உணவே மருந்து – அறிவை வளர்க்கும் அக்ரூட் பருப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:19 Minute, 21 Second

பார்ப்பதற்கு மனித மூளையைப்போன்றே இருக்கும் ஆங்கிலத்தில் ‘வால்நட்’ என்று அழைக்கப்படும் ‘அக்ரூட் பருப்பு’ மூளையின் ஆற்றலை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க மருத்துவர்கள் தற்போது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த கடல் உணவுகளை அதிகம் பரிந்துரைக்கிறார்கள். இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. அந்த வகையில் வெஜிடேரியன் உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த தாவர உணவுகளான பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி போன்ற கொட்டை வகைகளில் வால்நட் அதிக அளவில் ஆல்ஃபா லினோலிக் அமிலமும் நிறைந்துள்ளதால் இதய நலனுக்கு மிகச் சிறந்தது.

அக்ரூட் பருப்புகள் 7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டவை. அக்ரூட் பருப்புகள் மனிதனுக்குத் தெரிந்த மிகப் பழமையான மர உணவாகும்,  வால்நட் பெரும்பாலும் “பாரசீக வால்நட்” என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் ஆசியாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையிலான  சாலை வழியில் வால்நட் வர்த்தகம் செய்யப்பட்டது. பின்னர் வணிகர்கள் அக்ரூட் பருப்புகளை தொலைதூர நாடுகளுக்கும் கடல் வர்த்தகத்தின் மூலம் உலகம் முழுவதும் பரப்பினர்.

இதய நோய், ரத்தநாளங்களின் அடைப்பு,  டைப் 2 நீரிழிவு சிகிச்சை மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்துவதில் வால்நட் மிகச்சிறந்த பங்கைக் கொண்டிருக்கிறது. வால்நட்ஸில் இருக்கும் ஃபேட்டி அமிலங்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ், உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க தினமும் வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளலாம்.

வயது தொடர்பான மற்றும் பிற நரம்பியல் கோளாறுகளுக்கு காரணமான அறிகுறிகளைக் குறைக்கிறது.  ‘வயதைக் கொண்டு மூளை ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அக்ரூட் பருப்புகளின் பங்கு’என்ற தலைப்பில், ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் அக்ரூட் பருப்புகளில் ஏராளமான பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்திருப்பதை வெளிப்படுத்தினர், இதில் அதிக அளவு பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் மூளை ஆரோக்கியத்திற்கு சாத்தியமான நன்மைகளை வழங்குகின்றன. வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

அக்ரூட் பருப்புகள் அவற்றின் அதிகமான ஊட்டச்சத்துக்களுக்காகவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மைக்காகவும் நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமாக, அக்ரூட் பருப்புகள் அவற்றின் லிப்பிட் சுயவிவரத்திற்காக அறியப்படுகின்றன, அவை பரவலான உயிரியல் பண்புகள் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களுக்கு கூடுதலாக, அக்ரூட் பருப்புகளில் வைட்டமின் ஈ மற்றும் பாலிபினால்கள் போன்ற பலவிதமான உயிர்சக்தி சேர்மங்கள் உள்ளன.

பொதுவான உணவுகள் மற்றும் பானங்கள் மத்தியில், அக்ரூட் பருப்புகள் பாலிபினால்களின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகவும் இருக்கின்றன, எனவே மனித ஆரோக்கியத்தின் மீதான அவற்றின் விளைவு கவனத்தை ஈர்க்கிறது. அக்ரூட் பருப்புகள் பாலிபினால்கள் மற்றும் பிற பைட்டோ கெமிக்கல்களை உள்ளடக்கியுள்ளன. மேலும் வயது தொடர்பான மற்றும் பிற நரம்பியல் காரணங்களால் ஏற்படும் அறிகுறிகளின் குறைவு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் அக்ரூட் பருப்பை தொடர்ந்து எடுத்துக் கொள்வதை  ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அக்ரூட் பருப்புகளில் உள்ள முக்கிய பாலிபினால் பெலுங்குலஜின் (Pedunculagin), ஒரு எலாஜிடானின் (Ellagitannin) ஆகும். அக்ரூட் பருப்பை எடுத்துக்கொண்ட பிறகு, எலாஜிடானின்கள் எலாஜிக் அமிலத்தை வெளியிட ஹைட்ரோலைஸ் செய்யப்படுகின்றன. இது குடல் மைக்ரோஃப்ளோராவால் (microflora) யூரோலிதின் ‘ஏ’ (Urolithin A) மற்றும் யூரோலிதின்கள் பி, சி மற்றும் டி என மாற்றப்படுகிறது.

இவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு உயிர்சக்தித்தன்மையைக் கொண்டுள்ளன மேலும், புற்றுநோய், இதய மற்றும் நரம்பியக்கடத்தல் நோய்கள் உள்ளிட்ட நோய் துவக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு எதிரான பண்புகளை இந்த எலாஜிடானின்கள் கொண்டுள்ளதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.  அக்ரூட் பருப்புகள் உட்கொள்வதால் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியையும் உயிர்வாழ்வையும் அடக்க உதவும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில்.

‘நியூட்ரிஷன் ரிசர்ச்’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு அவுன்ஸ் அக்ரூட் பருப்புகள் உட்கொள்வது உறுதிப்படுத்தப்பட்ட மார்பக புற்றுநோய்களில் மரபணு வெளிப்பாட்டைக் கணிசமாக மாற்றியுள்ளது என்று கண்டறிந்துள்ளது. முந்தைய ஆய்வுகள், நட்ஸ்களை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களின் இதய ஆபத்து காரணிகள் மற்றும் இதய நோய்களின் குறைந்த விகிதங்களை மேம்படுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, பல சோதனைகள் நட்ஸ் சாப்பிடுவது குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவோடு இணைத்துள்ளன. குறிப்பாக அக்ரூட் பருப்பு இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

உடலில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. எலும்புகள், திடமாகவும் பலமாகவும் இருந்தால் மட்டுமே, ஒரு மனிதனால் ஆரோக்கியமாக செயல் பட முடியும்.  வால்நட் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியத்தை உடல் கிரகித்துக்கொள்ள உதவுகிறது, இதனால் உங்கள் எலும்புகள் பலமாகுகிறது. மேலும் இது சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் தடுக்கிறது.

துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம், மெக்னீசியம், செலினியம் மற்றும் இரும்பு போன்ற தாது பொருட்கள் இதில் நிறைந்துள்ளதால் வளர்சிதை மாற்றங்கள் சீராக உடலில் ஏற்படுகிறது. மேலும் விந்தணு உற்பத்தி, நியூக்ளிக் அமிலம் தொகுப்பு, செரிமானம் மற்றும் உடலின் மொத்த வளர்ச்சிக்கு இது உதவியாக உள்ளது. உணவில் தினமும் வால்நட் சேர்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் சீராக கிடைக்கிறது.

நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக உடல் எடை அதிகரிக்கும்.  வால்நட்டில் பல நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால், கெட்ட கொழுப்பு உடலில் தேங்குவதை இது தவிர்ப்பதோடு அது உடலை விட்டு வெளியேறவும் உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது.

உணவில் வால்நட் சேர்த்துக் கொள்வதால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. நோய்த்தொற்றை நீங்கள் ஆரம்ப காலத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மரணம் உண்டாகும் வகையில் விளைவுகளை ஏற்படுத்தி விடும். வால்நட்டில் உள்ள பாலிபினாலிக் கலவைகள் நோய்த்தொற்றை குறைப்பதோடு, உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

வால்நட்டில் வைட்டமின் ‘E’ சத்து அதிகம் உள்ளது. லிப்பிட் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ராடிகல்ஸ்களை (Freeradicles) வெளியேற்றி சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் வால்நட்டில் பி -6, ஃபோலேட், ரிபோப்லாவின், நியாசின் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் போன்ற சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் உங்கள் சருமம் மேலும் ஆரோக்கியமாகிறது.

ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 அல்லது 8 மணி நேர உறக்கம் ஒரு நாளைக்குத் தேவைப் படுகிறது. அவ்வாறு போதுமானத் தூக்கம் கிடைக்கவில்லை என்றால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். ஓய்வு உடம்பிற்கு மிக முக்கியம். இது உங்கள் மனதை அமைதிப் படுத்தவும், எண்ணங்களைத் தெளிவு படுத்தவும் உதவுகிறது. ஆனால், இன்றைய விரைவாக நகரும் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப் படுகிறார்கள். குறிப்பாக இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கிறது. வால்நட்டை உண்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதில் உள்ள மெலடோனின் வேதிப்பொருள் தூக்கத்தை தூண்டுகிறது.

வால்நட் உண்பதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. குறைந்த கலோரிகளே இருப்பதால் இதனை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் தங்களுடைய உடல் எடையை சீர்படுத்தவும் இது உதவுகிறது. வால்நட் தலை முடிக்கு போஷாக்களித்து, ஈரப்பதத்தோடு வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. இதனைத் தொடர்ந்து பயன் படுத்தி வரும்போது அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும்ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் தினமும் இருவேளை வால்நட் பருப்புகளை எடுத்துவருவதால் இதற்கு சற்று நிவாரணம் கிடைக்கும்.

நமது உடலின் வெளிப்புற பகுதியான தோல் சிறிது ஈரப்பதத்தோடு இருப்பது ஆரோக்கியமானது. வால்நட்ஸ் பருப்புகள் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. உணவுகளை செரித்து உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றும் பணியை வயிறு செய்கிறது. வால்நட்ஸ் பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு செரிமானத்திறன் மேம்படுகிறது. வயிற்றில் அமிலங்களின் சுரப்பை சீராக்குகிறது.

பிறக்கும் போதே ஏற்படும் நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வான மருந்துகள் மிகவும் குறைவு. வால்நட்ஸ் பருப்புகளை இந்த பாதிப்பு கொண்டவர்கள் உண்பது நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்குத் தேவையான சக்திகளை உற்பத்தி செய்கிறது. பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. அதை கரைப்பதில் வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது.

ஒரு அவுன்ஸ் (28 கிராம்) அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது 2 இட்லிகளுக்கு சமமானது. கார்போஹைட்ரேட் 1.5 கிராம், 4 கிராம் புரதம்,  செறிவூட்டப்பட்ட ஆரோக்கியமான கொழுப்பு, குறைவான சோடியம், பொட்டாசியம் வால்நட்டில் உள்ளது.  1.5 கிராம் நார்ச்சத்து,  2.5 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் உள்ளது.

வால்நட் போன்ற உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, புரதம் (4 கிராம் / அவுன்ஸ்), ஃபைபர் (2 கிராம் / அவுன்ஸ்) மற்றும் நல்ல கொழுப்புகள் (2.5 கிராம் ஒமேகா -3 ஆல்பா லினோலெனிக் அமிலம் / 28 கிராம்) நாள் முழுவதும் ஒருவர் பெற உதவும்.

நீங்கள் கடையில் இருந்து அக்ரூட் பருப்புகளை வீட்டிற்கு கொண்டு வரும்போது, ​​அவற்றை சேமிக்க சிறந்த இடம் உங்கள் குளிர்சாதன பெட்டியில் ஃப்ரீசரிலோ அல்லது வெளியில் வைத்து பாதுகாக்கலாம்,  இப்போதே அக்ரூட் பருப்புகளைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், அவற்றை குளிர்சாதன பெட்டியின் அறைகளில் சாதாரணமாக வைக்கலாம்.

ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் அவற்றை சேமித்து வைக்க வேண்டுமென்றால் அவற்றை ஃப்ரீசரில் வைத்து உபயோகப்படுத்துவதுதான் சரியானது. ஃப்ரீசரில் வைத்த அக்ரூட் பருப்புகளை 1 வருடம் வரை சேமிக்க முடியும். ஒரு நாளைக்கு 6 வால்நட்ஸ்களை எடுத்துக்கொள்வதை ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. சத்தான வால்நட் பிஸ்கெட் செய்யும் முறையை சமையல் கலை நிபுணர் நித்யா நடராஜன் இங்கே விளக்குகிறார்.

வால்நட்ஸ் பிஸ்கெட்

தேவையான பொருட்கள்

வெண்ணெய் – 100 கிராம்
மைதா – 400 கிராம்
சர்க்கரை – 200 கிராம் (பொடித்தது)
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்
ஏலக்காய் பவுடர் – ½ டீஸ்பூன்
வால்நட்ஸ் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
வால்நட்ஸ் – 10 (முழுசாக, மேலே அலங்கரிக்க)
ரீபைண்ட் ஆயில் – தேவைக்கேற்ப.

செய்முறை

ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு நன்கு தேய்க்கவும். பின் அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதில், மைதா, பேக்கிங் பவுடர், ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை போட்டு நன்கு கைகளால் கலக்கவும். பின் ரீபைண்ட் ஆயிலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும். இப்போது வால்நட்ஸ் தூள் சேர்த்து நன்கு பிசையவும். மாவை கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டினால் மாவு உருண்டை விரிசல் இல்லாமல் இருக்க வேண்டும். இதுதான் பிஸ்கெட் மாவு பக்குவம்.

பின் அதை உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி பிஸ்கெட் வடிவத்திற்கு கொண்டு வரவும். அதன்மேல் வால்நட்டை இரண்டாக உடைத்து வைத்து ப்ரீ ஹீட்டட் அவனில் 10 முதல் 15 நிமிடம் 150 டிகிரி வெப்பத்தில் வேகவைத்து எடுத்து ஆறியபின் பரிமாறவும். குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உகந்த சுவையான ஆரோக்கியமான வால்நட்ஸ் பிஸ்கெட் ரெடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உறுப்பு தானத்தில் ஓர் உன்னதத் தருணம்! (மருத்துவம்)
Next post பெண்களை மதித்தால் செல்வம் பெருகும்! (மகளிர் பக்கம்)