கேப்டன் தோனியுடன் சேர்ந்து ‘டாஸ்’ செய்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 1 Second

போட்டிகளில் பங்கு பெற வயது ஒரு பெரிய தடையில்லை. அறுபது வயதானாலும் மனம் மற்றும் உடல் தளராமல், தன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால், கண்டிப்பாக எந்த வயசிலும் அதனை அடைய முடியும். இதற்கு உதாரணமாக இருந்து வருகிறார் மதுரை விஸ்வநாத புரத்தை சேர்ந்த பானுமதி. இவரின் வயது 60. ஆனால் 20 வயது பெண் போல் இன்றும் துள்ளிக் குதித்துக்ெகாண்டு பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்று வருகிறார். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் ஏற்படக் காரணம்சின்ன வயசில் இருந்தே எனக்கு கலை சார்ந்த விஷயம் மேல் தனிப்பட்ட ஆர்வம் உண்டு.

நன்றாக ஓவியம் வரைவேன், பாட்டு பாடுவேன், திறமையாக பேசவும் செய்வேன். என்னுடைய திறமையை நானே தான் வளர்த்துக் கொண்டேன். அதே சமயம் அந்த திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்க வேண்டுமே. அதன் அடிப்படையில்தான் நான் போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்தாலும், அதன் பிறகு எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுதான் நான் கலந்து கொள்ளும் போட்டியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு பரிசினை தட்டிச் செல்ல ஊன்றுகோலாக அமைந்தது.

உங்கள் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டது குறித்துஎன்னுடைய பத்து வயதில் இருந்தே நான் ஓவியம் வரைய பழக ஆரம்பித்தேன். இதற்காக நான் தனிப்பட்ட வகுப்போ அல்லது பயிற்சியோ எடுத்துக் கொண்டதில்லை. என்னுடைய சிந்தனையில் தோன்றியதை அப்படியே பென்சிலால் தீட்ட ஆரம்பித்தேன். இன்றும் பென்சில் டிராயிங் தான் செய்து வருகிறேன். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போட்டோக்களை பார்த்து அப்படியே அச்சு அசலாக வரைந்து விடுவேன். குழந்தைகளின் ஓவியங்களை வரைவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நான் வேலைக்கு செல்லாத பட்டதாரி குடும்பப் பெண் என்பதால் வீட்டு வேலைகளை முடித்தபிறகு இரவு, பகல் என எனக்கு கிடைக்கும் நேரத்தில் ஓவியங்களை வரைவேன். பொழுதுபோக்காக ஆரம்பித்ததுதான் இன்று பல பரிசுகளை அதில் பெற்றிருக்கேன். நான் பள்ளியில் படிக்கும் போது பல ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் பெற்றிருக்கேன். அது தான் எனக்காக ஊக்கத்தை அளித்தது. தேசிய அளவில் ஓவியம் வரையும் போட்டியிலும் பங்கு பெற்றிருக்கேன். அதில் பரிசு பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என்னால் சாப்பிடாமல் தூங்காமல் கூட இருந்திட முடியும். ஆனால் ஓவியங்களை வரையாமல் இருக்கவே முடியாது. ஓவியங்கள் வரைவது என் உயிர் மூச்சுன்னுதான் சொல்லணும்.

ஓவியங்கள் தவிர… டிஸ்யூ பேப்பர்களை கொண்டு வண்ண வண்ண மாலைகளை செய்வேன். அதுமட்டுமில்லாமல் காகிதங்கள் கொண்டு கலை நயமிக்க பொருட்களை உருவாக்குவேன். தேங்காய் மூடியிலும் கலை பொருட்களை செய்து வருகிறேன். அதை பரிசாகவும் கொடுப்பேன். அதைப் பார்த்து மற்றவர்கள் கேட்பார்கள். அவர்களுக்கும் செய்து கொடுப்பேன். எனக்கு எழுத்து மீதும் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. அதனால் பல பெண்கள் பத்திரிகையில் சமையல் குறிப்புகள், ரெசிப்பிகளை பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.

என்னுடைய கவிதைகளும் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும், பாட்டு பாடுவதிலும் பேசுவதிலும் எனக்கு ஆர்வமுண்டு. பள்ளிக் காலத்தில் பல பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று பரிசு பெற்றிருக்கேன். மேலும் தற்போது, எஃப்.எம் ரேடியோ சானல்கள் பல போட்டிகளை வாசகர்களுக்காக நடத்துகிறார்கள். அதில் நான் தொடர்ந்து பங்கு பெறுவேன். ஒரு முறை எஃப்.எம் ரேடியோவில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று பரிசு பெற்றேன். அந்த போட்டியில் ஜெயிச்சதற்கு பட்டுப் புடவை பரிசா கொடுத்தாங்க. அதை மறைந்த முன்னாள் நடிகை மனோரமா அவர்கள் கையால் பெற்றேன். அந்த தருணத்தை மறக்கவே முடியாது.

இதில் நான் இன்றும் பெருமையாக நினைப்பது இரண்டு விஷயம். 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபெற எஃப்.எம் ரேடியோவில் போட்டி வைத்தார்கள். அதில் கேப்டன் தோனி பற்றி “கானா பாடல்” எழுதி வாசிக்கணும். ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். நானும் கலந்து கொண்டேன்.
என்னுடைய கானா பாட்டுக்கு முதல் பரிசு கிடைச்சது. உலக கிரிக்கெட் போட்டியில் தோனியுடன் மைதானத்தில் அவருடன் சேர்ந்து “டாஸ்” போடும் வாய்ப்பு தான் அந்த முதல் பரிசு. என் மகன் கிருஷ்ணா தோனியின் தீவிர ஃபேன், கிரிக்கெட் வீரனும் கூட. அதனால எனக்கு பதில் அவன் தோனியுடன் டாஸ் போட்டு கிரிக்கெட் மேட்ச் துவங்க தென்னாப்பிரிக்கா
சென்று வந்தான்.

அதேபோல் பிரபல காபி நிறுவனம் நடத்திய போட்டியில் பங்கு பெற்று அதில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிற்கு பட்டுப்புடவைகளை பரிசாக பெற்றேன். எனக்கு பட்டுப் புடவை மேல் பெரிய ஈடுபாடு கிடையாது. அதனால் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு அதை திருமண சீதனமா கொடுத்தேன். அவங்க ரொம்ப வசதி இல்லாதவங்க. அதனால் அந்த புடவையை அந்த பெண்ணிற்கு கொடுத்தேன். அப்படி கொடுக்கும் போது மனசுக்கு அவ்வளவு நிறைவா இருந்தது.

எதிர்கால லட்சியம்தொடர்ந்து ஓவியங்கள் வரைவது, எஃப்.எம் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பெறுவது, விதவிதமான கோலங்கள் போடுவது, பெண்கள் பத்திரிகைகளில் சமையல் குறிப்புகள், கவிதைகள், கதைகள் எழுதுவது. இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்வது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கீரைகளை எவ்வாறு தேர்வு செய்யலாம்! (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவகோடா! (மருத்துவம்)