ஜூம்பா நடனம்… பெண்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 51 Second

நின்று நிதானிக்க நேரமற்ற அவசர ஓட்டத்தில் பலருக்கும் இங்கு மன அழுத்தம் நிறையவே உண்டு. இதில் ஸ்ட்ரெஸ் பஸ்டருக்கு மேக்ஸிமம் பாயின்ட் ஜூம்பாவுக்குத்தான் என பேசத் தொடங்கினார் சுதா சந்திரசேகர், ஜூம்பா நடனப் பயிற்சியாளர். இவர் ‘Zing N Swing’ என்கிற ஜூம்பா நடன ஸ்டுடியோ ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார்.

‘‘என் வலியில் இருந்து நான் தொடங்கியதே இந்த ஜூம்பா ஸ்டுடியோ. அதாவது energize your moves என்பதே இதன் தாரக மந்திரம். நான் பி.காம்.எம்பிஏ. முடித்து 2014ல் பிரபல கைபேசி நிறுவனத்தில் பணி செய்தேன். எனக்கு சிஸ்டம் முன்பு அமர்ந்து செய்யும் வேலை. பிக்கப் அண்ட் டிராப் செய்ய கார் வீட்டுக்கே வந்துவிடும். இதனால் 80 கிலோ எடை இருந்தேன்.

அதிக எடை காரணமாக கால் வலியும் இருந்தது. அப்போதுதான் 2015ல் ஜூம்பா அறிமுகமானது. ரெகுலராகச் செய்ய தொடங்கியதில் எடை 60ல் கட்டுக்குள் வந்தது. கால் வலியும் காணாமல் போக, ஜூம்பா நடனத்தின் மேல் தனிப்பட்ட ஈர்ப்பே எனக்கு வந்துவிட்டது. முறைப்படியாக சான்றிதழ் பெற்று நானே ஜூம்பா டிரெயினராக மாறினேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமே வகுப்புகளை எடுத்து வருகிறேன்.

ஜூம்பா நடனத்தை யார் வேண்டுமானாலும் ஆடலாம். சென்னை பெரு நகரங்களில் குழந்தையில் தொடங்கி பெரியவர்கள் வரை யாரைப் பார்த்தாலும் ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெஸ் என மன அழுத்தத்திலே எப்போதும் இருக்கிறார்கள். மனப் பதட்டத்தோடு ரெஸ்ட்லெஸாக இருப்பவர்களுக்கும் ஜூம்பாவில் தீர்வு உண்டு. குண்டா ஒல்லியா என்பதல்ல இங்கு முக்கியம். எனெர்ஜிட்டிக்கா இருக்கிறோமா என்பதே மிகவும் முக்கியம்.

நமது உடல் இயந்திரம் மாதிரி. பராமரிப்பு இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தால் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதனால்தான் 40 வயதுக்கு மேல் முதுகு வலி, முழங்கால் வலி என பெண்களுக்கு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதில் எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் ஓய்விலேயே இருப்பவர்கள் தங்கள் உடலை வளைப்பது கடினம்தான்.

கை மற்றும் கால்களுக்கு வேலை கொடுக்காமலே பலர் உடல்களில் கொழுப்பு சேர பருமனாய் இருப்பர். பருமனை குறைக்க வேறு எந்த உடற் பயிற்சியும் நாம் செய்யத் தேவையில்லை எனும் அளவிற்கு உடலுக்குத் தேவையான பயிற்சி ஜூம்பாவில் கிடைப்பதோடு, உடலில் சேர்ந்திருக்கும் கலோரிகளையும் எரித்து, உடலுக்கு நெகிழ்வைக் கொடுத்து (flexibility), ஸ்டாமினாவையும் அதிகப்படுத்தும். ஜூம்பா செய்தபின் உடலில் எனர்ஜி லெவல் தானாகவே கூடியிருக்கும். தினமும் செய்வதால் உடல் எடை தானாகவே குறையத் தொடங்கி மைன்ட் ரிலாக்சேஷன் கிடைக்கும்.

நடைப்பயிற்சி, யோகா, ஜிம், ஏரோபிக்ஸ் என்று உடல் பயிற்சிக்கு பல விசயங்கள் இருந்தாலும் நம் மனதுக்கு புத்துணர்வோ, திரும்பத் திரும்ப செய்ய வேண்டும் என்ற எண்ணமோ வராது. நாம் செய்வதையே மீண்டும் மீண்டும் செய்வது போன்ற எண்ணத்தில், ஒரு சிலருக்கு போரடிக்க ஆரம்பித்து பாதியிலே செய்வதை நிறுத்தியும் விடுவார்கள். நடைப்பயிற்சியும் நாம் மட்டுமே தனியாக நடப்பது போன்ற தொய்வான மன நிலையை கொடுக்கும். எப்போதாவது நண்பர்கள் இணைந்தால் அங்கே பேச்சு அதிகரிக்குமே தவிர நடை குறையும்.

ஆனால் ஜூம்பாவில் மிக முக்கியமானதே இசைக்கப்படும் பாடல்கள்தான். முழு உடலையும் பயிற்சிக்கு உட்படுத்துகிற நடன அசைவுகளுக்கேற்ற பாடல்கள் ஜூம்பாவில் உண்டு. வகுப்பின் முடிவில் அவரவர் விரும்பும் பாடல்களை இசைத்து ஆட வைத்து கூல் செய்வோம். உச்சந்தலையில் தொடங்கி கால்நுனி வரை, கண்கள், காது, உடம்பு என மொத்த உடலையும் நடன அசைவில் கவர் செய்துவிடலாம். இதில் நேரம் போவதும் சுத்தமாகத் தெரியாது. உட்காருவது, குதிப்பது, குனிவது, கை கால்களை தூக்குவது என அனைத்து ஸ்டெப்ஸ்களும் நடனத்தில் இருக்கும். அதுவே பத்து பதினைந்து பேருடன் இணைந்து செய்யும்போது சோஷியலைஷிங் சிந்தனையும் இணைகிறது என்கிறார் இவர்.

நடனமே தெரியாதவர்கள் என்றாலும் முதல் இரண்டு வாரம் ஒரே பாடலை மீண்டும் மீண்டும் போட்டு ஆடும்போது தூக்க முடியாமல் இருந்த கைகளை லேசாகத் தூக்க ஆரம்பித்திருப்பார்கள். சிலருக்கு கையைத் தூக்கினால் கால்கள் தூக்க வராது. காலைத் தூக்கினால் கைகள் ஒத்துழைக்க மறுக்கும். சிலரோ நீங்கள் எல்லாம் வேகமாக செய்யுறீங்க எங்களுக்கு வரலை என்பார்கள். ஒரு மணி நேரத்தில் 16 சாங்ஸ் இதில் போடப்படும். போடுகிற ஸ்டெப்ஸ் சரியா தவறா என்பதெல்லாம் இதில் மேட்டர். நாங்கள் செய்வதை மிரராகப் பார்த்து டிரை பண்ணினாலே போதும். செய்த ஒன்றைத் திரும்பத் திரும்ப செய்யும்போது இயல்பாக அது வந்துவிடும்.

நடனம் தெரிந்தவர் தெரியாதவர் என யார் வேண்டுமானாலும் இதை செய்ய ஆரம்பிக்கலாம். முதலில் இரண்டு மூன்று பாடலுக்கு என்னால் முடியலை எனச் சொல்பவர்கள் ஒரே மாதத்திலே நன்றாக ஆட ஆரம்பித்திருப்பார்கள். கஷ்டம் என நினைத்து ஒதுக்கிய பல வேலைகளையும் இப்போது அவர்களால் சுலபமாகச் செய்ய முடியும்.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய், மெனோபாஸ் நேர பிரச்சனைகளுக்கும் இதில் தீர்வு உண்டு. நீரிழிவு நோயாளிகளை ஜூம்பா நடனம் செய்ய மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். மேலும் இது இதய நோயாளிகளுக்கும் நல்லது. குழந்தைகளுக்கும் நினைவாற்றல் இதில் அதிகரிக்கிறது. சிவியரான மெடிக்கல் காம்ளிகேஷன் உள்ளவர்களை மருத்துவர்கள் அனுமதித்தால் மட்டுமே ஜூம்பா செய்ய வைக்கிறோம்.

கடந்த 2020 மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு பெண்களின் மன அழுத்தத்திற்கு மிகப் பெரும் காரணமாக அமைந்தது. பல குடும்பங்களில் பெண்கள் சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தே ரணமானார்கள். மென்பொருள் துறையில் பணி செய்பவர்களும் கம்ப்யூட்டரை லாக்-இன் செய்தால் உட்கார்ந்த இருக்கையில் இருந்து எழ வாய்ப்பின்றி, ஒரே அறைக்குள் அமர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. இதை உணர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஷிப்ட்டுக்கு நடுவில் நேரம் ஒதுக்கி ரிலாக்சேஷனுக்காக ஜூம்பா நடனத்தை ஊழியர்களைச் செய்ய வைக்கின்றனர். சில நிறுவனங்கள் ஷிப்ட் முடிந்த பிறகு 15 நிமிடம் ஒதுக்கி செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகிறார்கள்.

கொரோனா லாக்டவுனில் ஜூம்பாவிற்கென நான் நடத்தி வந்த ஸ்டுடியோவை விடுத்து, என் வீட்டிலே கேமரா செட் செய்து, பெரிய திரையில், ஜூம் மீட் வழியாக ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கத் தொடங்கினேன். நேரில் வகுப்புகளுக்கு வந்து செல்வதைவிட ஆன்லைன் வகுப்புகளே பெண்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது. கொரோனா தொடங்கிய இந்த ஒரு வருடத்தில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் என்னோடு ஜூம்பா நடனத்தில் பயணித்திருக்கிறார்கள். இதில் ஸ்ட்ரெஸ் குறைந்தவர்கள், எனர்ஜிடிக்காக மாறியவர்கள், உடல் எடை குறைந்தவர்கள் எனப் பலரும் உண்டு. நமது கைகளில் மொபைலும், இணையமும் இருந்தாலே இருந்த இடத்திலே நேரத்தை விரயம் செய்யாமல் ஜூம்பா கற்கலாம்’’ என்கிறார் புன்னகைத்து.

கொரோனாவுக்கு பின் ஆன்லைன் வகுப்புகள் நிரந்தரமாகிவிட்டதால் தெருத் தெருவாக இதில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய தேவை எங்களைப் போன்ற பயிற்சியாளர்களுக்கு இல்லை. லண்டன், அமெரிக்கா, கனடா, துபாய், சிங்கப்பூர், பெங்களூர், திருப்பூர் என எல்லா பகுதிகளில் இருந்தும் கற்றுக்கொள்ள பெண்கள் ஜூம் ஆப்பில் இணைகிறார்கள்.

ஜூம்பா கிட்ஸ், ஜூம்பா கோல்ட், ஜூம்பா அக்குவா, ஜூம்பா சென்டாவோ என இதில் பிரிவுகள் உள்ளது. ஜூம்பா கிட்ஸ் குழந்தைகளுக்கானது. ஜூம்பா கோல்ட் நாற்பது வயதில் இருப்பவர்களுக்கு. 60 வயதைக் கடந்தவர்களுக்கு இதில் ஜம்பிங் மூவ்மென்ட் தவிர மற்ற அனைத்தையும் கற்றுக் கொடுத்து செய்ய வைப்போம். ஜூம்பா அக்குவா என்பது ஸ்விம்மிங் ஃபுல்லுக்குள் நின்று கொண்டே ஜூம்பா செய்வது. ஜூம்பா சென்டாவோ என்பது நாற்காலியினை பிராபர்ட்டியாக வைத்து அதை சுற்றி வந்து குனிந்து நிமிர்ந்து எழுந்து செய்வது.

ஜூம்பாவில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே சான்றிதழ் வகுப்புகளும் உண்டு. இந்தியாவில் ஜூம்பாவிற்கென எஜுகேஷன் ஸ்பெஷலிஸ்ட் நிறுவனங்கள் தனியாக இயங்குகிறது. அவர்கள் வழியே ஒவ்வொரு மாநிலத்திலும் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சிகளை வழங்கி சான்றிதழ்களைக் கொடுப்பார்கள். அவ்வாறு சான்றிதழ் பெற்றவர்களே லைசென்ஸ்ட் ஜூம்பா இன்ஸ்ட்ரெக்டர்ஸ். யாரெல்லாம் லைசென்ஸ்ட் ஜூம்பா இன்ஸ்ட்ரெக்டர் என்பது ஜூம்பா இணையதள லிஸ்டில் பார்த்தாலே தெரிந்துவிடும்..

ஆன்லைன் வகுப்பில் வீட்டில் இருந்து ஜூம்பாவை கற்க முடியுமா என்ற நமது கேள்விக்கு? கண்டிப்பாக பெண்களால் இது முடியும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்திருந்தால்கூட ஸ்டெப் போட்டுக்கொண்டே சென்று வெயிட் போட்டுவிட்டு ஆடிக்கொண்டே மீண்டும் ஹாலுக்கு வரலாம் எனச் சிரித்தவர்.. சில அம்மாக்கள் தங்கள் குழந்தைகளையும் இணைத்துக்கொண்டு, அம்மாவும் பெண்ணுமாக ஜோடியாக ஜூம்பா நடனத்தில் பங்கேற்கிறார்கள் என்றவர், ஒரு நாளில் இருக்கும் 1440 நிமிடத்தில் நமக்கென ஒரு 60 நிமிடத்தை பெண்கள் ஒதுக்கிக்கொள்வது தப்பே இல்லை’’ என்கிறார் மிகவும் அழுத்தமாய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!
Next post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)