மழைக்கால நோய்கள் தப்பிப்பது எப்படி? (மருத்துவம்)

Read Time:9 Minute, 54 Second

மழைக் காலம் தொடங்கினாலே வைரஸால் சளி, காய்ச்சல் முதல் டெங்கு காய்ச்சல் வரையிலான பல்வேறு நோய்தொற்றுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் குளிர்ச்சியான காற்றும் அதிலுள்ள ஈரப்பதமும்தான். குளிர்ச்சியான காற்றில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒட்டுண்ணிகளே நோய்களைப் பரப்புகின்றன.  மேலும், ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன.

மழைக் காலப் பாதிப்பில் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால்.  இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன?  அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது என மழைக் கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் நாம் அறிந்துகொண்டால், குழந்தைகளுக்கு நோய்கள் வரும் முன் தடுக்கலாம். நோய் வந்த பின் உரிய சிகிச்சையுடன் பாதுகாப்பாகவும் இருக்கலாம். இது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தி விஸ்வநாதன் அவர்களிடம் பேசினோம்.

மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வராமல் பாதுகாப்பது எப்படி?

பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகள் மழைக் காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்னைகளால்  பெரிதும் அவதிப்படுகின்றனர். இன்ஃப்ளூயன்சா என்ற வைரஸால்  சளி, இருமல் வரும். இதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர், குளிர்பானங்கள் அருந்துவது, ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டியது முக்கியமான ஒன்று. மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். குழந்தைகளுக்கு ஃப்ளு வேக்சின் (flu vaccine) எடுத்துக்கொள்வது மூலமாகவும் இந்த வகை வைரஸ் தாக்குதலில் இருந்து அவர்களைக் காக்க முடியும்.

குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் காய்ச்சல் வந்தால் வழங்க வேண்டிய உடனடி சிகிச்சைகள் என்னென்ன?

குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் காய்ச்சல், வயிற்றுவலி, கை-கால் வலி, காது வலி வந்தால் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு உடல் எடையைக் கருத்தில்கொண்டே மருத்துவர்கள் மருந்துகள் வழங்குகின்றனர். அதனால், இறுதியாக மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது அவர் பரிந்துரைத்த மருந்துகளைக் கொடுக்கலாம். தொடர்ந்து குழந்தையைக் கவனிக்கவும். ஒருவேளை காய்ச்சல் அதிகமானால் வெதுவெதுப்பான தண்ணீரில் டவலை நனைத்து, உடல் முழுவதும் துடைத்து விடலாம். இதனால் உடலின் வெப்பநிலை தணியும்.

மழைக் காலத்தில் குழைந்தைகளுக்குப் பரவும் நோய்கள் பற்றி சொல்லுங்கள்?

பொதுவாக, மழைக் காலத்தில் தொற்று நோய் பரவுவதற்கு முக்கியக் காரணியாக இருப்பது கொசுக்களே. இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்கள் தேங்கியிருக்கும் நீர்நிலைகளிலிருந்தே பெரும்பாலும் உருவாகின்றன. ‘அனோபீலஸ்’ என்ற பெண் கொசு கடிப்பதன் மூலமாகதான் மலேரியா பரவுகிறது. இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாகக் கிருமிகள் பரவுகின்றன. இதனால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பற்றி?

வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய் ஓடுகள், டயர்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்து உருவாகும் ‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசு மிகவும் ஆபத்தானது.  இந்த வகைக் கொசுவினாலேயே டெங்கு பரவுகிறது. அதிகப்படியான காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

சராசரியாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் (Platelet) எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழேயும் வரக்கூடும். ஆகவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து ரத்தத் தட்டணு அளவு குறித்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.உடலில் நீர்ச்சத்து வற்றிவிடும் என்பதால் நீர் ஆகாரங்களை, ஜூஸ்களை குளுக்கோஸ்களை அடிக்கடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகளைக் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கச் செய்ய வேண்டியவை என்னென்ன?

இரவு, பகலில் குழந்தைகளின் கை, கால் என உடலை முற்றிலும் மூடும் ஆடைகளை அணிந்துவிட வேண்டும்.  கைகள், கால்களில் கிளவுஸ் அணிவிக்க வேண்டும். வீட்டுக் கதவு, ஜன்னல்களைப் பெருமபாலும் மூடிவைக்க வேண்டும். கைக் குழந்தைகளுக்கு அடர்த்தியான உடைகள் போட்டுவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அடர்த்தியான துணிகளைப் பயன்படுத்துவதன் மூலம் காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாக வாய்ப்புள்ளது.

கொசு வலைகளைப் பயன்படுத்தலாம். காலை நேரத்தில் காற்று வந்து செல்லுமாறு காற்றோட்டமாகக் கதவினை திறந்துவைத்தால் போதும். இதனால் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளைப் பாதுகாக்கலாம். அவர்களுக்கு கொசு கடிக்காமல் இருக்க லோஷன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு லோஷன்கள் மற்றும் கொசுவர்த்திகள் போன்றவற்றால் அலர்ஜி உருவாகி அதுவே சளிப் பிடிக்கக் காரணமாகலாம். எனவே இவை எல்லோருக்குமானது அல்ல. கொசுவலை, கொசு பேட் போன்றவை பாதுகாப்பானவை.  

மழைக் காலங்களில் கண்சார்ந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பது பற்றி?

பருவநிலை மாற்றத்தால் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் கண் சிவந்து கண் வலி ஏற்படும். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி கண், முகம் மற்றும் கைகளைக் கழுவ வேண்டும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், சோப் முதலியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கண் நோய் வந்தவர்களுடன் இருந்து விலகி இருப்பது நல்லது. கண் கண்ணாடி அணிவதன் மூலம் தூசு படுவதைத் தவிர்க்கலாம்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட குழைந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவு முறைகள் என்ன?

குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இருக்கும் பகுதிகளில் விளையக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதென்பதே சிறந்தது.  உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவுகள் என்று பார்க்கும்போது, சீக்கிரம் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை வழங்க வேண்டும்.

மேலும், திரவ வகை உணவுகளைச் சீராக வழங்குவது அவசியம். சோர்வாக உள்ள குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் என்ற உப்பு, சார்க்கரை கலந்த தண்ணீர் கரைசலைக் கொடுக்கவும். கொதித்து ஆறவைத்த நீர், நன்கு கழுவிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள், காய்கறி சூப்புகள், சூடான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…! (அவ்வப்போது கிளாமர்)
Next post பனிக் காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் வைரஸ் தொற்று! (மருத்துவம்)