கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் -சீமான்

Read Time:4 Minute, 7 Second

கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் சூழலில் இன்னமும் முள் வேலி முகாம்களுக்குள் ஒரு லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் மக்களைக் கூட பேரினவாத இலங்கை அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத வனாந்தரங்களிலும் வெட்ட வெளி பொட்டல் காடுகளிலும் கொண்டு கொட்டுவதாகத் தெரிகிறது.

உடுத்த உடையோ, உணவோ குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளோ இல்லாமல் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்குள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களின் பாரம்பரீய வாழ்விடங்களை எல்லாம் ஆக்ரமித்து விட்ட சிங்களர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் பேரினவாத சிங்கள இராணுவம் தமிழ் மக்களை அவர்களின் வீடுகளில் குடியேற விடாமல் தடுத்து வருகிறது.

அவர்களின் விவாசய நிலங்கள் எல்லாம் சிங்களர்களால் ஆக்ரமிக்கப்பட்ட நிலையில் கொட்டப்பட்ட இடங்களில் இருந்து அவர்கள் கொத்துக் கொத்தாக உயிர் தப்ப ஓடுகிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இப்படி ஓடுகிற ஈழ மக்கள் மலேஷியாவில், ஆஸ்திரேலியாவில், இந்தோனேஷியாவில் என சிறைபடுகிறார்கள். சித்திரவதைக்குள்ளாகிறார்கள்.

ஈழ மக்களின் நிராதரவான இந்நிலை ஆழ்ந்த துக்கத்தையும் கவலையையும் கண்ணீரையும் ஏற்படுத்தும் நிலையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல கேரளத்தில் நேற்று முப்பத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.

அவர்களிடம் முறையான் பாஸ்போர்ட்டோ, வீசாவோ இருக்கிறதா? என விசாரித்த கேரள போலீசார் வழக்கம் போல அவர்கள் விடுதலைப் புலிகளா? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். நிராதரவான முறையில் உயிர் தப்பி ஓடும் ஈழ மக்களிடம் எப்படி பாஸ்போர்ட்டும், வீசாவும் இருக்கும்.

நிற்கவோ, படுத்துறங்கவோ, உறவுகளோடு வாழவோ முடியாத நிலையில் ஓடும் ஈழ அகதிகளின் துன்ப வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழ அதிகளை பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விடும் மனித நேயமற்ற செயலைச் செய்து விடக் கூடாது என்பதோடு, அபாயகரமான சூழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் ஈழ மக்களின் துன்பங்களை தமிழக அரசு புரிந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் சீமான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது: ரா-ஐபி விசாரணை
Next post ஈழத் தமிழர்களுக்குப் பணம் வந்தது குறித்து விசாரிக்க இன்டர்போலை நாடும் ஐபி-ரா