இடம்பெயர்தோரால் நிரம்பி வழியும் வவுனியா; உணவுக்கும், குடிநீருக்கும் கையேந்தும் இலட்சக்கணக்கான மக்கள்

Read Time:8 Minute, 14 Second

reffle-005வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது. பஸ்களிலும், வீதியோரங்களிலும், பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட பல கட்டடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்ட வண்ணம் உள்ளனர். உடைமைகள் அனைத்தையும் இழந்து, பல மாதங்களாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதிய உணவு, மருத்துவ வசதிகளின்றி வாழ்ந்த களைப்புடன், கடுமையான பசியும், தாகமும் வாட்ட, சீரான உடைகள் எதுவுமின்றி நடைப்பிணங்கள் போல இவர்கள் வவுனியாவை வந்தடைந்துள்ளனர்.

பிச்சைக்காரர்கள்?

“ஒரு பெரும் பிச்சைக்காரக் கூட்டமே வந்திறங்கியிருப்பதுபோல் இவர்களைப் பார்க்க மிகவும் பரிதமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்ப்பதற்கு உயிரோடிருப்பதைவிட செத்துப்போயிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது” என்று இந்த அவலத்தை வர்ணித்தார், வவுனியாவிலிருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர்.

கூட்டம் கூட்டமாக அழைத்துவரப்படும் இந்த மக்கள் தொகையில் சிறுவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருப்பதாக மற்றுமொரு தொண்டு நிறுவனப் பெண் பணியாளர் தெரிவித்தார்.

உள்ளாடைகளுடன் வரும் பிள்ளைகள்

“10 முதல் 15 வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளைகள் ஆடைகள் எதுவுமின்றி வெறும் உள்ளாடையுடன் வந்ததைக் காண மனம் பதைக்கிறது. எங்கள் மக்களுக்கு ஏனிந்த அவலம்” என்று அழுகையை அடக்க முடியாத சோகத்துடன் அவர் எம்மிடம் தகவல் தெரிவித்தார்.

பலர் இன்னமும் அவர்கள் அழைத்துவரப்பட்ட பஸ்களிலேயே தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், சில தற்காலிக தங்குமிடங்களில் வயோதிபர்கள் சிலர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலை அகற்றவும் வசதியில்லாத நிலையில் மக்கள் இருப்பதாகவும் அந்தத் தொண்டு நிறுவனப் பணியாளர் கூறினார்.

ஏற்கனவே கடந்த பல மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு வந்த சுமார் 70ஆயிரம் பேர் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளன.

பெரும்பாலான முகாம்களில் போதிய இடவசதியின்மை, மலசலகூட வசதியீனம், சீரான நீர் விநியோகம் இல்லாத நிலை என்று மக்கள் ஏற்கனவே பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென ஓரிரு தினங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதால், இவர்களுக்கு வேண்டிய அவசர உதவிகளைச் செய்ய முடியாமல் அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் திண்டாடுவதாக தொண்டு நிறுவனப் பணியாளர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

வவுனியா தாங்காது

“வவுனியாவின் வழமையான மொத்தச் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சனத்தொகைக்கு அளவான அடிப்படைக் கட்டுமான வசதிகளே இங்குள்ளது” என்று தெரிவித்த வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுடன் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் பெயர் குறிப்பிட விரும்பாத தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர்,

இப்போது திடீரென மேலதிகமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் சுமார் ஒன்றரை இலட்சம் பேருடன் சேர்த்து அங்கிருக்கும் மூன்றரை இலட்சம் பேருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அடிக்கட்டுமான வசதிகள் வவுனியாவில் கிடையாது என்று குறிப்பிட்டார்.

சுமார் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தொகையான மக்களுக்கு நாளாந்தம் உண்பதற்கு உணவு வழங்குவதென்பது சாத்தியமில்லாத காரியம் என்று தெரிவித்த அவர், போதியளவு உணவுப்பொருள் இருந்தாலும், அவற்றை ஒன்றரை இலட்சம் பேருக்கும் விநியோகம் செய்வது பெரும் சிரமமான காரியம் என்று தெரிவித்தார்.

“ஆனால், உணவுப்பொருள்களும் போதியளவுக்கு இங்கு இல்லை என்பதுதான் துயரம்” என்று தெரிவித்த அவர், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே இந்த மக்களுக்கு உதவுவதற்குத் தம்மிடம் போதிய நிதி வசதிகள் இல்லை என்று கைவிரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

ஒருவேளை உணவேனும்…

இவ்வளவு தொகை மக்களுக்கும் உணவு சமைத்து வழங்குவது சாத்தியமில்லை என்பதால், அவர்களை சுமார் 250 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, பெரிய சமையல் பாத்திரங்களையும், அரிசி மற்றும் மரக்கறிகளையும் வழங்கி, தாமே சமைத்து உண்ணும் நிலைமையை ஏற்படுத்த முனைவதாக ஐ.நா. தொண்டுப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

“குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவேனும் இவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கே இப்போது நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார் அவர்.

உதவி செய்யுங்கள்

உடனடிப் பசியையும், தாகத்தையும் போக்குவதற்கு பிற்கட் பெட்டிகளும், போத்தலில் அடைக்கப்பட்ட நீரும் வழங்குவதே மிகவும் பொருத்தம் என்று குறிப்பிட்ட அவர், இந்த மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இவற்றை பெருந்தொகையாக வாங்கியோ, அல்லது அதற்கான பணத்தைக் கொடுத்தோ உதவி செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களை மாத்திரம் நம்பியிராமல், அவலப்பட்டுள்ள இந்த மக்களுக்கு உதவுவதற்கு இந்த நாட்டிலுள்ள மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் முன்வரவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Thanks… inlanka

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு
Next post ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை வந்தார்; வவுனியா சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார்