தெரிந்த முதுகு வலி… தெரியாத டிஸ்க் பல்ஜ் ஓர் ஆரோக்கிய பார்வை! (மருத்துவம்)

Read Time:11 Minute, 18 Second

22 வயது மதிக்கத்தக்க ஒரு மெலிந்த உடல்வாகு கொண்ட இளைஞர் முதுகு வலி என வந்திருந்தார். ஜிம்மில் ஒருநாள் அதிக எடை தூக்கி முதுகு வலி வந்ததாகவும், எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்ததில் டிஸ்க் பல்ஜ் வந்திருப்பதும் தெரியவந்தது. முதுகு வலி ஒல்லியாக இருப்பவர்களுக்கும் வரும். அதோடு, வேலைக்குப் போகிறவர்கள், போகாதவர்கள், ஜிம்மிற்குப் போகிறவர்கள், போகாதவர்கள், உடல்பருமன் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் முதுகு வலி இருக்கும் இன்றைய நவீன சூழலில், சிலரின் முதுகு வலிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனில் டிஸ்க் பல்ஜ் (Disc Buldge) என வந்திருக்கும். உண்மையில் இந்த டிஸ்க் பல்ஜ் என்பது என்ன, ஏன் வருகின்றது, யாருக்கெல்லாம் வரும், அதற்கான தீர்வுதான் என்ன என்பதைப் பற்றியெல்லாம் இங்கே விரிவாக தெரிந்துகொள்வோம்.

முதுகெலும்புகளின் அமைப்பு…

சிறிய எலும்புகளாக ஒன்றன் பின் ஒன்றாக மண்டை ஓட்டில் இருந்து இடுப்பு  எலும்பு வரை நீளமாக வரும் எலும்புகளுக்குள் பத்திரமாக முதுகு தண்டுவடம் (Spinal Cord) அமைந்திருக்கும். ஒவ்வொரு எலும்புகளுக்கும் நடுவில் ஜெல்லி போல் வட்ட வடிவில் தட்டுகள் இருக்கும். இதுவே ‘டிஸ்க்’ என்போம். ஒவ்வொரு எலும்பிற்கும் இடையில் டிஸ்க் இருப்பது போல் ஓரத்தில் முதுகு தண்டுவடத்தில் இருந்து கொத்தாக நரம்புகள் பிரியும். இந்த நரம்புகள் இடுப்பு முதல் கால் தசைகளை இயக்கும் வேலைகளை செய்கிறது.

டிஸ்க் பல்ஜ்…

மேலே சொன்ன அனைத்து உறுப்புகளும் இயற்கையாகவே நெருக்கமாக இணைந்து அமைந்திருக்கும் தன்மை கொண்டது. இதில் ஜெல்லி தட்டுகள் பிதுங்குவதால் வலி உண்டாகும். மேலும் பிதுங்கிய தட்டுகள் பக்கவாட்டில் போகும் நரம்புகளை அழுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் அதற்கான பாதிப்புகளும் ஏற்படும்.

தீவிரத்தின் படிநிலைகள்…

1. மிகவும் குறைவாக தட்டு பிதுங்கி இருந்தால் குறைந்த முதுகு வலி இருக்கும். தினசரி வலி இருந்தாலும் வேலைகளை செய்யமுடியும்.

2. அதிகமாக பிதுங்கி தினசரி வேலைகளை பாதிக்கும் அளவு வலியை உண்டாக்குவது.

3. பிதுங்கிய தட்டு பக்கத்தில் இருக்கும் நரம்புகளை அழுத்துவது.

4. பிதுங்கிய ஜெல்லி தட்டு சிதறி சிதைவது. இந்த நிலையில் முதுகு தண்டு வடத்தையே அழுத்தி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இவை அன்றி தட்டு வறட்சி ஆவது, தட்டு தேய்ந்து போவதும் சிலருக்கு இருக்கலாம்.

தரவுகள் சொல்வது…

*முப்பது வயதிற்கு மேல் வருவதற்கு இன்றைய நவீன உலகில் வாய்ப்புகள் அதிகம்.

*பெண்களுக்கும் வரும். எனினும் ஆண்களுக்கு வருவதற்கு இரு மடங்கு வாய்ப்புகள் அதிகம்.

*ஆயிரம் நபர்களில் மூன்று முதல் ஆறு நபர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.

காரணங்களும் ஆபத்துக் காரணிகளும்…

*பயங்கரமான விபத்து (சாலையில், கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது) நடப்பது.
*திடீரென அதிக எடையை தூக்குவது.
*அதிக புகை பழக்கம்.
*அமர்ந்த இடத்திலேயே செய்யும் வேலைகள்.
*அதிக உடல்பருமன்.
*சீரான உடல் வாகு (Body  Posture) இல்லாமல் இருப்பது.
*வயதாவது.
*தொடர்ந்து நீண்ட நேரம் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது.

அறிகுறிகள்…

*எப்போதாவது வலிக்கும் முதுகு வலியில் ஆரம்பித்து, தினசரி வேலைகளை செய்யமுடியாமல் போவது வரை வலி அதிகமாவது.
*குனியும் போது, உட்கார்ந்துவிட்டு எழும்போது வலி உண்டாவது.
*தட்டு பிதுங்கி நரம்பை அழுத்தும் நிலையில் பின்னங்கால் முழுக்க வலிப்பது, மறுத்துப் போவது, குடைவது, எரிவது போன்ற உணர்வுகள் ஏற்படுவது.
*நரம்பு அழுந்துவது மிகவும் அதிகமாக இருந்தால், கால் தசைகள் பலவீனமாகும். இதனால் நடப்பதில் சிரமம் ஏற்பட்டு, ஸ்திர தன்மையில் (Balance) மாற்றம் உண்டாவது.
*மேலும் கடைசி நிலையாக கால் தசைகள் செயலிழந்து போவது.

எவ்வாறு கண்டறிவது…?

முதுகு வலி வந்தவுடன் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர் பல உடல் அசைவு மற்றும் தசை பரிசோதனைகளை மேற்கொண்டு கண்டறிவர். மேலும் தேவைப்படும்போது எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்.ரே செய்து பிதுங்கிய தட்டுகளின் அளவு மற்றும் வீரியத்தை கண்டறியலாம்.

தீர்வுகள்…

*பிதுங்கிய தட்டினால் வரும் முதுகு வலியை இயன்முறை மருத்துவர்கள் குணப்படுத்துவார்கள்.
*ஆரம்ப நிலையில் உள்ள பிதுங்கிய தட்டினை இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலம் மீண்டும் அதே இடத்தில் பொருந்த செய்ய முடியும்.
*பின் தசை தளர்வு (Stretching Exercises) மற்றும் தசை வலிமை (Strengthening Exercises) பயிற்சிகளை கற்றுக்கொடுப்பர்.
*இயன்முறை மருத்துவரின் ஆலோசனை வழி தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால் வலி உண்டாகாது. மேலும் பாதிப்பு அதிகமாகாமல் தடுக்கலாம்.

தெரிந்துகொள்ள வேண்டியவை…

*வலி நிவாரணி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் வலி அந்தநேரம் மட்டுமே மறையும். ஆனால் பின் மீண்டும் தெரியத் தொடங்கும்.

*இடுப்பு பெல்ட் அணிவதால் வலி குறையாது. மேலும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் பெல்ட் போடுவதால் பாதிப்பு இன்னும் அதிகம்தான் ஆகும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

*அறுவை சிகிச்சை செய்தாலும் கூட இயன்முறை மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இல்லையெனில் அறுவை சிகிச்சையில் எந்த பலனும் இருக்காது.

*முதுகு வலி வந்துவிட்டால் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யக்கூடாது, கீழே உட்காரக் கூடாது என்பது அனைத்தும் கட்டுக்கதையே. நம்மைக் காப்பதற்கு தசைகள் (Muscles) இருக்கின்றன.

அதனால் முறையான உடற்பயிற்சி செய்து வந்தால் நாம் இயல்பான வாழ்வியலில் இருக்கலாம். பயம் தேவையில்லை.

எனவே முதுகு வலி வந்தால் ‘இத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது’ என சோர்ந்து போகாமல், தாமதமின்றி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்து பாதிப்புகளை உடனடியாக தடுப்போம். இயல்பான வாழ்வியலுக்கு நம் உடலை தயார் செய்வோம்.

பலகாரங்கள் சுவைக்க டிப்ஸ்!

*முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.

*இனிப்பு சோமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான சுவை கிடைக்கும்.

*ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.

*ஓட்ஸ் லட்டு பிடிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்தால் அருமையாக இருக்கும்.

*அரிசியில் பலகாரங்கள் செய்யும் போது அரிசியை களைந்து, காய வைத்து அரைத்து, பலகாரங்கள் செய்தால், பலகாரங்கள் நல்ல சுவையுடன், உடையாமல் இருக்கும்.

*காராபூந்தி தேய்க்கும் பொழுது எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டையாக வரும்.

*கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

*கேசரி கிளறும்போது முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்து வறுத்துச் சேர்க்கலாம். அல்லது பாதாம் பவுடர் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.

*முறுக்கு மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக மாவு எடுத்து பிசைந்து செய்தால் வெள்ளை நிறத்தில் சிவக்காமல் இருக்கும்.

*பால்கோவா செய்யும் போது மெலிதான துணியில் இரண்டு டீஸ்பூன் கோதுமைமாவை போட்டு இறுகக் கட்டி கொதிக்கும் பாலினுள் வைத்தால், பால்கோவா கிரீம் நிறத்தில் வரும்.

*குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கெட் ரெடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நியூஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post ஹேப்பி ஹோம்…ஹெல்த்தி ஹோம்! (மருத்துவம்)