ட விஷயம். அதை எப்படி செய்றாங்கன்னு மக்களுக்கும் புரிய வைக்கணும். மேலும் சினிமா துறை எப்படி செயல்படுதுன்னு மக்களுக்கு தெரியப்படுத்த நினைச்சேன். சினிமா ஒரு பெரிய உலகம். அதில் லைட்பாய் முதல் இயக்குனர், நடிகர், நடிகைகள்ன்னு பலர் வேலைப்பார்ப்பாங்க. நல்ல தரமான படம் திரையில் வெளியாவதற்கு முன் அதை இலவசமா மக்களுக்கு கொடுக்கும் போது அந்த துறையில் என்ன பாதிப்பு ஏற்படும்ன்னு அதைப் பற்றி செய்யணும்ன்னு நினைச்சேன். மேலும் ஏ.வி.எம்மின் தீம் சத்தம் கேட்கும் போது ஒரு நல்ல படம் தருவாங்கன்னு நம்பிக்கையை நான் உடைக்க விரும்பல. என்னைப் பொறுத்தவரை கதைதான் முக்கியம்.

நடிகர்களே தயாரிப்பாளர்களாக இருக்காங்களே..?

பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் வேலைப் பார்த்தவங்களுக்கு அவங்களைப் பற்றி தெரியும். ஏ.வி.எம்மிற்கு என தனிப்பட்ட பாரம்பரியம் இருக்கு. அதை இன்றைய தலைமுறையினரான நாங்களும் வழி நடத்தி செல்லணும் அவ்வளவு தான். மற்றபடி இதைப் போட்டியா நான் நினைக்கல. நாங்க என்ன செய்யப் போறோம்,எங்களுக்கான கதை என்ன என்று தெரியும். அதனால் நடிகர்கள் தயாரிப்பாளரா மாறினாலும் அது எங்களை பெரிய அளவில் பாதிக்காது.

ஏ.வி.எம்மின் சி.இ.ஓ..?

இதில் நான், தாத்தா, அப்பா, அக்கா நால்வரும் பார்ட்னர்கள். ஒரு தயாரிப்பாளரா கதைக் கேட்பது. சரியான கதையை தேர்வு செய்வது என்னுடைய பொறுப்பு. நான் கிரியேடிவ் சார்ந்து இருந்தாலும் இப்போது தயாரிப்பாளரா எல்லா வேலையும் பார்க்கிறேன். ஒரு பிராஜெக்ட் செய்யும் போது, நாம் போட்ட பட்ஜெட்டைவிட சில சமயம் அதிகமாகும். அந்த நேரத்தில் அதை சமாளிக்கணும். மேலும் ஒரு படம் தயாரிக்கும் போது அதற்கான பட்ஜெட் என்ன என்று நிர்ணயிக்கணும். பிரச்னை ஏற்பட்டா அது மீண்டும் நடக்காமல் பார்த்துக்கணும். இயக்குனருக்கான ஸ்பேஸ் கொடுக்கணும். என்னால் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டை கொடுக்க முடியலைன்னா அது குறித்து ரொம்பவே வெளிப்படையா இருக்கணும்.

ஏ.வி.எம் ஷுட்டிங் மெமரீஸ்..?

இங்க நிறைய இருக்கு. நான் படிச்சிட்டு இருக்கும் போது ஜெமினி படத்தின் ‘ஓ போடு… ’ பாட்டுக்கு இங்க தான் செட் போட்டாங்க. அந்த பாட்டோட வைப் இந்த செட் முழுக்க நிரம்பி இருந்தது. அதேபோல் ரஜினி சார் நடிச்ச சிவாஜி படம். அந்த ஷூட்டிங் போது நான் இங்க தான் இருந்தேன். மின்சாரக் கனவு, பிரியமான தோழி படங்கள் ஊட்டியில் படம் பிடிச்சாங்க. ஊட்டியில் எங்களுக்கு வீடு இருக்கு. விடுமுறைக்கு போன போது இந்த பட ஷூட்டிங் நடந்தது. மத்தபடி படிப்பில் கவனம் செலுத்தணும்ன்னு வீட்டில் எல்லா ஷூட்டிங்கிற்கும் அனுப்ப மாட்டாங்க.

பெரிய தாத்தா..?

அவருக்கு எல்லாமே தெரியும். ஒரு லெஜண்ட் அவர். இங்க அலுவலகத்தில் ஒரு லைட் போனாக்கூட அவரே ஸ்டோர் ரூம் போய் ஸ்டேஷ்னரி புத்தகத்தில் என்ட்ரி போடுவார். எங்களுக்கு மும்பையில் அலுவலகம் இருந்தது. அங்க ஏதாவது பிரச்னை வந்தா கூட அதற்கான காரணம் என்ன என்று அலசிப் பார்ப்பார். யாரும் இல்லாத அறையில் தேவையில்லாமல் லைட், ஃபேன் எரியக்கடாதுன்னு சொல்வார். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். எல்லாரிடமும் ரொம்ப அன்பா இருப்பார். இந்த துறையில் மற்றவர்களை மிதிச்சு முன்னேறணும்ன்னு அவர் நினைச்சதில்லை.

ஸ்டியோவில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம்..?

எல்லாருக்குமான பங்கை பிரிச்சு கொடுத்திட்டாங்க. எங்களின் பங்கு இன்னும் ஸ்டுடியோவாகத்தான் செயல்பட்டு வருது. டப்பிங் தியேட்டர், சென்ட்ரல் ஜெயில் செட், கோயில் எல்லாம் இருக்கு. மேக்கப் ரூம் ஒன்றை பிரத்யேகமா அமைச்சிருக்கோம்.

ரஜினி சார்..?

அவரோட எனர்ஜியை வேறு யாருடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. நான் அவரோட ரசிகையும் கூட. மறுநாள் அவரைப் பார்க்க போறதா இருந்தா, எனக்கு அன்று இரவு தூக்கமே வராது. ரொம்ப சிம்பிளானவர், அன்பானவர். அவர் இருக்கிற இடத்தில் எப்போதும் ஒரு எனர்ஜி இருக்கும்.

உங்களின் கதாநாயகர்..?

என்னால் அப்படி எல்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. கதை பிடிச்சு இருந்தா, அந்த கதாப்பாத்திரத்திற்கு யார் செட்டாவாங்களோ அவர் தான் கதாநாயகர். கதாநாயகருக்காக நாங்க படம் செய்யததில்லை. காரணம் என்றைக்குமே கதைதான் நீடிக்கும். அதற்கு ஏற்ற கதாநாயகர்களை சரியா தேர்வு செய்யுணும்.

இளம் இயக்குனர்கள்..?

நிறைய பேர் கதை எழுதி அனுப்புறாங்க. அதில் பாதி கதை ஏற்கனவே வந்த சினிமா சார்ந்து இருக்கு. இல்லைன்னா இரண்டு சினிமாவை சேர்த்து ஒரு படமா எழுதி அனுப்பறாங்க. வெப் சீரிஸ்க்கு ஒரு படத்தை பத்து எபிசோடா பிரிச்சு அனுப்புறாங்க. புதிய கதையை கண்டிப்பா நாங்க வரவேற்கிறோம். அப்படி எழுதி அனுப்பும் இளம் மற்றும் புதிய இயக்குனருக்கு வாய்ப்பு அளிக்க நாங்க தயார். ஒரு முறை பிரசாத் ஸ்டியோவுடன் இணைந்து கதை தேர்வு செய்தோம்.

1000 கதைகள் வந்தது. மூன்று தான் தேர்வாச்சு. கதைக்கான கரு நல்லா இருந்தா அதை கண்டிப்பா டெவலெப் செய்ய முடியும். தாத்தா பழைய படமெல்லாம் மறுபடியும் பார்த்த போது, ஒரு சில இடங்களில் இப்படி மாற்றி இருக்கலாம். இந்த காட்சியை நீக்கி இருக்கலாம்ன்னு சொன்னார். ஏற்கனவே வெளியாகி இருக்கும் படத்தை மாற்றி அமைக்க முடியும்போது கண்டிப்பா ஒரு நல்ல தரமான கதையினை இன்றைய தலைமுறையினரால் கொண்டு வரமுடியும். பார்வையாளர்கள் புதுமையை கொடுத்தா கண்டிப்பா கொண்டாடுவாங்க.

ஏ.வி.எம்மின் எதிர்காலம்..?

இப்ப ஓ.டி.டி. அடுத்து என்ன மாற்றம் வருதோ அதற்கு ஏற்ப நாங்களும் மாறுவோம். இந்த துறை மிகவும் பொறுப்பு நிறைந்தது. பாதியிலேயே விட்டு செல்ல முடியாது. இது ஒரு நீண்ட பயணம். தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து நான் இந்த நிறுவனத்தை மேலும் மெருகேற்றி முன்னேறி செல்வேன். மேலும் ஒரு குறிப்பிட்ட கதைக்களம் மட்டும் இல்லாமல் அனைத்து கதைகளையும் செய்யும் எண்ணம் இருக்கு. ஓ.டி.டியில் எங்களின் முதல் தயாரிப்பு ‘தமிழ் ராக்கர்ஸ்’. அடுத்தடுத்து நிறைய செய்யலாம். ஆனால் என்னுடைய நோக்கம் எண்ணிக்கை கிடையாது. தரமான கதையினை மட்டுமே கொடுக்க வேண்டும். மேலும் இப்ப கதாநாயகிகளுக்கு என தனிப்பட்ட கதைகள் இருக்கு. அதில் கவனம் செலுத்தினால் நல்ல நல்ல கதைகளை கொண்டு வர முடியும். பெரிய தாத்தா சொன்னது போல் முயற்சி திருவினையாக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

ஃபேஷன் டிசைனர், தயாரிப்பாளர்…அடுத்து..?

எனக்கு ஒரு படம் இயக்கணும்ன்னு ஆசை. கதை எழுதிக் கொண்டு இருக்கேன். ஆனால் அதை படமா எப்ப இயக்குவேன்னு தெரியல. இயக்குனரா என் முழு திறமையை வெளிப்படுத்தணும். அதற்கு நான் தனிப்பட்ட முறையில் சிந்திக்கணும். அந்த காலம் வரும் போது பார்க்கலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளரா ரஜினி சாரை கொண்டு ஒரு படம் செய்யணும்னு எண்ணம் இருக்கு.

ஓ.டி.டிதான் எதிர்காலமா..?

அப்படி சொல்லிட முடியாது. எனக்கு எல்லாமும் சேர்ந்து இருக்கணும். சினிமா இல்லைன்னா எதுவுமே இல்லை. அப்ப கொரோனா என்பதால் மக்கள் எல்லாரும் ஓ,டி.டி பக்கம் சென்றாங்க. இப்ப நாம பழைய நிலைக்கு மாறி வருகிறோம். மக்களும் தியேட்டருக்கு போக ஆரம்பிச்சிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை இரண்டுமே செயல்படணும். ஓ.டி.டி சர்வதேச அளவில் இயங்கும் தளமாக இருந்தாலும் தியேட்டரில் சினிமா பார்க்கும் கலாச்சாரம் என்றுமே மாறாது. பலர் உங்க தயாரிப்பில் எண்ணில் அடங்கா படங்கள் இருக்கு. அதற்கான ஓ.டி.டி தளம் அமைக்கலாமேன்னு கேட்டாங்க. எங்களுக்கு அதற்கான எண்ணம் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ் மொழியில் வீட்டை அலங்கரிக்கலாம்!(மகளிர் பக்கம்)
Next post முதலிரவு குழப்பங்கள்!!(அவ்வப்போது கிளாமர்)