கிராமிய வாழ்க்கையை பதிவு செய்யும் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 34 Second

ஓவியக் கலைஞர் காயத்ரியின் சொந்த ஊர் புதுச்சேரி. பள்ளியில் படிக்கும் போதே ஓவியங்கள் மீதான ஆர்வம் உண்டாகி 90களில், தன் குடும்பத்தினரிடம் அடம்பிடித்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். இப்போது சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஓவியங்கள் வரைந்து வருகிறார். இவரது கிராமிய ஓவியங்கள் தமிழ்நாட்டை தாண்டி இந்திய அளவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலம். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான ஓவியங்களை வரைந்துள்ள காயத்ரி தன் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்கிறார்.

“என் ஓவியங்கள் அனைவருக்கும் புரியக்கூடிய ஓவியங்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன். சில சமகால அல்லது சர்ரியலிசம் ஓவியங்களை அனைவராலும் ரசிக்க முடியாது. அந்த ஓவியங்களில் பல அழகான நுணுக்கங்களும் கருத்துகளும் நிறைந்திருந்தாலும், அதை பலரால் புரிந்துகொள்ளவே முடியாது. ஆனால் என் ஓவியங்கள் மிகவும் சாதாரணமாக சிந்தனைகளின் அடிப்படையில் உருவானதுதான். கலை மீது எந்த ஆர்வமும் இல்லாதவர்கள், ஏன் குழந்தைகள் கூட என் ஓவியத்தை ரசிக்க முடியும்.

எனக்கு எப்போதுமே வாட்டர் கலர் பெயிண்டிங் செய்ய பிடிக்கும். அதை செய்வது கொஞ்சம் கடினமும் கூட. ஏதாவது தவறு நடந்துவிட்டால், அதை திருத்த முடியாது. அதனால் பலர் இந்த ஓவிய பாணியை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஆனால் நான் இதை விரும்பியே செய்கிறேன். தொடர்ந்து பயிற்சி செய்து வருவதால், தவறுகளும் பெரிதாக நிகழாது. தவிர, வாட்டர் கலர் ஓவியங்கள் ஒரு விதமான அமைதியையும் மன நிறைவையும் தரும். கொஞ்சம் மழை பெய்து ஓய்ந்தது போன்ற இதமான பின்னணியில் அமைந்திருக்கும். நான் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களும் அது போலவே மனதிற்கு இதம் தருவதாகவே இருக்கும்.

புதுச்சேரியில் நடக்கும் ஓவிக் கண்காட்சியில் தவறாமல் என் ஓவியங்களை காட்சிப்படுத்தி விடுவேன். ஒவ்வொரு முறையும் என் ஓவியங்கள் தவறாமல் விற்பனையும் ஆகும். கிராமிய வாழ்க்கை, நம் சந்தைகள், விழாக்கள், கலைகள், விவசாயம், தமிழகம் – புதுச்சேரியின் சுற்றுலா தளங்கள், மக்களின் அன்றாடம் என பொதுவாக நம் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் காட்சிகளையே ஓவியங்களாக வரைவேன். புதுச்சேரிக்கு பல வெளிநாட்டு மக்கள் சுற்றுலாவுக்காக வருவார்கள். அவர்களுக்கு இந்த ஓவியங்கள் மீது அதீத ஈர்ப்பு இருக்கும். அவர்கள் இந்த ஓவியங்களை நினைவுப் பரிசுகளாக வாங்கிச் செல்வார்கள். என் ஓவியங்கள் பல விற்க காரணமும் இதுதான். எனது ஓவியங்கள் இந்தியாவின் அனைத்து மூலையையும் தாண்டி, உலகம் முழுக்க பல நாடுகளிலும் கூட இருக்கின்றது என்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சிதான்.

இன்று நம் வாழ்க்கையும் சுற்றுப்புறமும் மிக வேகமாக மாறி வருகிறது. நான் பார்த்து வளர்ந்த கிராமம் இப்போது காணாமல் போய்விட்டது. அது முன்னேற்றத்திற்கான பாதை என்றாலுமே, நான் ஓடியாடி விளையாடிய இடம் இப்போது அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு மாறிவிட்டதே என்ற வருத்தம் கொஞ்சம் இருக்கும். அந்த நினைவுகளை அப்படியே என் ஓவியங்களாக வரைந்து பாதுகாப்பதில் எனக்கு ஒரு சின்ன மனநிறைவு கிடைக்கிறது.என் கல்லூரி வாழ்க்கை, கலைக்கான என் பாதையை அழகாகக் கட்டமைத்து கொடுத்தது. எங்குத் திரும்பினாலும் மாணவர்கள் ஏதாவது ஒரு காட்சியை வரைந்து கொண்டே இருப்பார்கள். அந்த ஒரு சூழலில் என் கற்பனைகளும் திறமைகளும் வளர்ந்து விரிந்தன. எந்த தயக்கமும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் நமக்குப் பிடித்ததைப் பற்றி பேசி விவாதித்து சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

என்னுடைய முதல் குரு, ஆசிரியர் கோபால். அவர்தான் எனக்கான ஒரு பாணியை உருவாக்கிக்கொள்ள உதவினார். தினமும் ஒரு ஓவியத்தை வரையும் பழக்கத்தை அவர்தான் ஏற்படுத்தினார். எப்போதும் என் ஓவியங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அதனால் ஏதாவது புதிதாக முயற்சித்துக்கொண்டே இருப்பேன். முட்டை ஓடுகளை வைத்து ஓவியம் வரைந்துள்ளேன். அது பல ஊடகங்களின் கவனத்தையும் பெற்று எனக்குப் பெருமையையும் ஊக்கத்தையும் அளித்தது.

ஒரு கண்காட்சியில் என் ஓவியங்களைப் பார்த்த ஒரு பெண், அது அப்படியே தன் கிராமத்தை நினைவுபடுத்துவதாக கூறினார். அவர், தன் வீடு முழுக்க, விவசாயத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அந்த செயல்முறைகளை அப்படியே ஓவியங்களாக வரைந்து தரச்சொல்லிக் கேட்டு, சுவர்கள் முழுக்க அலங்கரித்துள்ளார். இப்போது கொரோனா சமயத்தில், ஆன்லைன் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறோம்.வெறும் இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் கொண்ட ஓவியங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனால் குறைந்த வண்ணங்கள் கொண்டு மினிமலிசம் ஓவியங்களையும் இப்போது வரைந்து வருகிறேன்.

இதுவரை 300க்கும் அதிகமான ஓவியங்களை விற்றுள்ள காயத்ரி, “ஓவியர்கள் தங்கள் கலை மீதான பற்று, ஆர்வத்தை தாண்டி, அந்த ஓவியங்கள் தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தையும் கொடுக்க வேண்டும். கலை உங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், அது வாழ்வாதாரமும் கொடுத்தால்தான் வெற்றி” என தன் ஆசிரியர் தனக்குச் சொல்லிய ஆலோசனையை இளம் கலைஞர்களுக்கும் அவர் சொல்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சுவர்களை அலங்கரிக்கும் வண்ண வண்ண தோரணங்கள்!! (மகளிர் பக்கம்)