செல்போனில் லண்டன், கனடாவுக்கு பேசினாரா நளினி?

Read Time:9 Minute, 39 Second

சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களைத் தடை செய்து சிறை அதிகாரிகள் தொல்லை செய்வதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி புகார் கூறியுள்ளார். நேற்று வேலூர் பெண்கள் சிறை எஸ்பி ராஜலட்சுமி தலைமையில் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தினர். அப்போது நளினியின் அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக சிறைத்துறை டிஜிபிக்கு நளினி ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 6ம் தேதி நளினி எழுதியுள்ள கடிதத்தில்,

நான் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இருக்கிறேன். அதில் 13 ஆண்டு காலம் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் ஆயுள் சிறைவாசியாக இருந்து வருகிறேன். எனது கணவரும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கிறார்.

இதுவரை சட்டப்படியும், சிறை விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டே நடக்கிறேன். எந்த விதமான கெட்ட பழக்கங்களுக்கும் நான் அடிமை இல்லை. தவிர சிறை ஊழியர்களுக்கு கையூட்டு கொடுத்து அவர்களிடம் தேவையானவைகளை சாதிக்கும் பழக்கமும் எனக்கு இல்லை. இதனால் நான் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறேன்.

என்னை பார்க்க வருபவர்களை பல மணிநேரம் காக்க வைத்து இழுத்தடிப்பது. எனது அம்மா, மாமனார், மாமியார் போன்ற வயதானவர்களை 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் காக்க வைத்து திரும்ப அனுப்பி விடுவது, அனுமதி மறுப்பது, விரட்டி அடிப்பது, அவதூறாக பேசுவது என்று எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்கிறேன்.

எனது நேர்காணலில் கொண்டு வரும் பொருட்களை எல்லாம் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு சோதனை என்ற பெயரில் நாசம் செய்வது, துணிகளை கிழிப்பது, கொண்டுவரும் பைகளை கிழிப்பது என்று அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறிக்கொண்டே போகிறது.

இதுவரை 19 ஆண்டுகளில் ஒருமுறை கூட சிறை விதிகளுக்கு புறம்பான பொருட்களை கொண்டு வந்ததும் இல்லை. எனது நேர்காணலில் எனது உறவினர்களை சோதனை செய்து கண்டு பிடித்ததும் இல்லை.

இந்த சிறையில் `ஏ’ வகுப்பு சிறைவாசிகளுக்கான தனி மனு அறையும் கிடையாது. என்னை சந்திக்க வரும் குழந்தைகளையும் நான் தொடவும் முடியாத சூழ்நிலையே பெண்கள் சிறையில் நிலவுகிறது.

ஆண்கள் மத்திய சிறைகளில் குழந்தைகள் தந்தையுடன் இருப்பதில்லை. ஆனால் பெண்கள் சிறையில் பெண்கள் குழந்தைகள் பெற்றெடுப்பதுடன், கைக்குழந்தையுடன் கைதாகி வருவதால் பெண் சிறைவாசிகளுடன் குழந்தைகள் சிறையில் இருக்கிறார்கள். சந்திக்கவும் வருகிறார்கள். இது எனக்கு மிக அதிகமான மன உளச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதை பெண்கள் சிறை என்று சொல்வதைவிட எனக்கான கல்லறை எனலாம்.

சிறை மருத்துவரும், வெளி மருத்துவமனையில் இருந்து வரும் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவுகளோ, பழங்களோ, காய்கறிகளோ நாம் பெற வழியில்லை.

இதற்கான தீர்வுதான் என்ன? எமக்கு உரிய பரிகாரம் கிடைக்குமா? சிறைத்துறை நேர்காணல் நேரங்களை எமக்கான தனிப்பட்ட நாள் என்று ஏதும் அறிவுறுத்தப்பட்டால் அதன்படி நேர்காணல் செய்யவும் நான் தயாராகவும் இருக்கிறேன்.

உங்களின் அவசரமான தலையீடு மற்றும் உத்தரவுகள் எமக்கு உரிய பரிகாரம் அளிக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நளினி.

சமீபத்தில், நளினி தாக்கல் செய்த விடுதலை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நளினியின் அறையிலிருந்து செல்போன் சிக்கியதாக போலீஸ் தரப்பில் நேற்று கூறப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் சிறையில் தான் பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதாக நளினி புகார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிறையில் இன்றும் சோதனை:

இந் நிலையில் வேலூர் சிறையில் இன்றும் போலீசார் சோதனை நடத்தினர். ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் சிறையில் இந்த சோதனை நடந்து வருகிறது.

நளினியிடம் செல்போன்-காங். கேள்வி:

இந் நிலையில் இன்று தமிழக சட்டசபையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை அடைந்த குற்றவாளி நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏர்டெல் சிம் கார்டுடன் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நம்பர் சென்னையில் பெறப்பட்டுள்ள நம்பர் ஆகும். அதிகாரிகள் கைப்பற்றியபோது அதை கழிவறையில் வீசினார். அதை கைப்பற்றியதோடு 2 சிம்கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளாக அவர் லண்டன், கனடாவுக்கு பேசி இருப்பதாகத் தெரிகிறது. முதல் வகுப்பு சலுகை பெற்று அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை விதிகளை மீறியது இல்லை என்று சத்தியப் பிரமாண வாக்குமூலம் கொடுத்து கோர்ட்டில் தன்னை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தார். அப்படி கூறியவரிடம் இப்போது மொபைல் போன் எப்படி வந்தது என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்,

வேலூர் பெண்கள் மத்திய சிறையில் ஜெயில் சூப்பிரண்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நளினி அறையில் சோதனையிடப்பட்டது. அங்கு துணிப்பையில் ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் எடுக்க முற்பட்டபோது வேகமாக பிடுங்கி கழிவறையில் போட்டுள்ளார் துணை ஜெயிலர் ஓடிவந்து எடுத்து அதை பழுது பார்க்க அனுப்பி உள்ளார்.

அவர் 4 ஆண்டுகளாக செல்போனில் பேசினாரா? என்ற தகவல் எதுவும் வரவில்லை. பேசி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். செல்போன் பழுது செய்யப்பட்ட பிறகு யாருடன் பேசியது என்ற விவரம் தெரிய வரும்.

செல்போன் தவிர 2 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பல ஜெயில்களில் இதேபோல செல்போன் கைப்பற்றப்பட்ட சம்பவமும் நடைபெற்று உள்ளது. வேலூர் பெண்கள் மத்திய ஜெயிலில் செல்போன் கைப்பற்றப்பட்டது இதுதான் முதல் முறையாகும்.

இந்த அரசு பொறுப் பேற்ற பிறகு இதுவரை சிறைகளில் செல்போன், கஞ்சா கடத்தியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை கண்டுபிடிக்க கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 19 சிறை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 வெளி நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 195 கைதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்னதான் சட்டம் போட்டு தடுத்தாலும் அதை மீறி செய்யும் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எனவே மிக கவனத்துடன் இருக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 35பேர் கொண்ட புதிய அமைச்சரவை டி.எம்.ஜயரட்ண புதிய பிரதமர்..
Next post யாழ். இளவாலைச் சிறுவன் கதிர்காமம் மாணிக்க கங்கையில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு