வருடங்கள் தாண்டினாலும் நிகழ்வுகளை பசுமையாக வைக்கும் புகைப்படங்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 8 Second

“இந்த கொரோனா காலகட்டத்தில் நாதஸ்வரம், அர்ச்சகர், மண்டபம் இல்லாமல் பல திருமணங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் மாப்பிள்ளையே இல்லாமல் கூட ஆன்லைனில் சில நிச்சயதார்த்தங்கள், திருமணங்கள் நடத்தப்படுகிறது. ஆனால், புகைப்பட கலைஞர்கள் இல்லாமல் எந்த ஒரு நிகழ்வும் நடப்பதில்லை” என்கிறார் புகைப்பட கலைஞர் ஆரோக்கி.‘‘சொந்த ஊர் கோவை. ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்தேன்.

அதற்கு மேல் குடும்ப சூழல் காரணமாக பள்ளி செல்ல முடியவில்லை. ஒவ்வொரு இடமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் தான் நண்பர் ஒருவர் மூலமாக பிரின்டிங் கலர் லேபில் டெக்னீஷியனாக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஃபிலிம் பிரின்டிங் டெவலப்பிங்கில் இருந்தேன். ஒரு ரோலில் 36 படங்கள் எடுக்கலாம். சிலர் 15, 20 படங்கள் மட்டுமே எடுத்து வரும் போது, எடுத்ததை மட்டும் கட் பண்ணி மீதி இருக்கிறதை அப்படியே கேமராவில் லோட் பண்ணி கொடுப்போம். முதல் முறை கேமராவை கையில் தொடும் போது ஏதோ ஓர் இணக்கம்.

கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வரும் புகைப்பட கலைஞர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் கொண்டு வரும் FM10, FM2 போன்ற கேமராக்களை ஒவ்வொரு முறை வாங்கும் போதும் புதுப்புது தொழில்நுட்ப விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஒரு நாள், ‘அண்ணா இதில் எடுத்து பார்க்கலாமா?’ என்று, கேமராவை வாங்கி அதன் லென்ஸ் வழியே பார்த்த போது, எனக்கான ஒரு உலகை கண்டேன். அந்த சமயத்தில் எனக்குள் பல வோல்ட் கொண்ட மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது முடிவு செய்தேன், கேமரா தான் என் வாழ்க்கை என்று. எப்படியாவது நாமும் கேமரா வாங்க வேண்டுமென்று என்னுள் ஒரு உத்வேகம் ஏற்பட்டது.

நல்ல கேமரா வாங்க அதிக பணம் செலவாகும். அதனால் என்னுடைய வேலைக்கான நேரத்தை அதிகப்படுத்தினேன். லேபிள் வேலை செய்து கொண்டே, வெளியிலும் சின்ன சின்ன நிகழ்வுகளுக்கு வேறொருவரின் கேமராவை வாங்கி செல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் காசு சேர்ந்ததும் 2001ல் ஒரு புது ஃபிலிம் கேமரா வாங்கினேன். அதில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே 2003-2005 காலகட்டங்களில் டிஜிட்டல் கேமராக்கள் வர ஆரம்பித்தது. ஃபிலிம் கேமராவிலிருந்து டிஜிட்டலுக்கு மாறும் போது ரொம்ப எளிமையாக இருந்தது. எடுத்த படத்தை உடனே பார்த்துவிடலாம். ஃபிலிமில் எடுக்கும் போது நெகட்டிவ் டெவலப் பண்ற வரைக்கும் பாதி உயிரே இருக்காது. எக்ஸ்போஸ் ஆகியிருக்குமா? ஆகியிருக்காதா? ஷட்டர் ஸ்பிட் சரியா இருந்ததா.. எல்லாவற்றையும் விட நாம் எதிர்பார்த்த அந்த ஷாட் சரியா பதிவாகி இருக்கா… இப்படி பல விதமான பயம் இருக்கும்.

ஆனால் ஒரு ரோல் முழுக்க எடுத்து அதை காத்திருந்து பார்க்கும் போது ரொம்பவே த்ரில்லிங்காவும், எக்ஸ்சைட்மென்டாவும் இருக்கும். டிஜிட்டல் வந்த பின் பிரின்டிங் செய்யும் முறையும் மாற ஆரம்பித்தது. ஃபிலிமில் எடுக்கும் போது 6×4 மேக்சி சைசில் பிரின்ட் போட்டு ஆல்பத்தில் ஒட்டப்படும் அல்லது ஸ்டிக்கர் டைப்பில் இருக்கும். டிஜிட்டல் வந்த பிறகு போட்டோ ஷாப் வேலையெல்லாம் பார்த்து ஒரே பக்கம் முழுவதும் பிரின்ட் போட்டு பெரிய படமாக வைப்பது போல் எல்லாம் மாறியது. அதை சினிமா டைப் ஆல்பம் என்றார்கள்.

டிஜிட்டல் வந்த பிறகு தான் போட்டோகிராபியில் நிறைய பேர் நல்ல நிலைக்கு வந்தார்கள். அதேபோல் நிறைய பேர் போட்டோகிராபராக உருவாகினார்கள். அதனால் வேலை வாய்ப்பும் உருவானது. இன்று இந்த துறையில் பெண்களும் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்” என்கிற ஆரோக்கி, திருமணங்களில் புகைப்படம் எடுக்கும் போது தாலி கட்டும் நேரத்தில் இருக்கும் சுவாரசியங்கள் பற்றி பேசுகையில்…

“ஃபிலிம் மட்டுமல்ல, டிஜிட்டலிலும் எவ்வளவு பெரிய போட்டோகிராபராக இருந்தாலும் சரி, எவ்வளவு அனுபவமுள்ளவராக இருந்தாலும் சரி தாலி கட்டும் நேரத்தில் போட்டோ எடுப்பது, அது பிரின்டாகி ஆல்பம் வரும் வரையிலும் ஒரு டென்ஷன் இருக்கும். தாலி கட்டும் போது டிஸ்பிளே அதிகமாக பார்க்க மாட்டோம். அதற்குள் ஏதாவது மூமன்ட் மிஸ் ஆகிடும். எனவே லைவா பத்து இருபது படங்கள் எடுத்துருவோம். எல்லாம் முடிச்சுட்டு மண மேடையிலிருந்து கீழே வந்து ரீவைண்ட் பண்ணி பார்க்கும் போது சில நேரம் ஃபோக்கஸ் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும். இப்போது டிஜிட்டல் அதை சரி செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. தாலி கட்டும் நேரம் மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல, போட்டோ கிராபர்களுக்கும் முக்கியமானதுதான்.

ஃபிலிமிலிருந்து டிஜிட்டலுக்கு மாறிய பிறகு போட்டோகிராபியிலும் நிறைய ஸ்டைலும் மாறி இருக்கிறது. ஃபிலிமில் ஒரு சிலரால் மட்டும் கேண்டிட் போட்டோகிராபி எடுத்தனர். ஆனால் டிஜிட்டல் வந்த பின் அது ட்ரெண்டாக உருவானது. பலர் கேண்டிட் என்பதை அவுட்டோர் அழைத்து சென்று எடுப்பதாக புரிந்து கொண்டுள்ளனர். கேண்டிட் ஷாட்ஸ், அவர்களுக்கு தெரியாமலேயே கேப்ச்சர் பண்ணும் மூமன்ட்ஸ். அவுட்டோரில் புகைப்படம் எடுக்கும் போது அவர்களை இப்படி நில்லுங்கன்னு போஸ் செய்யச் சொல்லி எடுப்போம். இதை கேண்டிட் என்று சொல்ல முடியாதே. கேண்டிட் லைவாக இருக்கும். அதை இப்போது டிரெடிஷ்னல் போட்டோகிராபி என்றும் சொல்றாங்க.

கேண்டிட் தொடர்ந்து கிரியேட்டிவ் ஷாட் என்று எடுக்க ஆரம்பித்தோம். நிறைய போஸ் செட் பண்ணி எடுப்பது அல்லது ஏதாவது ஒரு நல்ல மூமன்ட் மிஸ் செய்திருப்போம். அதை மீண்டும் ரீ கிரியேஷன் செய்து எடுப்பது தான் கிரியேடிவ் ஷாட்ஸ். க்ளைண்டும் அதை விரும்புகிறார்கள். இந்த கிரியேட்டிவ் ஒரு கட்டத்திற்கு மேல் ப்ரீ வெட்டிங் ஷூட்டாக மாறியது. திருமணம் முடிந்து அவுட்டோர் போய் எடுப்பது ஃபிலிம் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கிறது. இப்போது திருமணத்திற்கு முன்பே சில இணையர்கள் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து திருமண பத்திரிகை போல், நண்பர்களை அழைப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். புகைப்படங்களுக்கு ஏற்றார் போல் பிரின்டிங் பிராசசிலும் சில அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

புகைப்படங்கள் போல் வீடியோவிலும் இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இரண்டு நாள் நிகழ்வின் தொகுப்பினை ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு சுருக்கி கொடுக்கும் போது, சினிமா கலாச்சாரத்தின் தாக்கம் நமக்கு அதிகம் இருப்பதினால் அதை ரசிக்கிறார்கள். இந்த ப்ரீ வெட்டிங் ஷூட்டிலே சிலர் லிப்டப் செய்வதோடு, தங்களுக்கான வரிகள் எழுதி பாடலாக கம்போஸ் செய்கிறார்கள். சிலர் நடனம் ஆடுகிறார்கள். இன்னும் சொல்ல போனால் ஒரு ரிசார்ட்டே எடுத்து சினிமா செட் மாதிரி எல்லாம் போட்டு திருமணம் செய்கிறார்கள். சொந்தக்காரர்களோ, நண்பர்களோ ஒரு லெவல் செய்திருந்தால் அதை விட அடுத்த லெவல் தான் எதிர்பார்க்கிறார்கள்” என்கிற ஆரோக்கி, புகைப்படத்தின் முக்கியத்துவம் பற்றி கூறும் போது…

‘‘ஒரு திருமணத்திலோ அல்லது மற்ற நிகழ்வுகளிலோ எவ்வளவோ விஷயங்கள் நடக்கும். எல்லாமே நாம் ஞாபகம் வைத்திருக்க மாட்டோம். அதை எல்லாவற்றையும் பல வருடங்கள் தாண்டி நம் நினைவில் கொண்டு வருவது நாங்கள் எடுக்கும் புகைப்படங்களும், வீடியோக்களுமே. அதை பார்க்கும் போது அந்த நிகழ்வினுள்ளே போய் வருகிற மாதிரி எடுத்துக் கொடுப்பது தான் எங்கள் சிறப்பு” என்கிறார் புகைப்பட கலைஞர் ஆரோக்கி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)