தடை தாண்டும் ஓட்டத்தில் தடம் பதிக்கும் தாரகை!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 16 Second

சென்னை நேரு விளையாட்டரங்கம்… இந்த கொரோனா காலத்திலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இளம் வீராங்கனைகள் தயாரான நிலையில் இருந்தனர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பினைப் போல் சீறி சென்று, இலக்கை 14.6 விநாடிகளில் கடந்து, தங்கப் பதக்கத்தினை வென்றார் நந்தினி கொங்கன். சென்னை, பிரபல கல்லூரியில் எம்.ஏ. மனிதவள நிர்வாகம் இறுதியாண்டு படிக்கும் இவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் வெள்ளி வென்று, தடகள விளையாட்டுக்களில் வெற்றி மங்கையாக உலா வருகிறார். ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தபோது, தடகள விளையாட்டில், தனது வெற்றிப் பயணத்திற்கான பின்னணி குறித்து, நம்மிடம் பகிர்ந்து கொண்டார்…

“என்னுடைய அப்பா கொங்கன். கபடி வீரர். பள்ளிகளுக்கு இடையேயான பல போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அதனாலேயே அவரால் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரைப் போன்று நான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, விளையாட்டில் என்னைச் சேர்த்துவிட்டு, இன்று வரை மிகவும் சப்போர்ட்டாக இருந்து வருகிறார்.

அவர் தரும் ஊக்கத்தால் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்று, பதக்கங்கள் வென்று வருகிறேன். எங்கள் பள்ளியிலும் எப்போது விளையாட்டு தினம் வந்தாலும் அதற்கான போட்டியில் கண்டிப்பாக நான் பங்கு பெறுவது வழக்கம். பங்கு பெறுவது மட்டுமில்லாமல், பரிசும் கண்டிப்பாக வென்றுவிடுவேன். ஆனால் எங்களின் பள்ளியில் நான் படிக்கும் போது 14, 16 வயதுக்கு உட்பட்டோருக்கென 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவில்லை. அதற்காக போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வந்தேன். இதில் தேசிய அளவில் பங்கு பெற்று பரிசும் பெற்றிருக்கேன்.

அந்த சமயத்தில் தான் என்னுடைய கோச் நாகராஜ் மற்றும் பி.டி. மாஸ்டர் காளிதாசன் இருவரும், என்னை 100 மீட்டர் தடை தாண்டுதல் (Hurdles) போட்டியில் கலந்து கொள்ள சொன்னாங்க. எனக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் மேலும் என்னை ஊக்கப்படுத்தினர். அதனால் பத்தாவது படிக்கும் முதல் தடை தாண்டுதல் போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன்’’ என்ற நந்தினி இதற்கென தனிப்பட்ட பயிற்சி முறைகளை கடைப்பிடித்து வருகிறார்.

‘‘தடை தாண்டுதல் போட்டிக்காகவே நான் மூன்று வகையான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். ஸ்பீட், ஜிம் மற்றும் டெக்னிக்கல் வொர்க்-அவுட் என மூன்று வகையான பயிற்சிகளைச் செய்து வருகிறேன். தினமும் காலை, மாலை நேரங்களில் மூன்று மணி நேரம் கடுமையான பயிற்சிகள் இருக்கும். போட்டி நெருங்கும் சமயங்களில் பயிற்சிகளில் கொஞ்சம் மாறுபடும். ஸ்டார்ட்டிங் ப்ளாக்சில் இருந்து புறப்பட்டு பர்ஸ்ட் ஹர்டில்சை தாண்டுதல், ஜிம்மில் வெயிட் அதிகமாக சேர்த்து குறைவான ரெப்டேஷன் செய்தல், டெக்னிக் வொர்க்-அவுட்டில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வேன். மேலும் என்னுடைய துறையில் சீனியராக இருப்பவர்கள் தரும் டிரெயினிங்கும் எடுத்துக் கொள்வேன்.

இப்படி ஒவ்வொரு அடிப்படையிலும் சரியாக திட்டமிட்டு செய்வேன். எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் உடல் வலிமைக்கு இணையாக, மன வலிமையும் இருக்க வேண்டும். கூடவே உடன் இருப்பவர்களின் ஊக்கமும் உற்சாகமும் அவசியம். என்னுடைய அப்பா, அம்மா ரொம்பவே எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க. அதெல்லாம் தான் கண்டிப்பா ஜெயிக்கணும்ன்னு எனக்குள் ஒரு மனவலிமையை கொடுக்கிறது. இதனால் என்ன மாதிரியான பிரச்னை வந்தாலும், அதிலிருந்து மீண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையும் தாண்டி சாதிக்க முடிகிறது’’ என்றவர் ஒரு போட்டியில் தோல்வி பெற்றால் அழுது விடுவாராம்.

‘‘நான் போட்டியில் ஜெயிச்சதைவிட, அதிகமா தோல்வியை சந்தித்து இருக்கேன். அதற்காக நான் துவண்டுவிடவில்லை. கண்டிப்பாக என்னாலும் முடியும் என்ற வைராக்கியத்தோடு அடுத்தடுத்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுவேன். பத்தாவது படிக்கும்போது ராஞ்சியில் நடந்த ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். ஜனவரி மாதம் என்பதால் பயங்கர குளிர் இருந்தது. நான் இவ்வளவு குளிர் இருக்கும்ன்னு எதிர்பார்க்கல. அது பற்றி தெரியாமல், சாதாரண உடைகளை எடுத்துப் போயிருந்தேன். 18 நாட்கள் தனியா இருந்தேன். சாப்பாடு பிடிக்கல. ஹோம் சிக் வந்துவிட்டது.

ஆனாலும் மன உறுதியை இழக்காமல் போட்டியில் கலந்து கொண்டேன். முதலாவதாக வந்தேன். அரை இறுதிப் போட்டியில் 10வது ஹர்டில்சை தாண்டும்போது கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். கீழே விழுந்ததால் கை தட்டுகிறார்கள் என நினைச்சேன். இருந்தாலும் காயத்தைப் பொருட்படுத்தாமல் எழுந்து ஓடி, ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றேன். அதில் 15.1 செகண்டில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றேன். அப்பதான் புரிந்தது, பார்வையாளர்கள், நான் கீழே விழுந்ததைப் பார்த்து என்னை ஊக்கப்படுத்த தான் கை தட்டினார்கள் என்று. இந்தப் போட்டியை என்னால் என்றைக்கும் மறக்கவே முடியாது.

இதுவரைக்கும் மாநில தேசியப் போட்டிகள், சீனியர் நேஷனல்ஸ் எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டு, 15 மெடல்கள் வென்றுள்ளேன். தேசிய போட்டியில் மட்டும் 3 தங்கம், 7 வெள்ளி, வெண்கலம் ஒன்று வென்றுள்ளேன். என்னுடைய இந்த வெற்றிக்கு அப்பா கொங்கன், அம்மா காந்திமதி, கோச் நாகராஜ் சார், அக்கா லாவண்யா, அண்ணன் மோனிஷ், பி.டி.மேடம் அமுதா, கல்லூரி நிர்வாகத்தினர் என எல்லோரும் முக்கிய காரணம். அவர்களின் ஊக்குவிப்பு, ஒத்துழைப்பு இல்லாமல் இந்த அளவிற்கு என்னால் சாதித்து இருக்க முடியாது.

என்னுடைய ரோல் மாடல் சீனியர் கனிமொழி. இவரும் 100 மீட்டர் தடைத் தாண்டுதலில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 8 வருடங்களாக அவருடன் பயிற்சி செய்து வருகிறேன். போட்டியாளர் என்று நினைக்காமல் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார். டெக்னிக் சொல்லிக் கொடுத்து, டைம் கீப்-அப் பண்ண அறிவுறுத்துவார். அடுத்து இரண்டு விதமான இலக்குகளை சாதிக்க வேண்டுமென நினைத்துள்ளேன். முதலாவது 13.50 செகண்டுகளில் ஓடி, ஆசிய விளையாட்டுக்கும், 13.8 செகண்டுகளில் ஓடி காமன் வெல்த் போட்டிக்கும் தகுதி பெற வேண்டும். அடுத்து 2024-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற வேண்டும்’’ என்றார் நந்தினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தொண்டை கட்டுக்கு சுக்கு!! (மருத்துவம்)
Next post தற்காப்புக்கலையை பெண்களும் கற்கவேண்டும்!(அவ்வப்போது கிளாமர்)