மருதாணியில் ஓவியம்… அசத்தும் அகமதாபாத் கலைஞர்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 29 Second

பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பெண்கள் அனைவரும் சேர்ந்து கையில் மருதாணி இட்டுக் கொண்டு அந்த சுப நிகழ்ச்சியை ஆரம்பித்தால் அது மகிழ்ச்சியாக நடக்கும் என்பது நம்பிக்கை. இப்போது அதன் வடிவம் மாறி, வட இந்தியாவைப் போல, திருமணத்திற்கு முன் மெஹந்தி பார்ட்டி என்று மருதாணிக்காகவே ஒரு நிகழ்ச்சியை தனியாக கொண்டாடுகிறார்கள். இப்போது பெண்கள், இதெல்லாம் பழைய காலம் என பல சடங்குகளை ஒதுக்கி வைத்தாலும், மருதாணியை மட்டும் காலத்திற்கேற்ப மாற்றி அனைவரும் விரும்புகின்றனர், சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நாள் இலவச மெஹந்தி பயிற்சி வகுப்பில் பல மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் பிரபல மெஹந்தி கலைஞர் மிரால் பட்டேல் அகமதாபாத்தில் இருந்து பிரத்யேகமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மெஹந்தி கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார்.

ஒரு நாள் இலவச பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் விருப்பப்பட்டால் தொடர்ந்து 10 நாள் அல்லது மூன்று நாள் வகுப்புகளில் கட்டணம் செலுத்தி பங்குபெறும் வசதியும் ஏற்பாடாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் சென்னையின் செலப்ரிட்டி மெஹந்தி ஆர்டிஸ்ட் தேஜல் மனிஷ் தாவே. அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வந்து 15 நாட்கள் தங்கி வகுப்புகள் எடுத்த மிரால் பட்டேலிடம் பேசினோம். “என்னுடைய சொந்த ஊர் குஜராத். படிப்பில் எப்போதும் முதலிடம் பிடித்து, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் முடித்து, கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று, அப்படியே நுண்கலை பட்டமும் பெற்றேன். எனக்கு அப்போது நான் ஒரு நாள் மெஹந்தி கலைஞர் ஆவேன் என்று யாராவது சொல்லி இருந்தால் நிச்சயம் அதை நம்பி இருக்க மாட்டேன். இவ்வளவு படித்து முடித்து பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கமும் பெற்றேன். அப்போது எனக்குள் கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பேராசிரியராக வேலையும் செய்தேன்.

ஆனால் திருமணம், குழந்தை என வாழ்க்கை வேறு திசையில் என்னை அழைத்துச் செல்ல, ஒரு முறை சாதாரணமாக நான் கற்றுக்கொண்ட மெஹந்தி கலை இன்று எனக்கு இவ்வளவு பெரிய ஃபேஷனாக மாறும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. என்னால் மிகவும் வேகமாக நேர்த்தியாக அழகான டிசைன்களை எளிதாக வரைய முடிந்தது. க்ரியேட்டிவ்வாக பல டிசைன்களை முயற்சி செய்ததில் அது எல்லாமே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய ஹிட்டாகியது. என்னுடைய ஸ்பெஷாலிட்டி உருவப் படங்களை வரைவதுதான். ஒருவர் தங்களின் புகைப்படத்தை காட்டினால், என்னால் அதை அப்போதே அவர்களுடைய கையில் மெஹந்தியாக வரைய முடியும். பல பாலிவுட் பிரபலங்களின் புகைப்படங்களை அப்படியே அச்சு அசலாக வரைந்து நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறேன்.

எனக்கு பிரத்யேகமான மெஹந்தி ரெசிபி இருக்கிறது. நான் வீட்டிலேயே ெஹர்பல் மெஹந்தி தயாரிப்பேன். அதை தான் அனைவருக்கும் பயன்படுத்துவேன். என்னுடைய மெஹந்தி நல்ல நிறம் கொடுப்பதோடு, அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்கும். கையில் எந்த எரிச்சலும் கொடுக்காது. மணமகளின் ஸ்கின் டோனிற்கு ஏற்ப மெஹந்தி வரைவதிலும் நான் தான் நம்பர் ஒன். கொஞ்சம் டார்க்காக இருப்பவர்களுக்கு பெரிய தடித்த கோடுகளில் டிசைன்கள் போட வேண்டும். அப்போது தான் அவர்களுடைய கையில் அந்த மெஹந்தி அழகாக வரும்.

இந்த வருடத்திற்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்து முக்கியமான நகரங்களுக்கு சென்று பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை என்னுடைய இலக்காகவே வைத்திருக்கிறேன். இந்த கொரோனாவில் பல பெண்கள் வேலை இல்லாமல் சரியான வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மெஹந்தி கலை ஒரு நல்ல வருமானத்தை கொடுத்து வாழ்வாதாரத்தையும் உயர்த்தும்” என்கிறார்மிரால் பட்டேலை தொடர்ந்து பேசிய தேஜல் “மெஹந்தியை பொறுத்த வரை இங்கு ட்ரெண்ட் மாறிக் கொண்டே இருக்கிறது. பெண்கள் பாலிவுட் நடிகைகளின் திருமணத்தைப் பார்த்து அவர்கள் அணியும் மெஹந்தியை கேட்கிறார்கள். பாகிஸ்தான், கனடா, லங்காவில் பிரபலமான மெஹந்தியை இங்கு கேட்கிறார்கள்.

மணமகளின் வேகத்திற்கேற்ப, மெஹந்தி கலைஞர்களும் அப்டேட்டாக இருக்க வேண்டியது இங்கு அவசியமாகிறது. அதனால் தான் இந்த நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைத்தேன். இலவச பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் மெஹந்தி பயிற்சி செய்ய மிரால் தயாரித்த ‘கிட்’டை நாங்கள் கொடுத்தோம். இங்கு இருக்கும் பல மெஹந்தி கலைஞர்களும் புதிய டிசைன்களை கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர். எப்படி புதிய டிசைன்களை கற்பது என்றும் கேட்டனர். அப்போது தான், ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் நான் மிராலை சந்தித்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அதனால் அவரிடம் பேசி, இங்கிருக்கும் மெஹந்தி கலைஞர்களுக்கு வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் டிசைன்களை வரையக் கேட்டேன்.

இந்த பயிற்சி வகுப்பில் பல ஆண்களும் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் இப்போது கல்யாண சீசன் என்பதால் பலராலும் இதில் பங்கு பெற முடியவில்லை. இப்போது வட இந்தியர்களைப் போல தமிழ்நாட்டில் திருமணத்திற்கு முன் மெஹந்தி பார்ட்டி கொண்டாட்டங்கள் நடக்கிறது. மணப்பெண் தன்னுடைய தோழிகளை, உறவினர்களை எல்லாம் அழைத்து இந்த பார்ட்டியை அழகாக கொண்டாடுகிறார்கள். அதனால் தமிழ்நாட்டிலும் மெஹந்தி கலைஞர்களின் மவுசு அதிகரித்துள்ளது.

இந்த கொரோனா சமயத்தில் பல மெஹந்தி கலைஞர்களும் ஆன்லைனில் வகுப்புகள் மூலம் பல மடங்கு பயிற்சி பெற்று இப்போது மிகவும் திறமையாக இருக்கிறார்கள், இந்த கொரோனா லாக்டவுனில் பலர் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டாலும், அவர்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள இந்த நாட்கள் உதவியது என்றே சொல்ல வேண்டும்” என்கிறார் தேஜல்.

மிராலின் பயிற்சி வகுப்புகளில், மெஹந்தி கோனைப் பிடித்து ஒரு புள்ளி வைப்பதில் தொடங்கி புகைப்படங்களை எப்படி வரைவது என்பது வரை பயிற்சி அளிக்கிறார். மெஹந்தி மிகவும் நுணுக்கமான கலை. இதை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் இதை நேர்த்தியாக செய்ய கடின உழைப்பு அவசியம் எனக் கூறும் மிரால், இந்தியாவைத் தாண்டி துபாயிலும் மெஹந்தி பயிற்சி கொடுத்துள்ளார். எந்த இடத்திற்கும் மணப்பெண்ணிற்கு மெஹந்தி போடவும், மெஹந்தி கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் வர தயாராக இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!(மருத்துவம்)
Next post பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்!(மகளிர் பக்கம்)