கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:15 Minute, 49 Second

இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே ஒரு பெரிய வேலையாகத்தான் இருக்கும். பொருளாதார ரீதியாக தயாராவது, விசேஷத்தை சிறப்பாக நடத்தி முடிக்க நடக்கும் திட்டமிடல்கள் என கல்யாணத்துக்காக பல வழிகளிலும் முன்னேற்பாடுகளைச் செய்கிறோம்.

இத்துடன் திருமணமாகும் தம்பதியரின் இல்வாழ்க்கை ஆரோக்கியமான நல்வாழ்க்கையாக மாற மருத்துவரீதியிலும் தயாராக வேண்டும் என்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் அகிலாம்பாள்.மணமகன் மற்றும் மணமகளுக்கான செக் லிஸ்ட்டாகவே இதனை இருவரும் பரிசோதித்துக் கொள்ளலாம். மணமக்களின் பெற்றோருக்கான செக்லிஸ்ட்டும் கூட!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் அளவுக்கு இங்கு ஆண்கள் கலவைப்படுவதோ தனது உடல் நலத்தில் கவனம் செலுத்துவதோ இல்லை. திருமணத்துக்குப் பின் குழந்தையின்மைப் பிரச்னையை சந்திக்கும்போது ஆண் தன்னிடமும் குறையிருக்கலாம் என்று யோசிப்பது கூட இல்லை. பெண்ணை முதலில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் திருமணத்துக்குப் பின்னர் ஆண் தனது குடும்ப வாழ்க்கையை இனிமையாக நடத்த உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பொதுவாக இன்றைய ஆண்களிடம் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையும் பிரச்னை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சூடான தண்ணீரில் குளிப்பது, இறுக்கமான உள்ளாடை அணிவது, நீண்ட தூரம் பைக் ஓட்டுவது, அதிக நேரம் லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் விந்தணுக்களின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. விதைப்பையின் வெப்பம் உடல் வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும். விதைப்பையின் வெப்பம் அதிகரிக்கும்போது விந்தணுக்களின் உற்பத்தியும் குறையும். இது போன்ற வாழ்க்கை முறை உள்ள ஆண்கள் விந்தணுக்கள் உற்பத்தி ஆரோக்கியமாக உள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.

படித்து வேலைக்குப் போய் குறிப்பிட்ட சம்பளம் வந்த பின்னர் தான் திருமணம் என காத்திருக்கும் ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், நரம்புப் பிரச்னை, தாம்பத்யத்தில் ஆர்வமின்மை, மன அழுத்தம் என ஏதாவது ஒரு உடல் நலப் பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. திருமணத்துக்கு முன்பு வரை இதற்கு ஆண்கள் பெரும்பாலும் முறையாக மருத்துவம் செய்து கொள்வதில்லை.

உங்களது உடல் நலம் சார்ந்த பிரச்னைகளை அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும். உங்களது உடல் நலனுக்கு ஏற்ப தவிர்க்க வேண்டியவற்றையும் தெரிந்து கொள்வது அவசியம். திருமணத்துக்குப் பின்னர் தேன்நிலவுப் பயணங்களின் போது தேவையற்ற உடல் தொந்தரவுகளைத் தவிர்க்க உடல் நலனில் ஆண்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பாக மது, போதைப் பழக்கம் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு தாம்பத்ய உறவில் குறைபாடு, குழந்தையின்மை,
நரம்புப் பிரச்னைகள் வரலாம். இதுபோன்ற பழக்கம் உள்ளவர்கள் மது, போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக தாம்பத்ய வாழ்வில் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான உணவு முறை, தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி என ஆண்கள் தங்களது வாழ்க்கை முறையைத் திருமணத்துக்கு முன்பாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். தனது அந்தரங்க உறுப்புகளை சுகாதாரமாகப் பராமரிப்பது, அதில் நோய்த்தொற்று இன்றி பார்த்துக் கொள்வதும் அவசியம். அந்தரங்க உறுப்பின் செயல்பாடு மற்றும் தாம்பத்ய உறவு தொடர்பான சந்தேகம் மற்றும் பயங்களுக்கும் அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியதும் அவசியம். திருமணத்துக்குப் பின்னர் தனது மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஆண் தாம்பத்யத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

திருமணத்துக்கு நாள் குறித்த பெண்களுக்கான ஹெல்த் செக் நோட்…
திருமணம் நிச்சயம் ஆனவுடன் பெண்கள் மனதில் அடுத்து தோன்றுவது பியூட்டி பார்லர்தான். தனது சருமத்துக்கு ஏற்ற ஃபேஷியல், ஹேர் கேர், மேக்கப் என ஒவ்வொன்றுக்கும் மெனக்கெடுவார்கள். புடவைக்கு ஏற்ற நகை முதல் பூக்கள் வரை மேச்சிங்காக வாங்குகிறோம். இவை அனைத்திலுமே திருமண நாளுக்காக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திருமண நாளில் துவங்கி எப்போதும் மகிழ்ச்சி பொங்க அவர்கள் தங்களது உடல்
நலனைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

திருமணப் பேச்சு வார்த்தை துவங்கி திருமண நாள் நிச்சயிக்கப்படும் காலகட்டம் வரை பசி தூக்கம் இன்றி அந்த ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டே இருப்பார்கள். சந்திப்புக்கான பயணங்கள் என இருவருக்கும் இடையில் காதல் உணர்வு மட்டுமே மேலோங்கியிருக்கும். திருமணத்தின் நோக்கமே அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்வதுதான். ஒரு குழந்தையைத் தாங்கி ஆரோக்கியமாகப் பெற்று எடுப்பதற்கான நிலையில் பெண்ணுடல் தயாராக இருக்க வேண்டும். குழந்தைப் பிறப்பைச் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடுவதாக இருந்தால் அந்த ஆணும் பெண்ணும் குழந்தையைத்
தள்ளிப் போடுவது குறித்து மகப்பேறு மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற வேண்டும்.

திருமணத்துக்கு முன்பு வரை பெண்ணுடலில் சில பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. ரத்த சோகை, முடி உதிர்வு, முகப்பரு, மாதவிடாய்க் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஒவ்வொருவருக்கும் மாறும். சரிவிகித சத்துணவு மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களை முறையாகப் பராமரிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் இன்றைய இளம் பெண்கள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் சென்ற பின்னர் திருமணம் என்பதால் 25 வயதுக்கு மேல்தான் திருமணம் நடக்கிறது. மேலும் குழந்தை உருவாவதில் பிரச்னைகளைத் தவிர்க்க திருமணம் முடிந்த சில மாதங்களில் குழந்தைக்கான தேடல் கணவன் மனைவியிடம் உருவாகிறது.

ஃபோலிக் ஆசிட் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிந்து இதற்கான மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக குழந்தையின் முதுகுத் தண்டுவட வளர்ச்சிக்கு இது உதவுகிறது. ஃபோலிக் ஆசிட் குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஃபோலிக் ஆசிட் குறைபாடுள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை முதுகுத் தண்டுவடத்தில் கட்டியுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

திருமணம் ஆவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். சில பெண்கள் திருமணம் ஆன ஒரு சில மாதத்துக்குள் கருத்தரித்து விடுகின்றனர். இதனால் திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே போலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ருபெல்லா ஒரு வகையான அம்மை நோய். இது கர்ப்பிணிப் பெண்களை தாக்கும்போது மிகவும் முக்கியமாக முதல் மூன்று மாதங்களில் இந்தத் தொற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்பட்டால் இது குழந்தையின் எந்த உறுப்பை வேண்டுமானாலும் பாதிக்கலாம். குழந்தையின் கண் பார்வை, காது கேளாமை போன்ற பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புள்ளது. முதல் மூன்று மாதங்களில் தான் குழந்தையின் அனைத்து உறுப்புக்களும் வளர்ச்சி அடையும்.

இதனைத் தடுப்பூசி போட்டுக் கொண்டு எளிதில் தவிர்க்கலாம். சிறு வயதிலேயே இந்த தடுப்பூசி போட்டிருப்பது நல்லது. இல்லாவிட்டால் திருமணத்துக்கு முன்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும். இதேபோல VARICELLA மற்றும் HEPATITIS B எடுத்துக் கொள்வதும் அவசியம்
ஆகும்.

பெண்களின் தலையாய பிரச்னையாக தைராய்டு மாறியுள்ளது. இதனால் பருவ வயதுப் பெண்களுக்கு முடி உதிர்வு, உடல் எடை அதிகரிப்பு, முறையற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் ரத்தப் போக்கு அதிகமாக இருக்கலாம். தைராய்டு ஒரு நாளமில்லாச் சுரப்பி. உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களின் செயல்பாட்டுக்கும் இது அவசியமான ஒன்றாகும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் மாதவிடாய்க் கோளாறுகள், கருத்தரிப்பதிலும் பிரச்னைகள் ஏற்படும்.

ரத்தப் பரிசோதனை மூலம் இவற்றை எளிதில் கண்டறிந்து சரி செய்யலாம். ஒரு சிலர் மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்கள் மட்டும் மாத்திரை எடுத்துக் கொண்டு மருத்துவரின் ஆலோசனை இன்றி நிறுத்திவிடுகின்றனர். ஒரு சிலர் கருத்தரித்த பின்னர் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று நிறுத்தி விடுகின்றனர். இது மிகவும் தவறான ஒன்று.

ஒரு சில பெண்கள் திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் குழந்தைகள் இல்லை என்று வருபவர்களுக்கு தைராய்டு பிரச்னை சரி செய்வதன் மூலம் இயற்கையாகவே கருத்தரித்து உள்ளனர். அதனால் இதையும் திருமணத்துக்கு முன்பே பரிசோதனைசெய்து கொண்டு பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

திருமணத்துக்கு முன்பு பல் பரிசோதனை அவசியமான ஒன்று. ஏனெனில் இந்த வயதில் ஞானப்பல் வளர வாய்ப்புள்ளது. அது ஒரு சிலருக்கு நேராக வளராமல் சாய்ந்தோ, புதையுண்டோ இருக்கலாம். இதனால் கர்ப்ப காலத்தில் வலி ஏற்பட்டால் அதை அகற்ற முடியாது. மேலும் பல்
மற்றும் ஈறு பிரச்னையும் குழந்தைகளை பாதிக்க வாய்ப்புள்ளது.

வாய் நாற்றம், வியர்வை நாற்றம், பிறப்புறுப்புப் பகுதியில் நோய்த்தொற்று, அரிப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இதற்கான மருத்துவர்களை அணுகி தீர்வைத் தேட வேண்டும். இவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவது கணவன் மனைவிக்குள்ளான தாம்பத்ய நெருக்கத்தைக்
குறைக்கும்.

சத்துக்குறைபாட்டினால் எப்போதும் சோர்வாக இருப்பது, நீண்ட தூரம் பயணம் செய்யப் பயப்படும் பெண்களும் இருப்பார்கள். இவர்கள் சரிவிகித சத்துணவை எடுத்துக் கொள்வதன் மூலம் எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளலாம்.

உடல் பருமன் அதிகம் உள்ள பெண்கள் எடைக் குறைப்புக்கான நடவடிக்கைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம். தாம்பத்யம் தொடர்பான சந்தேகம் மற்றும் பயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் பெண்கள் மகப்பேறு மருத்துவரை அணுகலாம்.திருமணத்துக்குப் பின்பான வாழ்க்கை இனிதாக அமைய இந்த ஹெல்த் செக் நோட்களை திருமணத்துக்கு முன்பே கட்டாயம் பின்பற்ற வேண்டும்.Happy married life !

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)
Next post முதலுதவி முக்கியம்! (மருத்துவம்)