செல்போன் பதுக்கிய குற்றத்திற்காக ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியான நளினி `பி’ வகுப்புக்கு மாற்றம்

Read Time:5 Minute, 2 Second

ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியான நளினி சிறையில் இருந்தபடி தனது செல்போன் மூலம் இங்கிலாந்துக்கு 8 முறையும், இலங்கைக்கு ஒரு முறையும், சென்னைக்கு 5 முறையும் மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு 22 முறையும் பேசியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் இதுகுறித்து கவனஈர்ப்பு பிரச்சனையை எழுப்பினார். அவர் பேசுகையி்ல், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியிடம் வேலூர் சிறை அறையிலிருந்து செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நான் சில நாட்களுக்கு முன்பு இந்த அவையில் பிரச்சனை எழுப்பினேன். அதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?.

இதுவரை அவர் கைது செய்யப்பட்டாரா? தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளரா? அல்லது வேறு சிறைக்கு மாற்றப்போகிறீர்களா? இந்தப் பிரச்சனையில் மேல் விவரம் என்ன என்று அறிய விரும்புகிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

இதுதொடர்பாக நளினி மீது சிறைத்துறை கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த செல்போனை ஆய்வு செய்ததில் அந்த செல்போனுக்கு நான்கு எஸ்எம்எஸ் தகவல்கள் வந்திருந்தன. 12 எஸ்எம்எஸ் தகவல்கள் சென்றுள்ளன. 10 மிஸ்டு கால்கள் பதிவாகியிருந்தன. 8 ரிசீவ்டு கால்களும், 18 டயல்டு கால்களும் பதிவாகியுள்ளன.

இந்த செல்போனிலிருந்து 8 முறை இங்கிலாந்துக்கும், ஒரு முறை இலங்கைக்கும் பேசப்பட்டுள்ளது.

இதுபோக 22 முறை தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் பேசியதும் தெரியவந்துள்ளது. அதில் 5 முறை சென்னைக்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. நளினியின் வக்கீலுக்கும் இந்த செல்போனிலிருந்து நளினி பேசியுள்ளார்.

இந்த செல்போன் காட்பாடி தாலுகா 4/26, கனகசமுத்திரம் என்ற முகவரியில் ரவி என்பவரது பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி இந்த செல்போன் ஆக்டிவேட் ஆகியிருக்கிறது. செல்போனின் எண் 9629988352 இந்த பிரச்சனையில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நளினியின் அறைக்குள் செல்போனை போலீசாரே வைத்து எடுத்ததாக அவரது வழக்கறிஞர் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த புகாரும் தரப்படவில்லை. இதுவரை இந்த தகவல்கள்தான் கிடைத்துள்ளன என்றார் துரைமுருகன்.

`பி’ வகுப்புக்கு மாற்றம்:

இந் நிலையில் நளினி வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்படவுள்ளார்.

மேலும் அவருக்கு இனிமேல் சிறையில் `ஏ’ வகுப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், `பி’ வகுப்பில் அவர் அடைக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

நளினி எம்.ஏ. பட்டதாரி என்பதால் அவர் தற்போது `ஏ’ வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டில், மெத்தை, மின்விசிறி வசதி, தரமான சாப்பாடு போன்றவை வழங்கப்படுகின்றன.

செல்போன் பதுக்கிய குற்றத்திற்காக நளினி இனிமேல் `பி’ வகுப்புக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. `பி’ வகுப்பில் தனி அறை கிடையாது. மற்ற ஆயுள் தண்டனை பெண் கைதிகளோடு தான் இருக்க வேண்டும். கட்டில், மெத்தை வசதியும் இல்லை. தரையில்தான் தூங்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தம் முடிந்தும் நாட்டில் சமாதானம் நிலவுவதாக கருதமுடியாது -நாடாளுமன்றில் சம்பந்தன்
Next post புலிகளின் சர்வதேசவலையமைப்பு இயங்கிவருவதாக இலங்கை குற்றச்சாட்டு