கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!!(மருத்துவம்)

Read Time:7 Minute, 25 Second

எனக்கு வயது 50. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் என் மனைவிக்கும் பரவி உள்ளதோ என சந்தேகமாக உள்ளது. யானைக்கால் நோய் ஏன் ஏற்படுகிறது? இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுமா? இதற்கு என்ன தீர்வு?
– சு.பாண்டியன், வனசுந்தராபுரம்.

யானைக்கால் நோய் எனப்படும் லிம்ஃபாடிக் ஃபைலரியாசிஸ் (Lymphatic filariasis) உடலின் நிண நீரில் வாழும் ஒட்டுண்ணிப் புழுக்களால் உருவாகிறது. நிணநீரில் வாழும் மைக்ரோஃபைலேரியா எனப்படும் ஒட்டுண்ணிப் புழுக்களின் லார்வாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுக்கப் பயணிக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டவரைக் கொசு கடிக்கும்போது, அதன் லார்வாக்கள் கொசுவுக்குத் தொற்றி, அந்தக் கொசு இன்னொருவரைக் கடிக்கும் போது அவருக்கும் யானைக்கால் நோய் ஏற்படுகிறது.  திடீரென அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, குளிர் நடுக்கம், மலேரியா போல விட்டு விட்டு தோன்றும் காய்ச்சல், கை, கால்களில் தோல் வீக்கம், வலி, பெரிதான நிணநீர் முடிச்சுகள், நிணநீர் குழாய் வீக்கம், கை, கால்களின் கீழ்ப்பகுதி, பிறப்புறுப்பில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.   

இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு டைஈதல் கார்பமிஸின் (டிஈசி -ஹெட்ரசான்) மாத்திரைகள் தரப்படுகின்றன. இந்த மருந்தை நோயாளியின் எடையில் கிலோவுக்கு 6 மி.கி என்ற கணக்கில் இரண்டு வாரங்களுக்குத் தர வேண்டும். இதன் விலை மிகவும் மலிவு. இதனுடன் அல்பெல்டஸோல் மாத்திரையையும் மருத்துவர் பரிந்துரையுடன் அளவாக எடுத்துக்கொள்ளலாம்.  கால் வீக்கத்தைக் குறைக்க எலாஸ்டிக் பேண்ட் அணிவது நல்லது.

இது நிரந்தரமாகக் கால் வீங்கிப்போவதைத் தவிர்க்கும். இரவு நேரத்தில் கட்டை அவிழ்த்துவிடுவது நல்லது. இந்த நோய் கொசுக்கள் மூலம் பரவுவதால், சுகாதாரமான சூழல் அவசியம். இந்த கொசுக்கள் மாலை நேரத்தில்தான் கடிக்கும் என்பதால், கொசுவலை போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த நோய்  
பரவாமல் தடுக்கலாம்.

பிறந்து பத்து மாதங்களாகும் என் மகனுக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இனிப்பு, குளிர்பானம், வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை நான் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் மகளுக்கு ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதனால் அச்சமும் குழப்பமும் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைக்கான தீர்வை அறிய விரும்புகிறேன்.
– தேவ சங்கீதா, உடுமலை.

நீங்கள் சாப்பிடும் எந்த உணவும், அப்படியே நேரடியாகக் குழந்தைக்குச் செல்வதில்லை. உணவுகள் செரிமானமாகி, `தாய்ப்பால்’ என்ற உலகின் மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகத்தான் குழந்தைக்குச் செல்கிறது. எனவே, தாய்ப்பாலால் குழந்தைக்கு எந்த வகையிலும் ஊட்டச்சத்து சார்ந்த பாதிப்புகள் ஏற்படாது. ஒருவேளை நீங்கள் சாப்பிடும் சில உணவுகளால் குழந்தைக்கு ஜலதோஷம் பிடிக்கிறதென்றால், தாய்ப்பால் கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அப்படியும் பிரச்னை தொடர்ந்தால், குழந்தையுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் நீங்கள் ஆரோக்கியமான புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து வகை உணவுகளை இந்த வரிசையின்படி முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள். உங்கள் நலமும் குழந்தையின் நலமும் சிறப்பாக இருக்கும்.

நெஞ்சு வலியானது இல்லாமலேயே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பல பேரை நாம் பார்க்கிறோம். அதை பற்றி விளக்க முடியுமா ?
– விவேகானந்தன், திருவண்ணாமலை.

இதை சைலன்ட் அட்டாக் என கூறுவார்கள். நாம் முந்தைய வீடியோக்களில் பார்த்தது போல், சில பேர் கையில் லேசாக வியர்த்தது என்பார்கள், சில பேர் முதுகு லேசாக வலிக்கிறது என்பார்கள் இப்படி பல காரணங்களை கூறுவார்கள். சில பேர் மூச்சு சரியாவிடமுடியவில்லை என்று மருத்துவமனைக்குச் செல்வார்கள்.

ஆனால் மருத்துவர் ஈசிஜி எடுத்த பின்பு உங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாரடைப்பானது வந்துள்ளது என்பர். இருதயத்தில் இருந்து வரும் வலியை   ஏற்படுத்தும் நரம்பு மாரடைப்பு வரும்போது பாதிக்கப்பட்டால், அந்த நபருக்கு வலியை உணர முடியாது. இது யாருக்குப் பொதுவாக இருக்கும் என்றால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத்தான். நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கும் இது நேரிடலாம். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தான் இது அதிகம் நேரிட வாய்ப்பு உள்ளது.

இந்த வகை மாரடைப்பானது சிறிய அளவிலும் இருக்கலாம், அல்லது பெரிய அளவிலும் இருந்து உயிரைப் பறிக்கக் கூடிய ஒன்றாகவும் போகலாம்.  எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும்போது மருத்துவர் உங்களுக்கு ஏற்கெனவே முதல் அட்டாக் வந்து இருக்கிறது என்று கூறினால், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லை என மறுதலிக்கக் கூடாது. காரணம் பிரச்சினை உள்ளது என நாம் கண்டறிந்தால்தான் அதை நாம் முறியடிக்க முயற்சிப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அளவு ஒரு பிரச்னை இல்லை!(அவ்வப்போது கிளாமர்)
Next post அழகுக் குறிப்புகள் 10! (மருத்துவம்)