வண்ணங்களின் ராணி! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 7 Second

பாரதி செந்தில் வேலன் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே கோலமிடுதல், ஓவியங்கள், சிற்பம் மற்றும் கலைப்பொருட்கள் எனக் கலை சார்ந்த வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே செய்திருக்கிறார். MCA படித்து முடித்ததும், நுண்கலை யின் அறிமுகம் கிடைத்து, நுண்கலையின் மீதான ஆர்வத்தால் அனிமேஷன், கிராஃபிக் டிசைன் துறையில் ஈடுபட்டுள்ளார். திருமணமாகி, இரண்டு குழந்தைகள் பிறந்தது. பத்தாண்டுகள் துபாயில் அனிமேஷன் – கிராஃபிக் டிசைனிங் எனப் பல வாய்ப்புகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வந்தாலும், மனநிறைவுடன் அந்த வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை.

“தில்லியில் சில வருடங்கள் தங்கியிருந்த போது, என் குழந்தைகளின் பள்ளியில் பல கலை நிகழ்ச்சிகள், கலை சார்ந்த போட்டிகள் நடக்கும். அப்போது அவர்களுக்கு உதவியாய் பல புதுமையான படைப்புகள் உருவாக்கினோம். இந்த நிகழ்ச்சிகள் மூலம்தான் இன்னும் ஓவியங்களில் எனக்கிருக்கும் ஆர்வம் புரிந்தது. பொழுது போக்காக கலைத் துறையில் ஈடுபடும் பொழுதெல்லாம், முழு நேரக் கலைஞராக மாறிவிட வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் குடும்பம், குழந்தைகள் என ஆனதில் எனக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை.

இருந்தாலும், கலையில் இருக்கும் என் ஆர்வத்தைப் பார்த்து என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து என்னை முறையாகப் பயிற்சி எடுக்க ஊக்கப்படுத்தினார்கள். அதற்குள் நாங்கள் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தோம். கும்பகோணத்தில் வசிக்கும் என் அண்ணனும் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்தான். அவர் என்னை பெங்களூர் நகரில் உள்ள ‘சித்ரகலா பரிஷத்’ நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து பகுதி நேர ஓவியக்கலையைப் பயிலச் சொன்னார். நானும் அதில் சேர்ந்தேன்.

37 வயதில் முதல் முறையாக ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியத்தில் ஒரு சிறிய பாடத்திட்டத்தை முறையாகப் பயின்றேன். அப்போதுதான் பல ஓவிய கண்காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு என்னைப் போலவே கலையில் ஆர்வமும், சிந்தனையும் கொண்ட பலரைச் சந்தித்தேன். கலையில் எனக்கென தனித்துவமான ஒரு அடையாளத்தையும் உருவாக்கிக் கற்றுக்கொண்டேன்.

என் குழந்தைகள்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவர்களுடைய அன்பும் குறும்பும் நிறைந்த அழகிய உலகத்தை மையப்படுத்தியே என் ஓவியங்கள் இருக்கும். நாம் நாமாக இருந்தது அந்த குழந்தைப் பருவத்தில்தான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததும் அதே குழந்தைப் பருவத்தில்தான்’’ என்றவரின் ஓவியங்கள் முழுதும் வண்ணங்கள் நிறைந்துள்ளது.

‘‘பொதுவாகக் குழந்தைகள் முதலில் அடையாளம் காண்பது வண்ணங்களையும் வடிவங்களையும் தான். அதனால் என் ஓவியங்களை அழகிய வண்ணங்களாலும், வடிவங்களாலும் நிரப்பி, அதில் என் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள், விளையாட்டுகள் போன்ற அரிய தருணங்களைக் கொண்டுவந்துள்ளேன்’’ என்று கூறும் பாரதி கடந்த 4 ஆண்டுகளாக முழு நேரமாக ஓவியங்களைத் தற்கால கலை வடிவில் (Contemporary) வரைந்து வருகிறார். ‘‘கலையை ஒரு வடிவத்திற்குள்ளோ அல்லது ஒரு அர்த்தத்திலோ அடைக்க முடியாது. அது ஒரு கலைஞனின் கற்பனையைப் போல பரந்து விரிந்து வளர்ந்துகொண்டே இருக்கும். தற்கால கலை வடிவமும் அப்படித்தான்.

கலை, சில நேரம் நம்மைச் சிந்திக்கத் தூண்டும். அது சொற்களின் வாயிலாக அல்லாமல் படங்களின் வாயிலாக நம்மைத் தொடர்பு கொள்கிறது. தற்கால கலைப் படைப்புகள் எண்ணங்களை மட்டுமல்ல, அதனுடன் உணர்ச்சிகளையும் தூண்டக்கூடியது, பார்வையாளர்களும் தற்கால படைப்புகளை முழுவதுமாக ரசிக்க முடியும். என் ஓவியங்களின் வாயிலாகப் பார்வையாளர்களின் சிறு வயது நினைவுகளை மீட்டெடுத்து, அவர்களது மகிழ்ச்சியான தருணங்களை மறுபடியும் நினைவுகூர உதவ முடியும் என்று நம்புகிறேன்.

கொரோனா காலத்தில், என்னைப் போன்ற கலைஞர்களின் நிலைமை கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் கலைஞர்கள் சிலரின் முயற்சியால், இந்த நேரத்தைப் பல உற்சாகமான உரையாடல்கள், கலை சார்ந்த விவாதங்கள், மெய் நிகர் சந்திப்புகள் என ஒருவருக்கு ஒருவர் துணையாகவே இருந்தோம். எங்களின் நட்பு வட்டாரமும் விரிந்தது.

இணையதள கண்காட்சிகள் உருவாகின. இதன் மூலம் மேலும் எங்களுக்குள் உற்சாகம் பிறந்தது. இது தவிர, இந்த நேரத்தை சில புதிய முயற்சிகள் செய்து சோதிக்கவும் ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொண்டோம். நான், என் ஓவியத்தை மரப்பலகையில் செதுக்கவேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பயிற்சியினை ஆரம்பிக்கவுள்ளேன். மேலும் கொரோனா சமயத்தில் கண்காட்சிகள் எதுவும் நடக்காததால், எனக்கான ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில் என் ஓவியங்களைப் பதிவிட்டேன். இதன் மூலம் சிலர் என் ஓவியங்களை முன்வந்து வாங்கிக்கொண்டனர்.

கொரோனா லாக்டவுனிற்கு முன், 2020 மகளிர் தினத்திற்காக, இந்தியாவின் பிரதானமான பல் மொழிகளின் அழகியலைப் பதிவு செய்ய, ஒவ்வொரு மொழியின் அகர ஒலி அமைப்பு எழுத்துக்களை என் ஓவியத்தின் பின்னணியில் பதித்து அதில் ஒரு சிறுமி பயிலும் ஓவியத்தைத் தீட்டினேன். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதற்கடுத்து கொரோனா ஊரடங்கிற்குப் பின், இந்த 2021 மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சியில் 18 பெண் ஓவியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் ‘ஒரு பெண் தன் நடனத்திற்குத் தானே மெட்டமைப்பதுபோல’ (I dance to my own tune) என்கிற கருவைச் சார்ந்த ஓவியத்தை வரைந்தேன். அதாவது, ஒரு பெண் தனக்கான பாதையை, முடிவுகளை அவளே தீர்மானிப்பாள் என்பதை வெளிப்படுத்த விரும்பினேன். மேலும், ஒரு பெண் முன்னேற எத்தனை விதமான பாதைகளைக் கடக் கவேண்டி இருப்பதை வெவ்வேறு இழைகள் மூலமாக உணர்த்த முயன்றேன்’’ என்றார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக முழு நேர ஓவியக்கலைஞராக இருக்கும் பாரதி, தன் கலைகளைப் பல கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். சென்னை, புதுவை, கோவை, போபால், தில்லி மற்றும் பெங்களூரு நகரங்களின் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இவரது ஓவியங்களை பல கல்வி நிலையங்கள் மட்டுமல்லாது கலை ரசிகர்களும் வாங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா !! (அவ்வப்போது கிளாமர்)
Next post எண்ணத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)