இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியவர்களை ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யாத நோர்வே

Read Time:13 Minute, 50 Second

aniarrestநோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது கடந்த 13 ஆம் திகதி புலிகள் இயக்கக் குழுவினரும் ஆதாரவாளர்களும் பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலின் போது தூதரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்த பொருட்கள் உபகரணங்களை அந்தக் குழுவினர் அடித்து நொறுக்கியிருந்ததுடன் கதவுகள், கண்ணாடி நிலைகள் அனைத்தையும் உடைத்துச் சேதப்படுத்தியிருந்தனர். இத்தனைக்கும் தூதரகத்தின் வாசலிலும் உட்பகுதிகளிலும் நோர்வே நாட்டுப் பொலிஸாரின் கடுமையான காவல் ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்துள்ளன. இவர்களின் காவலையும் மீறியே மேற்படி வன்முறையாளர்கள் இலங்கைத் தூதரகத்துக்குள் அத்துமீறிப் புகுந்து அடித்து நொறுக்கிப் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு நோர்வே பொலிஸாரின் பாதுகாப்பையும் காவலையும் மீறி புலிகள் இயக்கக் குழுவினர் எவ்வாறு தூதரகத்துக்குள் நுழைய முடியும் எனவும் எனவே, நோர்வே பொலிஸ் தரப்பினரும் புலிகள் இயக்கத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆதரவான முறையிலேயே அவர்களுக்கு எதிராகக் கடுமையாக நடந்து கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. இதுபற்றி இலங்கைத் தூதரகத் தரப்பிலிருந்தும் அரசாங்கத் தரப்பிலிருந்தும் நோர்வே அரசு இலங்கைத் தூதரகத்துக்கு வழங்கியிருந்த பாதுகாப்பு நடவடிக்கை பற்றி அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில் நோர்வே அரசு இவ்வாறு இலங்கைத் தூதரகம் மீது புலிகள் இயக்கம் சார்ந்த குழுவினர் மேற்கொண்ட தாக்குதலை கடுமையாகக் கண்டித்து அறிக்கை விடுத்தது. அத்துடன், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை உடனே தேடிக் கண்டு பிடிக்கும் படியும் நீதிவிசாரணைகளுக்காக அவர்களை ஒஸ்லோ நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர் செய்யும் படியும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அவ்வாறே நோர்வே பொலிஸ் தரப்பு இலங்கைத் தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பைத் தற்போது வழங்கியுள்ளது. அத்துடன், நோர்வே பொலிஸ் தலைமையகம் இதுபற்றித் தெரிவித்த அறிக்கையில் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் இவ்வாறு வன்முறையாளர்கள் கூடுதல் எண்ணிக்கையில் திடீரென்று நுழைந்ததாலேயே அவர்களின் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய் விட்டதாகவும் எவ்வாறாயினும் அது பொலிஸ் தரப்பில் ஏற்பட்டு விட்ட பாதுகாப்பு குறைபாடே எனவும் வன்முறையாளர்கள் புகுந்த சமயத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இலங்கைத் தூதரக வாசலிலோ உட்பகுதியிலோ அல்லது அண்மையிலோ போதுமான எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் புலிகளுக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே நோர்வே அரசு மீது இலங்கைத் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் நோர்வேயில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தோர் தமது நடவடிக்கைகளில் சுதந்திரமாகவும் தீவிரமாகவும் ஈடுபட்டு வரும் நிலையிலும் நோர்வே அரசு இலங்கை தூதரகத்துக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி புலிகள் இயக்க வன்முறையாளர்கள் ஒஸ்லோ இலங்கைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரத்துக்கு மேலாகிய போதும் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடிப் பிடிப்பதற்காக குறிப்பிடும்படியான விஷேட நடவடிக்கைகள் எதுவும் நோர்வே பொலிஸ் தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட நபர்கள் கூட பிணையிலோ பிணையின்றியோ விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி நோர்வே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்களில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்ற உறுதியான சான்று இல்லாததாலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யப் போதுமான தடயங்களோ நிரூபணங்களோ இதுவரை கிடைக்காததால் தான் சரியான குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுபற்றி நோர்வே அரச தரப்பிலிருந்தும் நோர்வே பொலிஸ் தலைமையகம் தரப்பிலிருந்தும் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியனவைகளாக இல்லையென்று நடுநிலையான விமர்சகத் தரப்புகள் தெரிவித்துள்ளன. ஏனெனில், கடந்த 13 ம் திகதி புலிகள் இயக்க வன்முறையாளர்கள் ஒஸ்லோ இலங்கைத் தூதரகத்துக்குள் புகுந்ததையும் தாக்குதல் நடத்தியதையும் நோர்வே ரி.வி.2 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. குறித்த ஒளிபரப்பில் தாக்குதல் நடத்திய சம்பவம் தெளிவாக ஒளிபரப்பப்படா விட்டாலும் கூட அந்த ஒளிபரப்பில் காட்டப்பட்ட நபர்களின் தோற்றங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவோ புகைப்படம் பிடிக்கவோ முடியும். அந்த வகையில் சம்பந்தப்பட்ட ஒரு சில நபர்களைப் பற்றியாவது அறிந்து கொள்வது நோர்வே பொலிஸாரால் முடியாத காரியம் அல்ல. ஆயினும் இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றிய உறுதியான நிரூபணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அதனாலேயே உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை எனவும் நோர்வே பொலிஸ் தரப்பு கூறுகிறது.

இதில் மற்றுமொரு முக்கிய விடயம் யாதெனில் நோர்வேயின் ரி.வி.2 தொலைக்காட்சி ஒஸ்லோ இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதலை ஒளிபரப்பி சம்பந்தப்பட்ட தகவல்களைத் தெரிவித்தது போலவே நேர்வேயிலும் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்துக்கு எதிரான தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றிய விபரமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதே ஆகும். இந்தத் தகவல்களில் நோர்வே இலங்கைத் தூதரகம் மீது நோர்வேயில் நீண்ட காலமாக புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டு வரும் ஜஸ்வந்த் புஷ்பராஜா எனப்படும் பிரமுக நபர் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜஸ்வந்த் புஷ்பராஜா எனப்படும் புலிகள் இயக்கப் பிரதிநிதியே அண்மைக் காலங்களில் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒஸ்லோவில் நடத்தி வருபவராகும். படுதோல்வியின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் இறுதித் தோல்வியில் இருந்து காப்பாற்றும் நோக்கத்தில் யுத்த நிறுத்தத்தை உடனே ஏற்படுத்துவதற்காக அண்மைய காலங்களில் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நோர்வே உட்பட இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு நோர்வேயில் ஆர்ப்பாட்டங்களைத் தலைமை தாங்கி அண்மைக் காலமாகச் செய்து வரும் மேற்படி ஜஸ்வந்த் புஷ்பராஜா தனது குழுவினருடனும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட புலிகள் இயக்கக் குழுவினருடனும் இணைந்தே ஒஸ்லோவில் இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக ஒஸ்லோவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிராக இயங்கும் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஜஸ்வந்த் புஷ்பராஜா ஜேர்மனியில் செயற்படும் புலிகள் இயக்கக் குழுவினரை முன்கூட்டியே ஒஸ்லோவுக்கு வரவழைத்திருந்தார் எனவும் பின்னர் புஷ்பராஜாவின் ஏற்பாட்டில் அவருடைய குழுவினரும் ஜேர்மன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளும் இணைந்து 13 ஆம் திகதி இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியுள்ளனர் எனவும் புலிகள் விரோத ஒஸ்லோ அமைப்பின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒஸ்லோ இலங்கைத் தூதரகத் தாக்குதலுக்கு ஜஸ்வந்த் புஷ்பராஜா பொறுப்புக் கூற வேண்டும் என மேலும் குறித்த பயங்கரவாத விரோத அமைப்பினர் கோரியுள்ளனர்.

இவ்வாறு ஒஸ்லோவில் இலங்கைத் தூதரத்தைத் தாக்கியவர்கள் பற்றி நோர்வேயின் பிரபல ரி.வி.2 தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்தும் நோர்வே புலிகள் விரோத அமைப்பினர் தரப்பின் தகவல்களிலிருந்தும் நம்பகரமான தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் அவற்றை முக்கிய சான்றாக கருதுவதற்கோ அல்லது அதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கவோ நோர்வே அரசும் நோர்வே பொலிஸ் தரப்பும் குறிப்பிடும்படியான அக்கறை எதுவும் காட்டவில்லை.

ஒஸ்லோ இலங்கைத் தூதரகம் பயங்கரவாதக் குழுவினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அது பற்றி கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் தரப்பில் தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரி றன்மெயின் ஸ்கொப்ரெலன்ட் என்பவர் அறிக்கை வெளியிடுகையில் 13 ஆம் திகதி ஒஸ்லோ இலங்கைத் தூதரகம் மீது ஆர்ப்பாட்டக் காரர்கள் தாக்குதலை நடத்தியதாகவும் இதுபற்றி நோர்வே அரசு கண்டனம் தெரிவிப்பதாகவும் தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும் படி நோர்வே அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் தூதரகத்தைத் தாக்க வந்த ஆர்ப்பாட்டக் காரர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அங்கு நோர்வே பொலிஸார் கூடுதல் எண்ணிக்கையில் கடைமையில் இருக்கவில்லை எனவும் இதற்காக நோர்வே பொலிஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்திருப்பதுடன் தொடர்ந்து கூடுதல் பொலிஸார் அங்கு கடைமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுபற்றி தெரிவிக்கப்படும் விமர்சனங்களில் நோர்வேயில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பாரதூரமான தன்மையை நோர்வே அரசு சார்ந்த அறிக்கைகள் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்ப்பிரதேசம் செல்ல ஐ.நா குழுவை அனுமதியோம்.. பான் கீ மூன் கருத்துக்கு கோத்தபாய எதிர்ப்பு
Next post பிரபாகரன் எந்த வழியில் தப்புவார்?