தொடரும் Fitness Mistakes… Correct செய்யும் நேரமிது! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 11 Second

பிறந்திருக்கும் இந்த 2023 புத்தாண்டை மேலும் சிறப்பு மிக்கதாக செய்ய நாம் இந்த வருடம் பல திட்டங்களை வைத்திருப்போம். அதில் எப்போதும் இடம்பெறும் ஒன்று ஆரோக்கியமும், அது சார்ந்த திட்டங்களும். அதற்காக வருடத் தொடக்கத்தில் பலரும் நினைப்பது உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்லவேண்டும் என்பதுதான். அதுவும் உடல் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ, பராமரிக்கவோ நாம் முடிவு செய்திருப்போம். அதனால், உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்லும் முன் அது சார்ந்த சில முக்கியத் தகவல்களை தெரிந்துகொண்டால், இன்னும் சிறப்பாக நம்மால் நம் இலக்கில் செயல்பட முடியும். ஆம், அதற்காகவே இந்தக் கட்டுரை.

1. மாதவிடாய்…

மாதவிடாய் காலங்களில் பல பெண்கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வர். இது முற்றிலும் தவறு. இந்த மூன்று நாட்கள் ஓய்வுக்கான நேரம். ஹார்மோன்களின் மாற்றங்களால் நம் உடலிலும், மனத்திலும் இந்த நாட்களில் நிறைய மாற்றங்கள் நிகழும். எனவே நிறைய எடை தூக்கி பயிற்சி செய்வது, சிரமத்துடன் பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி பயிற்சி செய்ய விரும்பினால், மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யலாம். மேலும் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிக்கான தசை தளர்ச்சிப் பயிற்சிகளை உங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் இருக்கும் இயன்முறை மருத்துவரை கேட்டுத் தெரிந்துகொண்டு செய்யலாம்.

2. Whey புரதம்…

உடலுக்குத் தேவையான ஊட்டசத்துகளில் புரதச் சத்து (Protein) மிகவும் அவசியம். இதனை உணவு வகைகளிலேயே எடுத்துக் கொள்ளலாம். அதுவே போதுமானது. ஆனால், இதனை supplements ஆக அதாவது, கூடுதலாகச் சேர்க்கவேண்டும் என நினைத்து டப்பாக்களில் வரும் புரதச் சத்துப் பொடிகளை நிறைய பேர் எடுத்துக் கொள்வர். இது முற்றிலும் தவறு. மேலும் இதனால் முடி கொட்டுவது, கிட்னியில் கல் போன்றவை நிகழலாம். அதனால் பலு தூக்கும் போட்டி போன்றவற்றில் கலந்துகொள்வோர் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் இது சார்ந்த சந்தேகம் இருந்தால், உங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள உணவு நிபுணரினை அணுகலாம்.

3. வார்ம்அப் & கூல்டவுன்…

பத்து நாட்கள் நாம் நேரம் தவறாது சீக்கிரம் சென்று எல்லா வகை பயிற்சிகளும் செய்வோம். பின் சில நாட்களில் வேலை பலு காரணமாக நேரத்தை சுருக்கி வெறும் உடற்பயிற்சிகள் மட்டும் செய்வோம். இது முற்றிலும் தவறு. நாம் இருபது நிமிடம் உடற்பயிற்சி செய்வதாய் இருந்தாலும்கூட முதலில் உடலை தயார் செய்ய வார்ம்அப் (warm up) பயிற்சிகள் செய்ய வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்து முடித்ததும் தசைகளை தளர்வாக வைக்க, இதயத் துடிப்பை சீராக வைக்க கூல்டவுன் (cool down) பயிற்சிகள் செய்யவேண்டும். இவை இரண்டையும் செய்யாமல் உடற்பயிற்சிகளை செய்தால் தசைப் பிடிப்பு,  தசைகளில் காயம், மூட்டு வலி, ஜவ்வு கிழிதல் முதலியவை ஏற்படும்.எனவே நம் ஆரோக்கியத்துக்காக முழுதாக ஒரு மணி நேரம் ஒதுக்குவது நல்லது.

4. தசை அயற்சி…

போர்வைகள், படுக்கை விரிப்புகள் போன்ற துணிகளை நாம் கைகளால் துவைக்கும்போது ஒன்றும் சிரமம் தெரியாது. ஆனால், அடுத்த நாள் தான் வலி தோன்றும். இதுவே தசை அயற்சி (Muscle Soreness). இது தான் புதுசாக உடற்பயிற்சி செய்யும்போதும் வரும். முதல் இரண்டு நாளில் உற்சாகமாக இருக்கும். ஆனால் இரண்டு மூன்று நாட்களில் தசை வலி அதிகமாக இருக்கும். தினசரி வேலையான படிக்கட்டுகளில் ஏறுவதுகூட சிரமமாகத் தோன்றும். இதனால் பலபேர், ‘ஜிம்முக்கு போனாதானே வலி வருது… நாம ரெண்டு நாள் கழிச்சிப் போகலாம்’ என நினைக்கலாம். இது தவறு. தொடர்ந்து நாம் ஒரு வேலையை செய்யும்போது தசை அதற்கு பழக்கப்பட்டு விடும். அதனால் முதல் ஓரிரு நாட்களில் இது சரியாகிவிடும்.

5. உணவும் உடற்பயிற்சியும்…

உணவு வழியாகவே சிலர் உடல் எடை குறைக்கலாம் என நினைப்பர். சிலரோ உடற்பயிற்சி மட்டும் போதுமானது என நினைத்து தினமும் கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்பர். இது இரண்டுமே தவறான முறை. உணவும் உடற்பயிற்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பது. இரண்டையும் ஒரே நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும். கூடவே சரியான தூக்கம், மன அமைதி போன்ற வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

6. உடற்பயிற்சி ஆலோசனைகள்…

உடற்பயிற்சிக் கூடத்தில் இயன்முறை மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு பயிற்சிகளை பரிந்துரைப்பர். எத்தனை முறை செய்ய வேண்டும், எவ்வளவு எடை தூக்க வேண்டும், எந்தெந்தப் பயிற்சிகள் பலன் தர உதவும் என்பது அனைத்தையும் தீர்மானிப்பர். எனவே நாமாக அவர்கள் சொல்லாதப் பயிற்சிகளை செய்வது, அதிக எடை தூக்குவது, யூடியூப் பார்த்து செய்வது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தசை காயம் (injury), ஜவ்வு பிரச்சினைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது.

7. அவசரம் வேண்டாம்…

இரண்டு மாதத்தில் பத்து கிலோ எடை குறைக்க வேண்டும், ஒரு மாதத்தில் கல்யாணம் அதனால் அதிக எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகவேண்டும்  எனப் பலர் கடைசி நிமிடத்தில் முடிவு செய்வோம். அவ்வாறு குறுகிய காலத்தில் உடல் எடையை சுலபமாகக் குறைக்கலாம். ஆனால், இதனால் பின்னாளில் ஆரோக்கியமாக இருக்க முடியாது. மேலும் அடிக்கடி உடல் சோர்வு, உடல் வலி, சிலருக்கு தேகம் பார்க்க தோல் சுருக்கமாக எனப் பிரச்சினைகள் இருக்கலாம். எனவே, அவசரம் இல்லாமல் பொறுமையாகத் தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.ஆகவே, மேல் சொன்ன தகவல்களை ஒவ்வொருவரும் தவறாமல் மனத்தில் நிறுத்தி பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டை ஆரோக்கிய வழியில் கொண்டுசெல்ல நம் ‘தோழிகளுக்கு’ என் வாழ்த்துகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்கள் விரும்புவது இரவையா, காலை நேர உறவையா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post புத்தாண்டு கொண்டாட்டம்! 2023!! (மகளிர் பக்கம்)