பச்சிளம் குழந்தை உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் 16 பேருக்கு தலா 98 ஆண்டு ஜெயில்: ஒருவருக்கு 112 ஆண்டு தண்டனை பரபரப்பான தீர்ப்பு

Read Time:6 Minute, 16 Second

Tamilnadu.1.jpg1 1/2 வயது குழந்தை உள்பட 9 பேரை கொலை செய்த 16 பேருக்கு 7 ஆயுள் (98 ஆண்டு சிறை) தண்டனையும், ஒருவருக்கு 8 ஆயுள் (112 வருட சிறை) தண்டனையும், மேலும் 2 பேருக்கு 6 ஆயுள் (84 ஆண்டு சிறை) தண்டனையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஓ.கரிசல் குளத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி தின்னம்மை. இவர்களது மகன் முத்துராமலிங்கத்துக்கும், அதே ஊரைச்சேர்ந்த இந்திரகாந்தி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 1ஷி வயதில் ராஜேசுவரி என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு அவர்கள் பிரிந்தனர். இந்த பிரச்சினை குறித்து ஊர் பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் முத்துராமலிங்கம், இந்திரகாந்தி என இருதரப்பினரின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பஞ்சாயத்தில் கலந்து கொள்வதற்காக முத்துராமலிங்கத்தின் தாய் தின்னம்மை சென்றார். அப்போது இந்திரகாந்தியின் சித்தப்பா ராஜேந்திரன், உறவினர் ராமமூர்த்தி உள்பட பலர் சேர்ந்து தின்னம்மையை வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. பஞ்சாயத்துக்கு வந்த தின்னம்மை கொலை செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் கடும் ஆத்திரமடைந்தனர். கொலை செய்தவர்களின் குடும்பத்தையே அழிக்க அவர்கள் திட்டமிட்டனர்.

இதன்படி 9.2.1994 அன்று தின்னம்மை தரப்பை சேர்ந்த முத்துமணி தேவர், ராமமூர்த்தி என்ற வேலுத் தேவர், கோபால், சண்முக வேலுத்தேவர், பூமிநாதன் என்ற சின்னத்தம்பி தேவர், பூ.முத்து ராமலிங்கம், முருகன் என்ற கோடாரி உள்பட 20 பேர் சேர்ந்து ராஜேந்திரனை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தனர்.

மறுநாள் ராஜேந்திரனின் இறுதி சடங்கை முடித்து விட்டு அவரது உறவினர்கள் பஸ் மூலம் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். ஓ.கரிசல்குளம் விலக்கு ரோட்டில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த கொலையாளிகள் 20 பேரும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் மீது பாய்ந்தனர்.

துப்பாக்கியால் சுட்டபடி வந்த அவர்களை கண்டு இறந்த ராஜேந்திரனின் தரப்பினர் ஓட்டம் பிடித்தனர். ஆனால் கொலையாளிகள் அவர்களை ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் 8 பேரை கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் நாகரத்தினம் அம்மாள், சேது அம்மாள், அன்னம்மாள், பழனியம்மாள், தில்லை நடராஜன், இரணியன், இந்திரகாந்தி, இவரது 1ஷி வயது குழந்தை ராஜேசுவரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இந்திரகாந்தியையும், அவரது கைக்குழந்தையையும் கொலை செய்த 20 பேர் கும்பலில் இந்திர காந்தியின் கணவர் பூ.முத்துராமலிங்கமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து 20 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை ராமநாதபுரம் விரைவு விசாரணை கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிகளில் ஒருவரான முருகன் என்ற கோடாரி விசாரணை காலத்திலேயே இறந்து போனார்.

பரபரப்பான இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாத்தப்பிள்ளை குற்றவாளிகள் 16 பேருக்கு 7 ஆயுள் தண்டனையும், பூவலிங்கம் என்பவருக்கு 8 ஆயுள் தண்டனையும், மேலும் முத்துராமலிங்கம், கிருஷ்ணன் என்ற பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 6 ஆயுள் தண்டனையும் விதித்ததுடன் அதனை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

அதாவது 16 பேருக்கு 98 ஆண்டு சிறை தண்டனையும், பூவலிங்கத்துக்கு 112 ஆண்டு சிறை தண்டனையும் மற்ற 2 பேருக்கும் 84 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்திய தண்டனை சட்டம் 302வுடன் இணைந்த 34-வது பிரிவின் கீழ் 7 ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, 1ஷி வயது குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்த குற்றத்திற்காக இந்த ஆயுள் தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்.

தென்னிந்தியாவிலேயே குற்றவாளிகளுக்கு 90 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post துபாயில் ரூ.13 கோடி கேட்டு இந்தியச்சிறுமி கடத்தல் -போலீசார் மீட்டனர்
Next post நேற்றும் இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகம் சென்றனர்